மத்தேயு நற்செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7: வரிசை 7:
== நூலின் ஆசிரியர் ==
== நூலின் ஆசிரியர் ==


இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித [[மத்தேயு]]வின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும்.
இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித [[மத்தேயு (திருத்தூதர்)|மத்தேயு]]வின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும்.


[[இயேசு கிறித்து]] நிறுவிய [[இறையாட்சி]] <ref>[http://en.wikipedia.org/wiki/Kingdom_of_God விண்ணரசு - கடவுளின் ஆட்சி]</ref> பற்றிய நற்செய்தியைத் [[திருத்தூதர்]] மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு [[திருத்தூதர்]] தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.
[[இயேசு கிறித்து]] நிறுவிய [[இறையாட்சி]] <ref>[http://en.wikipedia.org/wiki/Kingdom_of_God விண்ணரசு - கடவுளின் ஆட்சி]</ref> பற்றிய நற்செய்தியைத் [[திருத்தூதர்]] மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு [[திருத்தூதர்]] தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.

17:00, 9 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்

புனித மத்தேயு,
புனித ஈசாக்கு தேவாலயம் பீட்டர்ஸ்பர்க்,இரசியா

மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலாவது நூலாகும்[1]. இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள முதல் நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மத்தேயு எழுதிய நற்செய்தி, κατὰ Ματθαῖον εὐαγγέλιον (Kata Matthaion Euangelion = The Gospel according to Matthew) என்பதாகும்.

மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு,லூக்கா என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்தி நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels)[2] என்று அழைக்கப்படுவதும் உண்டு.

நூலின் ஆசிரியர்

இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும்.

இயேசு கிறித்து நிறுவிய இறையாட்சி [3] பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு.

நூல் எழுதப்பட்ட சூழல்

எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் (கி.பி. 70), யூதச்சங்கங்கள் கிறித்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்க காலத் திருச்சபைக்குள்ளும் அறம், மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம்.

இந்நூல் யூத மக்கள் பலர் வாழ்ந்த ஒரு பகுதியில், ஒருவேளை மத்திய தரைக் கடல் கிழக்குப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகர், அல்லது தமஸ்கு நகர், அல்லது பாலசுத்தீனக் கடல் நகராகிய செசாரியாவில் மத்தேயு எழுதப்பட்டிருக்கலாம்.

மத்தேயு நற்செய்தியில் கி.பி. 70இல் உரோமைப் படையினர் எருசலேமை அழித்துத் தரைமட்டமாக்கிய செய்தி மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதால் (காண்க: மத் 21:41; 22:7; 27:25) அந்நூல் கி.பி. 85 அல்லது 90ஆம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞரின் கணிப்பு.

மத்தேயு நற்செய்திக்கு ஆதாரங்கள்

மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தியின் அடிப்படையில் அமைந்தது என மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். மாற்கு நற்செய்தியை ஆங்காங்கே திருத்தியும் விரித்தும் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்திக்கு, வேறு இரண்டு மூல ஆதாரங்கள் பயன்பட்டன எனத் தெரிகிறது. ஒன்று "Q" என அழைக்கப்படும் ஆதார ஏடு. "Q" என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்பது பொருள். மற்றொரு மூலம் மத்தேயுவுக்கே தனிப்பட்ட முறையில் ஆதாரமாக இருந்த ஏடு எனவும் அதற்கு "M" எனப் பெயர் வழங்குவது எனவும் அறிஞர் முடிவுசெய்துள்ளனர்.

நூலின் உள்ளடக்கம்

கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறித்தவர்களும் பிற இனத்துக் கிறித்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறித்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறித்தவர்களுக்கு அழுத்தமாக மத்தேயு நற்செய்தி கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்து சுட்டிக்காட்டப்படுகிறது.

எருசலேமின் அழிவுக்குப் பின் (கி.பி. 70), யூதர்கள் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். இசுரயேல் நாடு உரோமையரின் ஆதிக்கத்துக்குக் கீழ் வந்த நிலையில், எருசலேம் திருக்கோவில் அழிந்துபட்ட நிலையில், யூத சமயம் எவ்வாறு தொடர்ந்து நீடிக்க முடியும்? மத்தேயுவும் இதே கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் தந்த பதில்? இயேசுவை யார்யார் ஆண்டவர் என அறிக்கையிட்டு, அவரது போதனைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே உண்மையான யூத நெறியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர்கள் ஆவர்.

யூதக் கிறித்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறித்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இயேசு கிறித்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறித்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறைகூவல் விடுக்கிறார் (மத் 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.

இந்நூலின் கிறிஸ்தியல், திருச்சபையியல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன.

