சார்பெழுத்தாளர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சார்பெழுத்தாளர் என்று அறியப்படுபவர் பிறருக்காக பிறரின் பெயரில் எழுத்திலான இலக்கிய அல்லது பத்திரிக்கை பணிகளைச் செய்ய விழைபவர் ஆவார். இறந்து போன ஒரு எழுத்தாளரின் சார்பாக அவரது பாணியிலேயே எழுதுவதற்கும் அவர் இறக்கும் முன் முடிக்காமற் போன எழுத்துப்பணிகளை முழுமைப்படுத்துவதற்கும் பதிப்பகத்தார் சார்பெழுத்தாளர்களை பணிக்கு அமர்த்துகின்றனர் .இறந்து போன ஒரு நபரின் பெயர்களில் இவர்கள் எழுதுவதால் இத்தகையாரை ஆங்கிலத்தில் கோஸ்ட் ரைட்டர்ஸ், அதாவது ஆவி எழுத்தாளர்கள் என்று குறிக்கின்றனர். ஆனால், இத்தகையார் இறந்து போனோர் மட்டுமல்லாது வாழ்வோரின் சார்பாகவும் எழுத்துப் பணிகளை மேற்கொள்வதால், இவர்களை சார்பெழுத்தாளர் என்றழைப்பது உரித்தாயிற்று.[1][2]

பணிகள்[தொகு]

மறைந்த எழுத்தாளர்களின் பெயரில் எழுதுதல்[தொகு]

சார்பெழுத்தாளர்கள் மறைந்த எழுத்தாளர்களின் பெயரில் எழுதவே, முதன்முதலாக அறியப்பட்டார்கள். இறந்த ஒரு எழுத்தாளரின் படைப்புகள் அத்தனையும் ஆராய்ந்து, அவர்களின் நடையை உற்றுநோக்கி, அவர்களின் பாணியிலேயே புதிய புதினங்களைப் படைத்தல் மற்றும் அவர் பதிக்காமல் விட்டுச் சென்ற வரைவுகளை முழுமைப்படுத்தி தொகுத்தல் ஆகியவை இந்த பிரிவின் கீழ் வேலை செய்யும் சார்பெழுத்தாளர்களின் பணிகளாகும். சான்றாக, சிட்னி செல்டன் என்கிற பிரபல எழுத்தாளர் 2007 இல் காலமானர். ஆயினும், தற்போது தில்லி பேக்சா என்கிற பத்திரிக்கையாளர் சிட்னி செல்டனின் பெயரில் பதிப்பகத்தார் ஆதரவுடன் அவரது சார்பாக அவரது நடையிலேயே எழுதி வருகிறார்.[3][4]

வாழும் பிரபலங்களுக்காக எழுதுதல்[தொகு]

பிரபலங்கள் தங்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதவோ பத்திரிக்கைகளில் கட்டுரைகள் எழுத விழையவோ நேரிடும் போது, சார்பெழுத்தாளர்களை பணிக்கமர்த்துகின்றனர். இவர்கள் பிரபலங்களிடம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி தெளிவாகக் கேட்டறிந்து அவர்களின் விருப்பத்திற்கேற்ப எழுத்துப்பணி மேற்கொள்கின்றனர். சான்றாக, அமெரிக்க முன்னாள் குடியரசுத்தலைவர்களான ஜான் எஃப் கென்னடி எழுதியதாக வெளியான இரண்டு நூல்களும் தோனால்டு திரம்ப்பு எழுதி வெளியிட்டதாகக் கூறப்படும் அவரது வாழ்க்கை வரலாற்று நூலும் உண்மையில் சார்பெழுத்தாளர்களைக் கொண்ட எழுதப்பட்டதாக எண்பிக்கப்பட்டிருக்கிறது.[5][6][7]

சில சமயங்களில் பிரபலமான எழுத்தாளர்களே தங்களின் நண்பர்களின் சார்பாக அவர்களின் பாணியில் புதினங்கள் படைத்தல் போன்ற நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளன. சான்றாக, பிரபல எழுத்தாளர் ஆரி ஒதீனி ஆகிய தன் நண்பனுக்காக எச்.பி லவர்கிராப்ட் என்கிற எழுத்தாளர் வியர்ட் டேல்ஸ் என்கிற 1920 ஆம் ஆண்டு வெளியான நூலில் இம்ப்பிரிசண்டு வித் தி பேரோசு என்கிற கதையை எழுதினார்.[8]

இல்லாத ஒருவரின் பெயரில் எழுதுதல்[தொகு]

முறையே நான்சி டிரூ மற்றும் ஆர்டி பாய்சு ஆகிய மருமக்கதைத் தொடர்களின் ஆசிரியராக அறியப்படும் கேரோலின் கீனி மற்றும் பிராங்கலின் திக்சன் ஆகியோர் பதிப்பகத்தார் உருவாக்கிய இல்லாத எழுத்தாளர்கள். மேலும், இந்த இரண்டு கதைத் தொடர்களும் பல்வேறு சார்பெழுத்தாளர்களால் குறிப்பிட்ட பெயர்களில் எழுதப்படுகின்றன. இவ்வாறு பொய்யான எழுத்தாளர்களை உருவாக்கி, அவர்களின் பெயரில் சார்பெழுத்தாளர்களைக் கொண்டெழுதி பதிப்பிப்பதும் பரவலான வழக்கமாக உள்ளது.[9][10]

