நற்செய்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 95 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 66: வரிசை 66:


[[பகுப்பு:விவிலியம்]]
[[பகுப்பு:விவிலியம்]]
nalam
ethirikalidamum anbu kattavendum enru mattum avar kura vara villai thunpathin alavum inbathin alavum manitnan ariya mudiathathu athu iraivanuku sontham enave annbai vazunkal iraivanuku athu pidithathu enpathai kuravum vilakavum muyantrar

00:15, 30 மே 2013 இல் நிலவும் திருத்தம்

ஆர்மீனிய மொழியில் சர்கிசு பிட்சக் என்பவரால் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மாற்கு நற்செய்தியின் முதல் பக்கம்

நற்செய்திகள் அல்லது நற்செய்தி நூல்கள் (Gospels) என்பவை இயேசுவின் வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் படையல்கள் ஆகும். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் 4 நற்செய்திகள் உள்ளன. அவை முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோரால் கி.பி 65 முதல் 110க்கு உள்ளாக எழுதப்பட்டன என்று அறிஞர் கருதுகின்றனர். கத்தோலிக்க சபை, ஆங்கிலிக்க சபை, லூத்தரன் சபை, மரபுவழா சபை (Orthodox) போன்ற எல்லா கிறித்தவ திருச்சபைகளும் இந்த நான்கு நூல்களையும் "திருமுறை" (Canon) சார்ந்தவையாக ஏற்றுக் கொண்டுள்ளன.

விவிலியத் தொகுப்பில் சேர்க்கப்படாத பல நற்செய்தி நூல்களும் உண்டு. அவற்றுள் "தோமா நற்செய்தி" (Gospel of Thomas) குறிப்பிடத்தக்கது.

முதலில் எழுதப்பட்ட நற்செய்தி நூல்கள்

புதிய ஏற்பாட்டின் பகுதியாய் இருக்கின்ற நான்கு நற்செய்தி நூல்களும் முறையே மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் வரிசையில்தான் தொன்றுதொட்டே அமைக்கப்பட்டன. ஆயினும், விவிலிய அறிஞர்கள் மிகப்பலர் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலில் உருவானது என்று கருதுகின்றனர். மேலும், மாற்கு, மத்தேயு, லூக்கா ஆகிய மூன்றும் தமக்குள்ளே மிகவும் ஒத்திருப்பதால் "ஒத்தமை நற்செய்தி நூல்கள்"" (Synoptic Gospels) எனவும் அழைக்கப்படுகின்றன. அவை ஒரு பொதுப்பார்வை கொண்டுள்ளன எனலாம். யோவான் நற்செய்தி முன்னைய மூன்றிலுமிருந்து பல விதங்களில் வேறுபடுகிறது.

நற்செய்தி நூல்கள் எழுந்த வரலாற்றை ஆய்ந்த அறிஞர்கள் மாற்கு நற்செய்தியில் ஓர் அடிப்படை அமைப்பு உள்ளதைக் கண்டுபித்தனர். அந்த அமைப்பு மாற்குவிடமிருந்து வந்தது என்றாலும், மாற்கு கி.பி. 70இல் தம் நற்செய்தி நூலுக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்கு முன்னரே கி.பி. 30 அளவில் வழக்கிலிருந்த பல செய்தித் தொகுப்புகளைப் பயன்படுத்தினார். இத்தொகுப்புகளில் இயேசுவி்ன் போதனைகள் உள்ளடங்கியிருந்தன. இயேசு புரிந்த செயல்களை உள்ளடக்கிய கூற்றுத் தொடர்களும் இருந்தன. இவற்றை மாற்கு (அல்லது அவரது பெயரால் இன்னொருவர்) பயன்படுத்திக் கொண்டு, தொகுத்து அமைத்து இறுதி வடிவம் கொடுத்தார்.