மத்தேயு நற்செய்தி நூலின் உள்ளீட்டு அமைப்பு

மாற்கு நற்செய்தியிலிருந்து மத்தேயு எடுத்துக்கொண்டவை இவை:

  • இயேசு கலிலேயாவில் பணியைத் தொடங்கியது பற்றிய கூற்றுத்தொடர்;
  • இயேசு எருசலேமை நோக்கிப் பயணம் மேற்கொண்ட நிகழ்வு;
  • இயேசு எருசலேமில் போதித்து, பின்னர் அங்கே துன்பங்கள் அனுபவித்தது பற்றிய கூற்றுத்தொடர்.

இவற்றை உள்ளடக்கிய அடிப்படைக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, மத்தேயு தாம் தொகுத்த நற்செய்தியில் ஒரு பாயிரம் போன்ற பகுதியை இணைத்தார் (மத்தேயு முதல் இரு அதிகாரங்கள்). அப்பகுதி இயேசுவின் பிறப்புப் பற்றியும் குழந்தைப் பருவம் பற்றியும் பேசுகிறது. இயேசு இன்னார் என அடையாளம் காட்டுவதே இதன் நோக்கம். இயேசு ஆபிரகாமின் மகன், தாவீதின் மகன், கடவுளின் மகன் என இனம் காட்டுவதும், இசுரயேலின் மெசியாவாகிய இயேசு, எவ்வாறு தாவீதின் நகராகிய பெத்லகேமிலிருந்து நாசரேத்துக்குச் சென்றார் என்று விவரிப்பதும் இப்பகுதியே.

மத்தேயு நற்செய்தியில் முதன்மை வாய்ந்த கட்டமைப்பு அதில் காணப்படும் ஐந்து பேருரைகள் (பொழிவுகள்) ஆகும். அவையாவன:

  • மலைப்பொழிவு (மத்தேயு அதி. 5-7)
  • திருத்தூதுப் பொழிவு (மத்தேயு அதி. 10)
  • உவமைப் பொழிவு (மத்தேயு அதி. 13)
  • திருச்சபைப் பொழிவு (மத்தேயு அதி. 18)
  • நிறைவுகாலப் பொழிவு (மத்தேயு அதி. 24-25)

மேற்கூறிய ஐந்து பொழிவுகளையும் அளித்து, தம் மூல ஆதாரங்களைப் பயன்படுத்தி, இயேசு ஒருவரே நம் ஆசிரியர் (மத் 23:10) என மத்தேயு நிலைநாட்டுகிறார். இயேசுவின் போதனைப் பகுதியில் மாற்குவை விட அதிகக் கருத்துகளும் தருகிறார்.

பழைய ஏற்பாட்டின் திருச்சட்ட நூலாகிய தோராவில்[4] ஐந்து நூல்கள் அமைந்திருப்பதுபோல் மத்தேயு நற்செய்தி நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன.

மத்தேயுவில் காணப்படுகின்ற ஐந்து பொழுவுகள் ஒவ்வொன்றின் முன்னும் பின்னும் பல நிகழ்ச்சித் தொகுப்புகள் தரப்படுகின்றன. இவ்வாறு, இயேசுவின் பொதுப்பணிக்கான தயாரிப்பு அதிகாரங்கள் 3-4 பகுதியில் விளக்கப்படுகிறது. மலைப் பொழிவுக்குப் பின்னர், திருத்தூதுப் பொழிவுக்கு முன்னால், இயேசு புரிந்த புதுமைகள் தரப்படுகின்றன (அதி. 8-9). உவமைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் போதனையைச் சிலர் ஏற்கின்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை என்பது விளக்கப்படுகிறது (அத். 11-12). திருச்சபைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் கலிலேயப் பணியும் இயேசு எருசலேமை நோக்கிப் பயணமாதலும் பேசப்படுகின்றன (அதி. 19-23).

இறுதியாக, அதிகாரங்கள் 26-28இல் இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் விளக்கம் பெறுகின்றன. மாற்கு நற்செய்தி, இயேசுவின் கல்லறை வெறுமையாக இருந்தது என்ற செய்தியோடு முடிந்தது. ஆனால், மத்தேயு நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு கலிலேயாவில் தோன்றிய செய்தி சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி முறையாகத் தோன்றிய இயேசு, தம் சீடர்களிடம் தம் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்குமாறு பணிக்கின்றார் (மத் 28:16-20).

மத்தேயு நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பட்டியலிட்டுக் காட்டலாம்.

