உள்ளடக்கத்துக்குச் செல்

சிந்துதாய் சப்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்துதாய் சப்கல்
பிறப்பு14 நவம்பர் 1948 (1948-11-14) (அகவை 75)
வர்தா, மத்திய மாகாணம், பெரார், மகாராட்டிரம், இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்அனாதைகளின் தாய், மாயி (அம்மா)
குடியுரிமைஇந்தியர்
அறியப்படுவதுஅனாதைக் குழந்தைகளை வளர்ப்பது
வாழ்க்கைத்
துணை
சிறீஹரி சப்கல்
பிள்ளைகள்ஒரு மகளும், மூன்று மகன்களும்,
1400க்கும் மேற்பட்ட தத்துக் குழந்தைகள்

சிந்துதாய் சப்கல் (Sindhutai Sapkal) "அனாதைகளின் தாய்" என அன்புடன் அழைக்கப்படும் இவர்,[1] ஒரு இந்திய சமூக சேவகரும், சமூக ஆர்வலருமாவார். இந்தியாவில் ஆதரவற்ற குழந்தைகளை அவர்களது நிலையிலிருந்து உயர்த்தும் இவரது பணியால் இவர் குறிப்பாக அறியப்படுகிறார். சமூகப் பணி பிரிவில் 2021ஆம் ஆண்டில் பத்மசிறீ விருதும், 2016ஆம் ஆண்டில் டி. ஒய் பாட்டீல் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து இலக்கியத்தில் முனைவர் பட்டமும், 2017இல் நாரி சக்தி புரஸ்கார் ஆகிய கௌவரங்களும் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

மகாராட்டிராவின் வர்தா மாவட்டத்தில் ஒரு கால்நடை மேய்க்கும் குடும்பத்தில் 1948 நவம்பர் 14 ஆம் தேதி சிந்துதாய் பிறந்தார். இவரது பெற்றோருக்கு தேவையற்ற குழந்தையாக இருந்ததால், இவர் சிந்தி (மராத்திய மொழியில் "கிழிந்த துணி" எனப் பொருள்) என்று குறிப்பிடப்பட்டார். இருப்பினும், இவரது தந்தை இவருக்கு கல்வி கற்பதில் ஆர்வமாக இருந்தார். இது இவரது தாயின் விருப்பத்திற்கு மாறாக இருந்தது. அபிமன்ஜி (தந்தை) கால்நடை மேய்ச்சலுக்கு இடையில் இவரை பள்ளிக்கு அனுப்புவார். குடும்ப வறுமை காரணமாக இவருக்கு எழுதுவதற்கு ஒரு எழுது பலகை கூட இருக்காது. இவர் 'பாரதி மரத்தின் இலை'யை ஒரு எழுதப் பயன்படுத்துவார். மோசமான வறுமை, குடும்பப் பொறுப்புகள், மேலும் சிறுவயது திருமணம் ஆகியவை இவரை நான்காம் வகுப்பிலேயே பள்ளியிலிருந்து வெளியேற்றியது.[2]

திருமணமும் ஆரம்ப காலப் பணிகளும்

[தொகு]

தனது பன்னிரெண்டாவது வயதில், இவர், வர்தா மாவட்டத்தைச் சேர்ந்த தன்னைவிட இருபது வயது மூத்தவரான சிறீஹரி சப்கல் என்பவரை மணந்தார். தனது புதிய ஊரில், மாட்டு சாணத்தை சேகரித்த உள்ளூர் பெண்களை வனத்துறையினரும், நில உரிமையாளர்களும் சுரண்டுவதற்கு எதிராக போராடினார். மேலும், தன்னுடைய இருபது வயதுக்குள் மூன்று மகன்களைப் பெற்றார்.

