சினியோட்
சினியோட் (ஆங்கிலம் : Chiniot) ( உருது, பஞ்சாபி மொழி: چنیوٹ ) என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சினியோட் மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் அதன் நிர்வாக தலைமையகம் ஆகும். செனாப் ஆற்றின் கரையில், இது சிக்கலான மர தளவாடங்கள், கட்டிடக்கலை மற்றும் மசூதிகளுக்கு பெயர் பெற்றது. மேலும் இது உமர் கயாத் மகாலின் தாயகமாகும் .
வரலாறு
[தொகு]ஆரம்ப வரலாறு
[தொகு]சினியோட்டின் தோற்றம் தெளிவற்றது. அது நிறுவபட்டதனைத் துல்லியமாக விவரிக்கும் வரலாற்றுப் பதிவுகள் கிடைக்கவில்லை.[1] சில கணக்குகளின்படி, இந்த நகரம் ஒரு பழங்கால அரசனின் மகள் சந்தன் என்பவரால் நிறுவப்பட்டது. அவர் காட்டில் வேட்டையாடும்போது, காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளால் வசீகரிக்கப்பட்டு அங்கு சந்தானியோட் குடியேற்றத்தை நிறுவ கட்டளையிட்டார் .[2] இது சாந்தியோட் என்றும் அழைக்கப்பட்டது [3] இது அவரது நினைவாக பெயரிடப்பட்டது. அசல் பெயர் மருவி சினியோட் என்ற பெயர் இறுதியில் நிலைபெற்றது.[4] இருப்பினும் பழைய பெயர் குறைந்தது 1860கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.[5]
முகலாயகர்கள்
[தொகு]முகலாய ஆட்சியின் போது, சினியோட் லாகூரின் சுபா அல்லது மாகாணத்தின் ஒரு பகுதியாக நிர்வகிக்கப்பட்டது. முகலாயப் பேரரசர் ஷாஜகான், மற்றும் அப்பகுதியின் அவரது பழங்குடி ஆட்சியாளர் தாஹிம் நவாப் சதுல்லா கான் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இந்த நகரம் உச்சம் அடைந்துள்ளது. 1640 மற்றும் 1656 இடையே பணியாற்றிய சாதுல்லா கானின் ஆட்சியின் கீழ், சினியோட்டின் புகழ்பெற்ற ஷாஹி மசூதி கட்டப்பட்டது. சினியோட்டின் கைவினைஞர்கள் முகலாய காலத்தில் அவர்களின் திறமைக்காக புகழ் பெற்றவர்கள். தாஜ்மஹால் மற்றும் லாகூரின் வஜீர் கான் மசூதி ஆகியவற்றின் அலங்காரத்தில் இவர்கள் பணியாற்றினர்.
முகலாய சரிவு மற்றும் சியால் ஆட்சி
[தொகு]1707 ஆம் ஆண்டில் பேரரசர் அவுரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய அதிகாரம் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் சியால் பழங்குடியும், பழங்குடிகளில் ஜமீன்தார் அந்தஸ்தில் இருந்த வாலிதாட் கான் டெல்லி சிம்மாசனத்திற்கு விசுவாசமாக இருந்ததன் காரணமாக அந்தப் பகுதிக்கு அதிகாரப்பூர்வமாக ஆட்சியாளார் பதவி வழங்கப்பட்டது.[2] பெயரளவில் வீழ்ச்சியடைந்து வரும் முகலாய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், வாலிதாட் கான் மேற்கு பஞ்சாபில் பெருமளவில் சுதந்திரமான அரசை உருவாக்கினார். இது மங்கேரா மற்றும் கமலியா இடையேயான பிராந்தியத்தை கட்டுப்படுத்தியது 1748 இன் பிற்பகுதியில் துரானி படையெடுப்பின் போது சினியோட் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சீக்கியர்கள்
[தொகு]1765 வாக்கில் பாங்கி மிஸ்ல் சீக்கியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வருவதற்கு முன்பு, சினியோட்டைச் சுற்றியுள்ள சியால் அரசு வடக்கில் சீக்கிய தலைவர்களாலும், தெற்கில் உள்ள முல்தானி தலைவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டது.[2] சீக்கியர்களுக்கு சியாலின் தலைவரான இனாயதுல்லா கான் ஆண்டுதோறும் கப்பம் செலுத்தத் தினிக்கப்பட்டார். 1778 ஆம் ஆண்டில் சினியோட்டைக் கைப்பற்றுவதற்கு முன்பு அவர் பணம் செலுத்துவதை நிறுத்தினார். அவர் இறப்பதற்கு முன்னர் நகரம் பாங்கி சீக்கிய ஆட்சிக்கு திரும்பியிருந்தாலும், 1787 இல் அவர் இறந்தார்.