மத்தேயு நற்செய்தி

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
முன்னுரை: இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும் அதிகாரங்கள் 1 முதல் 2 முடிய 5 - 7
பகுதி 1: விண்ணரசு பறைசாற்றப்படல்

1. நிகழ்ச்சி
2. அறிவுரை (மலைப்பொழிவு)

அதிகாரங்கள் 3 முதல் 7 முடிய

அதிகாரங்கள் 3 முதல் 4 முடிய
அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய

7 - 16

7 - 9
10 - 16

பகுதி 2: விண்ணரசுப் பணி

1. நிகழ்ச்சி
2. அறிவுரை (திருத்தூதுப் பொழிவு)

அதிகாரங்கள் 8 முதல் 10 முடிய

அதிகாரங்கள் 6 முதல் 9 முடிய
அதிகாரம் 10

16 - 22

16 - 20
20 - 22

பகுதி 3: விண்ணரசின் தன்மை

1. நிகழ்ச்சி
2. அறிவுரை (உவமைப் பொழிவு)

அதிகாரங்கள் 11 முதல் 13:52 முடிய

அதிகாரங்கள் 11 முதல் 12 முடிய
அதிகாரம் 13:1 முதல் 13:52 முடிய

22 - 29

22 - 26
26 - 29

பகுதி 4: விண்ணரசின் அமைப்பு

1. நிகழ்ச்சி
2. அறிவுரை (திருச்சபைப் பொழிவு)

அதிகாரங்கள் 13:53 முதல் 18 முடிய

அதிகாரங்கள் 13:53 முதல் 17 முடிய
அதிகாரம் 18

29 - 38

29 - 36
36 - 38

பகுதி 5: விண்ணரசின் வருகை

1. நிகழ்ச்சி
2. அறிவுரை (நிறைவுகாலப் பொழிவு)

அதிகாரங்கள் 19 முதல் 25 முடிய

அதிகாரங்கள் 19 முதல் 23 முடிய
அதிகாரங்கள் 24 முதல் 25 முடிய

38 - 53

38 - 48
48 - 53

முடிவுரை: இயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும் அதிகாரங்கள் 26 முதல் 28 முடிய 53 - 61

மத்தேயு நற்செய்தியின் இறையியல்

மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு அறிவித்த போதனையின் மையக் கருத்து விண்ணரசு (கடவுளின் ஆட்சி) ஆகும். கடவுள்தாம் படைப்புலகு அனைத்தையும் ஆண்டு வழிநடத்துபவர் என்னும் உண்மையை அனைவரும் ஏற்று, அந்த நம்பிக்கைக்கு ஏற்பத் தம் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்வதைக் குறிப்பதே கடவுளின் ஆட்சியாகும். இந்தக் கடவுளின் ஆட்சியைத்தான் மத்தேயு விண்ணரசு என்று குறிப்பிடுகிறார். யூதர்கள் கடவுளின் பெயரை வெளிப்படையாக உரைப்பதில்லை; மாறாக கடவுளின் உறைவிடமாகிய விண்ணகம் சில வேளைகளில் கடவுளையே குறிக்கும். இவ்வாறு, விண்ணரசு என்று மத்தேயு கூறுவது உண்மையிலே கடவுளின் அரசு, இறையாட்சி, கடவுளின் ஆட்சி என்றே பொருள்படும்.

மத்தேயுவில் காணும் போதனைப்படி, விண்ணரசின் முழுமை இன்னும் வரவில்லை என்பது உண்மையே. ஆகவேதான், இயேசுவின் சீடர் உமது ஆட்சி வருக (மத் 6:10) என்று இறைவேண்டல் செய்கிறார்கள். எனினும், கடவுளின் ஆட்சியானது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. அந்த ஆட்சியின் முன்சுவையாக, தொடக்கமாக இருப்பவர் இயேசு. அவர் மக்களுக்கு நலமளிப்பதில் ஈடுபட்டார்; உவமைகள் வழி இறையாட்சியின் பண்புகளை விளக்கினார்; குறிப்பாக, தம் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக இறையாட்சியின் உண்மையை நிலைநிறுத்தினார்.

இறையாட்சி அல்லது விண்ணரசு பற்றிய இந்த இரு கூறுகளையும் மத்தேயு நற்செய்தியில் காண்கின்றோம். ஏற்கெனவே இயேசுவோடு தொடங்கிவிட்ட இந்த ஆட்சி இன்னும் தன் முழுமையை எய்தவில்லை. இந்த முழுமையை மத்தேயு நற்செய்தி விவரிக்கிறது (காண்க: மத். அதிகாரங்கள் 24, 25). இறையாட்சியின் நிறைவை எதிர்பார்த்து மனிதர் விழிப்பாக இருக்க வேண்டும் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத். 24:42; 25:13).

