உள்ளடக்கத்துக்குச் செல்

சாந்தோக்கிய உபநிஷதம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தோக்கிய உபநிஷதம் (நூல்)
சாந்தோக்கியம் உபநிடத நூலின் அட்டைப் படம்
மொழிபெயர்ப்பாளர்சுவாமி ஆசுதோஷானந்தர்
பட வரைஞர்அட்டைப் படம் - வசந்தன்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைவேதாந்தம்
வெளியீட்டாளர்இராமகிருஷ்ண மடம், சென்னை, மைலாப்பூர் சென்னை 600 004
வெளியிடப்பட்ட நாள்
24-12-2013
பக்கங்கள்738
ISBN978-81-7883-668-3

சாந்தோக்கிய உபநிஷதம் (நூல்): சாம வேதத்தின் இறுதிப் பகுதியில் அமைந்த சாந்தோக்கிய உபநிடத வேதாந்த நூலினை தமிழில் ஆக்கியவர் இராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த துறவி சுவாமி ஆசுதோஷானந்தர். இந்நூலினை 24-12-2013-இல் வெளியிட்டவர்கள், இராமகிருஷ்ணமடம், சென்னை.

சாந்தோக்கிய உபநிடதத்திற்கு ஆதி சங்கரரின் விளக்க உரைகளையே, இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் கையாண்டுள்ளார்.

நூலின் சிறப்பு

[தொகு]

சங்கரர் விளக்க உரை எழுதிய பத்து உபநிடதங்களில் இதுவும் ஒன்று. மேலும் பிரகதாரண்யக உபநிடதத்திற்கு அடுத்து அமைந்த பெரியதும், நூற்றுக்கணக்கான வித்யைகள் எனும் தியானங்கள், உபாசனைகள் மற்றும் பிரார்த்தனைகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் எடுத்துக் கூறுகிறது. இந்நூலின் ஆறாவது அத்தியாத்தில் தத்துவமசி என்ற மகாவாக்கியத்திற்கு எட்டு எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பொருள் தருகிறது.

நூலின் அமைப்பு

[தொகு]

இந்நூல் எட்டு அத்தியாயங்கள், 154 பகுதிகள், 628 மந்திரங்கள் கொண்டது. ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதலில் சமஸ்கிருத மூலம், பிறகு அதன் தமிழ் வடிவம், பதவுரை, பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் என்ற அமைப்பில் நூல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மந்திரத்திற்கும் முதலில் சமசுகிருத மொழியில் மூலமும்; பின் அதன் தமிழ் வடிவம், பதவுரை, பொழிப்புரை, திரண்ட பொருள் விளக்கம் எனும் அமைப்பில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.

நூலின் விளக்க உரை அமைப்பு

[தொகு]

சாந்தோக்கிய உபநிடதத்தின் தமிழ் விளக்கவுரை, இதனை முதன் முதலாகப் படிப்பவர்களை நோக்கமாக்க் கொண்டு எழுதப்பட்டுள்ளது. எனவே மூன்று விசயங்கள் இந்த மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக கொண்டுள்ளது:

  1. இதில் வேதாந்த தத்துவங்களைக் கருத்தில் கொள்ளாமல், கடவுள் என்ற உணர்வுக்கு முதலிடம் கொடுத்து இந்நூல் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
  2. காலம், இடம் போன்ற இலக்கண நியதிகளுக்கும் மொழிபெயர்ப்பில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
  3. காலத்தால் முந்திய சங்கரரின் விளக்கவுரையை முற்றிலும் பின்பற்றாவிட்டாலும், தேவையான இடங்களில் மற்ற உரையாசிரியர்களின் கருத்துக்களையும் இந்நூலில் ஆசிரியர் கையாண்டுள்ளார்.