மத்தேயுவும் லூக்காவும் தம் நற்செய்தி நூல்களை எழுதுவதற்கு மாற்கு எழுதிய ஏட்டைப் பயன்படுத்தியிருப்பர். அதோடு மற்றொரு பொது மூல ஆதார ஏடு ஒன்றிலிருந்தும் அவர்கள் செய்திகள் பெற்றிருப்பர் என்பது பெரும்பான்மை ஆய்வாளர் கணிப்பு. அந்த ஊக ஏடு "Q" என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. "Q" என்பது "Quelle" (க்வெல்லே) என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு மூலம், ஆதாரம், ஊற்று (Source) என்பது பொருள். வேறு சில ஆய்வாளர்கள், மத்தேயு முதலில் எழுதப்பட்டது என்றும் அதில் சில மாற்றங்கள் செய்து மாற்குவும் லூக்காவும் தம் நற்செய்தி நூல்களை வடித்தனர் என்றும் கருதுகின்றனர்.

ஒத்தமை நற்செய்தி நூல்கள் மூன்றும் இயேசு கடவுளாட்சி (விண்ணரசு) இந்த உலகில் வந்துகொண்டிருக்கிறது என்றும், அந்த ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் மக்கள் மனம் மாறி, ஒரு புதிய வாழ்வு நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் போதித்ததைப் பதிவுசெய்துள்ளன.

யோவான் நற்செய்தி

நான்காம் நற்செய்தியாக அமைந்தது "யோவான் நற்செய்தி நூல்" ஆகும். இது மாற்கு, மத்தேயு, லூக்கா என்னும் முதல் மூன்று நற்செய்தி நூல்களுக்கும் காலத்தால் பிற்பட்டது என்பது அறிஞர் கருத்து. கி.பி. 90ஆம் ஆண்டளவில், அல்லது அதற்குச் சிறிது பிற்பட்ட காலத்தில் இந்நூல் தொகுக்கப்பட்டிருக்கலாம். நூல் எழுதப்பட்டதன் நோக்கம் இறுதியில் தரப்படுகிறது:

"இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பட்டன" (யோவான் 20:31).

கடவுளை அறிய வேண்டுமா? கடவுளின் விருப்பம் யாதெனத் தெரியவேண்டுமா? இயேசுவுக்குச் செவிமடுஙள்; அவர் கடவுள் பற்றிச் சொல்லாலும் செயலாலும் வெளிப்படுத்துவதை உங்கள் கண்களைத் திறந்து பாருங்கள். - இதுவே யோவான் நற்செய்தி வாசகர்களிடம் கேட்பது.

நற்செய்தி நூல்கள் சித்தரிக்கின்ற இயேசுவின் வரலாறு

இயேசுவின் வாழ்வு, போதனை ஆகியவை பற்றி அறிய உதவும் அடிப்படை ஏடுகள் நற்செய்தி நூல்கள்தாம். அவற்றை நாம் கவனமாக ஆய்ந்தால் இயேசுவின் வாழ்விலும் பணிக்காலத்திலும் நடந்த முதன்மை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒரு பொதுத் தொகுப்பை வரிசைப்படுத்த முடியும். அவரது போதனைகளின் முக்கிய கருத்துக் கோவைகளையும் அடையாளம் காண முடியும்.

இவ்வாறு நாம் பெறக்கூடுமான இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:

கிபி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த இயேசு பாலத்தீனாவைச் சேர்ந்த ஒரு யூத மனிதர். அவர் கலிலேயாப் பகுதியிலுள்ள நாசரேத்தில் வளர்ந்தார். திருமுழுக்கு யோவான் என்பவரைத் தலைமையாகக் கொண்டு உருவாகியிருந்த ஓர் இயக்கத்தில் இயேசுவும் பங்கேற்று, யோவான் கைகளில் திருமுழுக்குப் பெற்றார். ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இயேசு யோவானை விட்டுப் பிரிந்து சென்று, தமக்கெனச் சீடர்களைச் சேர்த்தார். கப்பர்நகூமை மையமாகக் கொண்டிருந்த கலிலேயாப் பகுதியிலும், எருசலேமை மையமாகக் கொண்டிருந்த யூதேயா பகுதியிலும் இயேசு போதனை வழங்குவதிலும் மக்களுக்குக் குணமளிப்பதிலும் ஈடுபட்டுப் பொதுப்பணி ஆற்றினார்.

