உள்ளடக்கத்துக்குச் செல்

சிக்கிலிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய சிறுகண் காலிலிகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிக்கிலிடே (இந்திய சிறுகண் காலிலிகள்)
பேரினம்:
Uraeotyphlus

சிக்கிலிடே (Chikilidae) என்பது 2012-ஆம் ஆண்டில் தனிக்குடும்பமாக அறியப்பட்ட இந்திய சிறுகண் காலிலி நிலநீர்வாழிக் குடும்பமாகும். குருட்டுப்புழுக்களைக் குறிக்கும் காரோ மொழிச் சொல்லில் இருந்து பெயரிடப்பட்டாலும், இவை புழுக்கள் அல்ல, கால்கள் இல்லாத நிலநீர் வாழிகள். சிறுகண் காலிலி நிலநீர்வாழி வரிசையில் சிக்கிலிடே பத்தாவது குடும்பமாகும். ஐந்து ஆண்டுகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலுமாக 250 இடங்களில் தோண்டிக் கண்டறிந்த புழுவடிவ நிலநீர்வாழ் விலங்கினங்களை தனிக் குடும்பமாக அறிவித்துள்ளனர்.[1][2] முதன் முதலாக 1904-ஆம் ஆண்டு இச்சிற்றினத்தை விவரித்திருந்தாலும் இவை வேறு எந்தக் குடும்பத்தையும் சேராதவை என்பதை அவ்வாய்வுகள் நிறுவின. இந்திய துணைக்கண்டமும் ஆப்பிரிக்க நிலப்பகுதியும் ஒன்றாக கோண்டுவானா பெருங்கண்டமாக இருந்து பிரிந்ததில் இருந்து ஏறத்தாழ 140 மில்லியன் ஆண்டுகளாக இக்குடும்பத்தின் இனங்கள் தனியாக படிப்படியாக வளர்ந்து வந்துள்ளன.

உடலமைப்பு

[தொகு]

நான்கு செ.மீ.[3] நீளம் வரை வளரும் இவை மண்புழுவைப் போன்ற உடலமைப்பைக் கொண்டுள்ளன. தோலுக்கடியில் உள்ள கண்களைக் கொண்டு இவற்றால் எதையும் காண முடியாது என்றாலும் இருட்டுக்கும் வெளிச்சத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணர முடியும்.[4] இவற்றின் மண்டையோடு மண்ணைத் துளைப்பதற்கு வசதியான அமைப்பைக் கொண்டுள்ளது.[2] ஏதாவது அதிர்வு ஏற்பட்டால் இவ்விலங்குகள் தம் உறுதியான மண்டையோட்டின் உதவியுடன் மண்ணைத் துளைத்து விரைந்து நகருகின்றன.[4] கண்ணாடிக் கோலிக்குண்டுகளைப் போன்ற முட்டைகளுக்குள் பார்ப்புகள் வளர்ந்து வெளி வருகின்றன. தவளை போன்ற மற்ற நிலநீர்வாழிகளில் பார்ப்புகள் தலைப்பிரட்டைகளாகிப் பின்பு முதிருவதைப் போல அல்லாமல் முட்டைகளில் இருந்து நேரடியாக புழுவடிவ விலங்குகள் வெளிவருகின்றன.

உணவு

[தொகு]

பெரும்பாலும் சிறு புழுக்களையும் பூச்சிகளையும் உண்டு வாழ்கின்றன.[2]

வாழிடம்

[தொகு]

காடுகளிலும், மனிதர்களின் குடியிருப்புக்களுக்கு அருகேயும் கூட இவை மண்ணுக்கடியிலும் இலை தழைகளுக்குக் கீழேயும் காணப்படுகின்றன. இவ்வினங்கள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2]

இனப்பெருக்கம்

[தொகு]

தாய் முட்டையிட்டு இரண்டு மூன்று மாதங்களுக்கு உண்ணாமல் முட்டைகளை அடை காக்கிறது. சில இனங்களில் முட்டைகள் பொரிந்து பார்ப்புகள்[5] வெளியே வந்ததும் தாயின் தோல் உரிகிறது. அதைப் பார்ப்புகள் உண்கின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rachunliu G. Kamei et al. "Discovery of a new family of amphibians from northeast India with ancient links to Africa". Proceedings of the Royal Society B. doi:10.1098/rspb.2012.0150. http://rspb.royalsocietypublishing.org/content/early/2012/02/15/rspb.2012.0150.full. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "New amphibian family find for India". BBC News. 22 பெப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "New family of legless amphibians found in India". Boston Globe. February 21, 2012.
  4. 4.0 4.1 "New type of legless amphibian discovered in India". The Telegraph. 2012-02-22 இம் மூலத்தில் இருந்து 2012-02-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120222065841/http://www.telegraph.co.uk/earth/wildlife/9097531/New-type-of-legless-amphibian-discovered-in-India.html. பார்த்த நாள்: 2012-02-22. 
  5. சென்னைப்பல்கலைக்கழகம் (1924–1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். p. 2617. {{cite book}}: Cite has empty unknown parameter: |coauthors= (help)CS1 maint: date format (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கிலிடே&oldid=3929782" இலிருந்து மீள்விக்கப்பட்டது