சிக்கி (யானை)
| சிக்கி | |
|---|---|
![]() | |
| இனம் | இந்திய யானை (Elephas maximus indicus) |
| பால் | ஆண் |
| பிறப்பு | அண். 1917 |
| இறப்பு | 27 அக்டோபர் 1975 ( 57–58 வயதில்) புரூக்ஃபீல்ட் உயிரியல்காட்சிசாலை, சிகாகோ, இல்லினாஸ், அமெரிக்கா |
| Resting place | இயற்கை வரலாற்று கள அருங்காட்சியகம், சிகாகோ, இல்லினாஸ், அமெரிக்கா |
| அறியப்படுவதற்கான காரணம் | நீண்டகால சிறைவாசம் |
| நிறை | 12,000 pounds (5,400 kg) |
| உயரம் | 10 அடிக்கு மேல் |
| Named after | ஃப்ளோரன்ஸ் ஜீக்ஃபெல்ட் |
சிக்கி (Ziggy அண். 1917 – அக்டோபர் 27, 1975) [1] என்பது 1936 முதல் 1975 வரை சிகாகோவிற்கு வெளியே உள்ள புரூக்ஃபீல்ட் உயிரியல்காட்சிசாலையில் வாழ்ந்த ஒரு இந்திய ஆண் யானை ஆகும். இது சுமார் ஆறு டன் எடையுடனும், பத்து அடிக்கு மேல் உயரமானதாக இருந்தது.[2] 1941 இல் இது தன் பராமரிப்பாளரைத் தாக்கியதால் அவர் ஏறக்குறைய இறக்கும் நிலைக்குச் சென்றார். அதன் பிறகு, சிற்றிலும் சுவர்களால் மூடப்பட்ட ஒரு அடைப்பில் இந்த யானை சங்கிலியால் பிணைக்கப்பட்டது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக அங்கேயே அடைபட்டு இருந்தது. 1960 களின் பிற்பகுதியில், பள்ளி மாணவர்களும் பிற விலங்கு நல ஆர்வலர்களும் இந்த யானையின் விடுதலைக்காக பரப்புரை செய்யத் தொடங்கினர். அதன் பிறகே இதன் சிறைவாசம் பரவலான ஒரு கவனத்தைப் பெற்றது. 1970 இல் சிக்கி சிறிது நேரம் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒரு ஆண்டு கழித்து, விலங்குகாட்சிசாலையில் இதற்காக புதியதாக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட திறந்தவெளி வசதி கொண்ட கட்டமைப்பை உருவாக்கியது. சிக்கி 1975 இல் இறந்தது.
துவக்க ஆண்டுகளில்
[தொகு]ஆசியாவில் பிறந்த சிக்கி, 1920 ஆம் ஆண்டு ஜான் ரிங்லிங் என்ற வட்டரங்க (சர்க்கஸ்) கலைஞரிடமிருந்து புளோரன்ஸ் சிக்ஃபெல்ட் என்பவரால் வாங்கப்பட்டது. அவரின் நினைவாகவே இந்த யானைக்கு பெயரும் இடப்பட்டது. அப்போது 250 பவுண்டுகள் எடையுள்ள குட்டி யானையாக இருந்த இதை புளோரன்ஸ் தன் ஆறு வயது மகளுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கினார். இருப்பினும், சிக்கியை அவர்களுக்கு பராமரிக்கத் தெரியவில்லை. அது அவர்களின் வீட்டுத் தோட்டத்தை நாசம் செய்ததால், இந்த யானை ரிங்லிங்கிற்கே மீண்டும் விற்கப்பட்டது.[3] ரிங்லிங், யானையை சிங்கரின் மிட்ஜெட் வட்டரங்குக்கு விற்றார். அங்கு இந்த யானைக்கு சிக்கி சார்லஸ் பெக்கர் என்ற வட்டரங்கு கோமாளிக் குள்ளன் பொறுப்பாளராக கிடைத்தார். அவர் யானைக்கு நடனமாடுவது, ஆர்மோனிகா வாசிப்பது, வெண்சுருட்டு புகைப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தார்.[4] இந்தக் குழுவினருடன் யானை பல பயணங்களை மேற்கொண்டது.
