சாகரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகரா என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்த நகரமானது ஒரு துணை பிரிவாகவும், தாலுகாவின் தலைமையகமாகவும் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமையப் பெற்றுள்ள இந்நகரமானது இது ஜாக் நீர்வீழ்ச்சிக்கு அருகிலும், இக்கேரி , கெலாடி மற்றும் வரதமூலாவின் ஆகிய வரலாற்று இடங்களுக்கும் அருகிலேயும் அறியப்படுகிறது. வரதா நதியானது வரதா -மூலாவுக்கு அருகில் உருவாகிறது. சாகரா துணைப்பிரிவில் சாகரா, சோராபா, ஹோசனகரா மற்றும் ஷிகாரிப்பூர் தாலுக்காக்கள் உள்ளடங்குகின்றன.

நகராட்சி மன்றம்[தொகு]

கர்நாடகாவின் 74 கர்நாடக நகராட்சி சீர்திருத்த திட்ட (கே.எம்.ஆர்.பி) நகரங்களில் சாகரா நகரமும் ஒன்றாகும். சாகரா நகராட்சி மன்றம் 1931 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மேலும் இது 2007 ஆம் ஆண்டில் நகராட்சி மன்றம் தரம் இரண்டாக மாறியது. நகராட்சி மன்றம் 31 வார்டுகளைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி நகரின் மக்கட் தொகை 64,550 ஆகவும், நகரின் மொத்த பரப்பளவு 19.71 சதுர கி.மீ ஆகவும் இருந்தது.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

சாகரா நகரம் அதன் பெயரை சதாசிவ சாகர் என்ற ஏரியின் பெயரில் இருந்து பெற்றது. கெலாடி வம்சத்தின் ஆட்சியாளரான சதாசிவ நாயக்கர் என்பவர் கெலாடிக்கும் இக்கேரிக்கும் இடையில் ஏரியொன்றைக் கட்டினார். சதாசிவ சாகர் ஏரியானது இப்போது கணபதி கெரே (கணபதி ஏரி) என்று அழைக்கப்படுகிறது.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[2]  சாகராவின் மக்கட் தொகை 50,115 ஆகும். மொத்த மக்கட் தொகையில் ஆண்கள் 50% வீதமாகவும், பெண்கள் 50% வீதமாகவும் காணப்பட்டனர். மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 79% வீதம் ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 82% வீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 75% வீதமாகவும் இருந்தது. சாகரின் மொத்த மக்கட் தொகையில் 11% வீதமானோர் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2011 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி சாகரின் மக்கட் தொகை 64,550 ஐ தாண்டியது.

பொருளாதாரம்[தொகு]

சாகராவின் பொருளாதாரம் முக்கியமாக பாக்கு, நெல் , மசாலா மற்றும் வன பொருட்களின் வர்த்தகம் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இப்பகுதியில் பயிரிடப்படும் கமுகுத் தோட்டங்கள் ஏராளமாக காணப்படுகின்றன. பாக்குடன், மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை, சாதிக்காய், கொக்கோ போன்ற வாசனைத் திரவியங்களும் வளர்க்கப்படுகின்றன. நகரத்தின் பொருளாதாரம் இந்த விவசாய பொருட்களின் விலையில் உள்ள மாறுபாட்டைப் பொறுத்தது. சாகரா ஏபிஎம்சி கர்நாடகாவில் பாக்குகளுக்கான முக்கிய சந்தையில் ஒன்றாகும்.

சாகராவில் ஒப்பீட்டளவில் அதிக எண்ணிக்கையிலான குடிகர் இன மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பல தலைமுறைகளாக சந்தனம் மற்றும் தந்தம் செதுக்கலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களாவார்கள். குடிகர்களில் ஆண்கள் சிலைகள், பேனா தாங்கிகள், ஊதுபத்தி தாங்கிகள், புகைப்பட சட்டகங்கள் மற்றும் காகித கவ்விகள் போன்றவற்றை உருவாக்குகிறார்கள். பெண்கள் மாலைகள் தயாரிப்பதில் திறமையானவர்கள்.

போக்குவரத்து[தொகு]

சாலை வழியாக[தொகு]

மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து சாகராவை என்.எச் -69 வழியாக சாலை வழியாக அடையலாம். கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகமான கே.எஸ்.ஆர்.டி.சி, பெங்களூரிலிருந்து ஹைடெக் வால்வோ மற்றும் இரவு சேவைகள் உட்பட பல பேருந்துகளை இயக்குகிறது. சாகரா பெங்களூரிலிருந்து 360 கிமீ (224 மைல்) சாலை வழியாக உள்ளது. கடலோரப் பக்கத்திலிருந்து, சாகராவை பேருந்தின் மூலம் அணுகலாம். சாகரா எல்லா திசைகளிலிருந்தும் சாலைகளுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையம்[தொகு]

சாகராவுக்கு சொந்தமாக ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் சாகர் ஜம்பாகரு என்று அழைக்கப்படுகிறது. மேலும் சாகராவை பெங்களூரு மற்றும் மைசூருடன் இணைக்கும் ரயில்களும், ஷிமோகாவிலிருந்து தல்குப்பாவுக்கு இடையில் ஒரு பயணிகள் ரயிலும் சாகரா வழியாக செல்கின்றன.

விமான நிலையம்[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் ஹப்லி விமான நிலையம் ஆகும். இது சாகராவிலிருந்து 159 கி.மீ தூரத்தில் உள்ளது. அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் மங்களூர் ஏர்போர்ட் ஆகும்.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகரா&oldid=3586874" இருந்து மீள்விக்கப்பட்டது