சார்பட்டா பரம்பரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்பட்டா பரம்பரை
சுவரொட்டி
இயக்கம்பா. ரஞ்சித்
தயாரிப்புசண்முகம் தட்சன்ராஜ்
கதைபா. ரஞ்சித்
தமிழ் பிரபா
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்பு
ஒளிப்பதிவுமுரளி ஜி.
படத்தொகுப்புசெல்வா ஆர். கே.
கலையகம்
 • நீலம் புரோடக்சன்ஸ்
 • கே9 ஸ்டுடியோஸ்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடுசூலை 22, 2021 (2021-07-22)
ஓட்டம்174 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சர்பட்டா பரம்பரை (Sarpatta Parambarai) அல்லது இன்னும் எளிமையாக சார்பட்டா, என்பது 2021 ஆண்டு வெளியான இந்திய தமிழ் வரலாற்று, விளையாட்டு அதிரடித் திரைப்படம் ஆகும். இதை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். இப்படத்தை சண்முகம் தட்சனராஜின் கே9 ஸ்டுடியோவுடன் இணைந்து இவரது நீலம் புரொடக்சன்ஸ் பதாகையின் கீழ் தயாரித்துள்ளார்.[1] இந்த படத்தில் ஆர்யா, ஷபீர் கல்லரக்கல், துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இது 1960 களின் பின்னணியில், வடசென்னையில் உள்ள இடியப்ப பரம்பரை மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய இரண்டு குலங்களுக்கிடையேயான மோதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அந்த பகுதியில் உள்ள குத்துச்சண்டை கலாச்சாரத்தையும், அதில் உள்ள அரசியலையும் காட்டுகிறது.[2]

பிர்சா முண்டாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்று கதையை பா. ரஞ்சித் நிறுத்திவைத்தார். பின்னர் கார்த்தியை மனதில் வைத்து இந்த கதையை எழுதினார். ஆனால் கார்த்தியிடம் போதிய தேதிகள் இல்லாத காரணத்தால், பின்னர் முக்கிய வேடத்தில் நடிக்க ஆர்யாவை அணுகினார். திரைப்படம் சம்பந்தப்பட்ட நடிகர்களின் தீவிர பயிற்சிகளுக்குப் பிறகு, 2020 பெப்ரவரி மற்றும் மார்ச்சில் படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால், தயாரிப்பு மேலும் தாமதமாகி இறுதியில் 2020 செப்டம்பரில் படத்தின் பணிகள் தொடங்கியது. இது 2020 திசம்பர் 2020 க்குள் நிறைவடைந்தது. கிட்டத்தட்ட வட சென்னை மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் நான்கு மாதங்கள் படப்பிடிப்பு நடந்தது.[3] படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் முரளி ஜி மற்றும் எடிட்டர் செல்வா ஆர். கே ஆகியோர் அடங்குவர் [4]

சார்பட்டா பரம்பரை முதலில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் கோவிட் -19 பெருந்தொற்றின் விளைவாக, தயாரிப்பாளர்கள் இதை நேரடி எண்ணியல் வெளியீடாக கொண்டுர முடிவெடுத்தனர். வெளியீட்டு உரிமைகள் அமேசான் பிரைம் வீடியோவால் பெறப்பட்டன. திரைப்படம் 2021 சூலை 22 அன்று அதன் செயலியில் வெளியிடப்பட்டது. படத்தின் முன்னணி நடிகர்களின் கதாபாத்திரங்கள், நடிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, இசை, ஒளிப்பதிவு மற்றும் படத்தின் பிற முக்கிய தொழில்நுட்ப அம்சங்களைப் பாராட்டி நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. மேலும் வடக்கு மெட்ராஸ் மற்றும் 1970 களின் குத்துச்சண்டை கலாச்சாரம், யதார்த்தமான சித்தரிப்புக்காக விமர்சகர்கள் ரஞ்சித்தை பாராட்டினர்.

கதை[தொகு]

இப்படத்தின் கதையானது 1970 களின் முற்பகுதியில் வட மதராசில் நடக்கிறது. கபிலன் சென்னை துறைமுகத்தில் வேலை செய்யும் ஒரு இளம் தொழிலாளி. அவர் குத்துச்சண்டையில் ஆர்வம் கொண்டவர். அவரது தந்தை முனிரத்தினம் போன்று ஒரு முக்கிய குத்துச்சண்டை வீரராக விரும்புகிறார். ஆனால் அவரது தாய் பாக்கியம், குத்துச்சண்டை வீரராக மாறுவதற்கான அவனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்கிறாள். ஏனெனில் முனிரத்தினம் கடைசியில் ஒரு குண்டராக மாறி, அரசியல்வாதிகளுக்கு வேலை செய்து, கொல்லப்பட்டார். இதனால் குத்துச்சண்டையில் ஈடுபட்டால் தனது மகனுக்கும் இதே கதி நேரிடலாம் என்று பாக்கியம் பயப்படுகிறாள். குத்துச்சண்டையின் மீதான அவரது தாயின் வெறுப்பு காரணமாக, கபிலன் முறையாக பயிற்சி பெற முடியாவிட்டாலும், சார்பட்டா பரம்பரையின் பிரபல குத்துச்சண்டை வீரரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர ஆதரவாளருமான ரங்கன் வாத்தியாரை தன் குருவாக ஏற்றுவருகிறார். ஆனால், கபிலனின் அண்டைவீட்டுக்காரரான ஆங்கிலம் பேசும் கொங்கு தமிழரான கெவின் (டாடி) கபிலனின் ஆர்வத்தை அவரது குழந்தைப் பருவத்திலிருந்தே ஆதரித்துவருகிறார். இதனால் அடிக்கடி பாக்கியம், கெவினுக்கிடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

