சாலினி இளந்திரையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலினி இளந்திரையன்
பிறப்புகனகசவுந்தரி
திசம்பர் 22, 1933
விருதுநகர்
இறப்புஏப்ரல் 28, 2000
புதுதில்லி
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
கல்விகலை முதுவர், முனைவர்
பணிதமிழ்ப் பேராசிரியர்
பணியகம்திருவேங்கடவன் கல்லூரி, புதுதில்லி
அறியப்படுவதுதமிழாய்வு
பெற்றோர்வே. சங்கரலிங்கம், சிவகாமியம்மாள்
வாழ்க்கைத்
துணை
முனைவர் சாலை இளந்திரையன்
பிள்ளைகள்இல்லை
உறவினர்கள்தமக்கை: மருத்துவர் ஞானசவுந்தரி,
தனயன்: இராசரத்தினம்

சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.

இளமைக் காலம்[தொகு]

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகரில் திசம்பர் 221933 ஆம் நாள் வணிகர் வே. சங்கரலிங்கம் – சிவகாமி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகளாவும் மூன்றாவது மகவாகவும் கனகசவுந்தரி பிறந்தார்.[1] இவர்தம் தமக்கை பெயர் ஞானசவுந்தரி. இவர் பின்னாளில் சென்னையின் புகழ்பெற்ற மருத்துவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். தனயனின் பெயர் இராசரத்தினம். இவர் பின்னாளில் இந்திய ஒன்றிய அரசின் வருமானவரித் துறையில் உயர் அலுவலராகப் பணியாற்றினார்.

கனகசவுந்தரி தந்தை வே. சங்கரலிங்கம் மும்பை நகரில் வணிக நிறுவனம் ஒன்றில் மேலாளராகச் சிறிதுகாலமும் மதுரையில் இரண்டு ஆண்டுகளும் வாழ்ந்தார். எனவே கனகசவுந்தரி தனது எட்டாம் வயது வரை மும்பையிலும் பத்தாம் வயது வரை மதுரையிலும் வாழ்ந்தார். பின்னர் இவரது குடும்பம் விருதுநகருக்குத் திரும்பி அவ்வூரின் தெற்குத் தேர் வீதியில் குடியேறியது. இதனால் இவர் தனது 16ஆம் வயது வரை விருதுநகரில் வாழ்ந்தார்.

கல்வி[தொகு]

கனக சவுந்தரி தனது தொடக்கக் கல்வியில் (Primary Education) மூன்றாம் வகுப்பு வரை, 1938 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 1942 ஆம் ஆண்டு மே மாதம் வரை, மும்பை நகரில் பெற்றார். 1942 சூன் முதல் 1944 மே வரை நான்கு, ஐந்தாம் வகுப்புகளை மதுரையில் பயின்றார்.[2] பின்னர் முதற் படிவம் (ஆறாம் வகுப்பு) முதல் ஆறாம் படிவம் (பதினொன்றாம் வகுப்பு) வரையிலான இடைநிலைக் கல்வியை (Secondary Education) 1944 சூன் முதல் 1950 மே வரை விருதுநகர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார்.[3]

இவர் தன்னுடைய கல்லூரிக் கல்வியை மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் தொடங்கினார். அங்கு 1950 சூன் முதல் 1952 ஏப்ரல் வரை இடைநிலை வகுப்பில் (Intermediate) படித்தார். அப்பொழுது அக்கல்லூரியின் தமிழ்மன்றத்தின் செயலாளராக 1950 – 51ஆம் கல்வியாண்டிலும் தலைவராக 1951 – 52 ஆம் கல்வியாண்டிலும் பணியாற்றினார்.[4]

பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் 1952 சூன் முதல் 1954 ஏப்ரல் வரை தமிழிலக்கியம் பயின்று கலை இளவர் – சிறப்பு (B.A. - Honours) பட்டம் பெற்றார். அப்பொழுது புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான சரவண ஆறுமுகன், தெ. பொ. மீனாட்சிசுந்தரம், கொண்டல் சு. மகாதேவன், சு. ந. சொக்கலிங்கம் ஆகியோரிடம் பயின்றார்.

பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தில் சிலப்பதிகாரச் சொல்வளம் என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. பி. சேதுப்பிள்ளையின் வழிகாட்டுதலில்[5] 1954 முதல் 1956 ஆம் ஆண்டு வரை ஆய்வுசெய்து இலக்கிய முதுவர் (Master of Literature) பட்டம் பெற்றார்.[6] அதனைத் தொடர்ந்து, 1956 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில், அரசின் உதவி பெற்று, தமிழில் வாழ்க்கை வரலாற்று இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்கான (Doctor in Philosophy) ஆய்வை மேற்கொண்டார்.[7] ஆனால் 1973ஆம் ஆண்டிலேயே முனைவர் பட்டம் பெற்றார்.[8]

திருமணம்[தொகு]

சாலை இளந்திரையன் - சாலினி இளந்திரையன் துணைவர்

கனகசவுந்தரி சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்ற பொழுது அங்கு கலைமுதுவர் பட்டத்திற்காக (Master of Arts) திருநெல்வேலி மாவட்டம் சாலைநயினார் பள்ளிவாசலைச் சேர்ந்த இரா. மகாலிங்கம் பயின்று வந்தார். அவரும் கனகசவுந்தரியும் காதலித்தனர். கல்லூரிக் கல்வி முடிந்ததும் இருவரும் தத்தம் பெற்றோரின் ஒப்புதலோடு 1954 சூலை மாதம் விருதுநகரில் திருமணம் செய்துகொண்டனர்.

ஆசிரியப் பணி[தொகு]

கனகசவுந்தரி தனது கல்லூரிக்கல்வியை முடித்ததும் திருச்சியில் உள்ள தூய சிலுவை மகளிர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணிக்கு 1954 ஆம் ஆண்டில் விண்ணப்பித்தார். வேலையும் கிடைத்தது. ஆனால் அடுத்தமாதமே அவருக்குத் திருமணம் நடைபெற இருந்ததால் முதல் நாளிலேயே அவ்வேலையை இழந்தார். .[9]

1959 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் புதுதில்லியின் மந்திர் மார்க்கில் மதராசி கல்விக் கழகம் நடத்திய உயர்நிலைப் பள்ளியில் கிடைத்த தமிழாசிரியர் பதவி அரசியல் செல்வாக்கு உடைய ஒருவரின் தலையீட்டால் கைநழுவிப் போனது. .[10]

பின்னர் 1959 செப்டம்பர் மாதம் தொடங்கி 1961 ஏப்ரல் மாதம் வரை தில்லி தயாள்சிங் மாலைக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1961 ஆகத்து 30 ஆம் நாள் முதல் திருப்பதி தேவதானம் புதுதில்லியில் நடத்தும் திருவேங்கடவன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கேயே தொடர்ந்து பணியாற்றிப் பேருரையாளர் (Reader), பேராசிரியர் (Professor) முதல்வர் (Principal) என உயர்ந்து 1982 ஆம் ஆண்டு நவம்பர் முதல்நாள் விருப்ப ஓய்வுபெற்றார். .[11]

எழுத்துப்பணி[தொகு]

புனைபெயர்[தொகு]