கி.பி. 30 அளவில் இயேசு எருசலேமுக்குப் போனார். அங்கே அவர் உரோமை ஆளுநராகிய பொந்தியு பிலாத்து (ஆட்சிக்காலம்: கி.பி. 26-36) என்பவரது ஆட்சியின் கீழ் கைது செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டுக் கொலையுண்டார். சாவுக்குப் பின் இயேசு உயிர்பெற்றெழுந்தார் என அவருடைய சீடர்களும் வேறு சில தொண்டர்களும் ஆணித்தரமாக உரைத்ததோடு, அந்த அனுபவத்துக்கு அடிப்படையாகத் தாங்கள் இயேசுவை உயிரோடு பார்த்ததாகப் பறைசாற்றினார்கள்.

இவ்வாறு இயேசுவைக் குறித்துச் சான்று பகர்ந்த அவருடைய சீடர்கள் பாலசுதீனாவிலும் அதற்கு வெளியிலும் சென்று இயேசுவைப் பற்றிப் போதித்தார்கள். முதலில் யூத மக்கள் சிலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டார்கள். பின்னர், யூத மக்களால் புற இனத்தார் என்று கருதப்பட்ட கிரேக்க மற்றும் உரோமை மக்கள் நடுவே கிறித்தவ சமயம் பரவியது. அக்காலக் கட்டத்தில்தான் நற்செய்தி நூல்கள் உருவாயின.

நற்செய்தி நூல்கள் வழங்குகின்ற இயேசுவின் போதனைகள்

நற்செய்தி நூல்களை ஆய்ந்து பார்க்குமிடத்து, இயேசு அறிவித்த போதனையின் சுருக்கத்தைக் கீழ்வருமாறு எடுத்துரைக்கலாம்:

கடவுளின் ஆட்சி வந்துகொண்டிருக்கிறது என்றும், அது முழுமையாக வெளிப்படும் நாள் தொலையில் இல்லை என்றும் கூறி இயேசு தம் போதனையைத் தொடங்கினார். கடவுளாட்சியின் தொடக்கமும் முன்னறிவிப்பும் தம் சொந்த வாழ்விலும் பணியிலும் காணக்கிடக்கிறது என்று இயேசு அறிவித்தார். இசுராயேல் வழிபட்டுவந்த கடவுளோடு இயேசு ஒரு தனிப்பட்ட, நெருக்கமான உறவுகொண்டிருந்தார். இந்தக் கடவுளை இயேசு, படைப்பின் தலைவராகவும் ஆண்டவராகவும் மட்டுமே பார்க்காமல், தம் தந்தையாகவும் போற்றினார்.

கடவுளோடு தனிப்பட்ட, நெருக்கமான உறவு நன்மனம் கொண்ட எல்லா மனிதர்க்கும் உரிய ஒன்றே என இயேசு அறிவித்தார். பாவங்களுக்கு மன்னிப்பும், கடவுளோடு ஒப்புரவாகும் நிலையும் மனிதருக்குக் கிடைக்கும் என்று படிப்பித்தார். கடவுளாட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காலத்தில், கருத்தாக வாழ்வது எவ்வாறு என்பதை இயேசு மக்களுக்கு விளக்கிக் கூற முயன்றார். பகைவருக்கும் அன்பு காட்ட வேண்டும் என்பது இயேசுவின் போதனையில் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த அம்சம். அது கடினமானதும் கூட.

இயேசுவின் வாழ்வும் போதனையும் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டில் அவர் காட்டிய தனிக் கரிசனைக்குச் சான்று பகர்கின்றன. தொழுநோயாளர், நோயுற்றோர், ஊனமுற்றோர், ஏழைகள், பெண்கள், தாழ்ந்தவராகக் கருதப்பட்ட வரிதண்டுவோர் மற்றும் பாவிகள் அனைவருமே அவருடைய தனிக் கவனத்துக்கு உரியவர் ஆயினர்.

