சான் சல்லிவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் சல்லிவன்
சான் சல்லிவன்
பிறப்பு15.06.1788
இலண்டன்
இறப்பு16.01.1855
இலண்டன்
தேசியம்இங்கிலாந்து
பணிகோவை மாவட்ட ஆட்சியர்
அறியப்படுவதுநீலகிரியின் தந்தை

சான் சல்லிவன் (ஜான் சல்லிவன்; John Sullivan) 1815 முதல் 1830 வரை அன்றைய பிரித்தானிய அரசின் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். நீலகிரியின் தந்தை என அழைக்கப்படும் இவராலேயே, 1819ம் ஆண்டுவாக்கில் நீலகிரி மாவட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. 1804ம் ஆண்டு சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில்யில் சாதாரண எழுத்தராக சேர்ந்த சல்லிவன், தனது கடின உழைப்பால் படிப்படியாக உயர்ந்து 1839ம் ஆண்டு ஆளுனர் அவை உறுப்பினராக உயர்ந்தார். இயற்கை, சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரின் முயற்சியாலேயே ஊட்டி ஏரி வெட்டப்பட்டது[1]. 1841ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இங்கிலாந்து திரும்பிய பின், 1855ம் ஆண்டு மரணமடைந்தார்.

இளமைக்காலம்[தொகு]

சல்லிவன் 1788ம் ஆண்டு சூன் 15ம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனில் பிறந்தார். இவரது தந்தை சிட்டீபன் சல்லினன், தஞ்சை நகரில் கிழக்கிந்திய நிறுவனத்தின் சார்பாக பணியாற்றியவர்.[2]. இவரின் முயற்சியால் தஞ்சையை சுற்றி பல ஆங்கில வழி கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. தாயார் பெயர் ஆன் சல்லினன் ஆகும். சான் சல்லினன் அரித்மெடிக் அண்ட் மெர்ச்சன்ட் அக்கௌன்டிங்க் ( Arithmetic and Merchant Accounting ) பிரிவில் தனது கல்லூரிப் படிப்பை முடித்தார்.

கிழக்கிந்திய நிறுவனப்பணி[தொகு]

சல்லிவன், தனது 15ஆவது வயதில் (ஆகத்து 1803) சென்னை கிழக்கிந்திய நிறுவனத்தில் எழுத்தராக சேர்ந்தார். இதன் பிறகு சிறிது சிறிதாக உயர்ந்த இவர், 1806ம் ஆண்டு தென்னார்க்காடு மாவட்ட நீதிமன்ற பதிவராகவும், 1807ம் ஆண்டு ரகசிய காப்பு, அரசியல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சக தலைமை செயலரின் உதவியாளராகவும், 1809ம் ஆண்டு மைசூரில் அமைந்திருந்த இங்கிலாந்து அமைச்சக உதவியாளராகவும், 1814ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராகவும், 1815ல் கோவை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அதே ஆண்டு கோவை மாவட்ட நிரந்தர ஆட்சியராகவும் நியமிக்கப்பட்டார்.

நீலகிரி உருவாக்கம்[தொகு]

கோத்தகிரியில் உள்ள நினைவகம்

இதன் பிறகு 1819ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் நாள், பிரான்சு நாட்டை சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலரான சேன் பாபிசுட் லூயிசுடனும் (Jean Baptiste Louis), படகா பழங்குடியின வழிகாட்டியுடனும் உதகமண்டலப் பகுதியை அடைந்தார். சுமார் மூன்று வார காலம் அந்த பகுதியை சுற்றிப்பார்த்த இவர், அங்கேயே ஒரு கல் வீட்டையும் கட்டினார்[1]. நீலகிரியின் முதல் கட்டிடமான இது இன்றளவும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உள்ளது. இதன் பிறகு இந்தப் பகுதியை கோடை இருப்பிடமாக மாற்ற எண்ணி, இந்த பகுதியில் நிறைய குடியேற்றங்களை உருவாக்கினார். மேலும், மக்கள் எளிதில் இந்தப் பகுதியை அணுகவேண்டி, 1820ஆம் ஆண்டு சிறுமுகையில் இருந்து ஒரு புதிய தரைவழிப் பாதையை ஏற்படுத்தினார்.

இதன் பிறகு ஐரோப்பிய, தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து பல வகையான மலர்கள், காய்கள், பழம் தரும் மரவகைகளை இறக்குமதி செய்து நீலகிரி மாவட்டத்தில் நட்டார். படகா பழங்குடி இன மக்களின் உயர்வுக்காக மேம்படுத்தப்பட்ட பார்லி விதைகளையும் இறக்குமதி செய்தார். மேலும் ஊட்டி நகரின் நடுவில் ஒரு மிகப்பெரிய ஏரியையும் வெட்டினார். மேலும் மலையின் பல பகுதிகளில் ஓடிய சிறிய ஓடைகளை அந்த ஏரியுடன் இணைத்து அதன் நீர்வளத்தை உறுதி செய்தார்.

குடும்பம்[தொகு]

கன்னேரி முக்கு என்ற இடத்தில் உள்ள சல்லிவன் நினைவகத்தில் வைக்கப்பட்டுள்ள சிலை

சல்லிவன் கென்ரித்தா என்பவரை 1820ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1822ம் ஆண்டு காரியட் ஆன் என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து மொத்தம் ஒன்பது குழந்தைகள் இவர்களுக்குப் பிறந்தன. இதில் இரண்டு குழந்தைகள் ஊட்டியிலேயே இறந்து விட்டன. மேலும் 1838ம் ஆண்டு கென்ரித்தாவும் ஊட்டியிலேயே இறந்துவிட்டார். இவர்கள் மூவரின் உடல்களும் அங்கேயே புனித சிட்டீபன் பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவரின் முதல் மகன் கென்றி எட்வர்ட் இவரைப் போலவே கோவை மாவட்ட ஆட்சியராக பின்னாட்களில் (1869ம் ஆண்டு) நியமிக்கப்பட்டார்[2].

இறப்பு[தொகு]

பல கம்பெனி பொறுப்புகளை வகித்த சல்லிவன், 1841ம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு பெற்றுக்கொண்டு இங்கிலாந்துக்குத் திரும்பினார். அங்கு தனது குழந்தைகளுடன் தனது இறுதி நாட்ளைக் கழித்தார். 1855ம் ஆண்டு சனவரி 16ம் நாள் தனது 66ம் வயதில் அங்கேயே இறந்தார்.

விடுதலை பெற்ற இந்தியாவில், சல்லிவனைப் பெருமைப்படுத்தும் வகையில் அவரின் கல்லறையை கண்டுபிடிக்கும் பணி 1999 தொடங்கி 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இறுதியில் சூலை 14, 2009 அன்று, இங்கிலாந்தின் ஈத்ரு விமான நிலையம் அருகில் உள்ள புனித லாரன்சு பேராலயத்தில் இவரது கல்லறை கண்டுபிடிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-12-20. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  2. 2.0 2.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-11-28. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-07-15. பார்க்கப்பட்ட நாள் 2009-08-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_சல்லிவன்&oldid=3815757" இலிருந்து மீள்விக்கப்பட்டது