சிறிய முடிவுகளின் கொடுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு சூழ்நிலையில் எடுக்கப்படும் சிறு சிறு நல்ல முடிவுகள் ஒட்டுமொத்தமாக பாதகமான விளைவினை உண்டாக்கின் அது சிறிய முடிவுகளின் கொடுமை (Tyranny of small decisions) எனப்படும்.

”சிறிய முடிவுகளின் கொடுமை” என்னும் தொடர் 1966 இல் ஆல்ஃபிரட் ஈ. கான் என்ற அமெரிக்கப் பொருளியலாளர் எழுதிய கட்டுரையின் தலைப்பாகும். அக்கட்டுரையில் கான் இச்சூழ்நிலையைப் பின்வருமாறு விளக்குகிறார்: தனித் தனியாகப் பார்க்கும் போது அச்சிறு முடிவுகள் அனைத்தும் பொருத்தமானதாகவும் நற்பயன் தருவதாகவும் இருக்கும். ஆனால் அவை தொடர்ச்சியாக எடுக்கப்படும் போது ஒட்டு மொத்த சூழ்நிலைக்கு பாதகமான விளைவினை ஏற்படுத்தும். சந்தைப் பொருளியலில் இத்தகு சூழ்நிலைகள் பரவலானவை என்று கூறும் கான், இவற்றால் சந்தைத் தோல்வி விளையும் என்று கூறினார்.[1] பின்பு இத்தோற்றப்பாடு பொருளியல் மட்டுமல்லாது சுற்றுச்சூழல் சீர்கேடு,[2] அரசியல்,[3] உடல்நலம் பேணல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.[4]

இத்தகு சூழலுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது பொதுமங்களின் அவலம். 1968இல் கேரட் ஹார்டின் என்பவரால் இந்த கோட்பாடு விளக்கப்பட்டது. இதில் ஒரு பொது மேய்ச்சல் வெளியில் தங்கள் பசுக்களை மேய்க்கும் மேய்ப்பர்கள் தனித்தனியாக தங்களுக்கு எது சிறந்ததோ அந்த முடிவினையே எடுக்கிறார்கள். தங்கள் பசுக்களை இஷ்டப்படி பொதுவெளியில் மேய விடுகிறார்கள். தங்கள் பசுக்களுக்கு அதிக அளவில் புல் கிடைத்தால் போதுமெனக் கருதுகிறார்கள். ஆனால் குறைந்த பொது வளத்தைப் பங்கு போடுகிறோம் என்பதைக் கருத்தில் கொள்வதில்லை. மேய்ப்பர்கள் அனைவரும் இது போலவே முடிவு செய்து செயல்பட்டால் மேய்ச்சல் வெளி விரைவில் தீர்ந்து போய் அனைத்துப் பசுக்களும் பட்டினி கிடக்கும் நிலை உருவாகுகின்றது. இப்படித் தனியாகப் பார்க்கும் போது சாதகாமாகத் தெரியும் சிறு முடிவுகள் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது பாதகமாகிவிடுகின்றன.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kahn, Alfred E. (1966) "The tyranny of small decisions: market failures, imperfections, and the limits of economics"[தொடர்பிழந்த இணைப்பு] Kvklos, 19:23-47.
  2. Odum WE (1982) "Environmental degradation and the tyranny of small decisions" BioScience, 32(9):728-729.
  3. Burnell, P (2002) "Zambia's 2001 Elections: the Tyranny of Small Decisions, Non-decisions and 'Not Decisions'" Third World Quarterly, 23(3): 1103-1120.
  4. *Bickel WK and Marsch LA (2000) "The Tyranny of Small Decisions: Origins, Outcomes, and Proposed Solutions" Chapter 13 in Bickel WK and Vuchinich RE (2000) Reframing health behavior change with behavioral economics, Routledge. ISBN 978-0-8058-2733-0.
  5. Baylis J, Wirtz JJ, Cohen EA and Gray CS (2007) Strategy in the contemporary world: an introduction to strategic studies Page 368. Oxford University Press, ISBN 978-0-19-928978-3
  6. Garrett Hardin, "The Tragedy of the Commons", Science, Vol. 162, No. 3859 (December 13, 1968), pp. 1243-1248. Also available here and here.