உள்ளடக்கத்துக்குச் செல்

சிகான் உசேனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகான் உசேனி
பிறப்பு(1964-12-28)திசம்பர் 28, 1964
மதுரை
இறப்பு25 மார்ச்சு 2025(2025-03-25) (அகவை 60)
பணிநடிகர், கராத்தே நிபுணர், சிற்பி
செயற்பாட்டுக்
காலம்
1986 –2025
வலைத்தளம்
www.shihanhussaini.com

சிகான் உசேனி (Shihan Hussaini, 28 திசம்பர் 1964 – 25 மார்ச் 2025) என்பவர் ஓர் இந்தியக் கராத்தே ஆசிரியர் ஆவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இவரது சகோதரர் இசாக் உசைனியும் தமிழ்த் திரைபப்படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் ஜெ. ஜெயலலிதா மீது கொண்டிருந்த பற்று காரணமாக ஆற்றிய செயல்களுக்காகவும், உலக சாதனை முயற்சிகளுக்காகவும் இந்திய ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டார்.[2]

தொழில்

[தொகு]

சிகான் உசேனி கராத்தே பயிற்றுவிப்பவராகத் தனது சாதனைகளால் புகழ் பெற்றார். மேலும், தற்காப்புக் கலை சண்டைப் பயிற்சியைப் பெற விரும்பும் இளைஞர்களுக்காக ஒரு பள்ளியை அமைத்தார்.[3]

நடிப்பு

[தொகு]

உசேனி கே. பாலசந்தரின் காதல் நாடகத் திரைப்படமான புன்னகை மன்னன் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதில் ஒரு நடனக் கலைஞராக நடித்தார். படத்தில் சிங்களப் பெண் கதாபாத்திரமான ரேவதியின் கதாபாத்திரத்திடம் இவரது இலங்கைத் தமிழர் கதாபாத்திரமானது கடுமையாக நடத்துகொள்வதாக சித்தரிக்கப்பட்டது. இப்படத்தின் வெற்றியால், திரைப்பட தயாரிப்பாளர்கள் இவரை இரஜினிகாந்தின் வேலைக்கரன் (1987), ஆர். கே. செல்வமணியின் மூங்கில் கோட்டை ஆகியவற்றில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். மூங்கில் கோட்டையில் விசயகாந்துடன் நடித்தார். 1980களின் பிற்பகுதியிலும் 1990களின் முற்பகுதியிலும், ஹாலிவுட் படமான பிளட்ஸ்டோன் (1988), கார்த்திக் நடித்த உன்னைச் சொல்லி குற்றமில்லை (1990), சரத்குமார் நடித்த வேடன் (1993) ஆகியவற்றிலும் நடித்தார். மேலும் குஷ்பூவுடன் நடித்த நாடோடிகள், இரவிச்சந்திரனுடன் நடித்த சந்திப்புகள் ஆகிய படங்கள் வெளியாகவில்லை.

மேலும், இவர் மை இந்தியா என்ற படத்தில் தோன்றினார். அதில் நடிகைகள் சுவாதி, வாணி விசுவநாத் ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இவரது மிக அண்மைய திரைத் தோற்றமானது பத்ரி ஆகும். அதில் இவர் விஜயின் உடற்பயிற்சியாளராக நடித்தார். "டிராவலிங் சோல்ஜர்" பாடலை உருவாக்குவதிலும் பணியாற்றினார்.[4]

மற்றவை

[தொகு]

1998 ஆம் ஆண்டில், மருதநாயகம் படத்தயாரிப்பின் போது நடிகர் கமல்ஹாசனுக்கும், ஷங்கரின் ஜீன்ஸ் (1998) திரைப்படத்தின் சிறப்புக்காட்சிகளின்போதும், உசேனி பாதுகாப்பு ஒருங்கிணைப்புப் பணியில் உதவினார்.[5][6] ஜெயலலிதாவின் மீது தீவிர பற்று கொண்டு சிகான் உசைனி 2005 ஆம் ஆண்டில் அவரது 56 வது பிறந்த நாளை ஒட்டி தனது குருதியைப் பயன்படுத்தி 56 ஓவியங்களை வரைந்தார்.[7] 2003 பெப்ரவரியில், உறைந்த குருதியைப் பயன்படுத்தி ஜெயலலிதாவின் மார்பளவு சிலையை உருவாக்கினார். இதற்காக தனது குருதி உட்பட 11 லிட்டர் குருதியைச் சேகரித்ததாகவும், அது பெண்கள் உட்பட அவரது ஆதரவாளர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது என்று உசைனி கூறினார். இவரை முகத்துதி செய்பவர் என்று குற்றம் சாட்டிய விமர்சகர்களுக்கு ஜெயலலிதா மேலான தனது அபிமானம் உறுதியானது என்று கூறினார்.[8] 2015 பிப்ரவரியில், உசேனி 'அம்மா' என்று எழுதப்பட்ட ஒரு டி-சட்டையை அணிந்து சிலுவையில் அறைந்துகொண்டார். வரவிருக்கும் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறவேண்டி இவ்வாறு செய்ததாகக் குறிப்பிட்டார். உசேனியின் கூட்டாளிகள் ஆறு அங்குல ஆணிகளை இவரது கைகளிலும் கால்களிலும் குத்தியபின் ஆறு நிமிடங்களுக்கும் மேலாக அதில் தொங்கினார். நான்கு ஆணிகளையும் மெதுவாக வெளியே எடுத்த பிறகு, உசேனிக்காக காத்திருந்த அவசர ஊர்தியில் அருகிலுள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர்.[9] இவரது நடவடிக்கைகள் "முட்டாள்தனமானது" என்று பரவலாக விமர்சிக்கப்பட்டது.[10][11]

