சாந்தி சௌந்திரராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்தி சௌந்திரராஜன்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்17 ஏப்ரல் 1981 (1981-04-17) (அகவை 42)
பிறந்த இடம்கத்தக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம்
வசிப்பிடம்கத்தக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம்
உயரம்1.70 மீட்டர்கள் (5 அடி 7 அங்)
எடை64 கிலோகிராம்கள் (141 lb)
விளையாட்டு
விளையாட்டுஓட்டம்
நிகழ்வு(கள்)800 மீட்டர்கள், 1500 மீட்டர்கள்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை800m: 1:55.45
1500m: 4:11.66
National record 3000m: 10:44.65
World Peace Sports Festival Ambassador -2003, Korea[1]

சாந்தி சௌந்திரராஜன் (பிறப்பு ஏப்பிரல் 1981) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீராங்கனை. இவர் இடைத்தொலைவு ஓட்டப்போட்டிகளில் போட்டியிடுகிறார்.தமிழ்நாட்டில் சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 பதக்கங்களையும், தேசிய அளவிலான போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களையும் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். 2006-ல் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 800 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2 நிமிடம், 3.16 விநாடிகளில் இலக்கை எட்டிய சாந்தி, அதன்பிறகு பாலின சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவரிடமிருந்து அனைத்து பதக்கங்களும் பறிக்கப்பட்டன. போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இது சாந்தியின் வாழ்க்கையை புரட்டிபோட்டது. கனவுகளை தொலைத்த சாந்தி, இப்போது ஒப்பந்த அடிப்படையில் பயிற்சியாளராக பணிபுரிகிறார்.[2]

இவர் தனது பரிசுப் பணத்தைக் கொண்டு தடகள பயிற்சிக்கூடம் ஒன்றை 60 வரையான இளையோருக்குக் கட்டணம் அற்று நடத்தி வந்தார். இவருடைய பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் சென்னை தொடரோட்டப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்றனர். எனினும் பண நெருக்கடியால் பயிற்சிக்கூடத்தை தொடர முடியவில்லை.[3]

பாலியல் பரிசோதனை[தொகு]

சாந்தியை பத்து மருத்துவர்கள் பாலின பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் மட்டும் பெண் மருத்துவர். இந்தியா சார்பில் சாந்தியுடன் சென்ற மருத்துவர், பரிசோதனை செய்யும் கூடத்தின் வெளியே காத்திருக்க, மற்ற ஆண் மருத்துவர்களின் முன்பு சாந்தியின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினார்கள். பரிசோதனை என்ற பெயரில் வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவுக்கு கொடுமைகள் அரங்கேறின. . கூனிக் குறுகி மிகுந்த அவமான உணர்வோடு வெளியே வந்தார் சாந்தி. இந்தியாவின் சார்பில் சென்ற அலுவலர்கள் எவரும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை.

2006- ல் இந்தியா பத்து தங்கங்கள், 17 வெள்ளி, 26 வெண்கலம் என்று மொத்தம் 53 பதக்கங்களை வாங்கி, எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் அதைப்பற்றிய பேச்சுகள் இல்லை; சாந்தியின் விஷயமே பெரிதும் பேசப்பட்டது. 2007- ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக சாந்தி வலம் வந்தார். 200- க்கும் மேற்பட்ட ஊடகங்களில், 300 மொழிகளில் சாந்தியின் நிலைமை குறித்து கட்டுரை எழுதினார்கள். முதல் முறையாக ஊடக அறிவியல் முறையில், பாலியல் பரிசோதனைகள் குறித்த அறிவியல் பூர்வமான செய்திகளை அலசத் தொடங்கினார்கள். ஆனாலும் சாந்தியின் நிலைமை மாறவில்லை.

சர்வதேச விளையாட்டு நீதிமன்ற தீர்ப்பு[தொகு]

சாந்தி பற்றி சர்வதேச ஒலிம்பிக் கல்வி மையத்தின் ஆய்வு உதவியாளரும், சிருஷ்டி மதுரை அமைப்பைச் சேர்ந்தவருமான கோபி ஷங்கர் மதுரை கூறியதாவது: ஒடிஷாவைச் சேர்ந்த தடகள வீராங்கனையான டூட்டி சந்துக்கு டெஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறிப்பிட்ட அளவைவிட அதிகமாக இருப்பதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது இந்திய தடகள சம்மேளனம். தடகளப் போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘ஒருவரை ஆண் என்றும், பெண் என்றும் எவ்வாறு நிர்ணயம் செய்கிறீர்கள்? ஹார்மோன்களை அடிப்படையாக வைத்து மட்டும் பாலினத்தை நிர்ணயம் செய்வது முற்றிலும் அறிவியல் பூர்வமற்றது. பெண் தன்மையை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள விதிமுறைகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படுகிறது.