1936 பிப்ரவரியில் சான் டியாகோ கண்காட்சியில் நடந்த குழந்தைகள் வட்டரங்கின்போது, இதன் பயிற்சியாளரான பெக்கர் நோய்வாய்ப்பட்டார். இதனால் சிக்கிக்கு புதிய பொறுப்பாளராக ஜானி விண்டர்ஸ் வந்தார். ஆனால் யானைக்கும் புதிய பொறுப்பாளருக்கும் இடையில் நட்போ, பிணைப்போ உருவாகவில்லை. கலிபோர்னியாவில் அவர்கள் தங்கி இருந்த இடத்தைவிட்டு சிக்கி தப்பிச் சென்றது. பின்னர் பால்போவா பூங்காவில் சினத்துடன் நின்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யானையை அமைதிப்படுத்தி அழைத்துச் செல்ல நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த பெக்கர் அழைத்து வரப்பட்டார். அவர் சிக்கியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தார்.[5] சில தரவுகளில் சிக்கி தப்பிக்கும் போது ஒரு டிராம்போன் வாசிப்பாளரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.[6] ஆனால் இதற்கு போதுமான சான்றுகள் இல்லை. இனி வட்டரங்கில் (சர்க்கஸ்) யானையை வைத்திருப்பது கடினம் என்று முடிவு செய்தனர். எனவே சிக்காகவோவில் உள்ள புரூக்ஃபீல்ட் உயிர்காட்சிசாலைக்கு யானையை விற்றுவிட்டனர். இதன்படி சிக்கி 1936 சூலையில் புரூக்ஃபீல்டிற்கு வந்து பார்வையாளர்களைக் கவரும் ஒன்றாக மாறியது.[4]
1941 ஏப்ரல் 26 அன்று ப்ரூக்ஃபீல்ட் விலங்குகாட்சிசாலையில், சிக்கி திடீரென தன் பராமரிப்பாளர் ஜார்ஜ் "ஸ்லிம்" லூயிசைத் தாக்கியது.[7] யானை முதலில் லூயிசை தனது தும்பிக்கையால் தாக்கியது. ஜார்ஜ் தரையில் விழுந்தார். ஆக்ரோசத்துடன் யானை தன் தந்தங்களால் முட்டியது. ஜார்ஜ் அதன் தந்தங்களுக்கு இடையில் நழுவி ஒவ்வொரு தாக்குதலிலிரும் இருந்தும் தப்பினார். ஒரு கட்டத்தில் யானையின் தந்தங்கள் மண்ணில் பல நொடிகள் சிக்கிக் கொண்டன. தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை உணர்ந்த லூயிஸ், சிக்கியின் காதைப் பிடித்துக்கொண்டு தன் உடலை மேலே இழுத்துக் கொண்டார். பின்னர் யானையின் கண்ணில் குத்தினார். சிக்கி சிறிது திகைத்த நிலையில், லூயிஸ் யானையின் கூண்டைச் சுற்றியுள்ள அகழியில் குதித்து மறுபுறம் ஏறினார்.[8]
மதம்பிடித்த யானையை கொன்றுவிடும் வழக்கம் அப்போது இருந்தது. யானையால் தன் உயிருக்கு ஆபத்து வந்த நிலையிலும், லூயிஸ் விலங்குகாட்சிசாலையின் இயக்குனர் ராபர்ட் பீனிடம் இதுவும் யானையில் இயல்புதான் தயவு செய்து சிக்கியைக் கொன்றுவிடாதீர்கள் என்று கெஞ்சினார். அதற்கு அவர் ஒப்புக் கொண்டார். ஆனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்காக பார்க்கிடெர்க் அவுஸ் எனப்படும் மறைவான மூடப்பட்ட பகுதிக்கு இன்னொரு யானையின் உதவியுடன் சிக்கி அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டது.[8] அதன் பின்னங் கால்களில் கனத்த நீளமான சங்கிலி கட்டப்பட்டது.[9] மூடப்பட்ட பகுதிக்கு சிக்கியை லூயிசே அழைத்துச் சென்றார். அடுத்த சில பத்தாண்டுகளுக்கு, இந்த யானை ஒரு அடைப்பிற்குள் தனியாகவே இருந்தது.