1975 ஆம் ஆண்டில், இந்தியாவில் 18 மாத அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது, இந்திரா காந்தி மற்றும் அவர்களின் சட்டங்களை திமுக எதிர்க்கிறது. அச்சமயத்தில் ரங்கன் வாத்தியாரால் சார்பட்டா மற்றும் இடியப்ப பரம்பரைகளுக்கிடையே குத்துச்சண்டை போட்டிக்கு ஒத்துக்கொள்கிறார்.[5] அந்த போட்டியில், அந்த குலத்தின் முக்கிய வீரரான மீரான், இடியப்ப பரம்பரையைச் சேர்ந்த சக்தியும், திறமையும் வாய்ந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவரான வேம்புலியால் தோற்கடிக்கப்பட்டதால் சார்பட்டா பரம்பரை ஒரு பெரிய தோல்வியை எதிர்கொள்கிறது. அப்போது நடக்கும் வாய்த்தகராறில் ரங்கன் அடுத்த போட்டியில் வேம்புலியை தோற்கடிக்க ஒரு முக்கிய குத்துச்சண்டை வீரரை இறக்குவதாக அறிவிக்கிறார். மேலும் அதில் தோல்வியடைந்தால் சார்பட்டா பரம்பரை குத்து சண்டை போட்டிகளில் இருந்து விலகிவிடும் என்றும் சவால்விடுகிறார். தொழில்முறை அல்லாத குத்துச்சண்டை வீரரான ராமன் வேம்புலியை எதிர்த்துப் போரிடுவார் என்று ரங்கன் வாத்தியார் அறிவிக்கிறார். ஆனால் பயிற்சியின்போது ராமனின் தவறுகளை சுட்டிக்காட்டி ரங்கன் திட்டுகிறார். இதனால் அதிருப்தி அடைந்த ராமன் ரங்கனின் சண்டை உத்திகள் காலாவதியானவை என்று கூறி, கர்நாடகத்தைச் சேர்ந்த பயிற்சியாளரைக் கொண்டு பயிற்சி மேற்கொள்கிறான். அந்த சமயத்தில் ராமனும் அவரின் தரப்பினரும் ரங்கன் வாத்தியாரை பற்றி தவறாக பேசுகின்றனர். அதைக் கேட்கும் கபிலன், ராமனுக்கும் தனக்கும் இடையே ஒரு குத்துச் சண்டை போட்டி வேண்டும் என்று கேட்கிறான். கபிலன் ராமனை அந்த போட்டியில் தோற்கடிக்கிறான்.

கபிலனின் சண்டை நுட்பங்களைக் கண்டு வியந்த ரங்கன் வாத்தியார் அவனை வேம்புலிக்கு எதிரான குத்துச்சண்டை வீரராகக் கொண்டுவர முடிவு செய்கிறார். ஆனால் தன் தாயிக்கு குத்துச் சண்டை மீதான வெறுப்பின் காரணமாக கபிலன் ஆரம்பத்தில் தயங்குகிறான். இந்நிலையில், ரோஸ் குறுக்கிட்டு, வேம்புலியுடன் மோதுவதற்கு முன்னதாக கபிலன் தன்னை போட்டியில் வெல்லும்படி கேட்கிறான். அதற்கு கபிலன் ரோசை இரண்டே சுற்றுகளில் தோற்கடிப்பதாக கூறுகிறான். 'டான்சிங் ரோஸ்' எனப் பெயர் பெற்ற ரோஸ், குத்துச் சண்டையில் நடனத்தை ஒத்த அசவுகளை வெளிப்படுத்தி பல முக்கிய வீரர்களை தோற்கடித்த திறமையான குத்துச்சண்டை வீரர்களில் ஒருவர். கபிலன் முதல் சுற்றில் அவனது அசைவுகளைக் கற்றுக் கொள்கிறான். பின்னர் இரண்டாவது சுற்றில் தான் கூறியபடி அவனை வீழ்த்துகிறான். இதைக் கண்டு பார்வையாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். ஏனெனில் ரோஸ் அதுவரை தோற்கடிக்கப்படாத குத்துச்சண்டை வீரராக இருந்தார். அப்போது வேம்புலி அடுத்து வரும் போட்டியில் கபிலனைத் தோற்கடிப்பதாக சவால் விடுகிறான். கபிலன் இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறான். போட்டியில் கபிலன் வெல்லக்கூடிய சூழல் ஏற்பட்டால் போட்டியில் கலவரத்தை ஏற்படுத்தி கபிலனை தாக்கி, அந்த போட்டியை நாசமாக்க ராமனின் மாமன் தணிகா ஆட்களை ஏற்பாடு செய்கிறான். போட்டி நாளில், கபிலன் வேம்புலியை கடுமையாக தாக்கி வெல்லும் நிலையில் உள்ளான். அப்போது ராமனின் மாமன் தணிகா கலவரத்தை ஏற்படுத்தி கபிலனை நாற்காலியில் தாக்கி வீழ்த்துகிறான். ராமனின் தோல்விக்கு பழிவாங்கும் விதமாக, கபிலனின் இடுப்பு ஆடையை கழற்றி நிர்வாணமாக்ககுகிறான். அச்சமயத்தில் ரங்கன் வாத்தியார் கைது செய்யப்படுகிறார். ஏனெனில் 1976 இல் திமுக அரசு ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்படுகிறது. எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசால் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

