சிறப்புச் சார்புக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிறப்புச் சார்புக் கோட்பாடு (special theory of relativity) என்னும் கொள்கை ஆல்பர்ட் ஐன்ஸ்டினால் 1905ல் வெளியிடப்பட்ட கருத்தாக்கமாகும். இது துகள்களின் இயக்கம் தொடர்பானது. இது எந்தவொரு இயக்கமும் சார்பானது என்றும், எதுவும் தீர்க்கமானதாக இருக்காது என்றும் ஒரு கருத்தை முன் வைத்தது. இதற்கு முன்னரே 1687 ஆம் ஆண்டில் சர். ஐசக் நியூட்டன் பொருட்களின் இயக்கங்கள் தொடர்பான விதிகளை வெளியிட்டிருந்தார். இவ்விதிகள் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புபட்ட இயக்கங்களுக்குப் பொருத்தமாக அமைந்தது.

சிறப்பு சார்பியல் கொள்கையின் மிக முக்கியமான ஒரு விஷயமே ஒளியின் மாறா திசைவேகத்தை கணக்கில் எடுத்துக்கொண்டது தான். மேலும், சிறப்பு சார்பியல் கொள்கை மூலம் நீள குறுக்கம், நேர நீட்டிப்பு மற்றும் நிறை மாறுபாடு போன்ற பல புதிய விடயங்கள் கிடைத்தன. இதன் மூலம் கால-வெளி வரைபடங்கள் வரையப்பட்டன. ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் மிக புகழ்பெற்ற சமன்பாடான E=mc2 என்னும் ஆற்றல் நிறை சமன்மை விதியும் இதன் மூலம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், ஒளியின் வேகத்தை நெருங்கும் வேகத்தோடான இயக்கங்களுக்கு இவ்விதிகள் பொருத்தமாக இல்லாதது காணப்பட்டது. இதன் விளைவே சிறப்புச் சார்புக் கோட்பாடு. சிறப்புச் சார்புக் கோட்பாடு குறைந்த வேகத்துடனான இயக்கங்களுக்கும், ஒளிவேகத்தை நெருங்கும் மிக வேகமான இயக்கங்களுக்கும் பொருந்தும். இதனால் சிறப்புச் சார்புக் கோட்பாடு நியூட்டனின் இயக்க விதிகளையும் தன்னுள் அடக்கியது எனலாம். ஐன்ஸ்டீனின் இந்தக் கோட்பாடு சார்புநிலையில் இயங்கும் பொருட்களின் இயக்கங்களைச் சரியாக விளக்கும் ஒரு கோட்பாடாகத் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கை நிலைமைகளில் ஒளிவேகத்துடன் ஒப்பிடக்கூடிய வேகத்தை அனுபவத்தில் காண்பதில்லை ஆதலால், ஐன்ஸ்டீனின் கோட்பாடு இயல்புக்கு ஒவ்வாததாகத் தோன்றுவதுடன் அதனைப் புரிந்து கொள்வதும் கடினம். எனினும் உயர் ஆற்றல் இயற்பியல் சார்ந்த சோதனைகள் ஐன்ஸ்டீனின் கோட்பாடு சரி என்பதற்குச் சான்றாக உள்ளன.

ஆற்றல் நிறை சமன்மை விதி

சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் கருதுகோள்கள்[தொகு]

சிறப்புச் சார்புக் கோட்பாடு இரண்டு கருதுகோள்களைக் கொண்டுள்ளது.

  1. ஒளியின் வேகம் மாறாத் தன்மை- கவனிப்பவர்களுடைய சார்பு வேகம் எதுவாக இருப்பினும், அவர்கள் எல்லோருக்கும் ஒளியின் வேகம் ஒன்றே.
  2. எந்தவொரு சடத்துவக் குறியீட்டுச் சட்டத்திலும் இயற்பியல் விதிகள் ஒன்றே. சார்பு நிலையில் துகள் ஒன்றுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ஒருவருக்கும், சோதனைச் சாலையில் நிலையாக இருக்கும் ஒருவருக்கும் இயற்பியல் விதிகள் ஒன்று என்பதே இதன் பொருள்.