2016 ஆம் ஆண்டில், சிகான் உசேனி வில்வித்தை பயிற்சியாளராக, தமிழக வில்வித்தை சங்கத்தின் நிறுவநராகவும் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம், இந்திய வில்வித்தை சங்கத்தால் ஏற்பும் இணைப்பும் பெற்ற ஒரே மாநில வில்வித்தை அமைப்பு இதுவாகும்.[12][13]

உசேனி மெகா தொலைக்காட்சியில் அதிரடி சமையல் என்ற ஒரு சமையல் நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1986 புன்னகை மன்னன்
1987 வேலைக்காரன்
1988 பிளட்ஸ்டோன் ஆங்கிலப் படம்
1988 பறவைகள் பலவிதம்
1990 உன்னைச் சொல்லி குற்றமில்லை தர்மராஜ்
1993 வேடன்
1997 மை இந்தியா
2001 பத்ரி வெற்றியின் பயிற்சியாளர்
2022 காத்துவாக்குல ரெண்டு காதல் கராத்தே பயிற்சியாளர்

இறப்பு

[தொகு]

சிகான் உசேனி உடல் நிலைக்குறைவால் பாதிக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்ததால் ரூபாய் ஐந்து இலட்சம் உதவித்தொகையை தமிழ்நாடு அரசு அளித்தது.[14] இரத்த புற்றுநோய் காரணமாக 25 மார்ச்சு 2025 சென்னையில் காலமானார்.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rediff On The NeT: Fifty Years of Freedom". Rediff. Retrieved 2016-11-20.
  2. "Newslaundry". newslaundry.com. Retrieved 2016-11-20.
  3. "He fought all odds on his way to karate black belt — Times of India". The Times of India. Retrieved 2016-11-20.
  4. "Shihan Hussaini quits drinking — Times of India". The Times of India. Retrieved 2016-11-20.
  5. https://web.archive.org/web/20041023130446/http://www.dinakaran.com/cinema/english/gossip/25-5-98/hussainy.htm
  6. https://www.rediff.com/movies/1998/nov/10ss.htm
  7. "Jayalalithaa helps woman who sliced off tongue to celebrate her poll victory — Times of India". The Times of India. Retrieved 2016-11-20.
  8. "The man who made Jayalalithaa's sculpture in BLOOD". Rediff. Retrieved 2019-06-01.
  9. "Painful Devotion: Man Hangs on Hooks From Crane for Amma's Health — The Quint". thequint.com. Archived from the original on 2017-08-21. Retrieved 2016-11-20.
  10. "Man nails himself to cross to pray for Jayalalithaa's return as CM | india | Hindustan Times". Hindustan Times. Retrieved 2016-11-20.
  11. "What Happens When a State Is Run by Movie Stars?". nytimes.com. https://www.nytimes.com/2015/07/05/magazine/what-happens-when-a-state-is-run-by-movie-stars.html. பார்த்த நாள்: 2016-11-20. 
  12. Vinita Govindarajan. "Shooting for an Olympic win, these Tamil Nadu archers are taking on one target at a time". thefield.scroll.in. Retrieved 2016-11-20.
  13. "TAAT's the way to go! - The Hindu". thehindu.com. Retrieved 2016-11-20.
  14. "உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஷிஹான் ஹுசைனிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக அரசு அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2025-03-17. Retrieved 2025-03-25.
  15. "கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி காலமானார்". nakkheeran (in ஆங்கிலம்). 2025-03-25. Retrieved 2025-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகான்_உசேனி&oldid=4236056" இலிருந்து மீள்விக்கப்பட்டது