தாக்குதல் நடந்த நாளில் யானையின் உடலில் மதநீர் சுரந்து கொண்டிருந்ததாக பல ஆண்டுகளுக்குப் பிறகு, லூயிஸ் விளக்கினார். மதநீர் என்பது ஆண் யானைகளில் உடலில் அதிக ஆண்மையியக்குநீர் இருக்கும் ஒரு காலமாகும். அப்போது யானை ஆக்ரோஷமாக நடந்து கொள்வது வழக்கம்.[10]
சிக்கியை விடுவிப்பதற்கான பரப்புரை
[தொகு]1969 மார்ச்சில், சிகாகோ ட்ரிப்யூனின் இதழின் மைக்கேல் ஸ்னீட், சிக்கியின் சிறைவாழ்வை கவனத்தில் கொண்டு கட்டைரை ஒன்றை எழுதினார், "ஒரு காலத்தில் ஒன்றையொன்று தாண்டும் அளவுக்கு நீளமாக வளர்ந்த சிக்கியின் ஆறு அடி நீள தந்தங்கள் இப்போது சிதைந்து உடைந்துவிட்டன. ஒரு காலத்தில் அதன் பெரிய துதிக்கையில் இருந்து அவ்வப்போது வந்த கம்பீரமான பிளிரல் மிகவும் அரிதாகவே வருகிறது.... சிக்கி மனிதர்கள் வந்தாலே, அவர்களைப் பார்க்காமல் சுவரை நோக்கித் திரும்பி, முன்னும் பின்னுமாக அசைந்து, எப்போதாவது அதன் மீது பார்வையாளர்களால் விதிகளை மீறி வீசப்படும் உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்கிறது."[9] இந்தக் கட்டுரை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் புரூக்ஃபீல்ட் விலங்குகாட்சிசாலை சிக்கியின் நிலை குறித்து எழுதப்பட்ட கடிதங்களால் நிரம்பி வழிந்தது.[11] விலங்குகாட்சிசாலைக்கு புதியதாக வந்த இயக்குநரான பீட்டர் குரோக்ராஃப்ட், சிக்கியை மீண்டும் வெளியில் நடமாட அனுமதிக்க விரும்புவதாக அறிவித்தார். இருப்பினும், விலங்குகாட்சிசாலையில் அதற்கு உரிய வசதிகளுடன் தனிக்கட்டமைப்புகளை உருவாக்க $50,000 நிதி வேண்டும் என்று அவர் விளக்கினார். அந்த நேரத்தில் தங்களிடம் அந்த நிதி வசதி இல்லை என்று அறிவித்தனர்.[12][13]
இதன் எதிரொலியாக, சிகாகோ பகுதி முழுவதும் உள்ள மக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள், "சிக்கி நிதி"க்காக பணம் சேகரிக்கத் தொடங்கினர். பல தொடக்கப் பள்ளிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளிலும் நிதி திரட்டும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் பெல்வுட் பாய்ஸ் கிளப் சிக்கியின் ஐந்து அடி உயர பேப்பியர்-மச்சே என்னும் தாள் பசை கொண்டு செய்யப்பட்ட சிலையை உருவாக்கியது. அதை எடுத்துக் கொண்டு அவர்கள் தெருக்களில் அணிவகுத்துச் சென்று குடியிருப்புகளில் நிதி திரட்டினர்.[13] வியட்நாமில் நிலைகொண்டிருந்த அமெரிக்க வீரர்கள் உட்பட, பல வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான நன்கொடைகள் வந்தன.[14] 1970 ஆகத்தில், சிகாகோலாந்து ப்யூக் - ஓபெல் வணிகர் சக்கத்தின் தலைவரான வில்லியம் சிட்வெல், தனிப்பட்ட முறையில் திரட்டப்பட்ட பணத்தை அளிப்பதாக உறுதியளித்தபோது விலங்குகாட்சிசாலைக்கு பெரிய நம்பிக்கைப் பிறந்தது.[15]
புரூக்ஃபீல்ட் விலங்குகாட்சிசாலைக்கு அதன் இலக்காண $50,000 பணம் திரண்டு வந்தது. யானைக்கு புதிய வசதிகளுடன் கூடிய கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு முன்பு இத்தனை ஆண்டுகளுக்கு பின்பு சிக்கி வெளியில் வர விரும்புமா என்பதை விலங்கு காட்சிசாலை அதிகாரிகள் அறிய விரும்பினர். 1970 செப்டம்பர் 23 அன்று, சிக்கி தனது பழைய முற்றத்தின் தடுப்புப் பகுதி வழியாக நடக்க அனுமதிக்கப்பட்டது. அன்றுதான் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக சூரியனைப் பார்த்தது.[16] யானையின் பழைய பராமரிப்பாரான ஸ்லிம் லூயிஸ் வாஷிங்டனின் சியாட்டிலில் இருந்து யானையை வெளியே அழைத்து வரும் நோக்கத்திற்காக அழைத்துவரப்பட்டிருந்தார்.[14] அவர்தான் மூப்பது ஆண்டுகளுக்குமுன் இந்த யானையை தற்போதுள்ள கொட்டிலில் அடைத்தவர். சிக்கி சுமார் முப்பது நிமிடங்கள் வாசலில் நின்றது, பின்னர் மெதுவாக வெளியே உலாவி அங்கிருந்த ஒரு கட்டு வைக்கோலை சாப்பிடத் தொடங்கியது. ஒன்றரை மணி நேரம் முற்றத்தை ஆராய்ந்த பிறகு, சிக்கி மீண்டும் உள்ளே அமைதியாக சென்றது. [16]