கனகசவுந்தரி, மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் இடைநிலை வகுப்பில் பயின்றபொழுது அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்றை மதுரை தியாகராசர் கல்லூரி நடத்தியது. அப்போட்டியில் கலந்துகொள்வோர் தம்முடைய கட்டுரைகளைப் புனைப்பெயரிலேயே சமர்பிக்க வேண்டும் என்னும் விதி இருந்தது. ஆதலால், இப்போட்டியில் கலந்துகொண்ட கனகசவுந்தரி, சாலினி என்னும் சிலப்பதிகார கதைமாதின் பெயரைத் தனது புனைப்பெயராகச் சூட்டி தனது கட்டுரையைச் சமர்பித்தார். பின்னாளில் அவர் கணவர் மகாலிங்கம், தனக்கு சாலை இளந்திரையன் எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டபொழுது, கனகசவுந்தரி, தனக்கு சாலினி இளந்திரையன் எனப் புனைபெயர் சூட்டிக்கொண்டார். இவருடைய படைப்புகள் திருமணத்திற்கு முன்னர் கனகசவுந்தரி என்னும் பெயரிலும் திருமணத்திற்குப் பின்னர் கனகசவுந்தரி இளந்திரையன் என்னும் பெயரிலும் புனைபெயர் சூட்டிக்கொண்ட பின்னர் சாலினி இளந்திரையன் என்னும் பெயரிலும் வெளிவந்தன.

படைப்புகள்[தொகு]

சென்னை மாநிலக் கல்லூரியில் 1952ஆம் ஆண்டில் கலைஇளவர் பட்டப் படிப்பிற்கான முதலாண்டு மாணவராகப் பயின்றபொழுது மணிமேகலைக் காப்பியத்தை ஆய்வுசெய்து வாடாமலர் என்னும் கட்டுரையை எழுதிப் படித்தார். இதுவே இவரது முதற்கட்டுரையாகும். இக்கட்டுரை அவ்வாண்டின் சிறந்த ஆய்வுக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது. இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்த ஆனந்த போதினி என்னும் இதழில் இலக்கியக் கட்டுரைகள் எழுதினார். பின்னர் தொடர்ந்து வேறுபல இதழ்களிலும் கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் சிலவற்றைத் தொகுத்தும் புதிதாக எழுதியும் பின்வரும் நூல்களை வெளியிட்டார்:

வ.எண் ஆண்டு நூலட்டை நூல் பொருள் பதிப்பகம் குறிப்பு
01 1964 இரண்டு குரல்கள் இலக்கியக் கட்டுரைகள் பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனுடன் இணைந்து எழுதியது.
02 1965 தமிழ்க் கனிகள் இலக்கியக் கட்டுரைகள் பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனுடன் இணைந்து எழுதியது.
03 1966 தமிழனே தலைமகன் இலக்கியக் கட்டுரைகள் பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனுடன் இணைந்து எழுதியது.
04 1968 தமிழ் தந்த பெண்கள் இலக்கியக் கட்டுரைகள் பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையனுடன் இணைந்து எழுதியது.
05 1974 வாழ்க்கை வரலாற்று இலக்கியம் ஆய்வு இரண்டாம் பதிப்பு: மணிவாசகர் நூலகம், சென்னை. சாலினி இளந்திரையனின் முனைவர் பட்ட ஆய்வேடு
06 1975 பண்பாட்டின் சிகரங்கள் இலக்கிய, வரலாற்றுக் கட்டுரைகள் பூங்கொடிப் பண்ணை, சென்னை. சிறுகதைப் பாங்கில் எழுதப்பட்ட எட்டுக் கட்டுரைகளின் தொகுதி
07 1979 மதிப்பீடு திறனாய்வு கோராவின் நாடகங்கள் உள்ளிட்ட சில படைப்பிலங்களைப் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள்
08 1979 களத்திலே கடிதங்கள் கடிதங்கள் எழுத்துச் சீர்திருத்தத்தை ஆதரித்து சாலினியும் சாலை இளந்திரையன் பலருக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பு
09 1982 படுகுழி நாடகம் அறிவியக்கப் பேரவை, சென்னை.
10 எந்திரக் கலப்பை நாடகம்
11 1991 புதிய தடங்கள் நாடகங்கள் சாலினி இளந்திரையன் பல்வேறு சூழல்களில் எழுதிய நாடகங்களின் தொகுப்பு
12 1995 சங்கத்தமிழரின் மனிதநேய மணிநெறிகள் திறனாய்வு உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை. ம. பொ. சி நினைவுச் சொற்பொழிவின் நூல்வடிவம்
10 1999 ஆசிரியப் பணியில் நான் தன்வரலாற்றுக் குறிப்புகள் சாலினி இளந்திரையன், 11 திருவீதியான் தெரு, கோபாலபுரம், சென்னை தனது ஆசிரியப்பணி, எழுத்துப்பணி பற்றி எழுதிய இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு
11 2000 குடும்பத்தில் நான் தன்வரலாற்றுக் குறிப்புகள் சாலினியார் நூல் வெளியீட்டகம், சென்னை

