சின்னாறு (வத்தல்மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சின்னாறு வத்தல்மலை அடிவாரம், இலளிகம், மிட்டாரெட்டி அள்ளி போன்ற பகுதிகளில் உருவாகி நல்லம்பள்ளி, வெங்கட்டம்பட்டி வழியாக இலக்கியம்பட்டியை அடைந்து தர்மபுரி நகரின் வழியாக ராமாக்காள் ஏரியை நிரப்பி பின்னர் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. தருமபுரியை ஒட்டிய வத்தல்மலையின் நீர்பிடிப்புப் பகுதியிலிருந்து வரும் நீர் அப்பனஹள்ளி கோம்பை கிராமத்துக்கு அருகே நதியாக உருவெடுக்கிறது. இங்கிருந்து இந்த நதி, தருமபுரி நகரைச் சுற்றி ஓடி சுமார் நாற்பது கிலோமீட்டர் பயணித்து கம்பைநல்லூர் ஏரிக்குச் சென்று பின்னர் தென்பெண்ணையாற்றில் கலக்கிறது. லளிகம், மிட்டாரெட்டிஹள்ளி, ஏமகுட்டியூர், இலக்கியம்பட்டி, அன்னசாகரம் வழியாக இந்த நதியின் கால்வாய் செல்கிறது. இடையில் உள்ள லளிகம் பெரிய ஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் சோழவராயன் ஏரி, ஒட்டப்பட்டி ஏரி, நூலஹள்ளி ஏரி, கோவிலூர் ஏரி, ஏமகுட்டியூர் ஏரி, அன்னசாகரம் ஏரி, இலக்கியம்பட்டி ஏரி, மொடக்கேரி, ராமக்காள் ஏரி, மதிகோன்பாளையம் ரெட்ரி ஏரி, ஹளே தருமபுரி ஏரி, குண்டலப்பட்டி பக்கிரிகுட்டை ஏரி, செட்டிக்கரை ஏரி முதலான பல ஏரிகள் இந்த நதியால் மழைக்காலங்களில் நிரம்பி வழிந்து, வழிநெடுக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில், கரும்பு, வாழை, நெல், மஞ்சள் என விவசாயம் செழித்து விளங்கக் காரணமாய் இருந்துள்ளது. இந்த நதியால் ஏரிகள் மட்டுமல்ல, தருமபுரி நகரிலும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களிலும் உள்ள சர். தாமஸ் மன்றோ உருவாக்கிய கான் சாஹிப் குளம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேய அதிகாரிக்கு கீழ் பணியாற்றிய நரச ஐயர் என்பாரது பெயரால் உள்ள நரசையர் குளம், குண்செட்டி குளம், பலப்பன்குட்டை போன்று வழிநெடுகிலும் எத்தனையோ குளங்கள் நிரம்பி அதனைச் சுற்றியுள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயரக் காரணமாய் இருந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னாறு_(வத்தல்மலை)&oldid=2912962" இலிருந்து மீள்விக்கப்பட்டது