இருபது வயதில், ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தபோது, தனது கணவனால் மோசமாகத் தாக்கப்பட்டார். 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி இரவு வீட்டிற்கு வெளியே ஒரு மாடு தங்குமிடத்தில் அரை உணர்வு நிலையில் மம்தா என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர், இவர், உயிர்வாழ்வதற்காக தெருக்களிலும், தொடர்வண்டி நிலையங்களிலும் பிச்சை எடுத்தார். இரவில் ஆண்களிடமிருந்து தப்பிக்க இவர், பெரும்பாலும் கல்லறைகளில் இரவைக் கழித்தார். இரவு நேரங்களில் கல்லறைகளில் இவர் காணப்பட்டதால் மக்கள் இவரை "பேய்" என்று அழைத்தார்கள்.[3]

சப்கல் பல கிலோமீட்டர் தூரம் உள்ள தனது தாயின் வீட்டிற்கு நடந்தே சென்றார். ஆனால், இவரது தாய் இவருக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்துவிட்டார். சப்கல் உணவுக்காக தொடர்வண்டி நிலையங்களில் பிச்சை எடுக்கத் தொடங்கினார். இந்த காலகட்டத்தில், பெற்றோர்களால் கைவிடப்பட்ட பல குழந்தைகள் இதேபோல இருப்பதை இவர் கண்டார். இவர், அவர்களை தன்னுடைய சொந்தமாக ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர்களுக்கு உணவளிக்க, மிகவும் தீவிரமாக பிச்சையெடுக்க ஆரம்பித்தார். அனாதையாக தன்னிடம் வந்த அனைவருக்கும் ஒரு தாயாக மாற இவர் முடிவு செய்தார். பின்னர் இவர் தனது உயிரியல் குழந்தையையும் தத்தெடுத்த குழந்தைகளுக்கும் இடையிலான பாகுபாட்டின் உணர்வை அகற்ற புனேவின் ஸ்ரீமந்த் தாகு சேத் ஹல்வாய் என்ற அறக்கட்டளைக்கு தனது குழந்தையை நன்கொடையாக அளித்தார்.[4]

பிற்காலப் பணி

[தொகு]

சப்கல் அனாதைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். இதன் விளைவாக, இவர் அன்பாக "மாயி" (அம்மா) என்று அழைக்கப்படுகிறார். இவர் 1,050க்கும் மேற்பட்ட அனாதைக் குழந்தைகளை வளர்த்து வருகிறார். இவருக்கு 207 மருமகள், முப்பத்தாறு மகள்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் தத்தெடுத்த குழந்தைகளில் பலர் நன்கு படித்த வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும் இருக்கின்றனர். இவருடைய வளர்ப்பு குழந்தைகள் சிலர் - இவரது உயிரியல் மகள் உட்பட - தங்கள் சொந்த அனாதை இல்லங்களை நடத்தி வருகின்றனர். இவரது குழந்தைகளில் ஒருவர் தனது வாழ்க்கையில் முனைவர் பட்டம் முடித்துள்ளார். இவரது அர்ப்பணிப்பு மற்றும் பணிக்காக 273க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அனாதைக் குழந்தைகளுக்கு வீடு கட்ட நிலம் வாங்க தனது விருதுப் பணத்தைப் பயன்படுத்தினார்.[5]

தனது 70 வயதில், சப்கலின் கணவர் மன்னிப்பு கோரி இவரிடம் வந்தார். இவரும் அவரை மன்னித்து தன் குழந்தையாக ஏற்றுக்கொண்டார்.

2010ஆம் ஆண்டில் வெளியான மராத்தி மொழி திரைப்படமான மீ சிந்துதாய் சப்கல், இவரது உண்மைக் கதையால் ஈர்க்கப்பட்ட வாழ்க்கை வரலாறாகும். இந்த படம் 54வது இலண்டன் திரைப்பட விழாவில் அதன் உலக அரங்கேற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.

விருதுகள்

[தொகு]
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் 2017 ஆம் ஆண்டில் நாரி சக்தி புரஸ்காரை சிந்துதாய்க்கு வழங்கினார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mother of Orphans
  2. "Sindhutai Sapkal". Homi Bhabha Centre for Science Education,TIFR.
  3. "The story of Sindhutai Sapkal - A mother to orphaned children". Raksha Paharia.
  4. "Mother of orphans – Sindhu Tai Sapkal – Part 1". Indya Unlimited. 9 March 2011. Archived from the original on 20 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. "Sindhutai Sapkal Birthday: From begging to becoming the mother of thousands of orphans". mumbaimirror.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துதாய்_சப்கல்&oldid=3929834" இலிருந்து மீள்விக்கப்பட்டது