கபிலன் இந்த சம்பவத்திற்குப் பிறகு குத்துச்சண்டையில் இருந்து விலக முடிவு செய்து தன் தாய் மற்றும் மனைவி மாரியம்மாவுடன் சாதாரணமான வாழ்க்கை வாழத் திட்டமிடுகிறான். ஆனால், கபிலனின் நண்பனும், ரங்கனின் மகனுமான வெற்றிச் செல்வன், சிறையில் இருந்த தனது தந்தையை சந்திக்க வரும்படி கபிலனை அழைக்கிறான் வழியில் ஒரு உணவகத்தில் உண்ணச் செல்லும்போது, போட்டியின் போது கலவரத்தை ஏற்படுத்தி தன் அரையாடையை அவிழ்த்த தணிகாவை சந்திக்கிறான். அங்கு ஏற்பட்ட மோதலில் கபிலன் தணிகாவை வாளால் தாக்குகிறான்; தணிகா கடுமையான காயத்துடன் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிக்கிறான். தாக்குதலில் ஈடுபட்ட கபிலன் ஆறு மாதங்கள் சிறையில் அடைக்கப்படுகிறான். எம். ஜி ராமச்சந்திரன், திமுகவில் இருந்து பிரிந்து உருவாக்கிய அஇஅதிமுகவில் வெற்றி செல்வன் இணைகிறான்.[6] மேலும் கட்சி ஆதரவாளரான மாஞ்சா கண்ணனின் உதவியுடன் தனது கையாளாக கபிலனை அமர்த்திக்கொள்கிறான். இருவரும் கள்ளச்சாராயம் தயாரிக்கும் தொழிலைத் தொடங்குகிறார்கள். அதே நேரம் கபிலன் மெல்லமெல்ல குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறான். இதனால் அவனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபட்டுகிறது. இறுதியில் தாய் பாக்கியமும், கர்ப்பிணி மனைவி மரியம்மாவும் அவனை விட்டுப் பிரிய காரணமாகிறது, ஆனால் மரியம்மா பின்னர் அவனுடன் சமரசம் செய்துகொள்கிறாள்.

நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ரங்கன் சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறார். அவரது சிறை வாழ்க்கை காலத்தில் வெளியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கவனிக்கிறார். கபிலன், குடிப்பழக்கத்தால் அதிக எடைபோட்டு உடல் வலு குன்றி இருப்பதைப் பார்த்து விரக்தியடைகிறார். ராமனுக்கும் வேம்புலிக்கும் இடையே நடக்கும் ஒரு குத்துச்சண்டை போட்டியைப் பார்க்க ரங்கன் வாத்தியார் வருகிறார். அங்கு அவரின் முன்னிலையில் ராமன் மோசமாக தோற்கடிக்கப்படுகிறான். வேம்புலி சார்பட்டா பரம்பரையினருக்கு சவால் விடுகிறான். அப்போது அவனுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு கலவரத்தை ஏற்படுத்தி தோல்வியில் இருந்து தப்பித்தை கபிலனும், டாடியும் நினைவூட்டுகின்றனர். இதனால் சங்கடமடைந்த வேம்புலி தன்னை மீண்டும் தோற்கடிக்க கபிலனுக்கு சவால் விடுகிறான். இருப்பினும், கபிலனின் தற்போதைய நிலையைக் கண்டு ரங்கன் வாத்தியார் அந்தப் போட்டியில் அவன் போட்டியிடுவதை விரும்பவில்லை. ஆனால் அந்தப் பரம்பரையின் மற்ற உறுப்பினர்கள் அவனை ஆதரிக்கின்றனர். அதன்பிறகு ராமனால் கபிலன் ஒரு போட்டியின் போது சிரமமின்றி வீழ்த்தப்படுகிறான். இதனால் தன்னுடைய பரம்பரையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களாலேயே கேலிக்கு ஆளாக்கப்படுகிறான். இதனால் கபிலன் மிகவும் ஏமாற்றமடைகிறான். அன்றிரவு பாக்கியம் அழுகிறாள். ஆனால் பாக்கியம் கபிலனை குத்துச்சண்டையைத் தொடரச் சொல்கிறாள், அவனால் மீண்டும் பழையபடி ஆகமுடியும் என்கிறாள். அடுத்த நாள், டாடி கபிலனின் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க, அவனை குத்துச்சண்டையில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு மீனவரான பீடி ராயப்பனிடம் அழைத்து செல்கிறார். ராயப்பனின் பயிற்சியினால் அவன் தனது உடலமைப்பை வெற்றிகரமாக மீட்டெடுக்கிறான். போட்டி நாளில், துவக்கச் சுற்றுகளில் வேம்புலி ஆதிக்கம் செலுத்துகிறான். கபிலன் மோசமாக காயமடைகிறான். ரங்கன் வாத்தியாரும், அவரது பரம்பரையின் மற்ற உறுப்பினர்கள் களத்தில் கபிலனை ஊக்குவிக்கிறார்கள். கபிலன் போட்டியின் இறுதிச் சுற்றில் வேம்புலியை பலத்த அடி கொடுத்து வீழ்த்துகிறான். சார்பட்டா பரம்பரை பல ஆண்டு தோல்விக்குப் பிறகு வெற்றியைப் பெறுகிறது. முழு சமூகமும் கபிலன் மற்றும் பரம்பரையின் வெற்றியைக் கொண்டாடுகிறது.

நடிகர்கள்[தொகு]

 • ஆர்யா கபிலன் முனிரத்தினம் அல்லது கபிலன்
 • பசுபதி கபிலனின் குத்துச்சண்டை பயிற்சியாளர் ரங்கன் வாத்தியார்
 • துஷாரா விஜயன் கபிலனின் மனைவி மரியம்மாவாக
 • ஜான் விஜய் கபிலனின் நண்பர் கெவின் அல்லது டாடியாக
 • ஜான் கோக்கன் வேம்புலியாக
 • ஷபீர் கல்லறக்கல் 'டான்சிங்' ரோஜாவாக
 • அனுபமா குமார் கபிலனின் தாய் பாக்கியமாக
 • கலையரசன் ரங்கன் வாத்தியாரின் மகன் வெற்றிச் செலவ்வனாக
 • ஜி. எம். சுந்தர் வேம்புலியின் குத்துச்சண்டை பயிற்சியாளர், துரைக்கண்ணு வாத்தியார்
 • சந்தோஷ் பிரதாப் ராமனாக
 • வேட்டை முத்துக்குமார் தணிகாவாக
 • காளி வெங்கட் கோணி சந்திரனாக
 • சாய் தமிழ் மீரனாக
 • சஞ்சனா நடராஜன் வெற்றிசெல்வனின் மனைவி லட்சுமியாக
 • பிரியதர்ஷினி ராஜ்குமார் கெவின் மனைவி மிஸ்ஸியம்மாவாக
 • கீதா கைலாசம் ரங்கனின் மனைவியாக
 • புலித்தோட்டம் தங்கம் என டைகர் தங்கதுரை டைகர் கார்டன் தங்கதுரை
 • மாறன் மாஞ்சா கண்ணனாக
 • சரவண வேல் கௌதமாக
 • கஜபதி பீடி ராயப்பனாக
 • கிஷோர் கபிலனின் தந்தை முனிரத்னமாக, (சிறப்புத் தோற்றம்)
 • கானா பாலா