மத்தேயு, சிறியோர் மட்டில் நாம் காட்ட வேண்டிய அன்பையும் கரிசனையையும் மிகவும் வலியுறுத்துகிறார் (மத் 10:42). இயேசுவின் சீடர்களும் சிறியோராக மாற வேண்டும். ஏன், மக்களினத்தார் அனைவருக்கும் கடவுள் தீர்ப்பு வழங்கும்போது, அவர்கள் சிறியோர் மட்டில் அன்புகாட்டினரா என்பதை அளவீடாகக் கொண்டே தீர்ப்பு வழங்குவார் என மத்தேயு நற்செய்தி காட்டுகிறது (மத் 25:31-46).

மத்தேயு நற்செய்தியில் இயேசுவுக்கு வழங்கப்படும் பெயர்கள்

இயேசுவின் வேர்கள் இசுரயேலின் வரலாற்றிலும் அதன் திருநூல்களிலும் காணக்கிடக்கின்றன என்பதை நிலைநாட்டியபின், இயேசுவுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பெயர்களுக்கு யூத மரபின் அடிப்படையில் விளக்கம் தருகிறார் மத்தேயு.

எடுத்துக்காட்டாக, மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தையும் முடிவையும் எடுத்துக்கொண்டால், மத் 1:23இல் இயேசு இம்மானுவேல் என்று அடையாளம் காட்டப்படுகிறார். இந்த எபிரேயச் சொல்லுக்குக் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள். நூலின் இறுதியில், உயிர்த்தெழுந்த இயேசு, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என வாக்களிக்கிறார் (மத் 28:20). இவ்வாறு, இயேசு கடவுளின் உடனிருப்பாக மனிதரிடையே வந்தார் என்பதோடு, அவரது உடனிருப்பும் எக்காலத்திற்கும் தொடரும் என்னும் உண்மையை மத்தேயு நற்செய்தி வழங்குகிறது.

மத்தேயுவில் இயேசுவுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் கடவுளின் மகன் (காண்க: மத் 2:15). இங்குப் பழைய ஏற்பாட்டு நூலாகிய ஓசேயாவிலிருந்து 11:1 மேற்கோளாகக் காட்டப்படுகிறது. அதில் இசுரயேல் கடவுளின் மகன் என அழைக்கப்படுகிறது. அதுபோல, இயேசு தாவீதின் மகன் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் தாவீதுக்கு மகனாயிருந்த சாலமோனைப் போல, ஏன் அவரைவிடவும் மேலாக, இயேசு ஞானத்தைப் போதிப்பவராகவும் குணமளிப்பவராகவும் வந்தார். எனவே, அவர் தாவீதின் மகன்தான்.

இயேசுவுக்கு மத்தேயு வழங்கும் இன்னொரு பெயர் கடவுளின் ஊழியன் என்பதாகும். மனிதர்களின் துன்பங்களைத் தம்மேல் சுமந்துகொண்டு (காண்க: மத் 8:17; 12:18-21), முற்காலத்தில் எசாயா இறைவாக்கினர் விவரித்த கடவுளின் ஊழியனைப் போல இயேசுவும் இறை விருப்பத்தை நிறைவேற்றினார் (காண்க: எசா 53:4; 42:1-4).

மத்தேயு நற்செய்தி இயேசுவுக்குக் கடவுளின் ஞானம் என்னும் பெயரையும் வழங்குகிறது (காண்க: மத் 11:19, 25-30). இயேசு கடவுளின் ஞானத்தை மக்களுக்கு அறிவித்தவர் ஆதலால் இறைவாக்குகளும் திருச்சட்டமும் உண்மையிலேயே எதில் அடங்கியுள்ளன என்று அதிகாரத்தோடு போதித்தார் (காண்க: மத் 7:12; 22:34-40).

இயேசு யூத சமயத் திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்தாரே ஒழிய, அதை அழிப்பதற்கல்ல (மத் 5:17). எனவே இயேசு வழங்கியதாக ஐந்து பேருரைகளை மத்தேயு அமைத்துள்ளார். அந்த உரைகளில் இயேசுவின் போதனை அடங்கியுள்ளது. அந்தப் போதனைகளிலிருந்து பெறப்படும் வாழ்க்கை நெறியும் தரப்படுகிறது.

எனவே, மத்தேயு நற்செய்தியிலிருந்து இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மோடு இருக்கிறார் (மத் 1:23; 28:20) என்னும் உறுதியைப் பெறுகிறோம். இயேசுவின் திருச்சபை, கடவுளின் மக்களை உள்ளடக்கும் அவையாக, குழுவாக உள்ளது எனவும் அறிகிறோம் (மத் 21:33-46).

ஆதாரங்கள்

  1. மத்தேயு
  2. ஒத்தமை நற்செய்திகள்
  3. விண்ணரசு - கடவுளின் ஆட்சி
  4. தோரா

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தேயு_நற்செய்தி&oldid=1674190" இலிருந்து மீள்விக்கப்பட்டது