சாம் ஃகாரிசு (எழுத்தாளர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம் ஃகாரிசு
பிறப்பு1967 (அகவை 56–57)
ஐக்கிய அமெரிக்கா
தொழில்எழுத்தாளர்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
வகைஅபுனைவு
கருப்பொருள்மதங்கள், நரம்பணுவியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி எண்ட் ஆஃப் ஃபெயித்
லெட்டர் டூ எ கிரிஸ்டியன் நேஷன்
தெ மாறல் லேண்ட்ஸ்கேப்: ஹவ் சயன்ஸ் கேன் டிற்றேர்மின் ஹ்யூமன் வேல்யூஸ்
இணையதளம்
http://www.samharris.org

சாம் ஃகாரிசு (சாம் ஹாரிஸ்; Sam Harris, பி. 1967) ஒரு அறியப்பட்ட அ-புனைவு எழுத்தாளர். இவர் அறிவிய ஐயுறவியல் பார்வை கொண்டவர். இவரது தீவிர நுணுக்கமான இறைமறுப்பு நூல்களுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார்.

நிலைப்பாடுகள்[தொகு]

  • அரசியல், பொருளாதார கொள்கைகள் எப்படி விமர்சனத்துக்கு உள்ளாகின்றனவோ, அதே போல் சமய நம்பிக்கைகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவை. சமயங்களைப் புனிதப்படுத்தி விமர்சனத்தை தவிர்ப்பது ஆரோக்கியமானது அல்ல.
  • விவிலியம், குர் ஆன், பகவத் கீதை போன்ற நூல்களில் உள்ள பல விடயங்கள் அறிவியலினால் பிழை அல்லது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளன. இவற்றை பிழை தவறாத இறை நூல்கள் என்று கருதுவது மடமைத்தனம்.
  • இசுலாமிய நம்பிக்கைகள் வன்முறையைத் தூண்டுகின்றன. சமண சமயத்தவர், அல்லது திபெத்தன் பெளத்தர் இவ்வாறு செய்கிறார்களா? எனவே எல்லா சமயங்களையும் ஒரே தராசில் வைத்து அளக்க முடியாது. சில கூடிய ஆபத்துடையவை.
  • சமயங்கள் அறத்தைப் போதிக்கின்றன என்பது முற்றிலும் பொருத்தமான கூற்று அல்ல. பல சமயங்கள் அடிமைத்தனத்தை, ஆண் ஆதிக்கத்தை ஆதரித்தன, ஆதரிக்கின்றன. கத்தோலிக்க சமயத்தார் ஆபிரிக்கர்களுக்கு ஆணுறை பயன்பாட்டை தடுப்பது எயிட்ஸ் பரவலை ஊக்குவிக்கிறது.

அறநெறி விழுமியங்களை அறிவியலே நிர்ணயிக்கிறது[தொகு]

சாம் ஃகாரிசு தாம் எழுதிய தெ மாறல் லேண்ட்ஸ்கேப்: ஹவ் சயன்ஸ் கேன் டிற்றேர்மின் ஹ்யூமன் வேல்யூஸ் என்னும் நூலில் இரு முக்கிய கருத்துகளை நிலைநாட்ட முனைகிறார்:

  • மனித வாழ்க்கையில் நன்மை தீமை பற்றிய மதிப்பீடுகள் உள்ளன என்பதை மறுக்கவியலாது. ஆனால் அத்தகைய அறநெறி மதிப்பீடுகள் இருப்பதற்கு கடவுள் என்றொருவர் வேண்டும் எனத் தேவையில்லை.
  • கடவுள் இல்லை என்னும் கொள்கையைத் தழுவுவோர் அறநெறி மதிப்பீடுகள் தனி மனித விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் அமையும் என்று கூறுவதாக நாம் கருதவேண்டியதில்லை.

