உள்ளடக்கத்துக்குச் செல்

சாரா டக்கர் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°41′55″N 77°44′27″E / 8.698733°N 77.740744°E / 8.698733; 77.740744
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா டக்கர் கல்லூரி
குறிக்கோளுரைஎனவே நீங்கள் அழிவில்லாத கிரீடம் பெறக்கூடிய விதத்தில் இயங்கவும்
உருவாக்கம்1895; 129 ஆண்டுகளுக்கு முன்னர் (1895)
நிறுவுனர்சாரா டக்கர்
முதல்வர்முனைவர் உஷா காட்வின்
மாணவர்கள்3300
அமைவிடம், ,
8°41′55″N 77°44′27″E / 8.698733°N 77.740744°E / 8.698733; 77.740744
வளாகம்ஊரகம்
இணையதளம்https://sarahtuckercollege.edu.in/

சாரா டக்கர் கல்லூரி (Sarah Tucker College) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இதுவே தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மகளிர் கல்லூரி ஆகும். இங்கிலாந்தின் சாரா டக்கர் மற்றும் அவரது நண்பர்கள் பணத்தைத் திரட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளுக்கு தேவைப்படும் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்கும் கல்விக்கூடமாக இதை தோற்றுவித்தனர். இதன் பின்னர் சாரா டக்கர் உயர்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது, இது 1895 இல் ஒரு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. இசபெல்லா தோபர்ன் கல்லூரிக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பழமையான கல்லூரி இதுவாகும் . இன்று இது ஒரு முதுகலை நிறுவனமாக உள்ளது. இந்தக் கல்லூரியில் ஆய்வகங்கள், நூலகம், கணினி மையம், விளையாட்டு அரங்கு போன்றவை உள்ளன. கல்லூரியில் ஐந்து விடுதிகள் உள்ளன. இதில் சுமார் 600 மாணவிகள் தங்கியுள்ளனர்.

நிறுவனர் வரலாறு

[தொகு]

இந்திய மிஷனெரி சங்கத்தின் செயலராக சென்னையில் பணியாற்றிய ஜான்தக்கர் அவர்களின் சகோதரி சாரா தக்கர். ஜான் தக்கர் கிறிஸ்தவ மிஷனரியாக பாளையங்கோட்டை பகுதியில் இருந்த போது இங்குள்ள பெண்களின் நிலைமைகளை பார்த்து வருத்தப்பட்டு எழுதிய கடிதம் இங்கிலாந்து நாட்டில் உள்ள அவரது சகோதரியும், மாற்று திறனாளியும், பதினான்கு வயது நிரம்பியவருமான சாராள் தக்கர் வாழ்வில் பெரும்பாதிப்பை கொண்டு வந்தது. பெண்களை கல்வி கூடங்களுக்கு அனுப்பாமல் “அடுப்பூதும் பெண்டிருக்கு படிப்பெதற்கு” என நினைத்த அன்றைய சமுதாய பெண்கள் கல்வி கற்க உதவிகள் தேவை என்பதை அறிந்த அவர், இருகால்களும் ஊனமுற்ற நிலையிலும் அவர்களின் கல்விக்காக தன்னை அர்பணித்ததோடு அதற்கு பண உதவி செய்ய தன்னுடைய 24 பவுன் நகைகள் மற்றும் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடமும் நகைகள் வசூலித்து அவரது அண்ணன் ஜான் தக்கருக்கு அனுப்பி வைத்து உடனடியாக பெண்கள் கல்வி பயில ஒரு பள்ளியையும் ஆசிரிய கல்வி கற்பிக்க, ஆசிரிய பயிற்சி கல்வி நிறுவனம் ஒன்றை நிறுவவும் கேட்டு கொண்டாள். அவ்வாறு சாராள் தக்கர் அனுப்பின முதல் உதவித்தொகையில் 1843 ல் திருநெல்வேலி மாவட்டம், கடாட்சபுரத்தில் ஆசிரிய பயிற்சிப்பள்ளி பெண்களுக்கென தொடங்கபபட்டது. அதே வருடம் சாத்தான்குளத்தில் பெண்கள் பள்ளியும்,விடுதியும் கட்டப்பட்டது. கடாட்சபுரம் சாராள்தக்கர் ஆசிரியை பயிற்சியில் படித்து முடித்த ஆசிரியைகளைக் கொண்டு மிக குறுகிய காலத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, நல்லூர், திருநெல்வேலி சந்திப்பு போன்ற இடங்களில் 20க்கும் மேற்பட்ட கிளைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 1895ல் சாராள தக்கர் பெண்கள் கல்லூரி 40 புள்ளி 61 ஏக்கர் ஏக்கர் 61 ஏக்கர் ஏக்கர் பரப்பளவில் தென் இந்தியாவிலேயே முதன் முதலாக தொடங்கப்பட்டது. தன்னால் நடக்க முடியாவிட்டாலும், படுத்த படுக்கையில் இருந்து கொண்டே தையல் வேலைகளைச் செய்தும், தமது நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றும் பல முறைகள் பணம் அனுப்பி லட்சக்கணக்கான பெண்களுக்கு அறிவொளி ஏற்ற உதவிய சாராள் தக்கர் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவே இல்லை.மேலும் இந்தியாவிற்கு நேரில் வந்ததும் இல்லை

