சஷ்மே சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Chashme Shahi
Chashme Shahi.jpg
The Royal Spring
வகைமுகலாயத்தோட்டம்
அமைவிடம்ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம்
ஆள்கூறு34°5′10.14″N 74°53′13.79″E / 34.0861500°N 74.8871639°E / 34.0861500; 74.8871639ஆள்கூறுகள்: 34°5′10.14″N 74°53′13.79″E / 34.0861500°N 74.8871639°E / 34.0861500; 74.8871639
பரப்பு1 ஏக்கர்
திறக்கப்பட்டது1632 (1632)
நிறுவனர்ஷாஜஹான்
Owned byஜம்மு காஷ்மீர் சுற்றுல்லாத்துறை
Operated byஜம்மு காஷ்மீர் சுற்றுல்லாத்துறை
நிலைதிறப்பு, மார்ச்-நவம்பர்
Website[1]
Chasme Shahi

சஷ்மே சாகி அல்லது சஷ்ம சாகி (Chashme Shahi) என்பது முகலாயர் காலத்தில் காஷ்மீரத்தில் அமைக்கப்பட்ட ஒரு அழகிய தோட்டமாகும். ஒரு சுத்தமான இயற்கை நீரூற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள இத்தோட்டம் முகலாய பாதுஷா ஷாஜஹான் அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் 'அலி மர்தன்' என்பவரால் கி.பி.1632 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

இத்தோட்டம் 'ஜபர்வான்' மலைப்பகுதியில் ,தற்போதைய ஆளுநர் மாளிகைக்கு அருகிலும், 'தால்' ஏரிக்கு எதிர்ப்புறமாகவும் அமைந்துள்ளது.

பெயர் வரலாறு : காஷ்மீரின் பெண் ஞானியான 'ரூபா பவானி' என்பவர் காஷ்மீர் பண்டிட் வம்சத்தில் 'சாஹிப்' பிரிவில் தோன்றியவர். இவரால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டதால் இவர் குலப்பெயரான 'சாஹிப்'பில் இருந்து இந்த நீரூற்று 'சஷ்மே சாஹிப்பி' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இது திரிந்து 'சஷ்மே ஷாகி' என்று பெயர் பெற்றதாம்.

நிறுவிய வரலாறு : முகலாய மன்னரின் ஆளுநர் அலி மர்தன் என்பவரால் கி.பி.1632 இல், ஒரு அதிசய நீரூற்றைச் சுற்றி இந்த சஷ்மெ ஷாகி தோட்டம் நிறுவப்பட்டது. மன்னர் ஷாஜஹான் தன் மூத்த மகன் 'தாரா சீக்கோ'வுக்காக இதை நிறுவச்செய்தார்.

சஷ்மெ ஷாகி தோட்டத்தின் கிழக்கில் 'பரி மகல்' மாளிகை அமைந்துள்ளது. இங்குதான் இளவரசர் தாரா சீக்கோ சோதிடம் கற்றுக்கொள்வாராம். பின்னால் அவரது இளைய சகோதரர் அவுரங்கசீப்பினால் அவர் கொல்லப்பட்டதும் இந்த பரிமகலில் தான்.

தோட்டம் 108 மீ நீளமும், 38 மீ அகலமும் கொண்டது. ஏறத்தாழ 1 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஸ்ரீநகரில் உள்ள மூன்று மொகல் தோட்டங்களில் இதுவே சிறியதாகும். 'ஷாலிமார் பூங்கா' மிகப்பெரியதாகும்; 'நிஷாத் பூங்கா' இரண்டாவது பெரிய பூங்கா. பின்னணியில் ஜபர்வான் மலைத்தொடர் காணப்பட, இந்த 3 பூங்காக்களும் தால் ஏரியின் இடதுபுறமாக அமைந்துள்ளன. நீரூற்றும் அதன் கட்டமைப்பும் : முகலாய கட்டடக்கலை அம்சத்தை இப்பூங்கா கொண்டுள்ளது. ஈரானிய கலை அம்சத்துடன், பாரசீக தோட்டங்களின் அமைப்பையும் ஒத்துள்ளது.

ரூபா பவானி என்ற பெண் ஞானியால் கண்டு பிடிக்கப்பட்ட இயற்கை நீரூற்றைச் சுற்றி இந்த தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தின் நடுவே ஊற்று நீர் சரிவுகளில் வழிந்து செல்லுமாறு அழகுற அமைந்துள்ளது. சரிவான நில அமைப்பு இத்தோட்டம் உருவாக ஏதுவாக இருந்திருக்கிறது. பூங்காவின் முக்கிய பகுதியே அடுக்கடுக்காக பாயும் நீரைத் தரும் ஊற்றுதான்.

நீரூற்று 3 பாகமாக அமைந்துள்ளது : 1. நீரூற்று 2. நீர் வீழ்ச்சி 3. நீர் செல்லும் பாதை. நீரூற்று, பூங்காவின் முதல் அடுக்கில் இருந்து உருவாகிறது. இந்த முதல் அடுக்கில்தான், ஒரு அழகிய இருநிலை காஷ்மீர் குடில் அமைந்துள்ளது. முதல் அடுக்கிலிருந்து கீழ்நோக்கி சரிவான பாதையில் நீர் வழிந்து இரண்டாம் அடுக்கை நோக்கிப் பாய்கிறது. இரண்டாவது அடுக்கில் குளம் போல் நீர் தேங்கி நிற்கிறது. அங்கிருந்து நீர் வழிந்து வடிவமைக்கப்பட்ட பாதை வழியாக 3வது அடுக்கிற்கு வந்து சதுர வடிவில் நீர்த்தேக்கமாக அமைகிறது. இது பூங்காவின் நுழைவாயிலுக்கு அருகே அமைந்துள்ளது.

பூங்காவின் மேல் அடுக்குகளுக்கு செல்ல இரு பக்கங்களிலும் படிக்கட்டுகள் உள்ளன; இது நீரூற்றுப்பகுதி வரை செல்கின்றன.

ஆங்கில எழுத்தாளரும், பயணியுமான, ‘அல்டூஸ் ஹக்ஸ்லே’, “இந்த சிறிய சஷ்மே ஷாஹி, அமைப்பு ரீதியாக, ஸ்ரீநகரின் பூங்காக்களிலேயே மிகவும் ரம்மியமானதாகும்” என்று தன் கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.

இந்த ஊற்று நீரில் சில மருத்துவ குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தனக்காக இந்த ஊற்று நீரை தில்லிக்கு தருவித்தாராம்.

அடையும் வழி : ஸ்ரீநகர் விமான நிலையத்தின் வட கிழக்கே சுமார் 14 கி.மீ. தொலைவில், ஸ்ரீநகர் எல்லைக்குள்ளாகவே, ஆளுநர் மாளிகைக்கு அருகில் சஷ்மெ ஷாகி உள்ளது. தால் ஏரி கரை வழியாகச் செல்லும் ‘பூலேவார்டு’ சாலை இப்பூங்காவை இணைக்கிறது. பூங்காவுக்கு அருகிலேயே நிறைய உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் உள்ளன.

மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை, சுற்றுல்லாப் பயணிகளுக்காக பூங்கா, திறந்திருக்கும். பூங்காவைக்காண சிறந்த காலம் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ஆகும். மே மற்றும் ஜூன் மாதங்களில் பூங்கா பூத்துக்குலுங்கும்.

உசாத்துணை[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chashme Shahi
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஷ்மே_சாகி&oldid=1770232" இருந்து மீள்விக்கப்பட்டது