கடவுள் இல்லாத உலகில் "அறநெறி உண்மைகள்" உள்ளன; ஆனால் அந்த உண்மைகள் "அறிவியல் ஆய்வின்" வழியாகத் தான் கண்டுபிடிக்கப்பட முடியும். எனவே, உண்மை (fact) என்பது ஒன்று, மதிப்பீடு (value) என்பது வேறு என்னும் கொள்கை தவறானது. மனிதர்கள் இன்னும் கண்டுபிடிக்காத அறிவியல் உண்மைகள் இருப்பதுபோல, அறநெறி சார்ந்த மதிப்பீடுகளை ஏற்க கடவுள் வகுத்த சட்டம் தேவை இல்லை; மாறாக, அறிவியல் ஒருநாள் அறவியல் மதிப்பீடுகளுக்கு முழுமையான விளக்கம் தர முடியும். இது ஃகாரிசின் கருத்து.

கடவுள் இல்லை என்றதும் ஒவ்வொரு மனிதரும் தாம் விரும்பியதுபோல நடக்கலாம் என்று பொருளாகாது. கடவுள் இல்லை என்றாலும் நன்னெறி ஒழுங்குகள் பிரபஞ்சத்தில் உள்ளன; அவை தனிமனித விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட உண்மைகள். அவற்றை நாம் இன்னும் முழுமையாகக் கண்டுபிடிக்காமலிருக்கலாம்; ஆனால் அவற்றை அறிவியல் ஒருநாள் கண்டுபிடிக்கும் என்கிறார் ஃகாரிசு.

"உணர்வு கொண்ட உயிரினங்களின் நலவாழ்வை" (well-being of conscious creatures) வளரச் செய்வதே அறநெறியின் நோக்கம் என்கிறார் ஃகாரிசு. இந்த உயிரினங்கள் மனிதரும் விலங்குகளும் ஆவர். இந்த உயிரனங்களின் "நலவாழ்வு" எதில் அடங்கியிருக்கிறது என்பது குறித்து மனிதரிடையே ஒத்த கருத்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், இதை ஒரு தடையாக நாம் கருத வேண்டியதில்லை. ஏனென்றால், ஒருநாள் அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக அந்த "நலவாழ்வை" கணிக்கின்ற அளவீடுகள் கண்டிப்பாகக் கண்டுபிடிக்கப்படும்; அந்த அளவீடுகளின் அடிப்படையில் மனிதரும் தங்கள் அறநெறி வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்கள். இவ்வாறு கூறுகின்றார் ஃகாரிசு.

ஃகாரிசின் அறநெறிக் கொள்கைக்கு மறுப்பு[தொகு]

ஃகாரிசு மனித "நலவாழ்வு" பற்றிப் பேசும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொறுப்பு மனிதருக்கு உண்டு என்பதைக் குறிப்பிடத் தவறிவிட்டார் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். சுற்றுச்சூழல் என்பது மனிதருக்காகவே உள்ளதுபோல அவருடைய வாதம் அமைகிறது. எப்படியாவது மனித நலனை வளர்த்தால் போதும், வேறு ஒன்றைப் பற்றியும் கவலை வேண்டியதில்லை என்பது அவர் கருத்து.

ஃகாரிசின் நூல்களை ஆய்வுசெய்த ஜில்ஸ் ஃப்ரேசர் (Giles Fraser) கூற்றுப்படி, ஃகாரிசு ஒரு குறிப்பிட்ட விதத்தில் "கடவுள் உருவகத்தை" உருவாக்கி அந்தக் கடவுள் இல்லை என்று வாதாடுகிறார். மனித பலி கேட்டு, மனிதரைக் கொடுமைப்படுத்தி, இன ஒழிப்பில் ஈடுபட்டு, அனைத்து அநீதிகளையும் நியாயப்படுத்துபவர் கடவுள் என்றால் அத்தகைய கடவுள் இருக்கமுடியாது என்று கடவுள் நம்பிக்கை கொண்டவர்களே கூறுவார்கள் என்று ஃப்ரேசர் சுட்டிக் காட்டுகிறார் [1].