சீக்கிய மிஸ்ல் மாநிலங்களில் இந்த நகரம் பாதிக்கப்பட்டது, இதில் நகர பிராந்தியத்தின் பாங்கிஸ் சுகர்சாகியா மிஸ்லுடன் போராடியது.[2] 1803 இல் சினியோட் ரஞ்சித் சிங்கால் கைப்பற்றப்பட்டது. அதன் பின்னர் சீக்கிய பேரரசின் ஒரு பகுதியாக ஆனது. ரஞ்சித் சிங்கின் இராச்சியத்திற்கு கப்பம் செலுத்துவதாக உறுதியளித்த சியால் தலைவர் அஹ்மத் கான் என்பவரால் இந்த நகரம் மீண்டெழுந்தது. கான் கப்பம் செலுத்துவதை நிறுத்தினார். 1808 இல் இப்பகுதியின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றினார். ஆனால் 1810 இல் ரஞ்சித் சிங்கின் படைகளால் தோற்கடிக்கப்பட்டார்.
பிரித்தன்
[தொகு]இந்த நகரம் 1849 வாக்கில் பிரித்தன் ஆட்சியின் கீழ் வந்தது. மேலும் இந்த நகரம் 1862 இல் நகராட்சியாக அமைக்கப்பட்டது.[2] 1875 ஆம் ஆண்டில், நகரத்தின் மக்கள் தொகை 11,999 ஆக இருந்தது. பிரித்தானிய காலத்தில், பஞ்சாபிற்கு நீர்ப்பாசனம் செய்வதற்காக ஒரு பரந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டன, இதன் விளைவாக சினியோட்டைச் சுற்றி பல புதிய "கால்வாய் காலனிகள்" உருவாக்கப்பட்டன.[6] சினியோட்டின் புகழ்பெற்ற உமர் ஹயாத் மஹால் 1923 மற்றும் 1935 க்கு இடையில் கல்கத்தாவில் தனது செல்வத்தை சம்பாதித்த ஒரு தொழிலதிபருக்காக கட்டப்பட்டது.[7]
நிலவியல்
[தொகு]இருப்பிடம்
[தொகு]பைசலாபாத் - சர்கோதா மற்றும் லாகூர்-ஜாங் சாலைகளின் சந்திப்பில் சினியோட் உள்ளது. இது லாகூரிலிருந்து வடமேற்கே 158 கிலோமீட்டர் தொலைவிலும், பைசலாபாத்திலிருந்து வடக்கே 38 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. சினியோட் நகரம் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சராசரியாக 179 மீட்டர் (587 அடி) உயரத்தில் உள்ளது. அகமதியா சமூகத்தின் தலைமையகமான ரப்வா நகரம் செனாப் ஆற்றின் மறுபுறத்தில் உள்ளது. ஆற்றின் மையத்தில் சூபி பு அலி ஷா கலந்தரின் வழிபாட்டு மையம் (அல்லது சில்லா கா) அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]சினியாட் நகரம் செனாப் ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய பாறை மலையில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள பகுதியின் பெரும்பகுதி வண்டல் சமவெளிகளைக் கொண்டுள்ளது, சினியோட்டைச் சுற்றி 400 அடி உயரத்தை எட்டும் ஸ்லேட் மற்றும் மணற்கற்களின் பாறைகள் நிறைந்தவை.[5]
காலநிலை
[தொகு]சினியோட் ஒரு சூடான அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது ( கோப்பன் காலநிலை வகைப்பாடு BSh ). சினியோட்டின் வானிலை மாறுபாட்டுடன் காணப்படும்.