இவைத் தவிர சாலை இளந்திரையனின் படைப்புகளிலிருந்து தேர்தெடுக்கப்பட்டவை சாலையாரின் பிளிறல்கள் என்னும் நூலையும் சாலை இளந்திரையைப் பற்றி அறிஞர்கள் பலர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து சாலை இளந்திரையன் நினைவுமலர் ஒன்றையும் வெளியிட்டார்.

இதழாசிரியப் பணி[தொகு]

சாலினி இளந்திரையன் அரசியற் செயற்பாட்டளாராக (Political Activist) இருந்த பொழுது அவரது கருத்துகளை வெளியிடுவதற்காக 1987 ஆம் ஆண்டில் மனித வீறு என்னும் இதழை வெளியிட்டார். இது இதழ்கள் 12 வெளியீடுகளோடு நின்றுவிட்டது. பின்னர் அறிவியக்கப் பேரவையின் கொள்கையான வீரநடய் அறிவியக்கம் என்னும் இதழுக்கு 1992, 1993 ஆகிய இரண்டு ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார்.


சொற்பொழிவுப் பணி[தொகு]

விருதுநகரில் வாழ்ந்தபொழுது அங்கிருந்த காரைக்கால் அம்மையார் சங்கம், சமரச சன்மார்க்க சங்கம், விருதைத் தமிழ்க் கழகம் ஆகியனவற்றில் நடைபெற்ற சமய, இலக்கியச் சொற்பொழிவுகளைக் கேட்டுச் சொற்பொழிவுக்கலையைக் கற்றார். சிலவேளையில் அச்சங்கங்களில் சிற்சில சொற்பொழிவுகளை ஆற்றும் வாய்ப்பினையும் பெற்றார். பின்னர் கல்லூரிக் கல்விக் காலத்தில் தன்னுடைய சொற்பொழிவுத்திறனை வளர்த்துக்கொண்டார். 1961ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசிய தமிழர்களின் அழைப்பிற்கிணங்க அந்நாடுகளில் தன் கணவர் சாலை இளந்திரையனுடன் இணைந்து சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். இதுபோலவே இலங்கைக்கும் சொற்பொழிவுப்பயணம் செய்தார். ஆண்டுதோறும் தில்லியிலிருத்து தமிழகத்திற்கு கோடைவிடுமுறையில் வரும்பொழுதெல்லாம் தன் நண்பர்கள் துணையோடு தமிழகத்தின் பலபகுதிகளில் சொற்பொழிவாற்றினார். ஓய்வுபெற்று சென்னைக்கு வந்த பின்னர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ம. பொ. சி. நினைவு அறக்கட்டளை சொற்பொழிவாற்றினார். அதுவே சங்கத்தமிழரின் மனிதநேய மணிநெறிகள் என்னும் நூலாக வெளிவந்தது.

அரசியற் செயற்பாட்டுப் பணி[தொகு]

