பூசை (இந்து): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ro:Puja
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{வார்ப்புரு:சான்றில்லை}}

{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
{{இந்து மெய்யியல் கருத்துருக்கள்}}
[[Image:Alfred Ford (Ambarisha Das) puja ISKCON Tirupati 2007.JPG|right|thumb|250px]]
[[Image:Alfred Ford (Ambarisha Das) puja ISKCON Tirupati 2007.JPG|right|thumb|250px]]

15:11, 26 மே 2012 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:இந்து மெய்யியல் கருத்துருக்கள்

பூசை என்பது இந்து சமய வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். பொதுவாக தெய்வத் திருவுருவங்களை பக்தி உணர்வுடன் வழிபடுதலே பூசை அல்லது பூசனை என்று கூறப்படுகிறது. அதோடு, குருமார்கள், மகான்கள், போற்றுதலுக்குரிய பெரியோர்கள், முன்னோர்கள், பெற்றோர் ஆகியோரை வழிபாட்டுணர்வுடன் தொழுவதும் பூசை என்பதில் அடங்கும்

பூசை விளக்கம்

பூசை என்ற சொல்லுக்கு இறையன்பில் மலர்தல் என்பது பொருள். பக்தர்கள் தாங்கள் வழிபடும் விக்கிரகங்களில் தெய்வத்தின் உயிர்ச்சக்தி இருப்பதாகக் கொண்டு பல்வேறு செயல்பாடுகளைச் செய்வார்கள். பொதுவாக, பூஜையில் பதினாறு வகை செயல்கள்(உபசாரங்கள்) செய்யப் படவேண்டும் என்று ஆகம நூல்கள் குறிப்பிடுகின்றன.

  1. தியானம் - பூசைக்குரிய இறைவன் அல்லது இறைவியின் உருவத்தை தியானித்தல்
  2. ஆவாகனம் - தியானிக்கப் பட்ட தெய்வத்தை வருமாறு அழைத்தல்
  3. ஆசனம் - தெய்வம் அமர இருக்கை அளித்தல்
  4. அர்க்கியம் - கைகழுவ நீர் அளித்தல்
  5. ஆசமனியம் - பருக நீர் அளித்தல்
  6. பாத்யம் - பாதம் கழுவுதல்
  7. அபிடேகம் - நீராட்டுதல். விரிவான பூசைகளில் பால், தயிர், தேன், நெய் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிடேகம் செய்யப் படும்.
  8. வஸ்திரம் - ஆடை அணிவித்தல்
  9. ஆபரணம் - அணிகலன்கள் பூட்டுதல்
  10. கந்தம் - சந்தனம், குங்குமம் போன்ற நறுமணப் பொருட்களைப் பூசுதல்
  11. அர்ச்சனம் - மலர்மாலைகள் சூட்டுதல், நறுமலர்களால் அருச்சித்தல்.
  12. தூபம் - அகில், சாம்பிராணி, ஊதுபத்தி போன்றவற்றால் நறுமணப் புகை காட்டுதல்
  13. தீபம் - நெய்விளக்கேற்றி தெய்வத் திருவுருவத்தைச் சுற்றிக் காட்டுதல்
  14. நைவேத்யம் - பல்வேறு உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்தல். இந்தப் படையலைப் பின்னர் பக்தர்கள் பிரசாதமாக உண்பர்.
  15. நீராஜனம் - கற்பூரம் ஏற்றி ஆரத்தியெடுத்தல்
  16. தாம்பூலம் - வெற்றிலை, பாக்கு அளித்தல்

விரிவான பூசைகளில் இத்துடன் இசைபாடுதல், இசைக் கருவிகளை முழக்குதல், நடனமாடுதல் ஆகிய செயல்களும் இடம்பெறுகிறது. இது கருதியே பல பெரிய இந்துக் கோயில்களில் பாடகர்கள், நாதஸ்வரம், தவில், மிருதங்கம் போன்ற கருவிகளில் வல்ல இசைக்கலைஞர்கள், நடன மாதர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

வேத மந்திரங்கள்

திருவாசகம் முற்றோதல் பூசை

பூசையின் போது வேத மந்திரங்களையும், அந்தக் குறிப்பிட்ட தெய்வம் மீது புனையப்பட்ட தோத்திரங்களையும், பக்திப் பாடல்களையும் ஓதுவார்கள். தமிழகத்தில் பக்தி இலக்கிய காலகட்டத்தில் பூசை மிகப் புகழ் பெற்ற வழிபாட்டு முறையாக இருந்திருக்கிறது.

வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே

என்று திருஞான சம்பந்தர் தேவாரமும்,

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் - உன்
நாமம் என் நாவில் மறந்தறியேன்

என்று திருநாவுக்கரசர் தேவாரமும்

பூசை பற்றிக் குறிப்பிடுகின்றன.

கோயில் பூசைகள்

கோயில்களில் நடைபெறும் பூசைகள் மிக விரிவானவை. இந்து சமயத்தின் இருபெரும் பிரிவுகளான சைவ, வைணவப் பெருங்கோவில்களில் தினந்தோறும் ஆறு காலம் பூசைகள் நடைபெறுகின்றன. இந்தப் பூசை முறைகள் பற்றி சைவ/வைணவ ஆகம நூல்கள் மிகவும் விரிவாகக் கூறுகின்றன. இவை தவிர அம்மன் கோயில்கள் மற்றும் கிராம தேவதை கோயில்களில் அந்தந்த ஊர் மரபுப்படியோ அல்லது தாந்திரீக முறைகளின் அடிப்படையிலோ பூசைகள் நடைபெறுகின்றன.

பூசை செய்பவர்கள்

திருக்கோயில்களில் பூசை செய்வோர்களுக்கு அர்ச்சகர், சிவாசாரியார், குருக்கள், பட்டாசாரியார், பூசாரி, பூசகர் என்று பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. மரபு வழக்கப்படி தமிழகத்தின் ஆகம முறையிலான பெருங்கோயில்களில் குறிப்பிட்ட அர்ச்சக சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே பூசை செய்ய முடியும் என்னும் நிலை இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசு, இந்து மதத்தைச் சேர்ந்த அனைவரும் பூசை முறைகளைக் கற்றுக் கொண்டு இக்கோயில்களில் அர்ச்சகர்களாக ஆக முடியும் என்று சட்டம் இயற்றியுள்ளது.

வீடுகளில் பூசை

கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்கள் வீடுகளில் வழிபாட்டுக்கென அமைக்கப்படும் அறை பூசையறை எனப்படுகிறது. இங்கு தெய்வங்களின் படங்களும், சிறு சிலைகளும் இடம் பெற்றிருக்கும். இந்தப் பூசையறையில் தினந்தோறும் குடும்பத்தலைவி விளக்கேற்றி வழிபடுகிறார். குடும்ப உறுப்பினர்கள் தனியாகவோ, சேர்ந்தமர்ந்தோ தங்கள் வசதிக்கேற்ற படி பூசைகள் செய்வதுண்டு.

சமயச் சடங்கு பூசைகள்

திருமணம், பெயர் சூட்டல், புதுமனை புகுதல், காதணி விழா போன்ற பல்வேறு இந்து சமயச் சடங்குகளிலும் பூசை ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெறுகிறது.

மானச பூசை

தத்துவ நிலையில், தெய்வத்தை உள்ளத்தின் உள்ளேயே கண்டு அகவயமாகவே வழிபடுதலும் இந்து மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு பூசை முறையாகும். இவ்வகைப் பூசை முழுக்க மனதளவிலேயே நிகழ்வது, இதற்கு விக்கிரகங்களோ, மலர்கள் போன்ற பூசைப் பொருட்களோ தேவையில்லை. தியான வகையிலான இந்தப் பூசை மானச பூசை என்று வழங்கப் பெறுகிறது.

நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே
மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே

என்று தாயுமானவர் இவ்வகைப் பூசையினைக் குறிப்பிட்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூசை_(இந்து)&oldid=1119748" இலிருந்து மீள்விக்கப்பட்டது