சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது.

வரலாறு[தொகு]

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் முயற்சியில் 1859 இல் கட்டப்பட்டது. ஒக்ஸ்லி எனும் மருத்துவரிடம் நிலத்தை வாங்கி கோயில் கட்டப்பட்டது. முருகப் பெருமானாகிய தண்டாயுதபாணியே மூலவராக இருக்கிறார். முதல் திருக்குட நன்னீராடு விழா ஏப்ரல் 4 1859 இல் நடந்தது. பின்னர் பெப்ரவரி 2, 1936 இலும், பின்னர் ஜூலை 7, 1955 இலும் கோயில் திருப்பணி நடந்து, நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றன.

கருவறையின் நுழைவாயிலில் ஜம்பு விநாயகர் இடது புறமாகவும், இடும்பர் வலப்புறமாகவும் அமர்ந்திருக்கின்றனர். சிவன்,அம்பிகை இருவருக்கும் தனிதனிக் கருவறைக் கோயில்கள் இப்போதுள்ளன.

தண்டாயுதபாணி ஆலயத்தின் மூலவர் வேல் வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் நடைபெறும் நீராட்டு அபிஷேகம் வேலுக்கே செய்யப்படுகிறது.

சிவன்,அம்பிகையுடன் தண்டாயுதபாணி, நந்தி, தட்சிணாமூர்த்தி, சண்டேசுவர், வைரவர், அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை, நவக்கிரங்கள் ஆகிய திருவுருவங்களும் உள்ளன. நடராசர் சிவகாமி செப்புத் திருமேனி உருவங்கள் தனியே உள்ளன. இத்திருவுருவங்களுக்கு ஆகம முறைப்படி சிவாச்சாரியார்கள் பூசை செய்கின்றனர். தண்டாயுதபாணிக்குப் பண்டாரங்கள் பூசை செய்கின்றனர்.

சிறப்புகள்[தொகு]

  • மண்டபத்தூண்களில் முருகனின் அறுபடை வீடுகள் ஆறு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.
  • கோயிலின் விமானத்தைச் சுற்றியுள்ள 48 கண்ணாடி மாடங்களில் தெய்வச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
  • அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது.
  • ஆனந்தத் தாண்டவ நடராஜரும், மாணிக்கவாசகரும் சிவகாமி அம்மையும் கதை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய விழாக்கள்[தொகு]

தைப்பூசம், நவராத்திரி, கந்த சஷ்டி, லெட்சார்ச்சனை ஆகிய விழாக்கள் சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன.

சமூகப்பணி[தொகு]

திருமுறை வகுப்புகளும்,தேவார வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]