மனிதரின் அறநெறி வாழ்க்கை என்பது "நலவாழ்வு" என்பதன் பொருள் என்ன? ஃகாரிசின் கருத்துப்படி, அறிவியல் சோதனைகள் மூலம் மெய்ப்பிக்கக் கூடுமான மனித மூளையின் செயல்கள்தான் "நலவாழ்வு". மூளையின் எண்ணிறந்த செயல்பாடுகளில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடுகளே மனித நலனைக் குறிக்கும் என்பதை நிர்ணயிக்கும்போது தனிமனித விருப்பு வெறுப்பு அங்கே நுழைந்துவிடாதா என்னும் கேள்விக்கு ஃகாரிசு பதிலளிப்பதாகத் தெரியவில்லை.

ஃகாரிசு கடவுள் உண்டு என்பதை மறுக்கிறார். ஆனால் மனிதருக்கு அடிப்படைத் தேவைகள் உண்டு என்றும், மனித உரிமைகள் மீற இயலாதவை என்றும் ஏற்றுக்கொள்கிறார். அதே நேரத்தில் உலகமும் மனித நலனும் பொருள்நிலை சார்பாக மட்டுமே இருக்கின்றன என்றும், மனித சுதந்திரம் என்று ஒன்றில்லை என்றும் அவர் கூறுவதால் மனித இதயத்தின் ஏக்கங்கள் ஏன் உள்ளன என்பது பற்றிய விளக்கம் அவருடைய கொள்கையில் இல்லை. நன்மையையும் தீமையையும் எடைபோட்டு, மதிப்பீடு செய்து, நன்மையைத் தேர்வு செய்கின்ற சக்தி மனிதர்களுக்கு இல்லை என்று கூறும்போது, அவர்களுடைய சுதந்திரம் மறுக்கப்படும்போது, மனித நலன் எவ்வாறு மேம்படுத்தப்படக் கூடும் என்பதற்கு ஃகாரிசின் கொள்கையில் விளக்கம் இல்லை.

நன்மை எது தீமை எது என்று தீர்மானிக்கும் மனித செயலைக் ஃகாரிசு நரம்புசார் அறிவியலின் (neuroscience) அடிப்படையில் மூளையின் செயலாக மட்டுமே புரிந்துகொள்கிறார். மூளையின் செயல்பாடு "உண்மை" என்பதால், அறநெறி மதிப்பீடுகள் உண்மையாகின்றன என்பது அவருடைய வாதம். ஆனால், ஃகாரிசு கருத்துப்படி, மூளையின் செயலையும் இயக்குகின்ற "தன்னிருப்பு நிலை" (subjectivity) ஒன்று ஏற்கப்பட முடியாது. இந்தத் "தன்னிருப்பு நிலை" இல்லையென்றால் மனித நிலைக்கு அப்பால் உள்ள ஓர் உயர்ந்த நிலையில் உள்ளவர்களின் "நலன்" உயரவேண்டும் என்றால் மனித இனம் அழியவேண்டும் என்றொரு சூழ்நிலை எழுந்தால் அப்போது மனித இனத்தைப் பலியாக்குவதற்கும் தயங்கப் போவதில்லை என்று ஃகாரிசு கூறுகிறார். இக்கருத்தையும் எதிர்த்து ஃப்ரேசர் விமர்சிக்கிறார்.

தன்னிருப்பு நிலை என்று ஒன்று இல்லை என்று மறுக்கின்ற ஃகாரிசின் வாதம் முழுவதுமே இந்தத் தன்னிருப்பு நிலையின் வெளிப்பாடுதான் என்றும், இங்கே ஃகாரிசின் நிலைப்பாட்டில் ஆழ்ந்ததொரு முரண்பாடு தோன்றுகிறது என்றும் ஃப்ரேசர் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் நம்பிக்கையை மறுக்கின்ற ஃகாரிசு "அறிவியல் சார்ந்த பகுத்தறிவு" (scientific reason) மட்டுமே உண்டு, அதை விஞ்சிய எதுவும் இல்லை என்று வாதாடுகின்ற அதே மூச்சில், தமது வாதத்தைக் கடவுள் நம்பிக்கைபோல ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் கட்டி எழுப்புகிறாரே ஒழிய, அறிவியல் முறையில் நிரூபிக்கவில்லை என்பது ஃப்ரேசரின் விமர்சனம்.

ஆதாரங்கள்[தொகு]