உள்ளடக்கத்துக்குச் செல்

சம்சியா பாக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சம்சியா பாக்கே
Shamsiah Fakeh
பிறப்பு1924; கம்போங் கெமுரோ, கோலா பிலா, நெகிரி செம்பிலான், மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள், பிரித்தானிய மலாயா (மலேசியா)
இறப்பு2008; கூச்சாய் லாமா, கோலாலம்பூர், மலேசியா
அறியப்படுவதுபிரித்தானிய காலனிய எதிர்ப்பு
தலைவர்: மகளிர் விழிப்புணர்வு படை
மலாயா பொதுவுடைமை கட்சி

சம்சியா பாக்கே (மலாய்; ஆங்கிலம்: Shamsiah Fakeh) (1924 – 20 அக்டோபர் 2008); என்பவர் ஒரு மலேசிய தேசியவாதி; பெண்ணியவாதி; மலேசியாவின் முதல் தேசியவாத பெண்கள் அமைப்பான மகளிர் விழிப்புணர்வு படையின் (Angkatan Wanita Sedar) (AWAS) தலைவர்; மலேசிய பொதுவுடைமை புரட்சியாளர்; மலாயா பொதுவுடைமை கட்சியின் (Communist Party of Malaya) (CPM) முக்கிய மலாய்த் தலைவர் ஆவார்.

இவர் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்; மற்றும் பண்டார் உத்தாமாவின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுதீனின் பாட்டியும் ஆவார்.[1]

சம்சியா ஒரு தீவிரப் பேச்சாளர். ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (UMNO); மற்றும் மலாய் தேசியவாதக் கட்சி (Malay Nationalist Party; மலாய்: (Partai Kebangsaan Melayu Malaya); (PKMM) ஆகிய இரு கட்சிகளும், இவரைத் தங்கள் கட்சிகளில் சேருமாறு கேட்டுக் கொண்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இரு கட்சிகளும் மிக முக்கியமான மலாய் அரசியல் கட்சிகளாக மாற்றம் கண்டன. மலேசிய வரலாற்றில் இதுவரை நினைவுகூரப்படும் மலேசியப் பெண்கள் சிலரில் சம்சியா அவர்களும் ஒருவர் ஆவார்.[2]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

சம்சியா, நெகிரி செம்பிலானில் உள்ள கோலா பிலா நகருக்கு அருகிலுள்ள கம்போங் கெமுரு கிராமத்தில் பிறந்தார். நெகிரி செம்பிலானில் உள்ள மதராசா அலியா இசுலாயாவில் (Madrasah Aliah Islaiah) (இசுலாமிய உயர்நிலைப் பள்ளி) தன் தொடக்கக் கல்வியைப் பெற்றார்.[2]

பின்னர் அவர் சுமாத்திராவின் பாடாங் பாஞ்சாங்கில் (Padang Panjang) உள்ள மதராசா துடிமியாவுக்கு (Madrasah Tuddimiah) அனுப்பப்பட்டார். அந்த நேரத்தில் சுமாத்திரா தீவு இடச்சு கிழக்கிந்திய தீவுகளின் கீழ் இருந்தது.[3] இந்த நேரத்தில்தான் அவர் செல்வாக்கு மிக்க அறிஞரும் இசுலாமிய சீர்திருத்தவாதியுமான லெபாய் மாதா (Lebai Maadah) என்பவரின் செல்வாக்கின் கீழ் வந்தார்.[4]

ஆயுதப் போராட்டம்

[தொகு]

மலாயா அவசரகாலநிலை அறிவிக்கப்படுவதற்கு முன்னர், 1948-இல் மகளிர் விழிப்புணர்வு படை (Angkatan Wanita Sedar) (AWAS); இன்சாப் இளைஞர் படை (Angkatan Pemuda Insaf) (API) ஆகிய படைப் பிரிவுகள் பிரித்தானிய மலாயா அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து இடதுசாரி மலாய் தேசியவாதிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியில், சம்சியா காடுகளுக்குள் பின்வாங்கினார்.

