சிப்பிக்காளான் வளர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Oyster mushroom at TNAU.jpg

சிப்பிக் காளானைப் பண்ணைக் கழிவுகளான நெல் மற்றும் கோதுமை போன்றவைகளில் எளிதாக வளர்க்கலாம். [1]

சிப்பிக்காளான் குடில்[தொகு]

தென்னங் கீற்று வேய்ந்த குடிலைக் காளான் சாகுபடி செய்யப் பயன்படுத்தலாம். குடிலின் அளவு தினசரி நாம் உற்பத்தி செய்யும் காளான் அளவைப் பொறுத்து அமைய வேண்டும். நாளொன்றுக்கு சுமார் 20 கிலோ காளான் உற்பத்தி செய்வதாக இருந்தால் சுமார் 300 ச.மீ அளவுக்குக் குடிலின் அளவு இருக்க வேண்டும்.காளான் குடிலை இரண்டாகத் தடுத்து ஒன்றை வித்துப் பரவும் அறையாகவும், மற்றொன்றைக் காளான் தோன்றும் அறையாகவும் பயன்படுத்தலாம்.வித்துப் பரவும் அறையின் வெப்ப நிலை 20-30° செல்சியஸ் வரை இருக்கலாம். அதிகப்படியான வெளிச்சம் தேவையில்லை. ஆனால் காற்றோட்டம் தேவை. அறையின் சன்னல்களுக்கு 35 மெஷ் அளவுள்ள நைலான் வலைகளைப் பயன்படுத்தி காளான் ஈ போன்ற தீமை பயக்கும் பூச்சிகள் புகா வண்ணம் தடுக்கலாம்.

தட்பவெப்பநிலை[தொகு]

காளான் தோன்றும் அறையில் 23-25°செல்சியஸ் வெப்ப நிலையும் காற்றின் ஈரப்பதம் 85 சதவிகிதத்திற்கு மேலும் இருக்க வேண்டும்.தரையில் பரப்பியுள்ள மணலையும் அறையின் சுவர்களை ஒட்டி உட்புறத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் சாக்கு படுதாக்களையும் தண்ணீரால் நனைத்து (இரண்டு அல்லது மூன்று முறை) தேவையான சூழ்நிலையை உருவாக்கலாம். அறையில் நல்ல காற்றோட்டமும் தேவையான வெளிச்சமும் வேண்டும்.

வளர்ப்பு ஊடகம்[தொகு]

சிப்பி காளான் வளர்க்கப் பாலிதீன் பைகளில் உருளைப் படுக்கைகள் தயாரிக்க வேண்டும். வியாபார ரீதியில் காளான் உற்பத்தி செய்ய நெல் வைக்கோல் சிறந்தது. படுக்கைகள் தயாரிக்கும் முன் வைக்கோலைப் பதப்படுத்துவது மிகவும் அவசியம். பொதுவாக மூன்று பதப்படுத்தும் முறைகள் கையாளப்படுகின்றன. அவையாவன:

1. கொதிக்கும் நீரில் பதப்படுத்துதல்

2. நீராவியில் பதப்படுத்துதல்

3.இரசாயன முறையில் பதப்படுத்துதல்

காளான் வித்திடுதல்[தொகு]

பதப்படுத்திய வைக்கோலை 65-70% ஈரப்பதம் இருக்குமளவிற்கு உலர்த்தி பின் சுமார் 60×30 அல்லது 75×45 செ.மீ அளவுள்ள பாலிதீன் பைகளில் அடுக்கு முறையில் வித்திட்டு உருளை படுக்கைகள் தயாரிக்க வேண்டும். ஒரு வித்துப் புட்டியைப் பயன்படுத்தி 2 அல்லது மூன்று படுக்கைகள் தயாரிக்கலாம். பைகளில் வைக்கோலை 5 செ.மீக்கு நிரப்பி 25 கிராம் காளான் வித்துக்களைத் தூவவேண்டும். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று அடுக்குகளைத் தயாரிக்கலாம்.

காளான்படுக்கைகளைப் பராமரித்தல்[தொகு]

தயாரித்த உருளை படுக்கைகளை பல அடுக்குகளாக அடுக்கி வைக்க வேண்டும். அல்லது உரிகளிலும் வளர்க்கலாம். 15 நாட்களில் காளான் பூசணம் முழுமையாக பரவி விடும். பின் பையை கிழித்து விட்டு படுக்கைகளின் மேற்பரப்பு ஈரமாகும்படி தண்ணீர் தெளிக்க வேண்டும். மூன்று நாட்களில் காளான்கள் முழு வளர்ச்சி அடையும்.முதல் அறுவடை முடிந்தவுடன் படுக்கையின் மேற்பரப்பை சுரண்டி தண்ணீர் தெளித்து வந்தால் இரண்டு வாரங்களில் இரண்டு முறை அறுவடை செய்யலாம்.

பை நீக்கும் முறைகள்[தொகு]

காற்றின் ஈரப்பதம் அதிகமாகிப் படுக்கையின் மேல் ஈரம் இருப்பின் பாலீதின் பைகளை முழுவதுமாக நீக்க வேண்டும். மாறாக ஈரப்பதம் குறையுமானால் முழுவதுமாக நீக்காமல் ஆங்காங்கே துளைகள் இட்டு காளான் தோன்ற வகை செய்ய வேண்டும்.

மேற்கோள்[தொகு]

  1. வேளாண் செயல்முறைகள் கருத்தியல் பக்கம் எண் 179, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்  ,சென்னை