யூத சமய வழக்கங்களைப் பொறுத்த மட்டிலும், யூதரின் வழிபாட்டு மையமாகிய எருசலேம் திருக்கோவிலைப் பொறுத்த மட்டிலும் இயேசு பழைமைவாதிகளோடு ஒத்துப் போகவில்லை. மாறாக, அவர் அறிவித்த கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டவையே யூத சமயமும் கோவிலும் என்று போதித்தார் இயேசு.

புதிய ஏற்பாட்டில் நற்செய்தி நூல்கள் வகிக்கும் இடம்

27 தனி நூல்களை உள்ளடக்கிய புதிய ஏற்பாட்டில் காணப்படுகின்ற மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களும் தனிச்சிறப்புடைத்தனவாக வரலாற்றில் போற்றப்பட்டு வந்துள்ளன. அதற்கு முதன்மைக் காரணம் அவை நான்கும் நாசரேத்து இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கின்றன என்பதே.

கிறித்துவின் சிலுவைச் சாவு மனிதருக்கு விடுதலை வழங்கியது; மனிதரை மீண்டும் கடவுளோடு உறவாடச் செய்தது. இந்த விடுதலையையும் உறவையும் எல்லா மனிதரும் இயேசுவில் அனுபவிக்கும் வழி பிறந்துவிட்டது என்பதே ”நற்செய்தி".

நற்செய்தி நூல்களில் விவரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் கி.பி. 30ஆம் ஆண்டளவில் நிகழ்ந்தன. ஆனால் இன்று நாம் அறியும் நற்செய்தி நூல்கள் நான்கும் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதியில்தான் வடிவமைக்கப்பட்டன. மாற்கு நற்செய்தி கி.பி. 70இலும், மத்தேயு, லூக்கா நற்செய்தி நூல்கள் கி.பி. 85-90 அளவிலும், யோவான் நற்செய்தி கி.பி. சுமார் 90-100 அளவிலும் வடிவம் பெற்றன என அறிஞர் கூறுகின்றனர்.

ஆக, நற்செய்தி நூல்களில் விவரிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் நிகழ்ந்த காலத்துக்கும், அவை எழுத்து வடிவம் பெற்ற காலத்துக்கும் இடையே நாற்பது முதல் அறுபது ஆண்டுகள் வரை கட்ந்துவிட்டிருந்தன. அந்த இடைப்பட்ட காலத்தில் இயேசுவின் போதனை மற்றும் செயல்பாடுகள் குறித்த மரபுகள் பாதுகாக்கப்பட்டன. அவற்றைத் தொடக்க காலத் திருச்சபை தன் வாழ்வில் சந்தித்த பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் சிக்கல்களுக்கும் பொருத்தமான பதில் காணப் பயன்படுத்திக் கொண்டது.

இன்றும் கூட, கிறித்தவர்கள் தம் அன்றாட வாழ்க்கைக்கு ஆன்ம உணவாக நற்செய்தி நூல்களை வாசித்துத் தியானிக்கும் பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். கிறித்தவர்கள் வழிபாட்டுக்குக் கூடி வரும்போது நற்செய்தி நூல்களிலிருந்து சில பகுதிகளை வாசிப்பதும் அவற்றின் அடிப்படையில் மறையுரை நிகழ்த்துவதும் இறைவேண்டல் செய்வதும் உலகனைத்திலும் ஒவ்வொரு ஞாயிறன்றும் நிகழ்ந்து வருகிறது.

இவற்றையும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gospels
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

nalam ethirikalidamum anbu kattavendum enru mattum avar kura vara villai thunpathin alavum inbathin alavum manitnan ariya mudiathathu athu iraivanuku sontham enave annbai vazunkal iraivanuku athu pidithathu enpathai kuravum vilakavum muyantrar

"https://ta.wikipedia.org/w/index.php?title=நற்செய்திகள்&oldid=1430100" இலிருந்து மீள்விக்கப்பட்டது