தயாரிப்பு[தொகு]

சொற்பிறப்பியல்[தொகு]

சார்பட்டா பரம்பரை படத்தின் பெயரில் உள்ள, சார்பட்டா என்ற சொல்லுக்கு சால்ட் கொட்டாய் என்ற பகுதியின் பெயரே மருவி சார்பட்டா என்று ஆனதாக ஒரு கருத்து உள்ளது.[7] மேலும் சார்பட்டா என்பதன் பொருள் "நான்கு பட்டாக் கத்திகள்" என்றும் பொருள் கூறப்படுகிறது. பரம்பரை என்ற சொல்லுக்கு "குலம்" என்று பொருள். இது சமஸ்கிருத-பாலி சொல்லான பரம்பரா வில் இருந்து வந்து இந்தி, உருது, தமிழ் ஆகிய மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழில் ஐ என்ற பின்னொட்டு சேர்ந்து பரம்பரை என்றானது. உருது மொழியில் இது "چار پٹا" இந்தியில் चार + पट्टा, பொருள் - நான்கு பட்டா கத்திகள் குலம் என்பதாகும். இது பாபு பாய் பரம்பரை என்ற பழைய குலத்தில் இருந்து வந்தது. அடுத்த குலம் "இடியப்ப பரம்பரை" என்பது தமிழ் சொல்லில் இருந்து வந்தது இடி + அப்பா அதாவது, இடி போல் அடிப்பவர்கள், மற்றொரு குலமாக "எல்லப்பன் செட்டியார் பரம்பரை" உள்ளது.[8]

வளர்ச்சி[தொகு]

பா. ரஞ்சித் பழங்குடி சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் வாழ்கையை அடிப்படையாக கொண்ட தனது பாலிவுட் அறிமுகத் திட்டத்தை நிறுத்தி வைத்தார்.[9][10] பின்னர் பின்னர் 1980 களில் வட சென்னையின் குத்துச்சண்டை கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்ட மற்றொரு கதையை உருவாக்கினார்.[11][12] ரஞ்சித் ஆரம்பத்தில் சூர்யா மற்றும் கார்த்தியை மனதில் வைத்து பிந்தையவருடன் மெட்ராஸ் (2014) படத்தில் பணிபுரிந்த பிறகு எழுதினார்.[13] ஆனால் மற்ற படங்களுக்கு அவர்களின் தேதிகளை கொடுத்துவிட்டிருந்த காரணத்தால் அவரால் இருவரையும் அணுக முடியவில்லை. பின்னர் ஆர்யாவிடம் கதையை விவரித்தார்.[11] கதையைக் கேட்டபிறகு அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார்.[11] ரஞ்சித்தும் ஆர்யாவும் கதையின் முன்னேற்றத்தைப் பற்றி விவாதித்தனர். பின்னர் 2019 செப்டம்பரில் இறுதி செய்யப்பட்டது.[14] சிந்தாதிரிப்பேட்டையில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட பேட்ட என்ற புதினத்தை எழுதிய தமிழ் பிரபா எழுத்தாளராக அறிவிக்கப்பட்டார்.[15][16] 2019 திசம்பரில், பா. ரஞ்சித் தனது சொந்த நிறுவனமான நீலம் புரொடக்‌சனின் கீழ் தயாரிக்கப்பட்ட ஐந்து படங்களில் ஒன்றாக இந்தப் படத்தை அறிவித்தார், அதே நேரத்தில் கே 9 ஸ்டுடியோசும் இணைந்து தயாரித்தது.[17][18] ரஞ்சித்தின் வழக்கமான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஒளிப்பதிவாளர் முரளி ஜி . இந்த படத்தில் பணிபுரிந்தனர், முன்னதாக ரஞ்சித்தின் தயாரிப்புகளில் பணியாற்றிய செல்வா ஆர். கே. பரியேறும் பெருமாள் மற்றும் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு ஆகிய படங்களின் தொழில்நுட்பக் குழுவிலும் இருந்தனர்.[3] இந்த படத்திற்கு தற்காலிகமாக சல்பேட்டா பரம்பரை மற்றும் சல்பேட்டா என்று பெயரிடப்பட்டது,[19] பின்னர் அதிகாரப்பூர்வ தலைப்பான சார்பட்டா பரம்பரை முதல் பார்வை சுவரொட்டியுடன் 3 திசம்பர் 2020 அன்று வெளியிடப்பட்டது.[20][21]

நடித்தல்[தொகு]

