சித்தர் ஆருடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சித்தர் ஆருடம் என்னும் நூலை நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். சீவக சிந்தாமணி பதுமையார் இலம்பகம், பாடல் 122 சித்தர் ஒருவர் 13 ஆம் நூற்றாண்டில் எழுதிய நூல் இது. இது பாம்பு பற்றிய நூல். பதுமை என்பவளைப் பாம்பு கடித்துவிட்டது. நஞ்சு ஏறிய பதுமையின் உடலில் நாறும் மணத்தை வைத்துக்கொண்டு இது எந்த இன நாகம் எனச் சீவகன் அறிந்து கூறுகிறான். சித்தர் ஆருடப்படி இவன் கணித்தான் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். நஞ்சு ஏறிய உடம்பிலிருந்து காய்ச்சும் ஆவின்பால் மணம் வருமாயின் தீண்டியது அந்தண நாகம். நந்தியாவிட்டைப் பூ நாற்றம் வரின் அரசநாகம், தாழைமலர் மணம் வந்தால் தீண்டியது வணிக நாகம், அரிதார மணம் வந்தால் தீண்டியது வேளாண்நாகம் - இப்படிச் சித்தர் ஆருடம் கூறுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

சித்த்தாருடச் சிந்து [1][தொகு]

இந்த நூல் 312 நொண்டிச்சிந்து பாடலால் அமைந்துள்ளது. 5 பாடல் மட்டும் விருத்தம். இதன் ஆசிரியர் கௌசிக முனிவர். இவர் தம்மைப் தாமரைப் பொகுட்டில் உள்ள பிரம்மாவின் மகன் எனக் கூறிக்கொள்கிறார். பாம்பின் பிறப்பு, வளர்ச்சி, வகைகள், நஞ்சு, நஞ்சை முறிக்கும் மருந்து முதலானவை இந்த நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியர் கூறுகிறபடி இந்த நூல் பாம்பின் வகைகளைக் கூறுகிறது. நாவி என்னும் கஸ்தூரி மணம் வீசிவது அந்தணர்குல வகை. செந்தாழம் பூ மணம் அரசர்குல வகை. பாதிரிப்பூ மணம் வீசுவது வைசியர்குல வகை. இலுப்பைப்பூ மணம் வீசுவது சூத்திரர் வகை.[2]

கருவிநூல்[தொகு]

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு[தொகு]

  1. உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார். சீவகசிந்தாமணி பதிப்பு.
  2. அந்தணர் நாவி மணம் – இறையவர்
    அலர்ந்த செந்தாமரையினவர் மணமாம்
    வந்திடும் வைசியர் மணம் – பாதிரிப்பூ
    வகுத்த சூத்திரர் மணம் இருப்பையின் பூ. (பாடல் 23)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்_ஆருடம்&oldid=1454335" இலிருந்து மீள்விக்கப்பட்டது