ஊதியம்[தொகு]

பொதுவாக இறந்தவர்களின் பெயரில் எழுதும் சார்பெழுத்தாளர்கள் அவர்களை பெரிதும் ஆராய்ந்து ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி பதிப்பகத்தாரிடம் ஒப்படைத்த பின்னர் அவர்களின் ஆய்வுத்தரத்தைக் கொண்டே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இவர்களின் பெயர்களை அட்டைப்படத்தில் போடுவதும் போடாததும் ஒப்பந்த அடிப்படையில் முடிவு செய்யபடுகின்றது. இத்தகைய சார்பெழுத்தாளர்கள் அவர்கள் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கோ ஒவ்வொரு பக்கத்திற்கோ செலவிடும் ஒவ்வொரு நாளுக்கோ இத்தனை ஊதியம் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்வர்.[11][12]

மிகவும் பிரபலமான சார்பெழுத்தாளர்கள் அவர்களின் புகழுக்கேற்ப ஊதியம் கோருவதுண்டு. 2001 ஆம் ஆண்டில் இலாரி கிளிண்டனுக்காக எழுதிய சார்பெழுத்தாளர்களுக்கு தோராயமாக மூன்றரைக் கோடி வரை ஊதியம் அளிக்கப்பட்டதாக நியூ யார்க் டைம்சு செய்தி வெளியிட்டது.[13] பிரபலத் திரைப்படங்களின் திரைக்கதைகள் எழுதக் கூடத் துறை சார்ந்த சார்பெழுத்தாளர்கள் பணி அமரத்தப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள் ஆய்வாளர்கள் என்கிற பெயரில் அடையாளப்படுத்தப்படுகிறது. இசைத்துறையிலும் கூட பாடல் வரிகளை எழுத சார்புக்கவிஞர்கள் அழைக்கப்படுகின்றனர்.[14]

குற்றம்[தொகு]

கல்வித்துறையில் சார்பெழுத்தாளர்களைப் பயன்படுத்துதல் நேர்மையற்ற செயலாக, குற்றமாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் கீழ் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பவர்கள் சார்பெழுத்தாளர்களைப் பயன்படுத்தியது அறிந்தால், அந்த ஆய்வுக்கட்டுரையை அங்கீகரிக்காமல் இருப்பதற்கு பல்கலைக்கு உரிமை உள்ளது. மேலும் எழுத்து சார்ந்த போட்டிகளிலும் சார்பெழுத்தாளர்களைப் பயன்படுத்துவது குற்றம். இத்தகையச் செயல்களைக் கருத்துத் திருட்டின் பால் வைத்து நீதிமன்றகளை நாட முடியும்.[15][16][17]

மேற்கோள்கள்[தொகு]

 1. "கோஸ்ட்ரைட்டிங் என்றால் என்ன? ஆங்கில வலைப்பூ செய்தி".
 2. "மைக்கல் ஆண்டபி எழுதிய சொந்தத் தொழில் குறித்த ஆங்கில நூலில் சார்பெழுத்தாளர்கள் பற்றி குறிப்புகள்".
 3. "எழுத்தாளர் ஒப்பந்தங்கள் - அமெரிக்க எழுத்தாளர் சங்கம்".
 4. "தில்லி பேக்சா - ஆங்கில விக்கப்பீடியா".
 5. "ஜான் எஃப் கென்னடி எழுதிய நூல்களா? - ஸ்ட்ரெய்ட் டோப்".
 6. "தொனால்டு திரம்பின் சார்பெழுத்தாளர் - நியூ யார்க்கர்".
 7. "அரசியலும் சார்பெழுத்தும் வாசிங்க்டன் போஸ்ட்".
 8. "இம்ப்ரிசண்டு வித் தி பாரோசு - கூகுள் நூல்".
 9. "கேரோலின் கீனி - ஆங்கில விக்கிப்பீடியா".
 10. "பிராங்கலின் திக்சன் - ஆங்கில விக்கிப்பீடியா".
 11. "கோஸ்ட்ரைட்டிங் - ரைட்டர்ஸ் யூனியன் கேனடா".
 12. "சார்பெழுத்தரின் ஊதியம் - மான்காட்டன் நூலகம்".
 13. "இலரி கிளிண்டன் குறித்த நியூயார்க் டைம்ஸ் செய்தி".
 14. "இப்பாப்பு இசைத்துறையில் சார்பெழுத்தாளர்களின் பங்கை வெளிப்படுத்தும் பிபிசி ஆங்கிலச் செய்தி".
 15. "தேர்வில் ஏமாற்றுதலும் சார்பெழுத்தும் - தி கிரோனிக்கல்".
 16. "கல்வியை பாதிக்கும் சார்பெழுத்து கலாச்சாரம் - தி கார்டியன்".
 17. "சார்பெழுத்தாராக மாறிய கல்லூரி பேராசிரியர் - செய்தி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்பெழுத்தாளர்&oldid=3121955" இருந்து மீள்விக்கப்பட்டது