புள்ளி விவரங்கள்
[தொகு]1998 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சினியோட் வட்டத்தின் மக்கள் தொகை 965,124 என்ற எண்னிக்கியில் அடங்கும். (நகர்ப்புறத்தில் மட்டும் 172,522 பேர் அடங்கும்). பாக்கித்தானின் 2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 278,747 பேர் ஆகும். இங்கு பேசும் மொழி பஞ்சாபி ஆகும்.
பொருளாதாரம்
[தொகு]சினியோட்டின் முக்கியமான தயாரிப்புகளில் பட்டு, பருத்தி, கோதுமை, சர்க்கரை, அரிசி, பால், மட்பாண்டங்கள், மர தளபாடங்கள் போன்றவை அடங்கும். நகரின் விவசாய பொருளாதாரம் பெரும்பாலும் பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்ட "கால்வாய் காலனிகளில்" இருந்து உருவானது. பஞ்சாபிற்கு நீர்ப்பாசனம் செய்ய பரந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டன.[8]
சினியோட் தனது மர தளபாடங்களுக்கு புகழ் பெற்றது. காஷ்மீரில் இருந்து மரக்கன்றுகள் ஆற்றின் கீழே சினியோட் நோக்கி மிதக்கும் என்பதால் செனாப் நதிக்கு அருகாமை மரவேலை மையமாக உருவாக்கப்பட்டது.[6] சினியோட்டின் கைவினை கலைஞர்கள் தங்கள் திறமைக்கு புகழ் பெற்றவர்கள். தாஜ்மஹால் மற்றும் வஜீர் கான் மசூதி இரண்டையும் நிர்மாணிப்பதில் பணியாற்றினர். நகரத்தின் உலோகத் தொழிலாளர்கள், லாகூருடன் சேர்ந்து, பிரித்தன் காலத்தில் பஞ்சாபில் சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர்.[9] சினியோட்டி வடிவமைப்புகள் ஹோஷியார்பூர் அல்லது ஜலந்தரை விட உயர்ந்தவையாகக் கருதப்பட்டன. சௌத்ரி சர்க்கரை ஆலைகள் பைசலாபாத் சாலையில் அமைந்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ Steedman, E. B. (1882). Report on the Revised Settlement of the Jhang District of the Punjab, 1874-1880 (in ஆங்கிலம்). W. Ball.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Gazetteer of the Jhanq District (in ஆங்கிலம்). Punjab Government Press. 1884.
- ↑ Hasan, Arif (2009). Migration and Small Towns in Pakistan (in ஆங்கிலம்). IIED.
- ↑ Journal of Central Asia (in ஆங்கிலம்). Centre for the Study of the Civilizations of Central Asia, Quaid-i-Azam University. 1992.
- ↑ 5.0 5.1 London, Linnean Society of (1862). Journal: Botany (in ஆங்கிலம்).
- ↑ 6.0 6.1 Migration and Small Towns in Pakistan (in ஆங்கிலம்). IIED. 2009.
- ↑ "Umar Hayat Mahal: Chiniot’s dying ‘wonder’" (in en-US). 2015-12-03. https://www.dawn.com/news/1221723.
- ↑ Hasan, Arif; Raza, Mansoor (2009). Migration and Small Towns in Pakistan (in ஆங்கிலம்). IIED. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843697343.
- ↑ Indian Art at Delhi 1903: Being the Official Catalogue of the Delhi Exhibition 1902-1903 (in ஆங்கிலம்). Motilal Banarsidass. 1903.
வெளி இணைப்புகள்
[தொகு]- Chiniot Tehsil Municipal Administration's official site
- Chiniot Map