சர்க்கரை மன்றாடியார் (வள்ளல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர்க்கரை மன்றாடியார் என்பவர் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வள்ளல். தமிழ்ப் புலவர்களைப் போற்றியவர்.[1][2] மதுரையில் திருமலை அய்ய நாயுடு காரு 1623-1699 ஆண்டுகளில் ஆட்சி புரிந்தார். இவர் காலத்தில் பாளையக்காரராக இருந்த ராமப்பய்யர் என்பவர் சங்ககிரி என்பவர் சர்க்கரையாரைச் சிறையிலிட்டார். எனவே இந்த வள்ளல் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது தெரியவருகிறது. நல்லதம்பி சர்க்கரை காதல் என்னும் நூல் இவர்மீது பாடப்பட்டுள்ளது.[3]

தமிழுக்குக் கொடை[தொகு]

தமிழுக்குத் தாலி[தொகு]

இவர் சம்பந்த சர்க்கரை எனவும் குறிப்பிடப்படுகிறார். இவர் ஆணூர் பாளையக்காரர். பாளையக்காரர்கள் அரசுக்கு இறைவரி செலுத்த வேண்டும். இவர் வரி செலுத்தவில்லை என்பதற்காக மதுரை நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் தளவாய் இராமப்பய்யர் இவரைச் சிறையில் அடைத்திருந்தார். இந்த வள்ளலைக் காணத் தமிழ்ப் புலவர் ஒருவர் சிறைக்குச் சென்றார். சர்க்கரையார் தன் மனைவிக்குச் சொல்லி அனுப்பி அவர் விரும்பித் தந்த தாலியைப் புலவருக்குத் தந்தார். புலவர் பெற்றுக்கொண்டு சென்று, அதனைத் தளவாயிடம் காட்டி நிகழ்ந்ததைத் கூறினார். தளவாய் சர்க்கரையாரை விடுதலை செய்தார். சர்க்கரையார் விருப்பப்படி ஏனைய பாளையக்காரர்களையும் விடுதலை செய்தார்.[4]

தமிழுக்காகக் காயும் நெய்யில் கை விட்டது[தொகு]

காமிண்டன் என்னும் புலவர் இவரைக் காண இவரது இல்லத்துக்கு வந்தார். சர்க்கரையார் சற்றே அளவளாவி விட்டு அவருக்கு விருந்தளிப்பதற்காக, காமிண்டனிடம் சொல்லிவிட்டு, உள்ளே சென்றார். சற்றே காலம் தாழ்ந்தது. அங்கு வந்த அவது வேலையாள் ஒருவன் ‘விருந்து படைக்கக் காலமாகும்’ என்று காமிண்டனிடம் கூறினார். சர்க்கரையார் தன்னை மதிக்கவில்லை என்று காமிண்டன் கருதினார். எழுந்து சென்றுவிட்டார். சமையல் முடிந்த பின் சர்க்கரையார் புலவரைத் தேடினார். தேடிச் சென்றார். கண்டார். வருக என அழைத்துவந்தார். தன்னை இழிவு படுத்தியதாகப் புலவர் சர்க்கரையாரிடம் தெரிவித்தார். சர்க்கரையார் காய்ந்துகொண்டிருக்கும் நெய்யில் தன் கையை விட்டு, தாம் அவரை இழிவுபடுத்தவில்லை என்று சத்தியம் செய்தார். புலவர் ஏற்றுக்கொண்டு சர்க்கரையார் அளித்த உணவை உண்டார். புலவர் மேலும் சர்க்கரையாரைச் சோதனை செய்வாராய் உண்ட தன் வாயைக் கழுவி விட வேண்டும் என்றார். சர்க்கரையார் அதனையும் செய்தார். சர்க்கரையாருக்குத் தமிழ்மீது அத்துணைப் பற்று.[3]

பொறுமை[தொகு]

நொய்யல் ஆற்றங்கரையில் இருக்கும் ஊர் ஆணூர். இவ்வூரில் சர்க்கரை என்னும் பெயர் கொண்ட பண்பாளர் ஒருவர் வாழ்ந்துவந்தார். இவர் பொறுமையே உருவமாக விளங்கினார். தொண்டை நாட்டு வள்ளல் குன்றை எல்லப்பன் அவைப்புலவர்கள் சிலர் ஆணூர் வந்தனர். சர்க்கரை மன்றாடியாரின் பொறுமையைச் சோதிக்க விரும்பினர். அவரது தோட்டத்துக்குச் சென்று அங்குள்ள செடிகொடிகளை வெட்டினர். காவலர் சர்க்கரையாரிடம் தெரிவித்தனர். அன்பாகப் பேசி அவர்களைத் தன்னிடம் அழைத்துவருமாறு சர்க்கரையார் கூறினார். அவ்வாறே புலவர்கள் அழைத்துவரப்பட்டனர். “தோட்டத்தில் வேண்டாத செடிகள் இருந்தால் காவலாளிகளிடம் சொல்லி வெட்டியிருக்கலாமே. எழுத்தாணி பிடிக்கும் கைகள் அரிவாள், மண்வெட்டி பிடிக்கலாமா” என்று அன்புடன் கூறினார். சர்க்கரையார் புலவர்களுக்கு விருந்து படைத்தார். அப்போது சர்க்கரையாரின் தாயார் அங்கு வந்தார். புலவர்களில் ஒருவர் அவரது கூன்முதுகின்மீது ஏறி அமர்ந்தார். தாயார் மகன் சர்க்கரையாரைப் பார்த்தார். பத்து மாதம் என்னைச் சுமந்த தாங்கள் சிறிது நேரம் இவரைத் தாங்கக் கூடாதா என்று தாயை வினவினார். சோதனை செய்த புலவர்கள் வெட்கித் தலைகுனிந்தனர். சர்க்கரை மன்றாடியாரின் பொறுமையைப் பாராட்டி பாடினர்.[5] இதனை உணர்த்தும் பிற நூல் பேற்கோள் பாடல்கள் [6]

மேற்கோள்[தொகு]

  1. கொங்கு மண்டல சதகம் கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், முனைவர் ந. ஆனந்தி மூலமும் தெளிவுரையும், சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008
  2. புது மெருகு/சம்பந்தச் சர்க்கரை
  3. 3.0 3.1 கொங்குமண்டல சதகம் 52 விளக்கம்
  4. கொங்குமண்டல சதகம் 66 விளக்கம்
  5. கொங்கு மண்டல சதகம், பாடல் 51, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை, சாரதா பதிப்பகம் வெளியீடு, 2008, பக்கம் 66-69
  6.  முனைவர் ந. ஆனந்தி விளக்க உரையில் உள்ளபடி
    புறவோடு உடல் தசை போக்கிய வேந்தன் புரிந்நநினும்
    மறவோ கொடிது கொடிது கண்டீர் அறன் அன்று மற்றுப்
    பிறவோ மறுத்து உரை செய்யான் மிகச் சிரம் பேர்த்து வைத்த
    மறவோனைத் தாங்கிய வையம் அன்றோ தொண்டை மண்டலமே.

    தலை இந்தா எனும் மைந்தா தலோ தாலேலோ
    தண் குன்றைப் பதி எல்லா தாலோ தாலேலோ

    ஆல் எங்கே அங்கே அரும் பறவையில் துயிலும்
    மால் எங்கே அங்கே மலர் மடந்தை - சோலைதொறும்
    செங் கேதகை மணக்கும் செங்குன்றை எல்லன் அங்கே
    அங்கே இரவலர் எல்லாம்.

வெளிப்பார்வை[தொகு]