சயன ஏகாதசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயன ஏகாதசி
விஷ்ணு ஆதிஷேசன் மீது படுத்துள்ளார்.
அதிகாரப்பூர்வ பெயர்தேவ சயனி ஆடி ஏகாதசி
பிற பெயர்(கள்)மகா ஏகாதசி
கடைபிடிப்போர்இந்துக்கள், குறிப்பாக வைணவர்கள்
வகைஇந்து
முக்கியத்துவம்சாதுர்மாசிய விரதம்
அனுசரிப்புகள்விஷ்ணு மீதான பிரார்த்தனைகள், பூசைகள் உள்ளிட்ட மதச் சடங்குகள், பண்டரிபுர யாத்திரை
நிகழ்வுவருடாந்திரம்
தொடர்புடையனபிரபோதினி ஏகாதசி

சயன ஏகாதசி (Shayani Ekadashi) மகா-ஏகாதசி என்றும் அழைக்கப்படும், இது இந்து மாதமான ஆடியின் (சூன் -சூலை) வளர்பிறையின் பதினைந்து நாட்களில் ( சுக்ல ஏகாதசி ) 11வது சந்திர நாள் ஆகும். இந்துக் கடவுளான விஷ்ணுவைப் பின்பற்றுபவர்களான வைணவர்களுக்கு இந்த புனித நாள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.[1]

நம்பிக்கைகள்[தொகு]

இந்த நாளில் விஷ்ணு, அவரது மனைவி லட்சுமியின் உருவங்கள் வழிபடப்படுகின்றன.[2] இரவு முழுவதும் பிரார்த்தனைகள் பாடப்படுகின்றன. மேலும் பக்தர்கள் இந்த நோன்பு ஆரம்பித்து, முழு சாதுர்மாசிய விரதத்தையும் கடைபிடிப்பார்கள். ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உணவுப் பொருளைக் கைவிடுவது அல்லது விரதம் இருப்பது ஆகியவை இதில் அடங்கும். 

கடவுள் விஷ்ணு, திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் மீது படுத்திருப்பதாக இந்துக்களால் நம்பப்படுகிறது. [3] எனவே இந்த நாள் "தேவசயன ஏகாதசி" ("கடவுள்-உறங்கும் பதினொன்றாவது நாள்") அல்லது ஹரி-சயன ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. விஷ்ணு, சயன ஏகாதசியில் தூங்கி, பிரபோதினி ஏகாதசி அன்று விழித்தெழுகிறார் என்று நம்பப்படுகிறது. இதனால் இந்த காலம் சாதுர்மாதம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், மழைக்காலத்துடன் ஒத்துப்போகிறது. சயன ஏகாதசி என்பது சாதுர்மாதத்தின் ஆரம்பமாகும். இந்த நாளில் விஷ்ணுவைப் பிரியப்படுத்த பக்தர்கள் சாதுர்மாத விரதத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்குகிறார்கள். [4]

சயன ஏகாதசி அன்று உண்ணாவிரதம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து தானியங்கள், பீன்ஸ், வெங்காயம், சில மசாலாப் பொருட்கள் உள்ளிட்ட சில காய்கறிகளை அன்று உண்ணாமல் விலகி இருக்க வேண்டும்.

முக்கியத்துவம்[தொகு]

பவிசிய புராணத்தில், கிருட்டிணன் சயன ஏகாதசியின் முக்கியத்துவத்தை தருமனுக்கு விவரிக்கிறான். படைப்புக் கடவுளான பிரம்மா தனது மகன் நாரதரிடம் ஒருமுறை இதன் முக்கியத்துவத்தை விவரித்தான். மன்னன் மாண்டதாவின் கதை இந்தச் சூழலில் விவரிக்கப்படுகிறது. பக்தியுள்ள மன்னனின் நாடு மூன்று ஆண்டுகளாக வறட்சியை எதிர்கொள்கிறது. மழை தெய்வங்களை மகிழ்வித்தும் அரசனால் தீர்வு காண முடியவில்லை. இறுதியில், அங்கரிச முனிவர் சயன ஏகாதசியைக் கடைப்பிடிக்குமாறு மன்னனுக்கு அறுவுத்துகிறார். பின்னர், விஷ்ணுவின் அருளால் அவனது நாட்டில் மழை பெய்தது.[4]

பண்டரிபுர யாத்திரை[தொகு]

பண்டரிபுரத்திலுள்ள விட்டலரின் உருவம்.

இந்த நாளில், பண்டரிபுரம் ஆசாதி ஏகாதசி வாரி யாத்ரா என்று அழைக்கப்படும் யாத்ரீகர்களின் ஒரு பெரிய யாத்திரை அல்லது மத ஊர்வலம் ஒன்று தொடங்கி, தெற்கு மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் பீமா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பண்டரிபுரத்தில் முடிவடைகிறது. விஷ்ணுவின் உள்ளூர் வடிவமான விட்டலர் வழிபாட்டின் முக்கிய மையமாக பண்டரிபுரம் உள்ளது. இந்த நாளில் மகாராட்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் இங்கு வருகிறார்கள். அவர்களில் சிலர் மகாராட்டிராவின் துறவிகளின் உருவங்களுடன் பல்லக்குகளைச் சுமந்து செல்கின்றனர். ஆளந்தியிலிருந்து ஞானேசுவரின் படம், நர்சி நாம்தேவிலிருந்து நாமதேவரின் படம், தேஹுவிலிருந்து துக்காராமின் படம், பைத்தானிலிருந்து ஏகநாதர் படம், நாசிக்கிலிருந்து நிவ்ருத்திநாதர் படம், முக்தைநகரில் இருந்து முக்தாபாய் படம், சாசுவத்திலிருந்து சோபன், சேகானில் இருந்து புனித கசானன் மகாராசா ஆகியோரின் படங்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த யாத்ரீகர்கள் வர்க்காரிகள் என்று குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள் விட்டலருக்காக அர்ப்பணிக்கப்பட்ட புனித துக்காராம் மற்றும் புனித ஞானேசுவரரின் அபங்கங்களைப் பாடுகிறார்கள்.

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சயன ஏகாதசி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயன_ஏகாதசி&oldid=3366956" இருந்து மீள்விக்கப்பட்டது