சாரநாத் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரநாத் அருங்காட்சியகம்
சாரநாத் அருங்காட்சியகம்
சாரநாத் அருங்காட்சியகம் is located in இந்தியா
சாரநாத் அருங்காட்சியகம்
Location within இந்தியா
நிறுவப்பட்டது1910
அமைவிடம்சாரநாத் (வாரணாசி அருகில்)
வகைதொல்பொருள் அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவுபௌத்தக் கலை, சிற்பம், பழம்பொருள்கள்

சாரநாத் அருங்காட்சியகம் (Sarnath Museum) இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மிகப் பழமையான தள அருங்காட்சியகம் ஆகும். இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் சாரநாத்தின் தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் அகழ்வாய்வுப் பொருள்கள் இங்கு உள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசி அருகே சாரநாத் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 6,832 சிற்பங்கள் மற்றும் கலைப்பொருட்கள் உள்ளன. [1]

வரலாறு[தொகு]

தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க, சாரநாத்தில் அகழ்வாய்வு செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் ஒரு தள அருங்காட்சியகத்தை கட்ட 1904 ஆம் ஆண்டில் அரசாங்கம் முடிவு செய்தது. இந்தியாவின் தொல்பொருள் இயக்குநர் ஜெனரல் சர் ஜான் மார்ஷலின் முன்முயற்சியால் தான் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டங்களை இந்திய அரசாங்கத்தின் அப்போதைய ஆலோசனைக் கட்டிடக் கலைஞரான இருந்த திரு. ஜேம்ஸ் ராம்சன் தயாரித்தார். இந்த கட்டிடம் 1910 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் காட்சிப் பொருள்களை சரியான பார்வையில் அமைப்பதற்காக கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடத்தில் ஒரு பகுதியில் மடத்தின் (சங்கரம்) பாதி பகுதி அமைந்துள்ளது.

காட்சிக் கூடங்கள்[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில், கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12 ஆம் நூற்றாண்டு வரையிலான தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ஐந்து காட்சியகங்கள் மற்றும் இரண்டு வராண்டாக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

ஏராளமான புத்தர் மற்றும் போதிசத்துவ உருவங்கள் மற்றும் பிற பழங்கால எச்சங்களை உள்ளடக்கிய சிற்பங்கள், கலைப்பொருட்கள் மற்றும் மாளிகைகள் நிறைந்த தொகுப்பினை சாரநாத்தில் காண முடியும். பௌத்தக் கலையின் மிகச்சிறந்த மாதிரிகள் மற்றும் பிற முக்கிய எச்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தின் மிகவும் பிரபலமான ஒரு காட்சிப்பொருளாக அசோகாவின் சிங்கத் தூபியின் தலைப்பகுதியைக் கூறலாம். இருந்தாலும், சாரநாத் அருங்காட்சியகத்தில் மற்ற பௌத்த கலைப் பொருட்களின் காட்சித்தொகுப்புகள் காட்சிக்கு உள்ளன. இங்கு காணப்பட வேண்டிய கலைப்பொருள்களில் முக்கியமானதாக கிபி 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தரின் சிற்த்தைக் கூறலாம். அந்த புத்தர் சிற்பம் கால்களை குறுக்காக வைத்தபடி, அமர்ந்த நிலையில், ஆழ்ந்த தியானத்தில் கண்களைச் சற்று மூடிய வண்ணம் காணப்படுகிறது. தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் காணப்படுகிறது. இங்கு மேலும் பல போதிசத்துவர்களின் சிற்பங்கள் மிகவும் காணத்தக்கவையாக அமைந்துள்ளன.

மற்ற பௌத்த கலைப்பொருள்களில் ஒன்றாக நின்ற நிலையிலான ஒரு போதிசத்வரின் சிற்பத்தைக் கூறலாம். அந்த போதிசத்துவர் சிற்பம் கையில் தாமரையைக் கொண்டு அமைந்துள்ளது. இங்கு காணப்படுகின்ற, மற்றொரு வெண்கலத்தில் ஆன போதிசத்வர் உருவம் மிகவும் நுட்பமாக, பல ஆயுதங்களைக் கொண்டு அமைந்துள்ளது. அது பல கைகளைக் கொண்டுள்ளது. சாரநாத்தில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் மௌரிய,, குஷானா மற்றும் குப்தர் காலங்களைச் சேர்ந்த கலைப்பொருள்களும் சிற்பங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுவது சாரநாத்தில் ஆரம்ப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிற்பம் மற்றும் 9 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பல இந்து கடவுள்களின் சிற்பங்களும் ஆகும்.

அசோக சிங்கத் தூபியின் தலைப்பகுதி[தொகு]

சாரநாத் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற கலைப்பொருள்களில் மிகவும் முக்கியமானது அசோகாவின் புகழ்பெற்ற சிங்கத் தூண் சிற்பம் ஆகும்.இது முதலில் கி.மு. 250 ஆம் ஆண்டில் சாரநாத்தில் ஒரு அசோக தூணில் உச்சியில் அமைக்கப்பட்டது. இந்த படம் எடுக்கப்பட்ட கோணம், தலைகீழ் நிலையில் மணி வடிவில் அமைந்த தாமரை மலர் இல்லாமல் இருந்த வடிவமாகும். இது இந்தியாவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டதாகும். அசோக சக்கரத்தின் இடது புறத்தில் குதிரையையும், வலதுபுறத்தில் காளையையும் காண முடியும். வட்ட வடிவில் உள்ள இந்த அமைப்பில் பின்னுக்குப் பின் என்ற நிலையில் நான்கு இந்திய சிங்கங்கள் காணப்படுகின்றன. மாறாக, சற்றுத் தொலைவில் ஒரு யானை மற்றும் ஒரு சிங்கம் உள்ளது. "அசோக சக்கரம்" எனப்படுகின்ற இந்த சக்கரம் இந்திய தேசியக் கொடியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கியமான சேகரிப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Singh, Binay (26 March 2011). "A rich repertoire of glorious past". TNN. Varanasi: Times of India இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126043611/http://articles.timesofindia.indiatimes.com/2011-03-26/varanasi/29192006_1_antiquities-lion-capital-mauryan. பார்த்த நாள்: 4 December 2012. 

வெளி இணைப்புகள்[தொகு]

மேலும் காண்க[தொகு]