திராவிடத் தந்தை ஈ. வெ. இராமசாமி பெரியாரைத் தன் அரசியல் – சமூகச் சிந்தனைக்கு வழிகாட்டியாகச் சாலினி இளந்திரையன் கொண்டிருந்தார். எனவே அவரை அடியொற்றி தனது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதற்காகத் தன் துணைவருடன் இணைந்து அறிவியக்கப் பேரவையைத் தொடங்கினார். அப்பேரவையின் வழியாகப் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டார். 1985ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்று சென்னை திரும்பிய பின்னர் பொதுவுடைமைத் தமிழ்தேசியக் கருத்துகளை முன்வைத்துக் களப்பணி ஆற்றினார். அறிவியக்கப் பேரவையும் பிற தமிழ்தேசிய இயக்கங்களும் இணைந்து தமிழர் தன்னுரிமைப் பிரகடன மாநாடு ஒன்று சென்னையில் நடத்த உள்ளதாக அறிவித்தனர். அம்மாநாட்டிற்கு அரசால் தடைவிதிக்கப்பட்டது. தடையை மீறி மாநாட்டை நடத்தியதற்காகச் சாலினி இளந்திரையன் உள்பட பலரும் கைது செய்யப்பட்டு சிறைசென்றனர். இவ்வாறு தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் சாலினி இளந்திரையன் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில், மனிதச் சங்கிலிப் போராட்டங்களில், மாநாடுகளில் பங்கேற்று அரசியற் செயற்பாட்டாளராகத் திகழ்ந்தார்.

மறைவு[தொகு]

சென்னை தலைநகர் தமிழ்ச்சங்கமும் தில்லி தமிழ்ச் சங்கமும் இணைந்து தில்லியில் தமிழை செம்மொழியாகவும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிமொழியாகவும் அறிவிக்கக்கோரி 2000 ஏப்ரல் 30 ஆம் நாள் மாநாடு ஒன்றை நடத்தினர். அம்மாநாட்டின் பேராளர்களை வரவேற்பதற்காகச் சென்றபொழுது ஏற்பட்ட சாலைநேர்ச்சியில் 29 – 4 – 2000 ஆம் நாள் சாலினி இளந்திரையன் மரணம் அடைந்தார்.[12]

நூல்களிலிருந்து சில மேற்கோள்கள்[தொகு]

 • மனிதன், நலியத்தக்கதும் அழியத்தக்கதும் ஆன பொருள்களால் உருவானவன்; அத்தகைய மனிதர்களுடனேயே பழகி வாழ்கிறவன். எனவே, அவனுடைய நடையிலும் நலிவுகள் ஏற்படுவது இயல்பே. அவற்றை உணர்ந்து திருந்துகிறவனே மனிதருள் உயர்ந்தவனாகிறான்.
 • நல்லவனை அமுக்கிப்போட வல்லவன் முனையும்போது அந்த முயற்சியைத் தடுக்க ஒரே ஒரு உள்ளம்தான் முனைகிறது. அதுதான் கலையுள்ளம்; கவியுள்ளம் என்னும் தலைமைத் தாயுள்ளம்!
 • அறிவார்ந்த சிந்தனையாலும் அதன் வழிசார்ந்த செயல்களாலும் உருவாவதே புகழ்.
 • பிறருக்காகச் செய்யும் தியாகம் புகழுக்கு உரியது; ஆனால்? அந்தப் புகழை, உயர்வுக்கு உரியவன் செத்த பிறகு, மணிமண்டபமாகவும் மாளிகையாகவும் எழுப்புவதில் பயனில்லை. அவன் முன்னேயே, அவன் நெஞ்சு குளிர அவனுக்குரிய புகழை எடுத்திசைக்க வேண்டும். எடுத்திசைந்து, தளர்ந்த நெஞ்சுக்கு ஊக்கம் ஊட்ட வேண்டும். அதுவே உயர்வுகள் தொடர்ந்து செழிக்க வழி. அதைச் செய்வது மேதைகளாலேயே முடியும்.
 • புகழ்மொழி கேட்க எழும் ஆசையை அடக்கும் ஆண்மையே பெரும் பேராண்மை.
 • போர்க்களத்திலே ஆண்மை காட்டுவது வீரம்தான்; அத்தகையவர்களின் புகழும் நிற்கிறது. தனக்குள் எழும் புகழாசையை வெல்வதோ – குறிப்பாக முகப்புகழ்ச்சி கேட்கும் ஆசையை வெல்வதோ அந்த வீரத்தையும் மிஞ்சிய பேராண்மை; அதனால் வரும் புகழே மற்றப் புகழ்களைவிட உயர்ந்து ஓங்கி நிற்கிறது.
 • மனிதன் வேறு, அவனுடைய கொள்கை வேறு; அக்கொள்கையின் மீதுள்ள வெறுப்பை அந்த மனிதன் மீது காட்டக்கூடாது. இந்தத் தெளிவோடு அவர்கள் செயற்படும்போது, இந்தத் தெளிவு இல்லாதவர்களுக்கு அது பெரிய ஆச்சரியமாகப் போய்விடுகிறது.
 • நமக்குத் துன்பம் செய்கிறவர்களுக்கும் இன்பமே செய்வதுதான் முழுமையான உயர்பண்பு என்கின்ற சான்றாண்மை.
 • மற்றவர்களின் நிலையை அனுசரித்து – அதன் காரணமாகத் தனக்குத் துன்பம் வந்தாலும் – மற்றவர்கள் மனம் புண்பட்டுவிடாதபடி நயமாக நடந்துகொள்வதுதான் பண்பாடு.
 • ஓர் உள்ளத்தின் உண்மையான தன்மை தெரிந்து அதற்குரிய மதிப்பை அளிப்பதுதான் பண்பாடுகளிலேயே மிகப் பெரிய பண்பாடு. இந்தப் பண்பாட்டை உணர்ந்து கடைப்பிடிப்பவர்களின் வாழ்க்கையே சாதனை வாழ்வாக உயர்ந்து சிறக்கிறது.

