சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி
实仁中学
Sekolah Menengah Serangoon
Serangoon Secondary School
முகவரி
11 அப்பர் சிராங்கூன் காட்சிச் சாலை
சிராங்கூன், 534237
சிங்கப்பூர்
தகவல்
வகைஅரசு
குறிக்கோள்நாடுக, முயல்க, பணியாற்றுக.
நிறுவல்1928
நிறங்கள்நிலம், வெள்ளை, இளஞ்சிவப்பு
இணையம்

சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி என்பது சிங்கப்பூர் நாட்டின் அப்பர் சிராங்கூன் காட்சிச் சாலையில் அமைந்துள்ள ஓர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகும்.

பள்ளி வரலாறு[தொகு]

சிராங்கூன் ஆங்கிலப் பள்ளி என்ற பெயரில் 1928-இல் சைமன் சாலையில் இரு மாடிக் கட்டடம் ஒன்றில் தொடங்கப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியர் ஒருவரையும் ஏழு ஆசிரியர்களையும் கொண்டு இப்பள்ளி இயங்கியது. ஏழு வகுப்புகள் மட்டும் கொண்டு இப்பள்ளியானது கல்விப்பணியில் செயல்பட்டது. அக்காலகட்டத்தில் இப்பள்ளி மட்டுமே இருபாலர் பயிலும் அரசாங்கப் பள்ளியாக இருந்தது. இங்கு, தம் படிப்பை முடித்த மாணவர்கள் உயர் கல்விக்காகப் புகழ்பெற்ற இராஃப்பிள்ஸ் கல்வி நிலையத்திற்குச் செல்லுமளவுக்குத் தரமான கல்வி அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.

1937இல் இப்பள்ளியில் மேலும் மூன்று வகுப்புகள் சேர்க்கப்பட்டன. இங்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தகட்ட படிப்புக்காக, மாணவர்கள் இராஃப்பிள்ஸ் கல்வி நிலையத்திலும் மாணவியர் இராஃப்பிள்ஸ் பெண்கள் பள்ளியிலும் சேர்ந்தனர். 1949இல் இது முழுமையான ஒரு பள்ளியாக மாற்றம் கண்டது. தொடக்க நிலை ஒன்றிலிருந்து உயர்நிலை நான்கு வரையிலான கல்வியை வழங்குவதற்கான பள்ளியாக உருவானது.

1958இல் இப்பள்ளி அப்பர் சிராங்கூன் மாவட்டத்திற்கான மேல்நிலைப்பள்ளி என்ற நிலையை அடைந்தது.[1] 1965இல் பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டத்துக்கான முதல் வகுப்பு தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக புகுமுகத வகுப்பு - 1, வகுப்பு - 2 என்ற பிரிவுகளில் தலா இரு வகுப்புகளில் மாணவர்களுக்குக் கல்விப் போதனை அளிக்கும் பள்ளியாக இப்பள்ளி விரைவிலேயே விரிவடைந்தது.

1967இல் இப்பள்ளி லோலேண்ட் சாலைக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டிலேயே சிராங்கூன் ஆங்கிலப்பள்ளி என்ற பெயர் கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த இப்பள்ளி சிராங்கூன் உயர்நிலைப்பள்ளி என்று பெயர் மாற்றம் கண்டது. 1976இல் பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான தொடக்கக் கல்லூரி நிறுவப்பட்டதால், பள்ளியில் இதே திட்டத்துக்கான படிப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது.

2017ஆம் அண்டு முதல் பள்ளியின் தலைமை ஆசிரியராக டே சியோக் ஹுவாவும் இரண்டு துணைத் தலைமை ஆசிரியர்களாக ரிச்சர்டு சியா மற்றும் சான் சூ கெக்கும் பணியாற்றி வருகின்றனர்.

சிராங்கூன் உயர்நிலைப்பள்ளி அருகிலமைந்த வட்டாரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வியை வழங்குவதில் பல சாதனைகள் புரிந்துள்ளதுடன், தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், பல்நலத்துறையில் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்கள், வணிகர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் எனப் பலரை உருவாக்கிச் சமூகத்துக்குத் தந்துள்ளது.

