சிமன்லால் அரிலால் செதால்வத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் சிமன்லால் அரிலால் செதால்வத் (Chimanlal Harilal Setalvad) (சூலை 1864 [1][2] - 10 திசம்பர் 1947) இவர் ஓர் சிறந்த இந்திய வழக்கறிஞரும், நீதிபதியுமாவார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.

வாழ்க்கை[தொகு]

இவர் சூலை 1864 இல் பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தில் இப்போது குசராத்து மாநிலத்தின் ஒரு பகுதியான பரூச் மாவட்டத்தில் நான்கு சகோதரர்களில் மூத்தவரான இவர், ஒரு பிரபுத்துவ பிரம்மசத்ரிய குடும்பத்தில் பிறந்தார்.[3] செதால்வத் என்ற குடும்பப் பெயர் பஞ்சாபில் குடும்பத்தின் தோற்றத்திலிருந்து உருவானது. அங்கு அவர்களின் குடும்பப்பெயர் தல்வாட் என்பதாகும். தங்கள் சமூகத்தின் தலைவர்களாக இருந்த சில தால்வத்துகள் சேத் - தால்வத்துகள் ("தால்வத்துகளின் தலைவர்கள்") என்று அழைக்கப்பட்டனர். இது காலப்போக்கில் "செதால்வத்" ஆனது. 18 ஆம் நூற்றாண்டில், சில செதால்வத்துடுகள் இன்றைய குசராத்துக்கு குடிபெயர்ந்தனர். மேலும், ஏகாதிபத்திய முகலாயப் படைகளில் பணம் செலுத்துபவர்களாக பணியாற்றி சூரத்து நகரைச் சுற்றி குடியேறினர்.

சிமன்லாலின் தாத்தா, அம்பாசங்கர் பிரிஜ்ராய் செதால்வத் (1782–1853) 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றினார். ஆரம்பத்தில் உச்சநீதிமன்ற உரிமைகோரல் நீதிமன்றத்தில் ஒரு பதிவாளராக பணியாற்றினார். பின்னர் அவர் அகமதாபாத் மாவட்டத்தில் துணை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தனது சட்டப்பூர்வ அறிவிற்காக விரைவில் புகழ்பெற்ற அவர், இறுதியில் தலைமை நீதிபதியானார். பின்னர் ஐரோப்பியரல்லாதவர்களுக்கு திறக்கப்பட்ட மிக உயர்ந்த நீதித்துறை பதவியில் தான் இறக்கும் போது அந்தப் பதவியை வகித்தார். சிமன்லாலின் தந்தை ராவ் சாகிப் அரிலால் அம்பாசங்கர் செதால்வத் (1821-1899), அகமதாபாத்தைச் சேர்ந்த நீதிபதியாகப் பணியாற்றினார். மேலும் 1877 இல் ஓய்வு பெற்ற பின்னர் பிரித்தானிய அரசாங்கத்தால் ராவ் சாகிப் என்ற பட்டத்தைப் பெற்றார். பின்னர் அவர் லிம்ப்டியின் திவானாக பணியாற்றினார்.

தொழில்[தொகு]

மும்பையின் எல்பின்ஸ்டன் கல்லூரியின் பழைய மாணவரான [4] இவர் 1919 இல் ஜலியான்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராகவும், மும்பை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ஆளுநரின் நிர்வாகச் சபை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1924 இல் அம்பேத்கரால் நிறுவப்பட்ட பஹிஷ்கிருத் ஹிடகரினி சபாவின் நிறுவனத் தலைவராகவும் இருந்தார்.

இவர், காந்தியால் பெரும் ஒருமைப்பாட்டின் பக்கச்சார்பற்ற வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டார். பிரித்தனில் இருந்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருந்தபோது, இவர் பிரிவினையை எதிர்த்தார்.[5] 1947 திசம்பர் 10 அன்று தனது 83வது வயதில் இறந்தார்.

மரியாதை[தொகு]

இவர், 1919 புத்தாண்டு கௌரவ பட்டியலில் இடம் பெற்றார். 1924 பிறந்தநாள் மரியாதை பட்டியலில் இந்தியப் பேரரசின் ஆணையாக நியமிக்கப்பட்டார் .

குடும்பம்[தொகு]

இவரது மகன் மோதிலால் சிமன்லால் செதால்வத் 1950 முதல் 1963 வரை இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞராக இருந்தார். பிரபல பத்திரிகையாளரும், மக்கள் உரிமை ஆர்வலருமான தீசுதா செதால்வத் இவரது பேத்தியாவார்.

பிரபலமான கலாச்சாரத்தில்[தொகு]

காந்தி (1982) படத்தில், சிமன்லால் செதால்வத் ஹபீப் தன்வீரால் ஹண்டர் குழுவின் உறுப்பினராக சித்தரிக்கப்படுகிறார். இதில் இவர் ஜெனரல் டையரை குறுக்கு விசாரணை செய்கிறார் (திரைப்படத்தில் இந்திய பாரிஸ்டர் என்று காட்டப்பட்டுள்ளது).[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Dr. Sir Chimanlal H. Setalvad. https://archive.org/details/in.ernet.dli.2015.526493. 
  2. "Archived copy". Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 2012-04-15.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Jeejeebhoy, J.R.B. (1939). Dr. Sir Chimanlal H. Setalvad (1st ). https://archive.org/details/in.ernet.dli.2015.526493. 
  4. "List of alumni of the college". Elphinstone College. Archived from the original on 2012-04-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.
  5. [Who's Who, 1948]
  6. https://www.imdb.com/name/nm0849872/?ref_=ttfc_fc_cl_t101

வெளி இணைப்புகள்[தொகு]