நூலின் விளக்க உரைக்கு துணை செய்த நூல்களும் கட்டுரைகளும்

[தொகு]
  • சுவாமி சுவாஹானந்தரின் சாந்தோக்கிய உபநிடதம்; ஆங்கில மொழி நூல், வெளியீடு, இராமகிருஷ்ண மடம், சென்னை.
  • சாந்தோக்கிய உபநிடதத்திற்கு சுவாமி லோகேஸ்வரானந்தரின் ஆங்கில விளக்கவுரை, வெளியீடு; The Ramakrishna Mission Institute of Culture, Golpark, kolkatta - 700 029.
  • சுவாமி பரமார்த்தனந்தரின் ஆங்கில வேதாந்த-உபநிடதச் சொற்பொழிவுகள்.
  • இராமகிருஷ்ண மடம், சென்னை, சுவாமி பஜனானந்தர் எழுதிய தலையங்க கட்டுரைகள் மற்றும் சென்னை இராமகிருஷ்ண மடத்தின் ஆங்கில இதழான 'Prabuddha' வில் வெளியான 'The Integral Vision of Vedic Seers' என்ற பகுதி.

இந்நூலை படிப்பதின் பயன்கள்

[தொகு]

சாந்தோக்கிய உபநிடத நூல் கூறும் பல்வகையான வித்யைகளை (தியானம், உபாசனை, பிரார்த்தனை) கடைப்பிடித்தால், வளமான வாழ்க்கை, கல்வி, செல்வம், பிள்ளைச் செல்வம், புகழ் மிக்க வாழ்க்கை, வசீகர ஆற்றல், கால்நடைச் செல்வம் போன்ற இல்வாழ்க்கைத் தேவையான செல்வங்களை அடையலாம். அதே நேரத்தில் ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் காணலாம் என விளக்குகிறது.

முதல் அத்தியாயம்

[தொகு]

இந்நூலின் முதல் அத்தியாயத்தில் உத்கீத தியானம் எனும் ஓங்கார பக்தி விளக்கப்படுகிறது. உத் எனில் உரத்த உரல்; காயதி (கீதம்) எனில் பாடப்படுதல் எனப் பொருள். பொதுவாக ஓங்காரம் மூன்று மாத்திரை அளவில் ஒலிக்கப்படும். ஆனால் இங்கு உத்கீத தியான பக்தியில் மூன்றறை மாத்திரை கால அளவில் ஓங்காரத்தை ஆலம்பனமாகக்(ஆதாரமாகக்) கொண்டு தியானிப்பது உத்கீத தியானம். உத்கீதம் எவ்வாறு பாடி தியானிப்பது குறித்து விளக்கப்படுகிறது. இவ்வத்தியாயத்தில் கூறப்படும் இதர உத்கீத தியானங்கள்;

  1. பிராண உத்கீத தியானங்கள்
  2. தேவதா உத்கீத தியானங்கள்
  3. ஓங்கார தியானம்
  4. பிராண-சூரிய-உத்கீத பன்முக தியானம்
  5. பொன்ணொளிர் (இரண்யகர்பன்) தெய்வ தியானம்
  6. கண்ணில் உறைகின்ற தெய்வ தியானம்
  7. அனைத்திற்கும் மேலான பரம்பொருள் தியானம்
  8. பக்தி - தேவதை தியானம்
  9. உணவிற்காகப் பிரார்த்தனை
  10. ஸ்தோப தியானம்

இரண்டாம் அத்தியாயம்

[தொகு]

இந்நூலின் இரண்டாம் அத்தியாத்தில் ஐந்து அல்லது ஏழு பகுதிகள் கொண்ட முழுமையான சாம வேத மந்திரங்களைத் தேவதைகளாகத் தியானிப்பது பற்றி விளக்கப்படுகிறது. மேலும் பல்வகை சாம கானங்கள், நான்கு வர்ணாசிரம தர்மங்கள் மற்றும் சவனச் சடங்குகள் குறித்து விளக்கப்படுகிறது. இவ்வத்தியாத்தில் கூறப்படும் 21 தியானங்கள்;

