சிம் சா சுயி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம் சா சுயி நகரம், வான்பார்வை
சிம் சா சுயி, கவுலூன் தீபகற்பத்தின் முனை

சிம் சா சுயி (Tsim Sha Tsui) ஹொங்கொங், கவுலூன் தெற்கில் அமைந்திருக்கும் ஒரு நகரம் ஆகும். இதனை சுருக்கமாக TST என்றும் குறிக்கப்படும். இந்நகரம் யவ் சிம் மொங் மாவட்டத்தில் உள்ளது. புவியியல் ரீதியாக கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் விக்டோரியா துறைமுகத்தினை எதிரே கொண்டுள்ளது. 1860 ஆம் ஆண்டளவில் பிரித்தானியர் இப்பகுதி நிலப்பரப்பைக் கைப்பற்றும் முன்பு பல மீனவக் கிராமங்களாகவே இந்த நிலப்பரப்பாகவே இருந்துள்ளது. அதன் பின்னர் பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட நகரமயமாக்கல் திட்டத்தின் கீழ் பாரிய வளர்ச்சிமிக்க ஒரு நகராக தோற்றம் பெறத் தொடங்கியது. மலைத்தொடர்களும், மலைக்குன்றுகளும் நிறைந்த இவ்விடம் இன்று அவற்றை காண முடியாதவாறு புனரமைக்கப்பட்டு எங்கும் கட்டடங்கள் எழுந்து நிற்கின்றன. அத்துடன் இந்த நகரம் ஹொங்கொங்கில் மக்கள் நெரிசல் மிக்க நகரங்களில் ஒன்றும் ஆகும்.

இந்த சிம் சா சுயி நகரின் ஒரு பகுதியான சிம் சா சுயி கிழக்கு, ஹொங் ஹாம் குடாவை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மானத் திட்டத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.

சுற்றுலா மற்றும் தங்குமிடம்[தொகு]

சிம் சா சுயி நகரம் ஹொங்கொங் வரும் சுற்றுலாப் பயணிகளின் மையமாகவே காணப்படுகின்றன. உலகின் அனைத்து விதமான உணவு வகைகளும் கிடைக்கக்கூடிய வெவ்வேறு நாட்டு உணவகங்கள் உள்ளன. ஹொங்கொங்கில் மிகவும் மலிவான தங்குமிடங்கள் உள்ள நகரங்களில் இது முதன்மையானதாகும். HK$100 டொலர்கள் முதல் HK$650 வரையான நாள் வாடகை தங்குமிடங்கள் உள்ளன. அதேவேளை வசதியான மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர சொகுகங்கள் பலவும் உள்ளன. மற்றும் ஹொங்கொங்கில் எல்லா இடங்களுக்கும் செல்லக்கூடிய ஒரு மையமாகவே இந்த நகரம் விளங்குகின்றது. ஹொங்கொங் தீவுக்கு செல்வதற்கான சிம் சா சுயி இசுடார் வள்ளத்துறையும் இந்த நகரில் உள்ளது. அதேவேளை ஹொங்கொங்கில் இருந்து சீனா செல்வதற்கான எம்டிஆர் கிழக்கு தொடருந்தகச் சேவை வசதியும் உள்ளது.

சிறப்பு[தொகு]

சிம் சா சுயி நகரில் உள்ள இசுடார் வள்ளத்துறையில் இசுடார் வள்ளங்களின் காட்சி

இந்த நகரம் பல அருங்காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் செல்லும் நட்சத்திரங்களின் சாலை, கவுலூன் பூங்கா, வான்வெளி அருங்காட்சியம், சிம் சா சுயி மணிக்கூட்டு கோபுரம், விக்டோரியா துறைமுகம் போன்றனவும் உள்ளன. அத்துடன் கின்னஸ் நூலில் இடம்பெற்ற, உலகிலேயே ஒவ்வொரு நாளும் நடாத்தப்படும் கதிரியக்க மின்னொளி வீச்சு பார்ப்பதற்கு அதிகமானோர் இந்த நகரில் உள்ள நட்சத்திரங்களின் சாலையில் கூடுவர்.

மேலும் சிறப்பு நாட்களில் வண்ண வான்வெடி முழக்கம் இடம்பெறும் போது இந்த நகரம் முழுதும் மக்கள் நெரிசல் ஏற்படும்.

மற்றும் சமய வழிபாட்டுத் தலங்களான சிம் சா சுயி இந்து கோயில், சிம் சா சுயி பள்ளிவாசல் மற்றும் பல கிறித்தவ கோயில்களும் பல உள்ளன.

தொகை வணிகம்[தொகு]

இந்த நகரம் தொகை வணிகர்களின் மையமாகவும் விளங்குகிறது. உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தொகை வணிகர்கள் கூடும் இடங்களில் இது முதன்மையானதாகும். குறிப்பாக ஆப்பிரிக்கா நாட்டவர்கள், தென்னாசிய நாடுகளான இந்தியா, பாக்கிசுத்தான், இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து வரும் வணிகர்களை ஒவ்வொரு நாளும் இந்த நகரில் காணலாம்.

சிம் சா சுயி அகலப் பரப்புக் காட்சி[தொகு]

Kowloon side panorama taken from Hong Kong Island.

தமிழர்கள்[தொகு]

ஹொங்கொங்கில் தமிழர்கள் அதிகம் வாழும் ஒரு நகரம் இந்த "சிம் சா சுயி" நகரமே ஆகும். தமிழருக்கு சொந்தமான பல வணிக மையங்கள், நிறுவனங்கள், உணவகங்கள் போன்றன இந்த நகரில் ஆங்காங்கே உள்ளன. குறிப்பாக சிம் சா சுயி நகரில் அமைந்திருக்கும் சுங்கிங் கட்டடத்தில் தமிழருக்கு சொந்தமான பல வணிகக் கடைகள் உள்ளன. ஹொங்கொங்கில் வெளி மாவட்டங்களில் வசிப்போரும் பல்வேறு தேவைகளுக்காக அடிக்கடி வந்து கூடும் ஒரு இடம் இந்த சிம் சா சுயி நகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்_சா_சுயி&oldid=3083936" இலிருந்து மீள்விக்கப்பட்டது