1857ம் வருஷம் சாராள் தக்கர் மறைந்தாலும் அவர் முன்னெடுத்த பணிகளை அவரின் தோழிகளான மரியா சைல்டர்ஸ், சோபியா டீக்கள், ஜோவன்னாகர் போன்றவர்கள் தொடர்ந்து செய்ததன் மூலம் பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் பள்ளி மற்றும் ஆசிரியை பயிற்சிப்பள்ளியை 1858ம் வருஷம் ஆரம்பிக்கப்பட்டது. இப்படியாக பல வருடங்களுக்கு முன்னால் உருவான கல்வி நிறுவனம் தான் பாளையங்கோட்டையில் பிரசித்தி பெற்ற சாராள் தக்கர் பள்ளி மற்றும் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி ஆகும்.[1]

கல்லூரி வரலாறு

[தொகு]

1895ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாநகரத்தில் நான்கு மாணவிகளுடன் இந்த மகளிர் கல்லூரி தொடங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்தக் கல்லூரி இரண்டாம் நிலை கல்லூரியாக கருதப்பட்டது. 1927ஆம் ஆண்டு இயற்கை அறிவியல், கணிதம் வரலாறு மற்றும் பொருளாதாரம் படிப்புகள் இணைக்கப்பட்டன. இரண்டாம் நிலை கல்லூரியிலிருந்து முதல் நிலைக்கு 1939 ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. 1942ஆம் ஆண்டு தமிழ் பாடத்திட்டமும் 1962 ஆம் ஆண்டு உயிரியல் இளங்கலை பட்டமும் 1961ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படிப்பும் அதற்கு அடுத்த ஆண்டு தாவரவியல் படிப்பும் தொடங்கப்பட்டது. 1966ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு இணைக்கப்பட்டது. 1968 ஆண்டுகளில் இயற்பியல் படிப்பு தொடங்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு முதன் முதலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் படங்களில் முதுகலை படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 1979ஆம் ஆண்டு இயற்பியலும் 1985 ஆம் ஆண்டு பொருளாதாரமும் 1986ம் ஆண்டு வேதியியலும் 1987 ஆம் ஆண்டு கணிதமும் முதுகலை படிப்பில் ஆரம்பிக்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு சுய நிதி படிப்புகள் தொடங்கப்பட்டது.1990 ம் ஆண்டு இந்தக்கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து மாற்றப்பட்டு திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்திட்டம் இளங்கலைப் படிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து வருடாவருடம் சுயநிதி பாடப் பிரிவில் பல்வேறு இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை குழுவினரால் பி++ தரமதிப்பீடு இந்த கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அறிவியல் நிறைஞர் படிப்பும் முனைவர் பட்டப் படிப்பும் இக்கல்லூரியில் ஆங்கிலம், தமிழ் மற்றும் பொருளாதாரம் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவினால் இக் கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்கப்பட்டது. ஆராய்ச்சி பிரிவுகள் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வாறு இந்த கல்லூரி பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொருளாதாரம் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, அறிவியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை கற்பித்து வருகிறது. [2] இந்தக் கல்லூரியின் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கல்வி கற்று தங்கள் வாழ்வில் உயர்ந்து வருகின்றனர்.