வடசென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் கபிலன் வேடத்தில் ஆர்யா நடித்தார்.[14] அதை அவர் "தனது வாழ்க்கையில் மிகவும் சவாலான பாத்திரம்" என்று குறிப்பிட்டார்.[22] பாத்திரத்திற்காக அவர் குத்துச்சண்டை மற்றும் வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றுடன், ஏழு மாதங்களில் ஆறு மணிநேர பயிற்சி பெற்றார். மெலிந்த உடலமைப்பைப் பெறுவதற்காக அவர் தனது எடையைக் குறைத்தார்.[23] படத்தில் இருந்து அவரது தோற்றம் 2020 பெப்ரவரி அன்று வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடமிருந்து கைதட்டல்களைப் பெற்றது.[24][25] 2019 செப்டம்பரில், ரஞ்சித்தின் முந்தைய படங்களின் ஒரு பகுதியாக இருந்த அட்டகத்தி தினேஷ் மற்றும் கலையரசன் [26] மகிழ் திருமேனி ஆகியோர் இப்படத்தில் இருப்பார்கள் எனப்பட்டது.[27] ஆனால், கலையரசனைத் தவிர்த்து, தினேஷ், திருமேனி இருவரும் படத்தில் ஒப்பந்தமாகவில்லை. 2020 மார்ச்சில், சந்தோஷ் பிரதாப் இந்த படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டார்.[28] அதே மாதம், அறிமுக நடிகை துஷாரா விஜயன் இந்த படத்திற்கான முன்னணி நடிகையாக அறிவிக்கப்பட்டார்.[29][30]

2020 செப்டம்பரில், ஜான் கோக்கன் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அறிவித்தார் மேலும் பாத்திரத்திற்காக தீவிரமாக பணியாற்றினார்.[31] சஞ்சனா நடராஜன் படத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டார். அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் லட்சுமி என்று தெரியவந்தது.[32] "பாக்கியம்" கதாபாத்திரத்தில் அனுபமா குமார் நடித்தார். அவர் "சத்தமாக", "உணர்ச்சிவசப்பட்டு", "துப்பும்", "அன்பானவர்" என்று விவரிக்கப்பட்டார்.[33] 28 மார்ச் 2021 அன்று, பா. ரஞ்சித் திரைப்படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் ஒரு சிறப்பு காணொளியை வெளியிட்டார், இது ஆண் நடிகர்களின் உடற்தகுதி மற்றும் விளையாட்டுப் பயிற்சி பற்றியது, அதே போல் நடிகர்கள் மற்றும் துணை நடிகர்களைக் கொண்ட நடிப்பு பட்டறையிலிருந்து துணுக்குகள் இடம்பெற்றன.[34] மேலும் படத்தின் நடிகர்களை குறிப்பிட்டதில், காளி வெங்கட், பசுபதி, ஜான் விஜய், ஷபீர் கல்லரக்கல் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[35] மேலும் டான்சிங் ரோஸ்.[36][37] மாறன் ( கில்லி புகழ்) மாஞ்சா கண்ணன் ஒரு துணை வேடத்தில் நடித்தார், இது 2021 மேயில் அவர் இறப்பதற்கு முன் எடுக்கபட்டு அவரது மரணத்திற்குப் பின் வெளியான படமாகும்.[38]

பாத்திரங்கள்[தொகு]

பா. ரஞ்சித் படத்தின் கதாபாத்திரங்களுக்காக நிஜ வாழ்க்கையில் முக்கிய குத்துச்சண்டை வீரர்களை மாதிரியாக கொண்டார். ஆர்யாவின் கதாபாத்திரமான கபிலன் புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியை மாதிரியாக கொண்டது. தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்ட அந்த படத்தின் ஒரு ஒளிப்படத்தில் முகம்மது அலியின் தோரணையை ஒத்திருந்தது.[39] வேம்புலியின் (ஜான் கோக்கன்) பாத்திரம் மைக் டைசனினை மாதிரியாக கொண்டிருந்தது.[39] ஷபீர் கல்லரக்கால் நடித்த 'டான்சிங்' ரோஸ் என்ற கதாபாத்திரம் பிரித்தானிய குத்துச்சண்டை வீரர் நசீம் ஹமேட்டை மாதிரியாக கொண்டது. அவர் தனித்துவமான அசைவுகளுக்கு பெயர் பெற்றவர்.[40][41] சந்தோஷ் பிரதாப்பின் கதாபாத்திரமான ராமன், சர்வதேச குத்துச்சண்டை வரலாற்றில் பழமையான எடைமிகு வாகையர்களில் ஒருவராக கருதப்படும் ஜார்ஜ் ஃபோர்மேனை அடிப்படையாகக் கொண்டது. பீடி ராயப்பன் (கஜபதி நடித்த) கதாபாத்திரமும் ஒரு மீனவ-குத்துச்சண்டை வீரரான கித்தேரி முத்துவை மாதிரியாக கொள்ளப்பட்டது. அவர் ஒரு முக்கிய ஆங்கிலோ-இந்திய குத்துச்சண்டை வீரர் நாட் டெர்ரியை தோற்கடித்து பெயர் பெற்றவர்.[42] முத்துவின் நாடகத்தால் ஈர்க்கப்பட்ட பெரியார் ஈ. வெ. இராமசாமி, முத்துவுக்கு 'திராவிட வீரன்' என்ற பட்டத்தை அளித்தார்.[43]

படப்பிடிப்பு[தொகு]

முதன்மை படப்பிடிப்பானது முதலில் 2019 நவம்பரில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் ரஞ்சித் படப்பிடிப்பை தாமதப்படுத்தினார்.[26] 2020 மார்ச்சில் படப்பிடிப்பைத் தொடங்க குழு திட்டமிட்டது, ஆனால் அதே மாதத்தில் 2020 இந்தியாவில் கொரோனாவைரசால் நாடுதழுவிய ஊரடங்கு காரணமாக அது காலவரையின்றி தாமதமானது.[23] கோவிட் -19 பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தது, 75 பேர் கொண்ட குழுவைக் கொண்டு படப்பிடிப்பை மீண்டும் தொடங்க அரசு அனுமதி அளித்த பிறகு,[44] கடைசியில் படத்தின் படப்பிடிப்பு 2020 செப்டம்பர் 15 அன்று தொடங்கியது,[45] ஆர்யாவும் கலையரசனும் முதல்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். அடுத்த நாள் ஜான் கோக்கன் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.[44] படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வடசென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டது. படத்தின் படப்பிடிப்பு 2020 திசம்பர் 14 அன்று நிறைவடைந்தது. முழு படப்பிடிப்பும் நான்கு மாதங்கள் நடந்தது.[46]