  1. நன்மை தியானம்
  2. ஐவகை தியானம்
  3. மழை தியானம்
  4. தண்ணீர் தியானம்
  5. பருவ கால - தியானம்
  6. மிருக தியானம்
  7. புலன்கள் - தியானம்
  8. எழுத்து தியானம்
  9. சூரிய தியானம் 1
  10. சூரிய தியானம் 2
  11. நிபந்தனை தியானம்
  12. ரதந்திர சாம தியானம்
  13. வாமதேவ தியானம்
  14. பிருகத் ஆதித்ய தியானம்
  15. வைரூப்ய தியானம்
  16. வைராஜ தியானம்
  17. சக்வரீ தியானம்
  18. ரேவதீ தியானம்
  19. யஜ்ஞாயஜ்ஞீய தியானம்
  20. ராஜான தியானம்
  21. சர்வ தியானம்

மூன்றாம் அத்தியாயம்

[தொகு]

இந்நூலின் மூன்றாம் அத்தியாயத்தில் மது வித்யை அல்லது மது வித்யா தியானம் குறித்தும், அதன் பயன்கள் குறித்தும் விளக்கப்படுகிறது. மேலும் காயத்ரீ பிரம்ம வித்யை, இதய வாசற்காவல் தேவதை தியானம், சாண்டில்ய வித்யை, மகனுடைய ஆயுளுக்கான தியானம், நீண்ட ஆயுளுக்கான தியானம், மன-ஆகாய தியானம் மற்றும் பிரபஞ்ச முட்டை தியானம் விளக்கப்படுகிறது.

மது எனில் தேன். மனிதர்கள் செய்யும் நல்வினைகள் அனைத்தின் பிரதிநிதியாகத் திகழ்கிறான் சூரியன். சூரிய தேவனைத் தேவர்களின் தேனாகக் கருதி செய்யப்படுகின்ற தியானமே மதுவித்யை.

நான்காம் அத்தியாயம்

[தொகு]

ரைக்வ முனிவர் ஜானச்சுருதி என்ற மன்னனுக்கு உபதேசித்ததே இந்த சம்வர்க வித்தை. இவ்வித்தை வாயுவையும் பிராணனையும் அனைத்தையும் கிரகிக்கின்ற தெய்வங்களாகப் போற்றுகின்ற வித்தையாகும். இவ்வித்தை ஒரு கதை வடிவில், தியானங்களைப் பழகுவதற்கு எத்தகைய மனநிலை வேண்டும் என்பதும் விளக்கப்படுகிறது. மேலும் யாகம் செய்யும் போது ஏற்படும் தவறுகள்; அத்தவறுகளுக்கான பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளது. சத்தியகாமன் கதை, காளையின் உபதேசம், அக்கினியின் உபதேசம், அன்னப்பறவையின் உபதேசம், நீர்ப்பறவையின் உபதேசம், கௌதமரின் உபதேசம், பிராண-ஆனந்த-ஆகாய தியானம், கார்ஹபத்ய அக்னி தியானம், தட்சிண அக்கினி தியானம், அட்சி புருஷ தியானங்கள் விளக்கப்பட்டுள்ளது. இவ்வத்தியாத்தில் கூறப்படும் வித்யைகள்;

  1. சம்வர்க வித்யை
  2. சோஷடசகலா வித்யை
  3. உபகோசல வித்யை

ஐந்தாம் அத்தியாயம்

[தொகு]

பிராணன் என்பது பிரபஞ்ச்த்தையும், நமது உடலையும் இயக்க வல்லது. எனவே பிராண வித்யை வலியுறுத்தப்படுகிறது. பிராணக்கினி வித்தைகள்;

  1. பிராண வித்யை
  2. பஞ்சாக்கினி வித்தை
  3. வைஸ்வானர அக்கினி வித்யை
  4. பிராணாக்கினி ஹோத்ரம் - நாம் உண்பதையே அக்னிஹோத்திரமாக செய்வதே பிராணாக்னி ஹோத்ரம் ஆகும். இதனால் பஞ்ச பிராணன் திருப்தி அடைகிறது.

