சித்தேசுவரி தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தேசுவரி தேவி
பிறப்பு1908
வாரணாசி, பிரித்தானிய அரசு
இறப்பு18 மார்ச்சு 1977(1977-03-18) (அகவை 68–69)
புது தில்லி, இந்தியா
பணிஇசையமைப்பாளர்

சித்தேசுவரி தேவி (Siddheshwari Devi) (பிறப்பு:1908 – இறப்பு: 1977 மார்ச் 18) [1] இந்தியாவின் வாரணாசியைச் சேர்ந்த இவர் ஓர் புகழ்பெற்ற இந்துஸ்தானி பாடகராவார். மேலும் இவர் மா (தாய்) என்று அழைக்கப்பட்டார். 1908 ஆம் ஆண்டில் பிறந்த இவர், தனது சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். இவரது அத்தையும், பிரபல பாடகியுமான ராஜேஸ்வரி தேவி என்பவரால் வளர்க்கப்பட்டார். அவர் தனது காலத்தின் பெரும்பாலான முன்னணி அரசவைகளிலும், நகரங்களிலும் நிகழ்சிகளை நிகழ்த்தியுள்ளார். பிண்ணணி பாடகராக அறிமுகமாவதற்கு முன்பு சித்தேசுவரி தேவி மும்பையில் தயாரிக்கப்பட்ட ஒரு சில படங்களில் பாடி நடித்துள்ளார். தனது வாழ்க்கையின் பிற்பகுதியில் சித்தேசுவரி தேவி வாரணாசியிலிருந்து தில்லிக்கு குடிபெயர்ந்தார். அங்கு வர் பாரதிய கலா மையத்தில் தும்ரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில், இவர் இலண்டன், ரோம், காபூல் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். [2]

இசையில் துவக்கம்[தொகு]

ஒரு இசைக் குடும்பத்தில் வாழ்ந்த போதிலும், சித்தேசுவரி தற்செயலாகத்தான் இசைக்கு வந்தார். இவரது அத்தை ராஜேஸ்வரி தனது சொந்த மகள் கமலேசுவரிக்கு இசை பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தார். அதே சமயம் சித்தேசுவரி வீட்டில் ஒரு சில சிறிய வேலைகளைச் செய்து வந்தார். ஒருமுறை, பிரபல சாரங்கி வீரர் சியாஜி மிஸ்ரா கமலேஸ்வரிக்கு தாப்பா என்ற இசைக் கருவியைக் கற்பித்தபோது, தான் கற்றதை மீண்டும் செய்ய கமலேச்வரியால் முடியவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு உதவ எண்ணிய சித்தேசுவரி, சமையலறையிலிருந்து வந்து அழுது கொண்டிருந்த கமலேசுவரியை "சியாஜி மகாராஜ் உங்களிடம் சொல்வதைப் பாடுவது அவ்வளவு ஒன்றும் கடினம் அல்ல" என்று ஆறுதல் கூறினார். மேலும் அதை எப்படிப் பாடுவது என்று கமலேசுவரிக்குப் பாடிக் காட்டினார், முழு பாடலையும் பாடிக் காட்டி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அடுத்த நாள், சியாஜி மகாராஜ் ராஜேஸ்வரியிடம் வந்து, சித்தேசுவரியை தான் தத்தெடுக்கப் போவதாகச் சொன்னார் (அவருக்கு குழந்தை இல்லாதததால்). எனவே சித்தேசுவரி அத்தம்பதியினருடன் சென்றார். இறுதியில் அவர்களுக்கு ஒரு சிறந்த நண்பராகவும் ஆதரவாகவும் ஆனார். இச்சம்பவம் சித்தேசுவரியின் மனதில் மிகவும் தெளிவாகப் பதிந்தது. மேலும், இது குறித்து தனது மகள் சவிதா தேவியுடன் இணைந்து எழுதிய மா என்ற வாழ்க்கை வரலாற்றில் விரிவாக எழுதியுள்ளார். [3]

இசை வாழ்க்கை[தொகு]

பின்னர், இவர் தேவாஸின் ரஜாப் அலி கான் மற்றும் லாகூரின் இனாயத் கான் ஆகியோரின் கீழ் பயிற்சி பெற்றார். ஆனால் தனது முக்கிய குருவாக படே ராம்தாஸ் என்பவரைக் கருதினார்.

இவர் காயல், தும்ரி (இவரது கோட்டை) மற்றும் குறுகிய இந்துஸ்தானி வடிவங்களான தாத்ரா, சைதி, கஜ்ரி போன்றவற்றைப் பாடினார். பல சந்தர்ப்பங்களில், இரவு முழுவதும் இவர் பாடுவார், எடுத்துக்காட்டாக , தர்பங்காவின் மகாராஜாவுடன் ஒரு இரவில் படகு சவாரியில் பாடியுள்ளார். [3] 1989 ஆம் ஆண்டில், பிரபல இயக்குனர் மணி கவுல் என்பவர் இவரது வாழ்க்கையைப் பற்றி சித்தேசுவரி என்ற விருது பெற்ற ஆவணப்படத்தைத் தயாரித்தார். [4]

விருதுகள்[தொகு]

இவர் தனது தொழில் வாழ்க்கையில் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். 1966இல் இந்திய அரசால் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. 1973இல் கொல்கத்தாவின் ரவீந்திர பாரதி விஸ்வவித்யாலயாவில் இலக்கியத்தில் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது. விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தில் தேசிகோட்டம் என்றப் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.

இறப்பு[தொகு]

இவர் 1977 மார்ச் 18 அன்று புதுதில்லியில் இறந்தார். இவரது மகள் சவிதா தேவியும் ஒரு இசைக்கலைஞர் ஆவார். அவர் டெல்லியில் வசிக்கிறார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தேசுவரி_தேவி&oldid=3434336" இலிருந்து மீள்விக்கப்பட்டது