சிதம்பரம் நூறுகால் மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிதம்பரம் நூறுகால் மண்டபம் என்பது சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள ஒரு மண்டபமாகும். இந்த மண்டபத்தில் சோழர் காலத்தைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றன.

வரலாறு[தொகு]

இந்த நூறுகால் மண்டபம் சிதம்பரம் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தத்துக்கு மேற்கில், சிவகாமி அம்மன் சன்னதிக்கு தெற்கில் இருக்கிறது. இந்த மண்டபம் சோழப் பேரரசனான விக்கிரம சோழனின் காலத்தில் கட்டப்பட்டது. இவனது முதன்மை அமைச்சர், மற்றும் படைத் தளபதியான நரலோக வீரன் என்பவன் இம் மண்டபத்தை கட்டியவன் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன .[1] நரலோக வீரனின் மெய் கீர்த்தி அவனை தொண்டைமான் என்றும் வேளாண் குடி முதல்வன் என்றும் போற்றுகிறது, இதன்மூலம் இவன் வேளாளர் குடியை சார்ந்த தளபதி என்று தெரிகிறது

சோழர்கால ஓவியங்கள்[தொகு]

வழக்கு போன்ற காரணங்களினால் 30 ஆண்டுகளாக பூட்டிவைக்கப்பட்டிருந்த இந்த மண்டபம் அண்மையில் திறக்கப்பட்டு, இரண்டு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரலாற்றுப் பேராசிரியர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வில் இந்த நூறுகால் மண்டபத்தில் சோழர் காலத்து ஓவியங்கள் அழிந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை சோழர்கால ஓவியங்கள் தஞ்சை பெரிய கோயில், நார்த்தாமலை, மலையடிப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டும்தான் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. நானாகாவதாக சிதம்பரம் நடராஜர் கோயிலிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலில் சுண்ணாம்புக் கலவை பூசி, அது காய்வதற்குள் ஓவியங்களை வரையும் பற்றோவிய முறையில் இந்தச் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மண்டபத்தின் விதானத்தில் வட்ட வடிவ கொடிக் கருக்குகளில் எட்டு இதழ்கள் கொண்ட பூக்கள், சில இடங்களில் சாய் சதுரங்களுக்குள் பூக்கள், ஓரங்களில் கொடிக்கருக்கு ஓவியங்கள் எல்லைக்கோடு போல வரையப்பட்டுள்ளன. என்றாலும் ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளதால் ஏழு இடங்களில் மட்டும் ஓவியங்களை அடையாளம் காண இயலுகிறது. தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அடர் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி போன்ற வண்ணங்களே இங்கும் வரைய பயன்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சிதம்பரம் கோயிலில் 800 ஆண்டு பழமையான சோழர் கால ஓவியங்கள்". http://firsttopost.com. 11 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); External link in |publisher= (help)
  2. "சிதம்பரம் நடராஜர் கோயில் நூறுகால் மண்டபத்தில் 800 ஆண்டுகள் பழமையான சோழர்கால அரிய ஓவியங்கள்கண்டுபிடிப்பு : கவனமாக பாதுகாக்க ஆய்வாளர்கள் வேண்டுகோள்". செய்தி. தி இந்து. 12 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)