வழங்கும் படிப்புகள்

[தொகு]

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

முனைவர் படிப்புகள்

[தொகு]

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், வேதியியல் உயிரியல் மற்றும் கணினி அறிவியல் என மொத்தம் 6 பிரிவுகளில் முனைவர் பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.[3]

நிறைஞர் படிப்புகள்

[தொகு]

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் மற்றும் வேதியியல் என மொத்தம் 3 பிரிவுகளில் நிறைஞர் பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.[4]

முதுகலை படிப்புகள்

[தொகு]

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் கணினி அறிவியல் மற்றும் உணவியல் என மொத்தம் 11 கலை, அறிவியல் மற்றும் பொருளாதார பிரிவுகளில் முதுகலை பாடத்திட்டங்கள் இந்த கல்லூரியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.[5]

இளநிலைப் படிப்புகள்

[தொகு]

தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், வணிகம் , இயற்பியல், வேதியியல், கணிதம், தாவரவியல், உயிரியல் கணினி அறிவியல், கணிணி பயன்பாடு, உணவியல் மற்றும் நுண் அறிவியல் என மொத்தம் 15 பிரிவுகளில் இளங்கலை பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.[6]

சேவைகள்

[தொகு]

மாணவிகளின் கல்வி முன்னேற்றம் மட்டுமின்றி தனிப்பட்ட ஆர்வம், தனி நபர் மேலாண்மை போன்றவற்றையும் ஊக்குவிப்பதற்காக இந்த கல்லூரியால் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.[7]வங்கிப் பணிகள் மற்றும் அரசு பணிகளில் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கு மாணவிகளின் தனி வகுப்புகள் நடைபெறுகிறது. மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கெடுக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. பேச்சுத்திறமை, தொடர்பு கொள்ளும் திறமை, மொழியறிவு அதிகரித்தல் என தனிநபர் மேலாண்மைக்கான செயல்பாடுகள் அனைத்திற்கும் குழு அமைக்கப்பட்டு மாணவிகளின் பங்கெடுக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். கல்லூரி படிப்பிற்கு பின்பான வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்காக வேலைவாய்ப்பு மையமும் கல்லூரியில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது் 15க்கும் மேற்பட்ட அரசு உதவித் தொகைகள் சரியான மாணவிகளுக்கு சென்று சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 1000 முதல் 1500[8] வரையிலான மாணவிகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அனைத்து முயற்சிகளும் இந்த கல்லூரியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நிறுவனர் பற்றி =" இம் மூலத்தில் இருந்து 2017-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223005840/http://sarahtuckercollege.in/founder/. 
  2. "கல்லூரி வரலாறு =" இம் மூலத்தில் இருந்து 2017-12-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171223005617/http://sarahtuckercollege.in/history/. 
  3. "முனைவர் படிப்புகள் =". http://www.sarahtuckercollege.in/programmes/phd. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. "நிறைஞர் படிப்புகள் =". http://www.sarahtuckercollege.in/programmes/mphil. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "முதுநிலை படிப்புகள் =". http://www.sarahtuckercollege.in/programmes/pg. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "இளங்கலை படிப்புகள் =". http://www.sarahtuckercollege.in/programmes/ug. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "மாணவர் முன்னேற்ற திட்டங்கள் =". http://www.sarahtuckercollege.in/capability-enhancement-schrmes. [தொடர்பிழந்த இணைப்பு]
  8. "நூலக வசதி =". http://www.sarahtuckercollege.in/eresources. [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_டக்கர்_கல்லூரி&oldid=4070645" இலிருந்து மீள்விக்கப்பட்டது