அடையாளங்களும் பண்பாடும்[தொகு]

பள்ளியின் முழக்கவரி (Motto)[தொகு]

வளர்ச்சியை நாடுக, சிறந்திருக்க முயல்க, பெருமிதத்துடன் பணியாற்றுக. ("Seek, Strive, Serve")

பள்ளியின் சின்னம்[தொகு]

  • சின்னத்தில் உள்ள நீல நிறம் பக்தி மற்றும் நேர்மையைக் குறிக்கிறது.
  • வெள்ளை நிறம் தூய்மையையும் முழுமையையும் குறிக்கிறது. எண்ணம், சொல், செயலில் தூய்மை
  • ஆரஞ்சு நிறம் வலிமையையும் மாசற்ற முழுமையையும் பொறைமையையும் குறிக்கிறது.
  • சின்னத்தில் பொறிக்கப்பட்ட கழுகின் உருவம் தன்னொழுக்கத்தையும் கண்ணியத்தையும் மரியாதையையும் ஆற்றலையும் உருவகப்படுத்துகிறது.
  • விளக்கு அறிவை உருவகப்படுத்துகிறது.

பள்ளியின் நோக்கம்[தொகு]

மாணவர்களைச் சுறுசுறுப்பானவர்களாகவும் இலக்கைக் கொண்டவர்களாகவும் சரியான குடிமக்களாகவும் கற்பதிலும் கற்றதில் சிறந்து விளங்குவதிலும் விருப்பம் கொண்டவர்களாகவும் மற்றவர்களின் நலனுக்காக உழைப்பவர்களாகவும் தங்கள் ஆளுமையைப் பேணுபவர்களாகவும் ஆக்குதல்.

ஆளுமையை வடிவமைத்தல், வேட்கையை உண்டாக்குதல், சமூகத்தைக் கட்டமைத்தல் என்பவை பள்ளியின் தொலைநோக்குகளாக உள்ளன.

இணைப் பாட நடவடிக்கைகள்[தொகு]

சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி இணைப்பாட நடவடிக்கைகளிலும் சீருடைக் குழுக்களுக்கான பணிகளிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறது.[2] சிராங்கூன் சாரணர் குழு 2000 ஆண்டிலிருந்து சில ஆண்டுகளுக்கு ஃப்ராங்க் கூப்பர் சாண்ட்ஸ் விருதுகளையும் 2000லிருந்து தொடர்ந்து கோல்டு விருதையும் பெற்றது.

மேடைக்கலைகள்[தொகு]

  • சீன பல்லிசை வாத்தியக் குழு
  • ஆங்கில வாய்ப்பாட்டுக் குழு
  • பல்லிசை வாத்தியக் குழு
  • தற்கால நடனம்
  • குசெங் சீன வாத்தியக் குழு
  • மலாய் நடனம்
  • நாடகக் குழு

சீருடைக்குழுக்கள்[தொகு]

  • சாரணர் குழு
  • தேசிய காவல் மாணவர் படை(தரைப்படை)
  • தேசிய மாணவர் படை (தரைப்படை)
  • சாரணியர்க் குழு
  • செஞ்சிலுவைச் சங்கம்

சங்கங்கள்[தொகு]

  • கண் புலச் செவி ஊடகச் சங்கம்

விளையாட்டுகள்[தொகு]

முன்னாள் மாணவர்கள்[தொகு]

எட்மண்ட் வில்லியம் பார்க்கர் (Edmund William Barker)

சிங்கப்பூரை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரும் மக்கள் பணிக்காக வாழ்வின் கணிசமான பகுதியைத் தந்தவருமான எட்மண்ட் வில்லியம் பார்க்கர் சிராங்கூன் மேல்நிலைப்பள்ளியில் பயின்றவர் ஆவார். 1928 முதல் 1934 வரையான காலகட்டத்தில் பார்க்கர் இப்பள்ளியில் பயின்றார். பள்ளியின் மாணவர் தலைவராக அவர் செயல்பட்டார். கிரிக்கெட், மட்டைப்பந்து, சதுரங்கம், பூப்பந்து ஆகிய விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க வீரராக இருந்தார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றுச், சிங்கப்பூர் திரும்பிய பார்க்கர், டாங்லின் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவும் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். சட்டம், தேச வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழினுட்பம், தொழிலாளர் ஆகிய துறைகளுக்கான அமைச்சராகவும் பணிபுரிந்தார்.