கருப்பொருள்களும் பகுப்பாய்வுவும்[தொகு]

இந்த படம் பெரும்பாலும் வடசென்னை சார்ந்த குத்துச்சண்டை வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. மேலும் அரசியல் சித்தாந்தங்களின் தாக்கங்களைக் கொண்டிருந்தது. மற்றும் ரஞ்சித் முந்தைய திரைப்படங்களான மெட்ராஸ், கபாலி, காலா போல்லலாமல் இந்து சமயத்தின் கீழ்-வகுப்பு மக்களின் வாழ்க்கை மற்றும் சாதி அமைப்பை மையமாகக் கொண்டது.[47] படத்தில் அம்பேத்கரியம் மற்றும் பௌத்தம் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது.[48] ஒரு காட்சியில், படம் அம்பேத்கரின் பட்டியில் சாதிகளிடையே வேரூன்றிய இந்தியக் குடியரசுக் கட்சி (ஐஆர்பி) பற்றி காட்டப்படுகிறது.[43][49]

ஹரிஷ் வான்கடே தி ஹிந்து [50] வில் எழுதிய விமர்சனத்தில், படத்தின் நாயகன் கபிலன் (ஆர்யா) முந்தைய தலித் நாயகர்களின் (கபாலி மற்றும் காலா போன்ற) ஆண்பால் பதிப்புகளிலிருந்து கணிசமாக வேறுபடவில்லை என்றாலும், அவர் நிச்சயமாக முந்தைய தலித் கதாநாயகர்களிடமிருந்து தனித்து நிற்கிறார் என்று வாதிடுகிறார். குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வமுள்ள ரசிகர்கர்களின் ஒரு பகுதியாக கபிலனை முதலில் பார்க்கிறோம், அதிலிருந்து பின்னர் ஒரு பின்தங்கிய குத்துச்சண்டை வீரராக மாறுகிறான். மேலும் பாரம்பரிய சமூக தடைகளை கடந்து அவன் விளையாட்டின் இறுதி வாகையராக ஆகிறான்.

சார்பட்டா பரம்பரை 1970 களை களமாக கொண்டது. அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 1975-77 இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலை மற்றும் தமிழ்நாட்டில் அதன் எதிர்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அதன் பின்னர் இரண்டாக பிளவுபட்டது. அடுத்து எம். ஜி. ராமச்சந்திரனின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவை படத்தில் "யதார்த்தமாக" சித்தரிக்கப்பட்டுள்ளது.[51] ரஞ்சித் பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவில் குத்துச்சண்டை கலாச்சாரமானது விடுதலைக்கு முந்தைய காலத்திலிருந்து வட மதராசில் இருந்தது என்றும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, கலாச்சாரம் பல்வேறு பரம்பரைகளாகப் பிரிந்ததாகவும் கூறினார்.[52] சார்பட்டா பரம்பரை தொழிலாள வர்க்க மக்களின் அடிப்படை யதார்த்தங்களில் கவனம் செலுத்தியுள்ளது.[51][53]

அவசரகாலத்திற்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டால், ஒன்றிய அரசால் தி.மு.க அரசு 1976 ஆம் ஆண்டு கலைக்கப்பட்டதையும், மு. கருணாநிதியின் மகன் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் உள் நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தின்படி (மிசா) கைது செய்த உண்மையான காட்சிகளும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.[43][54] இதன் விளைவாக, குத்துச்சண்டை போட்டிகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் குத்துச்சண்டை வீரர்களும், சடுகுடு வீரர்களும் வேலைவாய்ப்பின்மையால் கூலிப்படைகளாக மாறினர்.[43] வடசென்னையின் ஆராய்ச்சியாளர் பகத் வீர அருண் கூறுகையில், "பல சமூகங்களைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் இருந்தபோதிலும், மீனவ சமூகத்தைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்கள் 'சார்ப்பட்டா பரம்பரையில்' ஆதிக்கம் செலுத்தினர், அதன் மையப்பகுதி ராயபுரத்தில் உள்ள இடமான பனைமாரா தொட்டி,".[43]

இசை[தொகு]

சந்தோஷ் நாராயணன் சார்பட்டா பரம்பரைக்கான பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை மேற்கொண்டார். அவர் பா. ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்தி (2012) படத்திலிருந்து தொடர்ச்சியாக அவரது ஐந்தாவது படமான சார்பட்டா பரம்பரை படம் வரையில் இசையமைத்துள்ளார்.

Track listing
# பாடல்கலைஞர்(கள்) நீளம்
1. "நீயே ஒளி"  சந்தோஷ் நாராயணன், நவாஸ்-47, ஷான் வின்சென்ட் டி பால் 3:57
2. "வம்புல தும்புல"  கானா முத்து, இசைவாணி, கானா உலகம் தரணி, சந்தோஷ் நாராயணன் 5:01
3. "நீயே ஒளி" (திரைப்படப் பதிப்பு)சந்தோஷ் நாராயணன் 4:28
4. "டான்சிங் ரோஸ்" (கருப்பொருள்)இசைக்கருவி 3:26
மொத்த நீளம்:
16:53

வெளியீடு[தொகு]

சார்பட்டா பரம்பரை படத்தை முதலில் திரையரங்களிகளில் வெளியிட திட்டமிட்டனர். ஆனால் பின்னர் கோவிட் -19 தொடர்பான பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக அமேசான் பிரைம் வீடியோ மூலம் நேரடியாக வெளியிட முடிவு செய்யப்பட்டது.[55] படம் வெளிவருவதற்கு முன்பே 35 கோடி (US$4.4 மில்லியன்) வணிகம் செய்யப்பட்டது. இதில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமைகள் மற்றும் படத்தின் இந்தி மொழிமாற்று உரிமைகள் அடங்கும்.[56] படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி வாங்கியது.[56]