சிக்கிக்கான புதிய திறந்தவெளிப்புற வசதிகளுக்கான பணிகள் 1971 கோடையில் நிறைவடைந்தன. திரட்டப்பட்ட நிதியான $50,000 இல் பெரும்பகுதி தொலைக் கட்டுப்பாட்டால் இயங்கும் கதவிற்காக செலவிடப்பட்டது. இது யானையை மனித தலையீடு இல்லாமல் உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிப்பதாக இருக்கும்.[17] இறுதியாக சிக்கி 1971 ஆகத்து 28 அன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் தனது புதிய வீட்டிற்குள் நுழைந்தது.[18] அடுத்த சில மாதங்களில், உயிர்காட்சிசாலை நிருவாகம் சிக்கியின் முற்றத்தில் ஒரு நீச்சல் குளத்தையும் அமைத்து, அது வாழும் இடம் புதுப்பிக்கப்பட்டது.[19]
பிந்தைய ஆண்டுகள்
[தொகு]அடுத்த சில ஆண்டுகள் சிக்கி பொதுவாக அமைதியாக இருந்தது. 1975 மார்ச்சில், உயிர்க் காட்சிசாலை பராமரிப்பாளரை தன் தும்பிக்கையால் முட்டித்தள்ள முயன்றபோது யானை தன் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள 8-அடி (2.4 m) ஆழமுள்ள அகழியில் விழுந்தது. அகழியில் விழுந்த யானை உயிர் தப்பியது. ஆனால் ஒரு தந்தம் உடைத்து அதன் தலையில் சிராய்ப்பு ஏற்பட்டது. சிக்கி அகழியிலிருந்து ஏறுவதற்கு சாய்வுப் பாதையை அமைக்க தொழிலாளர்கள் 84,000 பவுண்டுகள் (42 டன்) சரளைக் கற்களை அகழியில் கொட்டினர். யானை 31 மணி நேரம் நகராமல் இருந்தது. [20] ஆனால் ஒரு விலங்குகாட்சிசாலை பராமரிப்பாளர் (லெராய் உட்ரஃப்) ஒரு பெண் யானை அடைக்கப்பட்ட கொட்டிலுக்கு அருகிலுள்ள கதவைத் திறந்தபோது, சிக்கி வெளியேறி வந்தது. இருப்பினும், அகழியிலிருந்து வெளியிறே வந்ததும், அது பெண் யானையைப் புறக்கணித்துவிட்டு தனது உணவை நோக்கிச் சென்றது.[21]
சில மாதங்களுக்குப் பிறகு, சிக்கி தனது உட்புற இருப்பிடத்தில் ஓய்வெடுக்கப் படுத்து, பக்கவாட்டில் சாய்ந்து, லூயிசால் குளிப்பாட்டப்படும்போது இறந்தது. அதன் இறப்பு குறித்து விலங்குகாட்சிசாலையின் செய்தித் தொடர்பாளர்கள் குறிப்பிட்டபோது, சிக்கி இறக்க முதன்மைக் காரணம் முதுமை என்றனர். அகழியில் விழுவதற்கு முன்பே அதன் உடல்நிலை மோசமடைந்து வந்ததாக விளக்கினர்.[3]
மரபு
[தொகு]சிக்கியின் உடல் சிகாகோவில் உள்ள இயற்கை வரலாற்று கள அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டது. அங்கு இந்த யானையின் எலும்புகள் சேமிப்பில் உள்ளன. [22] 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அந்த எலும்புக்கூடுகளின் "மாதிரிகள்" காட்சிப்படுத்தப்பட்டன. [23]
சிக்கியின் வாழ்க்கையைப் பற்றி எழுதப்பட்ட குழந்தைகள் புத்தகமான சிக்கி: தி வேர்ல்ட்ஸ் கிரேட்டஸ்ட் எலிஃபண்ட் என்ற நூல் 1995 இல் வெளியிடப்பட்டது. இது டாம் ஹாலட்ஸால் எழுதப்பட்டு, ரே ஷ்லெமனால் விளக்கப்படங்கள் வரையப்பட்டன.[24]
சிக்கியின் தந்தங்களுடன் கூடியதாக எரிமலைக் கண்ணாடால் (அப்சிடியன்) செய்யப்பட்ட சிக்கி நினைவுச்சின்னம் இல்லினாய்ஸின் ஓக் புரூக்கில் உள்ள லிசாட்ரோ லேப்பிடரி கலை அருங்காட்சியகத்தின் [22] அவர்களின் நிரந்தர சேகரிப்பில் ஒரு காட்சியகத்தில் காணப்படுகிறது. [25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Asian Elephant North American Regional Studbook" (PDF). 2005. Archived from the original (PDF) on February 16, 2007. Retrieved August 2, 2008.
