சம்பு

சம்பு, சண்பு, கண்பு (Typha angustifolia மேலும் lesser bulrush,[1] narrowleaf cattail அல்லது lesser reedmace) என்பது ஒரு சதுப்பு நில அல்லது நீர்த் தாவரம் ஆகும். இது டைபா (Typha) என்னும் பேரினத்தைச் சேர்ந்தது. இது பொதுவாக வடக்கு அரைக்கோளத்தில் உப்புத் தன்மை நிறைந்த இடங்களில் காணப்படுகிறது.[2] இந்த தாவரத்தின் இலைகள் தட்டையானவை, அகலத்தில் மிகவும் குறுகியவை (¼ "-½" அகலம்), மற்றும் இவை முதிர்ச்சியடையும் போது 3'-6' உயரம் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு தாவர பதியவங்குரத்திலிருந்தும் 12-16 இலைகள் தோன்றுகின்றன. முதிர்ச்சியடையும்போது, இவை இலைகளைப் போல உயரமான தனித்துவமான தண்டுகளைக் கொண்டுள்ளன. இத்தாவரத்தின் தண்டுகளின் உச்சியியல் பஞ்சுபோன்ற, உட்பகுதியைக் கொண்ட பழுப்பு நிற கம்பங்கதிர் போன்ற இணர் தோன்றுகின்றது. இத்தாவரமானது மட்ட நிலத்தண்டுக் கிழங்கு வேர்களைக் கொண்டுள்ளன. இவை 27" நீட்டிக்கக்கூடியவை மற்றும் பொதுவாக இவை ¾" -1½ " விட்டம் கொண்டவை.[3][4]
மலர்
[தொகு]இதன் மலர் மஞ்சரியானது கம்பின் கதிர் போன்றது. 12 அங்குல நீளமும் 0.2 5-9 அங்குல குறுக்களவும் உள்ளது. 'ஸ்பைக்' என்ற பூந்துணர் பழுப்பு நிறமானது. இதன் மலரில் ஆண்மலர், மெல்லியதாகவும் வெளுத்துப் போயுமிருக்கும்; இணரின் மேலே இருக்கும். பெண் மலர் மலட்டு மலர்களுடன் சேர்ந்து அடியில் இருக்கும். மலட்டு மலரில் மலட்டுச் சூலகமும், மலரடிச் செதில்களும் கூடியிருக்கும். ஆண்மலரில் இரண்டு தாதிழைகள் உள்ளன. பெரிதும் மூன்று தாது இழைகளில் தாது உண்டாகும். தாதுக்காம்புகள் துணியில் கம்பியிருக்கும். தாதுப்பைகளின் இணைப்பு நீண்டு தடித்து இருக்கும். தாதுப்பை நான்கு செல் உடையது. அடியில் ஒட்டியிருக்கும். மகரந்தம் நல்ல மஞ்சள் நிறமானது. பெண் மலர் ஒரு மெல்லிய மடலின் உள்ளே இருக்கும். சூலகம் ஒரு செல் உடையது. சூல்தண்டு நீண்டு உதிராது இருக்கும். சூல்முடி பிளந்திருக்கும். இதன் விதை மிக மெல்லியது. விதை-கனிச்சுவரில் ஒட்டியிருக்கும். கரு உருண்டையானது.
பரவல்
[தொகு]இந்த இனமானது ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.[5] வட அமெரிக்காவில், இது கடலோரத்திலிருந்து உள்நாட்டுப் பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கருதப்படுகிறது.[6]
பயன்கள்
[தொகு]இதன் நீண்ட இலைதான் 'சம்பு' எனப்படும். இதனைக் கொண்டு தட்டிகள், பத்திப்பாய்கள், குடலைகள் முதலியவற்றை வேய்வர்.
சமையல் பயன்பாடு
[தொகு]இத் தாவரத்தின் பல பகுதிகள் உண்ணக்கூடியவை. இதன் பல்வேறு பருவங்களில் வேர்கள் மற்றும் இலைகளின் அடிப்பகுதி, தண்டுகளின் உள் பகுதி, பச்சை பூக்கும் கூர்முனை, பழுத்த மகரந்தம் மற்றும் மாவுச்சத்து வேர்கள் உட்பட.[7] இதன் உண்ணக்கூடிய தண்டுகள் வியட்நாமில் பான் பான் என்று அழைக்கப்படுகிறது. புகைப்படம்
இலக்கியங்களில்
[தொகு]இது சங்க இலக்கிங்களில் கண்பு என்ற பெயரால் அழைக்கப்பட்டுள்ளது. பெரும்பானற்றுப்படையில் சிறுபிள்ளைகள் கண்பினது புல்லிய காயாகிய கதிரை முறித்து அக்காயில் தோன்றிய தாதை மார்பிலே அடித்துக்கொண்டு விளையாடுவர் என்று கூறுகின்றார் கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
பொன்காண் கட்டளை கடுப்ப கண் பின்
புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் பெரும்பாணாற்றுப்படை- 220-221
இவ்வடிகளுக்கு நச்சினார்க்கினியர் 'பொன்னை உரைத்து மாற்றுக்காணும் உரை கல்லை ஒப்பக் கண்பினது புல்லிய காயில் தோன்றிய தாதை, அக்கதிரை முறித்து அடித்துக்கொண்ட மார்பினை உடைய சிறுபிள்ளைகள்' என்று உரை கூறுகின்றார்.[8]
குறிப்புகள்
[தொகு]- ↑ "BSBI List 2007". Botanical Society of Britain and Ireland. Archived from the original (xls) on 2015-01-25. Retrieved 2014-10-17.
- ↑ "Typha angustifolia - narrow leaf cattail". Global Biodiversity Information Facility. Retrieved 2011-03-16.
- ↑ Rook, Earl J. S. (February 26, 2004). "Typha angustifolia: Narrow Leaf Cattail". Archived from the original on 2008-06-09. Retrieved 2008-09-13.
- ↑ "PLANTS Profile for Typha angustifolia (narrowleaf cattail)". U. S. Department of Agriculture. Retrieved 2008-09-13.
- ↑ Stuckey, R. L.; Salamon, D. P. (1987). "Typha angustifolia in North America: masquerading as a native". Am. J. Bot. 74: 757.
- ↑ Mills, Edward L.; Leach, Joseph H. (1993). "Exotic Species in the Great Lakes: A History of Biotic Crises and Anthropogenic Introductions". Journal of Great Lakes Research 19. The link is to a preprint of the published article; see p. 46.
- ↑ "Typha angustifolia - Small reed mace". Plants for a Future. Retrieved 2011-03-16.
{{cite web}}
: External link in
(help)|publisher=
- ↑ சங்க இலக்கியத் தாவரங்கள், டாக்டர் கு. சீநிவாசன், 731-733
வெளி இணைப்புகள்
[தொகு]- டைபா ஆங்குஸ்டிபோலியா நேச்சர் மனிடோபாவிலிருந்து புகைப்படங்கள், வரைபடங்கள், விளக்கம்