மலாயா பொதுவுடைமை கட்சியின் மலாயா தேசிய விடுதலை இராணுவத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள 10-ஆவது படைப்பிரிவில் சேர்ந்தார். 10-ஆவது படைப்பிரிவு, பகாங்கின் தெமர்லோவிற்கு அருகிலுள்ள லுபோக் கவா (Lubok Kawah) எனும் இடத்தில் இருந்து செயல்பட்டு வந்தது.

தொடர்ச்சியான இராணுவத் தோல்விகளுக்குப் பிறகு, குறிப்பாக 1949-இல் நடந்த பாடாங் பியூல் போரில் (Battle of Padang Piul), 11-ஆவது மற்றும் 12-ஆவது படைப்பிரிவுடன் சேர்ந்து 10-ஆவது படைப்பிரிவும் 1953-இல், மலேசியா-தாய்லாந்து எல்லைக்கு பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், தாய்லாந்து காடுகளுக்குள் சம்சியா பின்வாங்கினார். 1956-இல் தன் கணவர் இப்ராகிம் முகமதுவுடன் மேலதிக கல்விக்காக சீனாவுக்கு அனுப்பப்படும் வரை ஒரு கெரில்லாவாகத் தொடர்ந்து போராடினார்.[2][5]

இறப்பு

[தொகு]

1999-ஆம் ஆண்டு ஏற்பட்ட பக்கவாதத்தைத் தொடர்ந்து, சம்சியா உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 2007-ஆம் ஆண்டு வாக்கில் படுத்த படுக்கையானார்.[6] அவர் அக்டோபர் 20, 2008 அன்று சுவாசக் கோளாறு காரணமாக தன் மகன் ஜமாலுதீன் இப்ராகிமின் வீட்டில் காலமானார். அதே நாளில் மாலை 5.30 மணிக்கு, கோலாலம்பூர் சுங்கை பீசி முசுலிம் மயாணத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.[7] இவருடைய வாழ்க்கை, முட்கள் நிறைந்த கரடுமுரடான வாழ்க்கை. மலாயா விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தைத் தொடந்த ஒரு மலேசிய வீரப் பெண்மணியாக இவர் வாழ்ந்து மறைந்தார்.[7]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Memoirs of Shamsiah Fakeh. Gerakbudaya. Retrieved 24 November 2025.
  2. 2.0 2.1 2.2 Fakeh, Shamsiah (2004). Memoir Shamsiah Fakeh: Dari AWAS ke Rejimen Ke-10. Bangi: Universiti Kebangsaan Malaysia Press. ISBN 967-942-659-9.
  3. "Shamsiah Fakeh, the Iron Lady of the Communist Party of Malaya". BERNAMA. 21 October 2008. http://www.malaysianbar.org.my/legal/general_news/shamsiah_fakeh_the_iron_lady_of_the_communist_party_of_malaya.html. பார்த்த நாள்: 21 October 2008. 
  4. "Lebai Maadah: Controversial Reformist Scholar of the Younger Generation". Islamic Da'wah Foundation Malaysia. 29 November 2005. Retrieved 21 October 2008.
  5. "Perisik tentera, jejak pemimpin komunis Shamsiah Fakeh". Free Malaysia Today (in Malay). Retrieved 20 August 2022.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  6. Martin, Vengadesan (20 October 2008). "Telling their side of history". The Star. http://www.malaysianbar.org.my/news_features/to_exile_and_back_again.html. பார்த்த நாள்: 25 May 2008. 
  7. 7.0 7.1 Fakeh, Shamsiah (2007). Memoir Shamsiah Fakeh: Dari AWAS ke Rejimen Ke-10 (2nd ed.). Petaling Jaya: Strategic Information and Research Development Centre. pp. Preface. ISBN 978-983-3782-32-1.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்சியா_பாக்கே&oldid=4412357" இலிருந்து மீள்விக்கப்பட்டது