- ↑ Andrea Friederici Ross. Let the Lions Roar. Brookfield, Illinois: Chicago Zooological Society, 1997. pg. 62.
- ↑ 3.0 3.1 Edward Baumann. "Brookfield's rebel, Ziggy, dies quietly". Chicago Tribune. October 29, 1975. pg. A1.
- ↑ 4.0 4.1 Ross, pg. 63.
- ↑ "Midget's whistle brings back Ziggy, runaway elephant". Chicago Tribune. February 22, 1936. 2.
- ↑ Michael Sneed. "What ever happened to ???", Chicago Tribune. January 10, 1983. pg. A16.
- ↑ Kevin Brown. "Mixed Up Elephant". Chicago Tribune. May 12, 1957. pg. C8.
- ↑ 8.0 8.1 Ross, pg. 76.
- ↑ 9.0 9.1 Michael Sneed. "Rogue elephant roams no more", Chicago Tribune. March 2, 1969. pg. S15.
- ↑ "Pachyderm still chained to wall after 28 years", Chicago Tribune. May 31, 1970. pg. SCL5.
- ↑ Michael Sneed. "Story brings response; appeals filed for 'Ziggy'", Chicago Sun-Times. March 13, 1969. pg. S3.
- ↑ Michael Sneed. "Special zoo fund". Chicago Tribune. March 20, 1969. pg. W1.
- ↑ 13.0 13.1 Michael Sneed. "$4,000 toward new home", Chicago Tribune. June 26, 1969. pg. NA1.
- ↑ 14.0 14.1 Ross, pg. 144.
- ↑ "Zoo elephant may get new outside area", Chicago Tribune. August 25, 1970. pg. 2.
- ↑ 16.0 16.1 Sara Jane Goodyear. "Ziggy ends 29-year sentence". Chicago Tribune. September 2, 1970. pg. A10.
- ↑ Ross, pp. 144-145.
- ↑ Sara Jane Goodyear. "At last, sun shines for Ziggy", Chicago Tribune. August 29, 1971. pg. 1.
- ↑ Michael Sneed. "Ziggy's winter love gets cold shoulder", Chicago Tribune. December 20, 1972. pg. B13.
- ↑ Chicago Sun-Times (2000). 20th Century Chicago. Sports Publishing LLC. p. 162. ISBN 1-58261-239-0.
- ↑ Weldon Whisler and Barbara Reynolds. "Ziggy free; forgets everything but food", Chicago Tribune. March 25, 1975. pg. 3.
- ↑ 22.0 22.1 "Ziggy, Elephant with Issues (In Storage)". RoadsideAmerica.com. Retrieved March 21, 2013.
- ↑ "Specimens: Unlocking the Secrets of Life". Archived from the original on 2020-11-30. Retrieved 2017-12-28.
- ↑ Michael Sneed. "Sneedlings", Chicago Sun-Times. May 16, 1995. pg. 4.
- ↑ "Diorama". Lizzadro Museum of Lapidary Art. Retrieved March 21, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Elephants at Chicago Zoological Society website
- Ziggy, An Elephant With Issues at Roadside America