ஆறாம் அத்தியாயம்

[தொகு]

இவ்வத்தியாயம் வேதாந்த தத்துவங்கள் பேசுகிறது. தியானத்தின் விளைவான ஆன்ம அனுபூதி பற்றி கூறுகிறது. உபநிடதங்களின் உச்சக்கட்ட உபதேசமான அத்வைத அனுபவம் கூறப்படுகிறது. அடிப்படையில் மனிதனும் இறைவனும் ஒரே சைதன்யப் பொருளே (உணர்வுப் பொருளே), என்று கூறுகின்ற மகா வாக்கியங்களில் ஒன்றான தத்துவமசி (நீ அதுவாக இருக்கிறாய்) என்பதை இவ்வத்தியாயத்தில் ஒன்பது முறை கூறப்படுகிறது. உத்தாலகர் என்ற முனிவருக்கும் அவரது மகனான சுவேதகேதுவிற்கும் இடையில் நடைபெறும் உரையாடலாக இந்த உபதேசம் தரப்பட்டுள்ளது.

ஏழாம் அத்தியாயம்

[தொகு]

இவ்வத்தியாயம் பூமா வித்யை பற்றி கூறுகிறது. ‘பூமா’ எனில் மிகப்பெரியது என்று பொருள். இறைவனை அனைத்திலும் மிகப்பெரியவராகத் தியானிக்கின்ற வித்யை இது. அதற்கு படிகளாய் 15 தியானங்கள் கூறப்படுகிறது. இந்த பூமா வித்யையை சனத்குமாரர் முனிவர் நாரதருக்கு அருளினார். பூமா வித்யையின் 15 படி தியானங்கள்;

  1. நாம பிரம்ம வித்யை
  2. வாக் பிரம்ம வித்யை
  3. மனோ பிரம்ம வித்தை
  4. சங்கல்ப வித்யை
  5. புத்தி பிரம்ம வித்யை
  6. தியான பிரம்ம வித்யை
  7. விஞ்ஞான பிரம்ம வித்யை
  8. வலிமை பிரம்ம வித்யை
  9. உணவு பிரம்ம வித்யை
  10. தண்ணீர் பிரம்ம வித்யை
  11. தேஜோ பிரம்ம வித்யை
  12. ஆகாய பிரம்ம வித்யை
  13. ஸ்மர பிரம்ம வித்யை
  14. ஆசா பிரம்ம வித்யை
  15. பிராண பிரம்ம வித்யை

தியானத்தின் பெருமை கூறும் பகுதி

[தொகு]

இவ்வத்தியாத்தின் ஆறாவது பகுதியில் முதல் மந்திரத்தில் தியான பிரம்ம வித்யை மந்திரம் கூறுகிறது.

புவனம் தியானம் செய்கிறது
புரண்டோடும் நதிகள் தியானம் செய்கின்றன
வானம் தியானம் செய்கிறது
வானை முட்டும் மலைகள் தியானம் செய்கின்றன
தேவர்க்ள் தியானம் செய்கிறார்கள்
மகிமையை விரும்பும் மனிதர்கள் தியானம் செய்கிறார்கள்
எனவே தியானம் செய்யுங்கள்.
7. 6. 1

எட்டாம் அத்தியாயம்

[தொகு]

நம்முள்ளே ஒரு வெளி (தஹரம், ஆகாயம், (Space)- அகவெளி உள்ளது. அதில் எழுந்தருளியிருக்கும் இறைவனை தியானத்தின் மூலம் தேடுவதும், அடைவதுமே தஹர வித்யா அல்லது தஹராகாச வித்யை எனப்படும்.

மார்பின் உள்ளே ஒரு வெளி ‘தாமரை மொட்டுப் போன்ற இதயம்’; நாற்புறங்களிலும் நாடிகளால் சூழப்பட்டு தொங்குகிறது. அதன் உள்ளே நுண்ணிய ஆகாசம் உள்ளது. அனைத்தும் அதில் நிலை பெற்றுள்ளன.

இந்த இதய வெளிக்குள்ளே உள்ள பொருளைத் தேட வேண்டும், அறிய விரும்ப வேண்டும். அதற்கான தியானப் பயிற்சி (வித்யை) செய்ய வேண்டும். இவ்வித்தையை பயில பிரம்மச்சர்யம் விரதம் அவசியம். தஹர வித்யை முதலானவைகள்;

  1. தஹர வித்யை
  2. பிரஜாபதி வித்யை

மேலும் படிக்க

[தொகு]

மேலும் கேட்க

[தொகு]