சாமி சிதம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமி சிதம்பரம்
பிறப்பு(1900-12-01)1 திசம்பர் 1900
கடக்கம், நாகப்பட்டினம் மாவட்டம்
இறப்புசனவரி 17, 1961(1961-01-17) (அகவை 60)
அறியப்படுவதுதமிழ் இதழாளர், எழுத்தாளர்

சாமி சிதம்பரனார் என்று பரவலாக அறியப்பட்ட சாமி. சிதம்பரம் (திசம்பர் 1, 1900 – சனவரி 17, 1961) ஒரு தமிழ் இதழாளர், எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்க செயல்பாட்டாளர்.

பிறப்பு[தொகு]

சாமி சிதம்பரம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கடக்கம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது பெற்றோர் - சாமிநாத மலையமான் - கமலாம்பாள் அம்மையார்.

கல்வி[தொகு]

1923ல் “பண்டிதர்” பட்டம் பெற்றார்.

ஆசிரியர்[தொகு]

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் முதலில் தமிழாசிரியரகப் பணியாற்றினார். பின்னர் அன்றைய தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த பின்வரும் மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்:

  • 1924 மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளி, அரசமடம். இங்கு பயின்ற மாணவர்களில் ஒருவரே தமிழறிஞர் சி. இலக்குவனார் ஆவார்.
  • 3-1-1932 முதல் விக்டோரியா மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளி, பாபநாசம், தஞ்சை மாவட்டம். [1]

திருமணம்[தொகு]

5 மே 1930 அன்று சிவகாமி என்னும் கைம்பெண்ணை சுயமரியாதைத் திருமண முறையில் மணம் புரிந்தார்.[2] இத்திருமணம் பெரியார் ஈ. வே. ராமசாமியின் சொந்த ஊரான ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் நடந்தது.

சுயமரியாதை இயக்கத்தினர்[தொகு]

பெரியார் ஈ. வே. ராமசாமியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் 1929-30ல் மலேசியா சென்ற போது சிதம்பரமும் உடன்சென்றார். 1932ல் ஐரோப்பியப் பயணத்திலிருந்து திரும்பிய பெரியார் ம. சிங்காரவேலுவின் பொதுவுடைமை சிந்தனைகளால் கவரப்பட்டு சுயமரியாதை இயக்கத்தை ஒரு பொதுவுடைமைக் கட்சியாக மாற்ற நினைத்த போது அதனை எதிர்த்தார். எஸ். ராமனாதனும் சிதம்பரத்துடன் சேர்ந்து எதிர்த்ததால் பெரியார் சுயமரியாதை இயக்கத்தை மாற்றாமல் தனியே சுயமரியாதை சமதர்மக் கட்சி என்ற பெயரில் தனியே ஒரு கட்சியைத் தொடங்கினார். 1940களில் பெரியாருடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார். திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை மறுத்து இருவரும் ஒரே இனம் என்ற கருத்தை வலியுறுத்தினார்.

இதழாளர்[தொகு]

சிதம்பரம் 1930களில் ஆண்டுகளுக்கு திராவிட/சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை அவற்றுள் சில. இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றியுள்ளார். 1936-38 காலகட்டத்தில் அறிவுக்கொடி என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1950களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தி யில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆய்வுக்கருத்துகள்[தொகு]

  • சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல; பிற்காலத்தியவை. .
  • இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர்.
  • சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விசயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு.

படைப்புகள்[தொகு]

சிதம்பரம் மாணவர்களுக்கான் பாடநூல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய ஆய்வு நூல்கள் என சுமார் அறுபது நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:

  1. அணைந்த விளக்கு - குண்டலகேசி காப்பியம்
  2. அணைந்த விளக்கு (வசன நாடகம்)
  3. அருட்பிரகாசர் அமுத வாசகம்
  4. அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்
  5. அருள்நெறித் தொடர் (1-6)
  6. ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன்
  7. இலக்கியச்சோலை
  8. இலக்கிய நுழைவாயில்
  9. இலக்கியம் என்றால் என்ன? - இரு பகுதிகள்
  10. இன்பசாகரன் (வசன நாடகம்)
  11. எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும்
  12. கம்பன் கண்ட தமிழகம் (1955)
  13. கற்பரசியார் நளாயினி வெண்பா
  14. காரல் ஹென்றி மார்க்ஸ்
  15. சாமி. சிதம்பரனார் சிந்தனைச்செய்யுள்
  16. சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
  17. சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு (சிலப்பதிகாரத் தமிழகம் [3]
  18. தமிழர் தலைவர் (1939 வரையான பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிந்துள்ள இந்நூல் இன்று வரை பெரியார் ஆய்வாளர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.)
  19. திருக்குறள் பொருள்விளக்கம்
  20. தொல்காப்பியத் தமிழர்
  21. நாலடியார் பாட்டும் உரையும்
  22. பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்
  23. பத்துப்பாட்டும் பண்டைத் தமிழரும்
  24. பழந்தமிழர் அரசியல்
  25. பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
  26. புகழேந்தியின் புலமை
  27. புதிய தமிழகம்
  28. புதுக்குறள்
  29. மணிமேகலை காட்டும் மனித வாழ்வு
  30. மாதர் சுதந்திரம் அல்லது பெண்மக்கள் பெருமை (1931)
  31. மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை
  32. வடலூரார் வாய்மொழி
  33. வளரும் தமிழ்
  34. வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி
  35. வள்ளுவர் வாழ்ந்த தமிழகம்; ஜனசக்தி பிரசுராலயம், சென்னை.; 200 பக்கங்கள்

சான்றடைவு[தொகு]

  1. குடி அரசு 3-1-1932 பக்.12
  2. பெரியாரும் தமிழ் தேசியமும் | வாலாசா வல்லவன் | மன்றம் உரைகள் | Mantram Talks - Part 1, பார்க்கப்பட்ட நாள் 2022-10-30
  3. அமைச்சன் இதழ் 1964 திசம்பர்

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமி_சிதம்பரம்&oldid=3630719" இலிருந்து மீள்விக்கப்பட்டது