உள்ளடக்கத்துக்குச் செல்

சித்திரா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்திரா எனும் பெயரில் இலங்கையில் 198+களில் வெளிவந்த ஒரு சித்திரக்கதை வார இதழாகும். இலங்கையில் பல சித்திரக் கலைஞர்கள் இந்த வார இதழில் சித்திரக் கதைகளை எழுதியும் வரைந்தும் வந்தனர். சில சித்திரக் கலைஞர்கள் சித்திரம், கதை இரண்டையும் ஒருசேர எழுதி வெளிவந்தவைகளும் இருந்தன. ஒருசில சித்திரக்கதைகளின் கதை ஆசிரியர் ஒருவராகவும், அந்த கதைக்கு ஏற்ப சித்திரப் படங்களை வரைபவர் இன்னுமொருவராகவும் இருவர் இணைந்து வெளியிடப்பட்ட சித்திரக்கதைகளையும் "சித்திரா" வார இதழ் கொண்டிருந்தது.

வாசகர்கள்[தொகு]

அக்காலப் பகுதியில் பாடசாலை மாணவர்களிடையே இந்த "சித்திரா" சித்திரக்கதை வாரயிதழ் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் நாவல் கதைகளுக்கு ஒரு வாசகர் கூட்டம் இருப்பது போன்றே, இந்த சித்திரக்கதை இதழுக்கும் ஒரு வாசகர் கூட்டம் எல்லா வயதினரிடர் இருந்தும் இருந்தது. அதிலும் சித்திரக் கலையில் ஆர்வம் உள்ளவர்கள் மத்தியில் மிகவும் வரவேற்புக்குள்ளான ஒரு இதழாகும்.

சிறப்பம்சம்[தொகு]

இந்த இதழின் சிறப்பம்சம் கதைகளை எழுத்து வடிவாக அல்லாமல், பேசும் சித்திரங்களாக, கதை உரையாடல் வடிவில் சித்திரங்களோடு கொடுக்கப்பட்டிருக்கும். சிறிய சிறிய சதுரவடிவில் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு, அதில் உள்ள கதாபாத்திரங்கள் உரையாடுவதையும், சிந்திப்பதையும் கூட வேறுபடுத்தி காட்டியிருப்பர். குறிப்பாக இந்த சித்திரக்கதை இதழ் கதைகளையும் விட சித்திரங்களுக்கே முன்னுரிமை கொடுப்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

பிரசித்திப்பெற்ற கதைகள்[தொகு]

இந்த "சித்திரா" இதழில் வெளிவந்த பல கதைகள் தொடர்கதைகள் ஆகும். சில வாரங்களின் போது ஒன்று அல்லது இரண்டு குறுங்கதைகளையும் கொண்டு வெளிவரும். "வீரபாகு", "வீரமோகினி" போன்ற வீரக்கதைகள் மிகவும் பிரசித்திப்பெற்றதாக வீர்சாகசக் கதைகளாகும். "வீரபாகு" யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு வீரனின் வரலாற்றை சித்திரங்களால் கண்முன்னே நிறுத்தியக் கதை. புத்தாண்டு மற்றும் சிறப்பு நாட்களில், அந்த நாற்களுக்கு பொருத்தமான வகையில் சிறப்பு சித்திரக்கதைகள் ஒன்று இரண்டு வெளிவரும். இலங்கை, மலையக எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் கதை எழுத, மலையக வாழ்வியலை சித்தரிக்கும் சித்திரக்கதைகளும் அதில் இடம்பெற்றன.

அத்துடன் காதல் கதைகள், விஞ்ஞானக் கதைகள், நகைச்சுவை கதைகள், சாகசக்கதைகள் என அனைத்து விதமான கதைகளும் பல்வேறு சித்திரக் கலைஞர்களாலும், கதையாசிரியர்களின் முயற்சியாலும் இந்த இதழ் வெளிவந்தது. இதழில் நடுவே அரசியல் நகைச்சுவை துணுக்குகள்; விமர்சனங்களாகவும், கண்டனமாகவும் இடம்பெறும்.

இதழ் வடிவம்[தொகு]

இதழில் முதல் பக்கம் வண்ணப் படங்கள் கொண்டதாக இருக்கும். முதல் பக்க படம், "சித்திரா" இதழின் தொடர்கதைகளாக வரும், ஒரு கதையின் அன்மைய பாத்திரத்தை சித்தரிக்கும் வகையிலே அமையும். ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு சித்திரக்கலைஞர்களுக்கு முகப்பு பக்கம் வரையும் சித்திரம் கொடுக்கப்படும். இந்த இதழின் வாசகர்கள் முதல் பக்கத்தைப் பார்த்தவுடனேயே அது குறிப்பிட்ட கதையின் சித்திரம் என்பதையும், எவரால் வரைந்த சித்திரம் என்பதையும் அறிந்துகொள்வர். நடுப்பக்கமும், கடைசி பக்கமும் பலவண்ணங்கள் தீட்டிய சித்திரக் கதைகளைக் கொண்டிருக்கும். ஏனையப் பக்கங்கள் கருப்பு வெள்ளை, மற்றும் கருப்பு வெள்ளை போன்று, இரண்டு வண்ணங்கள் கொண்டு இதழின் வடிவமைப்பு அமைந்திருக்கும்.

சித்திரக்கதை இதழ்கள்[தொகு]

"சித்திரா" சித்திரக்கதை இதழ், இலங்கையில் சிங்களத்தில் வெளிவந்த, தொடர்ந்தும் வெளிவந்துகொண்டிருக்கும் சிங்கள சித்திரைக்கதை இதழ்களின் வடிவமைப்பையும், இதழின் அளவையும் கொண்டிருந்தது. 198+ பின்னர் இவ்வாறான ஒரு சித்திரக்கதை இதழ், இலங்கையில் தமிழில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்திரா_(இதழ்)&oldid=3073394" இலிருந்து மீள்விக்கப்பட்டது