புகழ்மொழிகள்[தொகு]

சாலினி இளந்திரையனைப் பற்றிப் பிறர் கூறிய புகழுரைகள் சில:

 • தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன். ஏற்றப் பொறுப்பை முழு ஈடுபாட்டுடனும் கடமை உணர்வுடனும் செய்தவர்; தமிழ் மொழியையும் இனத்தையும் நாட்டையும் நேசித்து இறுதி மூச்சு நிற்கும் வரை தொண்டாற்றியவர். உற்றாருக்கும் மற்றவருக்கும் சேவையும் உதவியும் செய்து மகிழ்ந்தவர். இவர் தாம் சாலினியார்! - கு. வெ. கி. ஆசான்
 • உறவாலும் கொள்கையாலும் தங்களோடு தொடர்புடயவர்களும் இணைந்ததே குடும்பம் என்பது சாலய் - சாலினியின் கோட்பாடாக நெடுகிலும் இருந்து வந்தது. இப்பெரிய குடும்பத்திற்குத் தலைமை ஏற்றவர் சாலினியே. இந்தக் குடும்பத்தைத் தம் கனிவான அன்பாலும், கடமை தவறாத செயல்நெறிகளாலும், கடின உழைப்பாலும், ஈத்துவக்கும் இன்பத்தாலும் பேணிக் காத்தவரும் சாலினியே. - முனைவர் இரா. ஞானபுசுபம்

சான்றடைவு[தொகு]

<references>

 1. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பின்னட்டை
 2. கு.வெ.கி.ஆசான், தமிழ்ப் பண்பின் உறைவிடம் பேராசிரியர் சாலினி இளந்திரையன், பெரியார்பிஞ்சு, சென்னை, 2008 சூன்
 3. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.109
 4. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.114
 5. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.45
 6. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.18
 7. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.19
 8. சாலினி இளந்திரையன், பண்பாட்டின் சிகரங்கள், பூங்கொடிப் பண்ணை, 1975 அக், சென்னை, நூலின் பின்னட்டை
 9. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.16
 10. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.24-25
 11. சாலினி இளந்திரையன், ஆசிரியப் பணியில் நான், 1999 செப், சென்னை, பக்.42
 12. சாலினி இளந்திரையன், பண்பாட்டின் சிகரங்கள், சாலினியார் நூல் வெளியீட்டகம், 2000 திசம்பர், சென்னை, நூலின் பின்னட்டை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலினி_இளந்திரையன்&oldid=3708896" இலிருந்து மீள்விக்கப்பட்டது