உள்ளடக்கத்துக்குச் செல்

சிகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிகர் (Sikar) இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் சிகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது சிகர் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும். இந்த நகரம் ராஜஸ்தானின் தேசிய நெடுஞ்சாலை 52 இல் ஆக்ராவிற்கும் பிகானேருக்கும் இடையில் அமைந்துள்ளது. சிகர் வரலாற்று நகரமாகும். இந்த நகரம் பல பழைய ஹவேலிகளைக் கொண்டுள்ளது (முகலாய கால கட்டிடக்கலை கொண்ட பெரிய வீடுகள்). இந்த நகரம் ஜெய்ப்பூரிலிருந்து 114 கி.மீ தொலைவிலும், ஜோத்பூரிலிருந்து 320 கி.மீ தொலைவிலும், பிகானேரிலிருந்து 215 கி.மீ தொலைவிலும், டெல்லியில் இருந்து 280 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

ஜெய்ப்பூர் மாநிலத்தின் மிகப்பெரிய திகானா (தோட்டம்) சிகர் ஆகும். முன்பு சிகார் நகரம் “நெஹ்ராவதி” என்று அழைக்கப்பட்டது. மேலும் திகானா சிகரின் தலைநகரமாக விளங்கியது. சிகர் ஏழு "பொல்ஸ்" (வாயில்கள்) கொண்ட பலப்படுத்தப்பட்ட சுவர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த வரலாற்று வாயில்கள் பவரி கேட், பதேபுரி கேட், நானி கேட், சூரஜ்போல் கேட், டுஜோட் கேட் ஓல்ட், டுஜோட் கேட் நியூ மற்றும் சந்த்போல் கேட் என பெயரிடப்பட்டுள்ளன. சிகரின் மிகப் பழமையான பெயர் “பீர் பாங்கா பாஸ்” என்பதாகும்.

புவியியல்

[தொகு]

ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகம் சிகர் ஆகும். இந்த நகரம் ராஜஸ்தானின் கிழக்கு பகுதியில் 27.62 ° வடக்கு 75.15 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 427 மீட்டர் (1401 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது.

காலநிலை

[தொகு]

சிகர் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் வெப்பமான, அரை வறண்ட காலநிலையைக் கொண்டுள்ளது. சூன் தொடக்கம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதி மழைக்காலம் ஆகும். ஏப்ரல் முதல் சூலை வரையிலான கோடை மாதங்களில் சராசரியாக தினசரி வெப்பநிலை 30 °C (86 °F) ஆக காணப்படும். மே மற்றும் சூன் மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை 50 °C (122 °F) ஐ எட்டக்கூடும். மழைக்காலங்களில் அடிக்கடி, பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆனால் வெள்ளம் தொடர்ந்து இருக்காது. நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குளிர்கால மாதங்களில் கடுமையான குளிரைக் கொண்டவை. இம் மாதங்களில் சராசரி வெப்பநிலை 5–15 (C (41–59 °F) ஆக காணப்படும்.[2]

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2011 ஆம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி[3] சிகர் நகரத்தில் சுமார் 237,579  மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் சுமார் 123,156 ஆண்களும், 114,423 பெண்களும் உள்ளனர். சிகார் நகரத்தில் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற பாலின விகிதம் காணப்படுகின்றது. கல்வியைப் பொறுத்தவரை, சிகர் நகரில் மொத்த கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 158,413 ஆகும். இதில் 91,403 ஆண்களும், 67,010 பெண்களும் அடங்குவர். சிகர் நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 77.13% வீதமாகும். ஆண் மற்றும் பெண் கல்வியறிவு நிலை முறையே 86.29% மற்றும் 67.37% ஆகும். சிகர் நகரில் ஆறு வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் 32,189 ஆகும். இதில் 17,236 சிறுவர்களும் 14,953 சிறுமிகளும் உள்ளனர்.[3]

நிர்வாகம்

[தொகு]

சிகர் நகரம் மாநகராட்சியால் நிர்வகிக்கப்படுகிறது. இது சிகார் நகர ஒருங்கிணைப்பின் கீழ் வருகிறது. சிகார் நகரம் 45 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிகார் நகரத்தின் மக்கள் தொகை 237,579 என்றாலும், அதன் நகர்ப்புற / பெருநகர மக்கட் தொகை 244,563 ஆகும். சிகர் பெருநகரப் பகுதியில் சந்திரபுரா (கிராமப்புறம்), ராதாகிருஷ்ணபுரா, சமர்த்புரா, சிவசிங்கபுரா மற்றும் சிகர் நகரம் ஆகியவை அடங்கும்.

சான்றுகள்

[தொகு]
  1. "Maps, Weather, and Airports for Sikar, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-27.
  2. institutt, NRK og Meteorologisk. "Weather statistics for Sīkar". yr.no (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2016-09-14. பார்க்கப்பட்ட நாள் 2019-11-27.
  3. 3.0 3.1 "Sikar City Population Census 2011-2019 | Rajasthan". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகர்&oldid=3553776" இலிருந்து மீள்விக்கப்பட்டது