சரித்திர மாளிகை, அமரவிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரித்திர மாளிகை (Charitra Malika) என்பது தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் கேரள மாநிலம் அமரவிளை என்ற ஊரில் உள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.[1] இந்த அருங்காட்சியகம் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் களியக்காவிளையை தாண்டி உள்ள, அமரவிளை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

திருவிதாங்கூர் சமஸ்தான தலைநகரை இரணியலில் இருந்து 1629 இல் பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது பத்மநாபபுரம் அரண்மனையின் அருகே மன்னர் குடும்பத்தின் பிரத்யேக தேவைக்காக அங்கோல் என்னும் சுற்று மாளிகை அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் அங்கோல் மாளிகையில் இருந்த பொருள்கள் சிதலமடைந்து, அவை ஏலம் விடப்பட்டன. அப்பொருட்களை அமரவிளையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஏலத்தில் எடுத்து, பொக்கிஷமாய் பாதுகாத்துவந்தனர். அக்குடுத்பத்தின் தற்கால தலைமுறையைச் சேர்ந்த அபிலாஷ் என்பவரும் திருவிதாங்கூர் மன்னர் காலத்து ஆவணங்களையும் சுதந்திரத்துக்கு முந்தைய அரிய பொக்கிஷங்களையும் சேகரித்துவந்துள்ளார்.

இந்த பொருட்களின் சிறப்பை அனைவரும் அறியவேண்டி அமரவிளையில் ஒரு இடத்தை அபிலாஷ் வாங்கி, அங்கே பழமை மாறாமல் கேரள கட்டடக்கலையில் ஒரு மாளிகையை 21 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கினர். அதுனுள்ளே, இவர்களின் சேகரிப்பில் இருந்த அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தியுள்ளனர்.

காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள்[தொகு]

இங்கு மொத்தம் 3,600 பழங்கால பொருள்கள் இருக்கின்றன. மேலும் இங்கு காமராஜர் நாகர்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது பிரச்சாரம் செய்ய பயன்படுத்திய மாட்டுவண்டியும், குளச்சல் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தி பயணித்த மாட்டுவண்டியும். மேலும் காந்தி பேசிய மைக்குகள், அக்கால, மீனவர்கள் பயன்படுத்திய வல்லம், மனிதர்களால் இயக்கப்பட்ட எண்ணெய் செக்கு, அக்கால எழுத்தாணி, நாராயணம் என எழுதுபொருள்கள், மற்றும் பலவகை சுவடிகள், திருவிதாங்கூர் அரண்மனையில் பயன்படுத்திய ஆழாக்கு, உழக்கு, நாளி, மரக்கால் உள்ளிட்ட அளவைப் பொருட்கள், வேலைப்பாடுகள் கொண்ட அம்மி, ஆட்டுக்கள், சந்தனக்கட்டையால் செய்யப்பட்ட இருக்கை, இரட்டைக்கால் பீடம், அந்தக் காலத்து அஞ்சல் பெட்டிகள் போன்ற பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Charitra Malika on verge of closure". http://www.deccanchronicle.com. 23 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  2. என்.சுவாமிநாதன் (21 சூலை 2017). "'இங்கே இன்னொரு ரகசிய அறை இருக்கு' வியப்புகளை விரிக்கும் 'சரித்திர மாளிகை'". கட்டுரை. தி இந்து. 22 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.