ஙியாம் டோங் டௌ (Ngiam Tong Chow)

ஙியாம் டோங் டௌ சிராங்கூன் பள்ளியில் 1945-1952 காலகட்டத்தில் பயின்றவர். இவர் மலேயா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டமும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றவர்.

ஙியாம் டோங் டௌ பொதுமக்களுக்கான பணிகளில் நீண்ட அனுபவமும் அறிவும் கொண்ட ஆளுமை பெற்றவர். இவர் சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்தின் நிரந்தரச் செயலாளராகப் பணிபுரிந்தார். நிதி, வணிகம் மற்றும் தொழில், தேசிய வளர்ச்சி மற்றும் தொடர்புத் துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சரவைகளின் செயலாளராகவும் வீட்டு வசதி மற்றும் வளர்ச்சி வாரியம், சிங்கப்பூர் பொருளாதார வளர்ச்சி வாரியம், சிங்கப்பூர் வளர்ச்சி வங்கி போன்றவற்றின் தலைவராகவும்  பொறுப்பு வகித்தார்.

டீ துவா பா (Tee Tua Ba)

சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி, இராஃப்பிள்ஸ் கல்வி நிலையம், விக்டோரியா பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பை முடித்த டீ துவா பா சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியில் ஹானர்ஸ் பட்டத்தைப் பெற்றார். 1967இல் சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக அனுமதிக்கப்பட்டார். 1982இலிருந்து காவல்துறையின் துணை ஆணையராகவும் 1988லிருந்து சிறைத்துறையின் இயக்குநராகவும் 1992இலிருந்து காவல்துறை ஆணையராகவும் பணிபுரிந்தார். பணி ஓய்வுக்குப் பிறகு, புரூனை, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கான சிங்கப்பூர் உயர் ஆணையராகவும் எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு நாடுகள் ஆகியவற்றுக்கான தூதராகவும் செயல்பட்டார். சிங்கப்பூரில் மதிப்புக்குரிய பல விருதுகளைப் பெற்ற டீ துவா பா மலேசிய அரசால் வழங்கப்படும் ‘தன் ஸ்ரீ’ பட்டத்துக்கும் தேர்வு செய்யப்பட்டார்.

வோங் போ போ (Wong Poh Poh)

புகழ்பெற்ற புவியியலாளரான வோங் போ போ சிராங்கூன் பள்ளியில் 1957-1960 காலகட்டத்தில் பயின்றவர். சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஹானர்ஸ்), முதுகலைப் பட்டங்களையும் மெக்ஹில் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். கடற்கரைசார் சுற்றுலாத் துறையில் நிபுணராகவும் காலநிலை மாற்றம் குறித்த இயலில் அறிஞராகவும் வோங் போ போ அறியப்படுகிறார். 2007இல் அமைதிக்கான நோபல் பரிசை அப்போதைய அமெரிக்க துணை அதிபர் அல்கோருடன் காலநிலை மாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் அரசுகளுக்கிடையேயான குழு பகிர்ந்துகொண்டது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே ஒரு சிங்கப்பூர் குடிமகன் வோங் போ போ என்ற கௌரவத்திற்குரியவரும் இவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "School change". The Straits Times (Singapore). 12 December 1956. http://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19561212-1.2.46. 
  2. "Co-Curriculum Activities". serangoonsec.moe.edu.sg (in ஆங்கிலம்). Archived from the original on 2022-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-03-05.