எனவே, சர்வதேச தடகள விளையாட்டு சம்மேளனம், பாலின பரிசோதனை முறை மற்றும் விதிமுறைகள் பற்றி 2 ஆண்டுக்குள் திருப்தி அளிக்கும் வகையில் பதில் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், பாலின பரிசோதனை நடைமுறை ஒட்டுமொத்தமாக நீக்கப்படும்’என அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

விளையாட்டுத்துறையைப் பொறுத்தவரையில், ஒரு ஆண் தானொரு ஆண்தான் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஆனால், பெண்கள் மட்டும் தங்களை பெண் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த விதிமுறையால் சர்வதேச அளவில் இதுவரையில் 75 வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தின் புதிய உத்தரவு மூலம் விளையாட்டுத்துறையில் பாலின சமத்துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

டூட்டி சந்திற்கு 2 ஆண்டிற்குள் நீதி கிடைத்துள்ளது. அவர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தடை விலகிவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இதே விதியின் அடிப்படையில் தான் சாந்தி சவுந்திரராஜனிடம் பதக்கங்கள் பறிக்கப்பட்டதோடு, போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டது. அவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்றார்.

தகவல் உரிமைச் சட்டத்தில் சாந்தி கேட்ட கேள்விக்கு வந்துள்ள பதில்[தொகு]

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தேசிய விளையாட்டு ஆணையம், மத்திய விளையாட்டு அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகிய அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சாந்திக்கு ஒரு பதிலும்... சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்ட கேள்விக்கு வேறொரு பதிலும் வந்துள்ளது.

1. பாலினச் பரிசோதனை அறிக்கை எனக்கு வழங்க வேண்டும்?

  • உங்கள் அடையாளத்தை நிரூபித்துவிட்டு, இந்திய தடகள சங்கத்திடம் இருந்து அறிக்கையை வாங்கிக்கொள்ளுங்கள்.

2. என்னைப் பாலினச் பரிசோதனை செய்த அறிக்கையை நீங்கள் எப்படி நியாமான ரிபோர்ட் என்று நம்புகிறீர்கள். அதற்குப் பதில் கொடுங்கள்? எதைவைத்து, செல்லும்... செல்லுபடியாகாது என்ற முடிவுக்கு வந்தீர்கள்?

  • அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை.

3. பாலினப் பரிசோதனையில் தோல்வி அடையும் வீராங்கனைகள் தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கக் கூடாது என்று தடை இருக்கிறதா? அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதா... அந்த ஆணையைக் கொடுங்கள்?

  • அதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்மபந்தம் இல்லை.

4. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

  • இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை.

இந்தக் கேள்விகளை சாந்தி சார்பாக மற்றொருவர் கேட்டபோது சில கேள்விகளுக்கு பதில்கள் மாறியுள்ளன. தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, 'தடை விதிக்கவில்லை' என்று பதில் அளித்துள்ளனர். ஆனால் சாந்தியின் கேள்விக்கோ, 'இந்திய ஊக்க மருந்து தடுப்புக் குழுவின் விசாரணைக்கு நீங்கள் வராததன் காரணமாக அதைப் பற்றி நாங்கள் மேற்கொண்டு எடுத்துச் செல்ல முடியவில்லை' என்று கூறியுள்ளனர். இந்தப் பதிலுக்கு சாந்தி தரப்பில், அதுபோன்ற அழைப்பு தமக்கு வரவில்லை என்றும், விசாரணையும் நடைபெறவில்லை என்றும் கூறுகின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.iaaf.org/athletes/india/soundarajan-shanti-210467#personal-bests
  2. http://www.tamilhindu.com/2014/07/genderjustice/
  3. எனக்கு சாந்தியைத் தெரியாது!
  4. http://www.vikatan.com/news/tamilnadu/67304-will-modi-bhaiya-helps-this-sister-former-athlete-who-failed-gender-test-sends-rakhi-with-a-open-letter-to-pm-modi.art

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாந்தி_சௌந்திரராஜன்&oldid=2968199" இலிருந்து மீள்விக்கப்பட்டது