சித்திரசேன
சித்திரசேன | |
---|---|
சித்திரசேன | |
இயற் பெயர் | அமரதுங்க ஆராச்சிகே மோரிசு டயசு |
பிறப்பு | களனி, இலங்கை | 26 சனவரி 1921
இறப்பு | 18 சூலை 2005 கொழும்பு, இலங்கை | (அகவை 84)
தொழில் | நடனக் கலைஞர் |
அமரதுங்க ஆராச்சிகே மோரிசு டயசு (26 சனவரி 1921 - 18 சூலை 2005) என்னும் இயற்பெயர் கொண்ட சித்திரசேன இலங்கையின் புகழ் பெற்ற நடனக் கலைஞர்களில் ஒருவர். நடனத்துறையில் உலக அளவில் அறியப்பட்டவரான இவர், சிங்கள மரபுவழி நாடக வடிவங்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாக விளங்கியதுடன், புதிய சிங்கள நடன மரபொன்றையும் உருவாக்கினார்.[1][2][3]
இளமைக்காலம்
[தொகு]சித்திரசேன இலங்கையின் களனி என்னும் இடத்தில் உள்ள வரகொட என்னும் ஊரில் 1921 ஆம் ஆண்டு சனவரி 26 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சீபேர்ட் டயசு, 1920 களிலும் 30 களிலும் புகழ் பெற்ற தயாரிப்பாளராகவும் நடிகராகவும் விளங்கியவர். கொழும்பு நாடகச் சங்கத்தைத் தொடங்கி அதில் ஒரு பயிற்சியாளராக இருந்ததுடன், பல நாடகங்களையும் தயாரித்து வழங்கியவர். சேக்சுப்பியரின் நாடகங்களை ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் இலங்கையில் தயாரித்து வழங்கிய முன்னோடியாகவும் இவர் விளங்கினார். சித்திரசேனவை இளவயதிலேயே நடனத்தையும் நாட்டியத்தையும் கற்றுக்கொள்ளுமாறு அவர் ஊக்கப்படுத்தினார்.
இந்தியாவில் சாந்திநிகேதனத்தை நிறுவிய இரவீந்திரநாத் தாகூர் 1934 ஆம் ஆண்டில் இலங்கையில் நிகழ்த்திய உரைகள் இலங்கையின் படித்தவர்கள் பலரின் சிந்தனைப் போக்குகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மக்கள் தமது பண்பாட்டை அறிந்துகொண்டால் மட்டுமே பிற பண்பாடுகளின் சிறந்த கூறுகளை அதனுள் பயனுள்ள வகையில் தன்வயப்படுத்திக்கொள்ள முடியும் எனத் தாகூர் வலியுறுத்தினார். அக்காலத்தில் சித்திரசேன பள்ளிமாணவனாக இருந்தார். அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் இலக்கியவாதிகள், கலைஞர்கள் போன்றவர்களால் அது ஒரு பண்பாட்டு மையமாகவே விளங்கியது.
1936 ஆம் ஆண்டில் சித்திரசேனாவின் தந்தையார் தயாரித்து இயக்கிய முதலாவது சிங்கள "பலே" நடனத்தில் 15 வயதான சித்திரசேன சிறிசங்கபோ அரசனாக வேடமேற்று நாடகத் துறையில் காலடிவைத்தார். கண்டி நடன நுட்பங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தலைமை வேடம் ஏற்று நடித்ததன் மூலம், சித்திரசேனவின் திறமைகளை மக்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பிரித்தானிய நிர்வாக அமைப்பின் கீழான அமைச்சரவையின் துணைத் தலைவராக இருந்தவரும், புத்தமத அறிஞரும், கொழும்பு பௌத்த இளைஞர் சங்கத்தை நிறுவியவரும், நாட்டின் விடுதலைக்காகப் போராடியவருமான டி. பி. செயத்திலக்காவின் ஊக்குவிப்பும் சித்திரசேனவுக்குக் கிடைத்தது.
நடனப் பயிற்சி
[தொகு]சித்திரசேன, அல்கம கிரிகணிதய குருநான்சே, முத்தனாவே அப்புவ குருநான்சே, பெவில்கமுவே லம்பாய குருநான்சே ஆகியோரிடம் கண்டி நடனம் பயின்றார். பயிற்சி முடித்து கண்டி நடனத்துக்கான தலையணி அணிவிக்கும் சடங்கான "வெஸ் பந்தீம" 1940 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. அதே ஆண்டில், கதகளி கற்றுக்கொள்வதற்காகத் திருவனந்தபுரத்தில் உள்ள சிறீ சித்திரோதய நாட்டிய கலாலயம் என்னும் நடனப் பள்ளிக்குச் சென்றார். அங்கே திருவனந்தபுர அரசவை நடனக் கலைஞரான சிறீ கோபிநாத் என்பவரிடம் கதகளி பயின்றார். அங்கே இலங்கைப் பெண்ணான சந்திரலேகா என்பவருடன் இணைந்து, திருவனந்தபுரம் அரசருக்கும் அரசிக்கும் முன்னிலையில் அவர்களது அரண்மனையில் ஒரு நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார். பின்னர் கேரள கலாமண்டலத்திலும் கதகளியில் பயிற்சி பெற்றார்.