இந்த படம் முதலில் விடுதலை நாள் வார இறுதியில் 2021 ஆகத்து 12 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது. எனினும், 2021 சூலை 8 அன்று, அமேசான் பிரைம் வீடியோ இந்தியா இயங்குதளத்தின் சூலை வெளியீட்டிற்கான தொடர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது.[57][58] பா. ரஞ்சித் இயக்கிய ரஜினிகாந்த்தின் கபாலி (2016) ஆண்டு விழாவுடன் இது ஒத்துப்போனது.[59][60] இருப்பினும், சார்பட்டா பரம்பரை அதன் தெலுங்கு மொழிமாற்று பதிப்பான சார்பட்டா பரம்பராவுடன் 2021 சூலை 11 நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

சர்ச்சை[தொகு]

1980 இல், தமிழ்நாடு தொழில்முறை அல்லாத குத்துச்சண்டை வீரர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக எம். ஜி ராமச்சந்திரன் குத்துச்சண்டையின் அடையாளமான முகம்மது அலியை சென்னைக்கு அழைத்து வந்தார், ஆனால் அது படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.[43] படத்தில் எம். ஜி. இராமச்சந்திரனை தவறாக மோசமாக சித்தரிதுள்ளதாக தமிழக முள்ளாள் அமைச்சர் து. ஜெயக்குமார் பா. ரஞ்சித்துக்கு கண்டனம் தெரிவித்தார்.[61] மேலும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள வசதியற்ற பின்னணியைக் கொண்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய திட்டங்களை அவர் நினைவு கூர்ந்தார். மேலும் "குத்துச்சண்டையில் மட்டுமல்ல, எம்ஜிஆர் மான் கொம்பு சண்டை, வாள்வீச்சு, குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராக சித்தரித்துக்கொண்டார். அவரது திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு, அவரது ரசிகர்கள் பலர் விளையாட்டுகள் மீது ஆர்வம் கொண்டனர்".[61] மேலும் விமர்சித்த ஜெயக்குமார் இப்படத்தை "திமுக பிரசார படம்" என்று அழைத்தார் மேலும் கடந்த காலங்களில் திமுகவை விமர்சித்தது பற்றி பா. ரஞ்சித்திடம் கேள்வி எழுப்பினார்.[61][62] ராமச்சந்திரனின் ஆதரவாளரான எம்ஜிஆர் விஸ்வநாதன், இயக்குனரை விமர்சித்தார், மேலும் அவரது இல்லத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்வதாக மிரட்டினார்.[63]

தாக்கம்[தொகு]

