உள்ளடக்கத்துக்குச் செல்

சிகரம் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிகரம் என்பது 1970 களில் வெளியான முற்போக்கு சிற்றிதழ் ஆகும். இது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டில் இருந்து மாதம் இருமுறை வெளிவந்தது. இது இந்திய மார்க்சிய பொதுவுடமைக் கட்சியை ஆதரிக்கும் இலக்கிய ஏடாகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அடியொற்றி நடக்கின்ற ஏடாகவும் விளங்கியது. ஆகவே, தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ் எழுத்தாளர்கள் கலை இலக்கிய பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பற்றிய தனது எண்ணங்களை இதன் ஆசிரியர் செந்தில் நாதன் விரிவாகவும் வெளிப்படையாகவும் தொடர்ந்து எழுதிவந்தார். இந்த இதழ் சிறுகதை, கவிதைத் துறைகளைவிட 'கட்டுரை' யில்தான் குறிப்பிடத்தகுந்த வெற்றி கண்டது.[1]

வரலாறு

[தொகு]

தாமரை இதழ் 1975 சூலையில் தோன்றியது. இதன் ஆசிரியராக ச. செந்தில்நாதன் இருந்தார். முதல் மூன்று ஆண்டுகள் 'சிகரம்' பெரிய அளவில் ('தீபம்' அளவில்) வெளிவந்தது. சில மாதங்கள் வராமல் நின்று, பின் 1979இல் சிறு அளவில் ( அன்றைய 'விகடன் அளவில்') மீண்டும் வந்தது.[1]

'இலக்கியமும் சமுதாய மாற்றங்களும்' என்ற தலைப்பில் வி. பி. சிந்தன் எழுதிய கட்டுரை முதல் இதழில் வெளியாயிற்று. தணிகைச்செல்வன், பறம்பைச் செல்வன், க. பொ. அலி கவிதைகள்; என். ஆர். தாசன், ம. ந. ராமசாமி எழுதிய கதைகள், மு. செந்தமிழன் எழுதிய 'ஷோலக்கோவ்-ஒரு கம்யூனிஸ்ட் எழுத்தாளர்' என்ற கட்டுரை; 'இளவேனில்' கவிதா என்ற தலைப்பில் எழுதிய தொடர் கட்டுரையின் பகுதி இவை முதல் இதழில் வெளியானவை. இவ்விதமே தரமான உள்ளடகங்களுடன் மாதந்தோறும் வெளிவந்தது.

என். ஆர். தாசன், ம. ந. ராமசாமி, சி. ஆர். ரவீந்திரன், பா. செயப்பிரகாசம், மேலாண்மை செ. பொன்னுசாமி ஆகியோர் அவ்வப்போது கதைகள் எழுதினார்கள். தணிகைச்செல்வன், தமிழன்பன், உதயை மு. வீரையன், கொ. மா. கோதண்டம், முத்துராமலிங்கம், ப.வேலுசாமி முதலியோர் கவிதைகள் அடிக்கடி வந்தன. பிற மொழிக் கவிதைகளைத் தமிழாக்கி வெளியிடுவதிலும் 'சிகரம்' ஆர்வம் காட்டியது. நஸ்ருல் இஸ்லாமின் வங்கக் கவிதைகள் மற்றும் சீனக் கவிதைகள், வியத்நாம் கவிதைகள் சில முதல் ஆண்டு இதழ்களில் வந்துள்ளன. ஒரியக் கதை, வங்காளிக் கதை மொழிபெயர்ப்புகளும் பிரசுரம் பெற்றன.

‘சிகரம்' செவ்விகளில் கவனம் செலுத்தியது. முதலாவதாக 'வி. பி. சிந்தனுடன் ஒரு பேட்டி' வந்தது. பின்னர் கே. முத்தையா, தமிழ்நாடு சி. ஐ. டி. யூ. தலைவர் கே. ரமணி, ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் செவ்விகள் இடம்பெற்றன. மேலும் நா. காமராசன், தணிகைச்செல்வன், சிற்பி, புவியரசு, டொமினிக் ஜீவா, சத்யஜித் ரே, ருத்ரய்யா ஆகியோரது செவ்விகளை வெளியிட்டது.

வாசகர் கருத்துகள் 'பட்டறை' என்ற பகுதியில் வெளியிடப்பட்டது. வாசகர்கள் உள்ளது உள்ளபடி விமர்சிக்கத் தயங்கவில்லை. ‘நந்தனார் நாட்குறிப்பு' எனும் பகுதியில் கலை, இலக்கிய வட்டாரப் பிரமுகர்களைப் பற்றிய சுவையான தகவல்களும் கிண்டல் குறிப்புகளும் காணப்பட்டன. 'ஆஸ்தான கவி பதில் தருகிறார்' என்ற கேள்வி பதில் பகுதி வெளியானது. முற்போக்கு புதினங்கள், சிறுகதைப் புத்தகங்கள் பற்றி விரிவான விமர்சனங்கள் எழுதப்பட்டன.

கே. முத்தையா 'சிலப்பதிகாரம்- உண்மையும் புரட்டும்' என்றொரு நீண்ட கட்டுரைத் தொடரை சிகரத்தில் எழுதி, இலக்கியவாதிகள் மற்றும் ஆய்வாளர்களின் சிந்தனையைத் தூண்டியிருக்கிறார். மேலும் ஜன. சுந்தரம் 'அகப்பாடல்களில் அரசியல் பிரச்னைகள் சமூக உறவுகள்' என்ற கனமான சிந்தனைகளைக் கொண்ட ஆழ்ந்த ஆராய்ச்சித் தொடரும் வெளியானது.

நல்ல தரமான திரைப்படங்களை விமர்சித்து, நல்ல படங்களைப் பாராட்டி எழுதியது. மேலும் கோ. ராஜாராம் எழுதிய 'சிவப்பு நதி' என்ற கவிதை நாடகத்தை அச்சிட்டது. கோமல் சுவாமிநாதனின் மேடை நாடகங்களை விமர்சித்து எழுதியது. அவருடைய கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

எல்லா சிற்றிதழ்களுக்கும் உள்ள சிரமங்களும் சிக்கல்களும் சிகரத்துக்கும் இருந்தன. ஒழுங்காக, காலம் தவறாது வெளிவர சிரமப்பட்டு, இறுதியில் நிற்க வேண்டிய நிலை இதற்கும் ஏற்பட்டது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 162–167. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகரம்_(இதழ்)&oldid=3379763" இலிருந்து மீள்விக்கப்பட்டது