உள்ளடக்கத்துக்குச் செல்

சர்வதேசக் கணித ஒலிம்பியாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வதேசக் கணித ஒலிம்பியாட்டின் சின்னம்.

சர்வதேசக் கணித ஒலிம்பியாட் (International Mathematical Olympiad (IMO) என்பது கல்லூரிப் படிப்புக்கு முந்தைய அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச கணிதவியல் போட்டியாகும். மேலும் இது சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் பழமையானது ஆகும்.[1] முதல் போட்டியானது 1959இல் உருமேனியாவில் நிகழ்த்தப்பட்டது. இது 1980ஐத் தவிர, ஆண்டுதோறும் நடைபெற்றுள்ளது. உலக மக்கள் தொகையில் 90% க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டவையான 100க்கும் மேற்பட்ட நாடுகள், இந்தப்போட்டிக்கு தலா ஆறு மாணவர்களைக் கொண்ட குழுக்களை அனுப்புகின்றன. மேலும் இதில் ஒரு குழுத் தலைவர், ஒரு துணைத் தலைவர், மற்றும் பார்வையாளரும் இருப்பர்.[2]

போட்டிக்கான மாணவர் தேர்ந்தெடுப்பு செயல்முறையானது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. என்றாலும் பெரும்பாலும் இது தொடர்ச்சியான தேர்வுகளைக் கொண்டதாக, போட்டிக்கான மாணவர்களை வடிகட்டும் வகையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு நாட்டிலும் பங்கேற்கும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டியில் அளிக்கப்படும் விருதுகளில் தோராயமாக 50% க்கும் அதிகமானவை உச்சபட்ச மதிப்பெண்களை வாங்கும் தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. குழுக்களானது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை - அனைத்து போட்டிகளும் தனிப் போட்டியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் அணியின் மதிப்பெண்களானது அதிகாரப்பூர்வமற்ற முறையில் தனிநபர் மதிப்பெண்களை விட மிகுதியாய் ஒப்பிடப்படுகிறது.[3] போட்டியாளர்கள் 20 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த நாட்டின் பள்ளித் தேர்ச்சி முறைப்படி பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு தனிநபர் இந்தப் போட்டிகளில் எத்தனை முறையானாலும் பங்கேற்கக்கூடும்.[4]

சர்வதேச கணித ஒலிம்பியாட்டானது கணிதத் திறனாய்வு தேர்வுகளில் தலைசிறந்ததாகக் கருதப்படுவது ஆகும். 2011 சனவரியில், சர்வதேச கணித ஒலிம்பியாட் அமைப்புக்கு 1 மில்லியன் யூரோக்களை கூகுல் வழங்கியது.[5]

வரலாறு

[தொகு]

முதல் சர்வதேசக் கணித ஒலிம்பியாட் போட்டியானது 1959இல் உருமேனியாவில் நடைபெற்றது. அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1980ஆம் ஆண்டு தவிர நடத்தப்பட்டுவருகிறது. அந்த ஆண்டு, மங்கோலியாவில் நடந்த உள்நாட்டு பூசல்கள் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.[6] துவக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கின் கீழ், வார்சா உடன்பாட்டில் கையோப்பம் இட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினராகக் கொண்டு இது நிறுவப்பட்டது, என்றாலும் பின்னர் பிற நாடுகளும் பங்கேற்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளினால் இது தோற்றுவிக்கப்பதன் காரணமாக, முதலில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக மற்ற நாடுகளுக்கும் பரவியது.[7]

போட்டி

[தொகு]

ஒரு நாட்டில் இருந்து அதிகபட்சம் ஆறு மாணவர்களே இதில் கலந்துகொள்ள முடியும். முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட எந்தக் கேள்வியும் மீண்டும் கேட்கப்படாது. எண் கோட்பாடு, இயற்கணிதம், சேர்வியல், வடிவியல் போன்ற நான்கு கணித உட்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இறுதிச் சுற்றில் கேட்கப்படும் ஆறு கேள்விகளில் முதல் நாளன்று மூன்று கேள்விகளும் இரண்டாம் நாளன்று மூன்று கேள்விகளும் கொடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் கேட்கப்படும் மூன்று கேள்விகளுக்கு ஒரு கேள்விக்குத் தலா ஏழு மதிப்பெண்ணும் அவற்றைத் தீர்வு காண அதிகபட்சம் நான்கரை மணி நேரமும் வழங்கப்படும்.

ஒவ்வொரு பிரிவிலும் இவர்களுக்குக் கொடுக்கப்படும் கேள்விகளுக்கு அதிகபட்சம் ஏழு மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே ஒரு நாட்டின் மாணவர் அதிகபட்சமாக 6 × 7 = 42 மதிப்பெண்கள் பெறமுடியும். இப்படிப் பங்கேற்கும் 6 மாணவர்களின் மதிப்பெண்களைக் கூட்டிக் கிடைக்கும் மொத்த மதிப்பெண்ணைப் பிறநாட்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டுத் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்படும். ஒரு நாட்டுக்கு அதிகபட்சமாக 42 × 6 = 252 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 42 மதிப்பெண்களுக்கு ஒவ்வொரு மாணவரும் எடுக்கும் மதிப்பெண்ணைப் பொறுத்துத் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு மட்டும் எதிர்பாராத விதத்தில் அற்புதமாக விடையளிக்கும் மாணவர்களுக்கு Honourable Mention என்ற கவுரவம் வழங்கப்படும். இரு வாரங்கள் நிகழ்த்தப்படும் இந்தப் போட்டியில் ஒரு நாள் சுற்றுலாப் பயணமும் இறுதி நாளன்று பரிசு, பதக்கங்களும் வழங்கப்படும்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "International Mathematics Olympiad (IMO)". 2008-02-01.
  2. "The International Mathematical Olympiad 2001 Presented by the Akamai Foundation Opens Today in Washington, D.C." பார்க்கப்பட்ட நாள் 2008-03-05.
  3. Tony Gardiner (1992-07-21). "33rd International Mathematical Olympiad". University of Birmingham. பார்க்கப்பட்ட நாள் 2008-03-05.
  4. "The International Mathematical Olympiad" (PDF). AMC. Archived from the original (PDF) on 2008-02-16. பார்க்கப்பட்ட நாள் 2008-03-05.
  5. Google Europe Blog: Giving young mathematicians the chance to shine. Googlepolicyeurope.blogspot.com (2011-01-21). Retrieved on 2013-10-29.
  6. Turner, Nura D. A Historical Sketch of Olympiads: U.S.A. and International The College Mathematics Journal, Vol. 16, No. 5 (Nov., 1985), pp. 330-335
  7. "Singapore International Mathematical Olympiad (SIMO) Home Page". Singapore Mathematical Society. Archived from the original on 2003-03-27. பார்க்கப்பட்ட நாள் 2008-02-04.
  8. இரா. சிவராமன் (31 சூலை 2018). "இது கணித ஒலிம்பிக்ஸ்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2 ஆகத்து 2018.