1941 ஆம் ஆண்டில் ரீகல் அரங்கில், கவர்னர் சர் அன்ட்ரூ கால்டேகாட், திருமதி கால்டேகாட் ஆகியோர் முன்னிலையில் அவ்வகையில் முதல் முயற்சியாக நடன நிகழ்ச்சி ஒன்றை சந்திரலேகாவுடனும் அவரது குழுவினருடனும் இணைந்து நடத்தினார். பெண்கள் அனுமதிக்கப்படாத கண்டி நடனத்துறையில் ஈடுபட்ட முதல் பெண்களில் ஒருவராக சந்திரலேகா விளங்கினார். 1943 ஆம் ஆண்டில், சித்திரசேன நடனக் கம்பனி என்னும் நிறுவனம் ஒன்றைச் சித்திரசேன தொடங்கினார். இலங்கையின் பல பகுதிகளுக்கும் சித்திரசேன பயணம் செய்தார். சித்திரசேனவின் தம்பியான சரத்சேன ஒரு சிறந்த மத்தளக் கலைஞர். இவரது தங்கை முனிராணியும் ஒரு நடனக் கலைஞரே.
நடனப் பள்ளி
[தொகு]கலைகளில் பெரும் ஈடுபாடு கொண்டு ஆதரித்தவரான சர் ஈ. பி. ஏ. பெர்னான்டோ என்பவரால் வழங்கப்பட்ட பெரிய கட்டிடம் ஒன்றில் 1944 ஆம் ஆண்டில், சித்திரசேன கலாயாயத்தனய என்னும் முதல் தேசிய நடனப் பள்ளியைத் தொடங்கினார். சித்திரசேன 40 ஆண்டுகள் இதில் இருந்து பணிபுரிந்துள்ளார்.
வங்காளத்தில்
[தொகு]1945 ஆம் ஆண்டில், வங்காளத்தில் உள்ள இரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனத்தில் நடனம் பயின்றார். அங்கே, இரவீந்திரநாத் தாகூரின் நாட்டிய நாடகமான "சண்டலிக்கா"வில் ஆனந்த என்னும் தலைமைப் பாத்திரம் ஏற்றுத் தாகூரின் பேத்தியான நந்திதா கிருபளானியுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்புப் பெற்றார். சித்திரசேன உதயசங்கரின் சமகாலத்தவர். சித்திரசேனா தில்லியில் இடம்பெற்ற அனைத்திந்திய நடன விழாவில் சாந்திநிகேதனத்தின் சார்பில் கலந்துகொண்டார். இவர் லக்னோ, லாகூர், அசாம் அல்மோராவில் உள்ள உதயசங்கரின் நடன மையம் போன்ற பல நடன மையங்களுக்கும் இவர் சென்றுள்ளார். கல்கத்தாவில் உள்ள நியூ எம்பயர் அரங்கில் தாகூர் நினைவு நிதிக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியிலும் நடன நிகழ்ச்சி நடத்தினார்.
இரவீந்திரநாத் தாகூர், வங்காள உயர்தட்டினர் மத்தியில் ஏற்பட்ட உள்நாட்டுக்குரிய எழுச்சி போன்றவற்றால் உந்தப்பட்டுப் பல இலங்கைக் கலைஞர்கள் தமது போத்துக்க்கீசச் செல்வாக்குக் கொண்ட பெயர்களைச் சிங்களப் பெயர்களாக மாற்றிக்கொண்டனர். அவர்களுள் சித்திரசேனவும், அமரதேவ, சரச்சந்திர போன்ற கலைஞர்களும் அடங்குவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Upeka, [1] "Profile: Chitrasena" in Narthaki[2]. Retrieved 4 September 2009
- ↑ Samara, Daleena [3] "Leading the way for dancing damsels" in The Sunday Times 30 March 2008. Retrieved 1 October 2015
- ↑ Jayawardhana, Bandula "Artscope | Online edition of Daily News - Lakehouse Newspapers". Archived from the original on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 9 September 2009. "The Meaning of Chitrasena" in The Daily News, 23 January 2008. Retrieved 9 September 2009