சரத் சந்திர போசு
சரத் சந்திர போசு (Sarat Chandra Bose செப்டம்பர் 6, 1889-பிப்பிரவரி 20, 1950 ) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கியவர். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாசு சந்திர போசின் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.
இளமைக் காலம்
[தொகு]சானகிநாத் போசு என்னும் தந்தைக்கும் பிரபாபத்தி போசு என்னும் தாயாருக்கும் பிறந்தவர் கல்லூரிப் படிப்பை பிரசிடென்சி கல்லூரியில் முடித்தார். பின்னர் 1911 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு பாரிஸ்டர் கல்வி முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார். இந்தியாவில் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார். இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
அரசியல் பணி
[தொகு]- 1936 ஆம் ஆண்டில் வங்கப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவர் ஆனார்.
- 1936 முதல் 1947 வரை அனைத்திந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார்.
- 1946 முதல் 1947 வரை நடுவண் சட்ட சவைக்கு காங்கிரசு தூதுக் குழுவை வழி நடத்திச் சென்றார்.
- வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டுப் போராடினாலும், அதே நேரத்தில் தம் இளவல் சுபாசு சந்திர போசுவின் இந்தியத் தேசியப் படையின் செயல்பாட்டையும் ஆதரித்தார்.
- 1945 இல் சுபாசு சந்திர போசு காலமான பிறகு இந்தியத் தேசியப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளைச் செய்தார்.
- பிற்காலத்தில் கொள்கை வேறுபாட்டால் காங்கிரசிலிருந்து விலகினார்.
- இந்தியா விடுதலை அடைந்ததும் தம் தம்பி சுபாசு சந்திர போசு நடத்தி வந்த பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வழி நடத்திச் சென்றார்.
- சோலிசக் குடியரசுக் கட்சி என்னும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவிலும் வங்கத்திலும் சோசலிச அமைப்பு ஆட்சி மலர்வதை விரும்பினார்.
சிறை வாழ்க்கை
[தொகு]சரத் சந்திர போசு சப்பானிய அரசுடன் தொடர்பு வைத்திருந்து பிரிட்டிசு அரசுக்கு எதிராகத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு 1941 ஆம் ஆண்டில் திசம்பர் 12 இல் கைதானார். 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப் பட்டார்.
நினைவு போற்றல்
[தொகு]சரத் சந்திர போசுவை நினைத்துப் போற்றும் வகையில் 2014 ஆம் ஆண்டில் அவர் பெயரில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதில் லியனாத் கார்டன் என்னும் வரலாற்று ஆசிரியர் அவரை பற்றிப் பேசினார். லியானத் கார்டன் என்பவர் சரத் சந்திர போசு, சுபாசு சந்திர போசு ஆகிய இரு சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் ஆவார். நீரத் சந்திர சவுத்ரி என்னும் புகழ் பெற்ற அறிஞர் சரத் சந்திர போசுவிடம் 1937 முதல் 1941 வரை செயலராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
[தொகு]- Thy Hand, Great Anarch! India 1921-1952 (Book by Nirad C.Chaudhuri)
- History failed to recognize Sarat Chandra Bose: Leonard Gordon