சார்பட்டா பரம்பரை ஸ்ட்ரீமிங் சேவையான அமேசான் பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படமாக ஆனது.[64] மேலும் அமேசானில் வெளியான மற்றொரு படமான சூரரைப் போற்று (2020) அமேசானில் அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது பிராந்திய திரைப்படமாக ஆனது.[64] தமிழ் திரையுலகின் இயக்குனர்கள், நடிகர்கள் போன்ற பல பிரபலங்கள், சமூக ஊடகங்கள் மூலம் படத்தை பாராட்டினர்.[65] இந்தியாவில் 3,200 நகரங்கள் மற்றும் மாநகரங்களின் பல வீடுகளில் படம் பார்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஒளிபரப்பப்பட்டது என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Pa Ranjith-Arya film titled Sarpatta Parambarai, first look out". The New Indian Express. Archived from the original on 2 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
 2. "Sarpatta Parambarai: The clash between two clans in North Chennai". Sify. Archived from the original on 7 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
 3. 3.0 3.1 World, Republic. "'Sarpatta Parambarai' cast: Details about upcoming Tamil boxing movie". Republic World. Archived from the original on 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
 4. "'Sarpatta Parambarai' poster reveals a ripped Arya". https://www.thehindu.com/entertainment/movies/sarpatta-parambarai-poster-reveals-a-ripped-arya/article33228699.ece. 
 5. "When Karunanidhi refused to fall in line with Indira Gandhi". The News Minute (in ஆங்கிலம்). 2018-08-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 6. "The Dravida Family Tree". The Indian Express (in ஆங்கிலம்). 2016-04-27. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 7. வெ. நீலகண்டன், (2016). தினகரன் பொங்கல் மலர் 2016. சென்னை: தினகரன். pp. 194–203.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
 8. சார்பட்டா என்றாலே திமுக தான்! Boxer Parthiban Interview | Sarpatta Parambarai | Pa.Ranjith (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2021-07-28
 9. "Pa Ranjith moves to Bollywood for his next project after 'Kaala'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 10. "Pa Ranjith announces Bollywood debut with Birsa Munda biopic". தி நியூஸ் மினிட். 16 November 2018. Archived from the original on 8 November 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 11. 11.0 11.1 11.2 "Arya's next with director Pa Ranjith". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 12 November 2019. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 12. "Pa Ranjith to team up with Arya?". தி நியூஸ் மினிட். 14 July 2019. Archived from the original on 29 November 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 13. "Is Karthi a lucky charm for directors?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 4 October 2019. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 14. 14.0 14.1 "Arya is a boxer in Ranjith's film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 25 November 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 15. "Pa Ranjith to team up with writer Prabha". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 16. "A boxing film but so much more: Tamil Prabha on co-writing 'Sarpatta Parambarai'". The News Minute (in ஆங்கிலம்). 2021-07-29. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
 17. "Pa Ranjith to produce five films under Neelam Productions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 22 December 2019. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 18. "Pa Ranjith's Neelam Productions to bankroll five films". தி நியூஸ் மினிட். 20 December 2019. Archived from the original on 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 19. "Arya's film with Pa Ranjith titled 'Salpetta Parambarai'?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 17 October 2019. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 20. "First look from Arya-Pa Ranjith's 'Sarpatta Parambarai' out". தி நியூஸ் மினிட். 2 December 2020. Archived from the original on 3 March 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
 21. "Sarpatta Parambarai: Arya shares unseen stills from the film while thanking everyone for their wishes". Pinkvilla. Archived from the original on 8 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 December 2020.
 22. "Arya shares work out video; gets appreciation". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 11 May 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 23. 23.0 23.1 "6 hours of training for 7 months: Meet Arya, the ace boxer". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 24. "Arya stuns fans with ripped look in Pa Ranjith's next Tamil film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 25. "Actor Arya tweets new ripped look for Pa Ranjith's next". தி நியூஸ் மினிட். 20 February 2020. Archived from the original on 31 August 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 26. 26.0 26.1 "Dinesh and Kalaiyarasan to be part of Pa Ranjith's next?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 30 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 27. "Magizh Thirumeni in Pa Ranjith's film?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 28. "Santhosh Prathap in Arya's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 7 March 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 29. "Dushara Vijayan to star opposite Arya in Pa Ranjith's film". தி நியூஸ் மினிட். 21 March 2020. Archived from the original on 23 March 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 30. "Ranjith's film is a big leap in my career: Dushara". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 3 June 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 31. "John Kokken preps hard for Pa Ranjith-Arya's Salpetta". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 26 October 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 32. "Sanchana Natarajan reveals her look in 'Sarpatta Parambarai'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 33. "Actress undergoes crucial changes for her role in Arya and Pa Ranjith's Sarpatta Parambarai ft Anupama Kumar". Behindwoods. 18 December 2020. Archived from the original on 30 March 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 34. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 35. "Pa Ranjith and Arya's Sarpatta characters introduced with a special video". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 28 March 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 36. "Internet demands a separate film for Dancing Rose from Pa Ranjith!". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
 37. "Watch: 'Sarpatta' Dancing Rose's intense workout video goes viral". The News Minute (in ஆங்கிலம்). 2021-07-22. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 38. "Tamil actor Maran dies of Covid-19 at 48". Hindustan Times. 12 May 2021. Archived from the original on 13 May 2021. பார்க்கப்பட்ட நாள் 12 May 2021.
 39. 39.0 39.1 "Sarpatta Parambarai: Arya, John Kokken modelled their roles on Muhammad Ali, Mike Tyson in boxing drama". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 40. "Here is a glimpse video of the real-life "Dancing Rose"! - Tamil News". IndiaGlitz.com. 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 41. "Sarpatta Parambarai's Dancing Rose character was inspired by this famous boxer? ft Naseem Hameed". Behindwoods. 2021-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 42. "Sarpatta Parambarai 'Beedi' Rayappan stresses on education". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 43. 43.0 43.1 43.2 43.3 43.4 43.5 kavitha (2021-07-26). "Does Pa Ranjith's Sarpatta Parambarai land a punch on AIADMK?". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.kavitha (26 July 2021). "Does Pa Ranjith's Sarpatta Parambarai land a punch on AIADMK?". The Federal. Retrieved 28 July 2021.
 44. 44.0 44.1 "Arya and Kalaiyarasan are back to shooting for Pa Ranjith's film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 31 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 45. "Arya's boxing drama 'Salpetta' to start shooting from September 15th?". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 9 December 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 46. "Arya and Pa Ranjith's 'Sarpatta Parambarai' finishes shooting, heads towards the post production work". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 47. TK, Smitha (2021-07-19). "'Sarpatta Parambarai' Takes You to a Boxing Ring In 1970s Madras: Arya". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
 48. Ramnath, Nandini. "Framing a viewpoint: How 'Sarpatta Parambarai' created its ground-up view of heroism and assertion". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 49. "Rise of the underdog". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 50. https://www.thehindu.com/opinion/op-ed/dalits-fist-of-fury/article35569201.ece
 51. 51.0 51.1 "'Sarpatta Parambarai' deals with working class realities: Pa Ranjith". The News Minute (in ஆங்கிலம்). 2021-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
 52. "Pa Ranjith on Amazon Prime film Sarpatta Parambarai: 'It is my strongest work, one I'm really confident about'". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-14. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
 53. "My films are an extension of my ideology: Sarpatta Parambarai director Pa. Ranjith". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-21. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 54. Sukumar, Daniel (2021-07-24). "Sarpatta Parambarai: Pa Ranjith's Magic of Simply Portraying Complex Truths". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 55. "Arya's 'Sarpatta Parambarai' to release on Amazon Prime!". Sify. Archived from the original on 30 June 2021. பார்க்கப்பட்ட நாள் 7 July 2021.
 56. 56.0 56.1 "Rs. 35 Cr business for Sarpatta! Movie to release on Amazon Prime Video!". www.moviecrow.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
 57. "Pa Ranjith's Sarpatta skips theatrical release, to premiere July 22 on Amazon Prime". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
 58. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 59. "Sarpatta Parambarai gets OTT release date". The Indian Express (in ஆங்கிலம்). 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
 60. "'Sarpatta Parambarai' to release on July 22 on Amazon Prime". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
 61. 61.0 61.1 61.2 "AIADMK's Jayakumar unhappy with MGR's portrayal in 'Sarpatta Parambarai'". The News Minute (in ஆங்கிலம்). 2021-07-25. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 62. "Sarpatta Parambarai shows MGR in poor light: D Jayakumar". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 63. Veerakumar (2021-07-29). "சார்பட்டா பரம்பரை.. பா.ரஞ்சித் வீட்டு முன்பு பெரும் போராட்டம்.. அறிவிச்சது யாருன்னு பாருங்க!". Oneindia Entertainment. பார்க்கப்பட்ட நாள் 2021-07-29.
 64. 64.0 64.1 "Sarapatta Parambarai : Arya's knockout punch!". Sify (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
 65. "Arya-starrer Sarpatta Parambara packs a punch, literally! Celebs, fans cheer". OnManorama. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்பட்டா_பரம்பரை&oldid=3942542" இலிருந்து மீள்விக்கப்பட்டது