சமர்கந்து பிராந்தியம்
சமர்கண்ட் பிராந்தியம் ( Samarqand Region, Samarkand Region என்றும் குறிப்பிடப்படுகிறது. உஸ்பெக் மொழி : Samarqand viloyati ) என்பது உஸ்பெகிஸ்தானின் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது நாட்டின் மையத்தில் ஜராஃப்ஷன் ஆற்றின் படுகையில் அமைந்துள்ளது . இதன் எல்லைகளாக கிழக்கில் சர்வ தேச எல்லையான தஜிகிஸ்தான் நாட்டு எல்லையும், பிற திசைகளில் உள் நாட்டு பிராந்தியங்களின் எல்லைகளும் அமைந்துள்ளன. அவை வட கிழக்கில் ஜிசாக் பிராந்தியம், வட மேற்கில் நவோய் பிராந்தியம், தெற்கில் காஷ்கடார்யோ பிராந்தியம் போன்ற பிராந்தியங்களுடன் எல்லைகளைக் கொண்டு உள்ளது. சமர்கண்ட் பிராந்தியமானது 16,773 சதுர கிமீ. பரப்பளவைக் கொண்டுள்ளது இதன் மக்கள் தொகை சுமார் 3, 651,700 என மதிப்பிடப்பட்டுள்ளது. பிராந்தியத்தின் மக்களில் சுமார் 75% பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
சமர்கண்ட் பிராந்தியம் 15 சனவரி, 1938 இல் நிறுவப்பட்டது,[1] இது 14 நிர்வாக மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.[2] இதன் தலைநகராக சமர்கண்ட் நகரம் ( நகரின் மக்கள் தொகை 368,000 ) உள்ளது. பிராந்தியத்தின் மற்ற முக்கிய நகரங்களாக புலுங்கூர் நகரம், ஜுமா நகரம், இஷ்டிகோன் நகரம், கட்டா-குர்கன் நகரம், உர்குட் நகரம் மற்றும் ஓக்டோஷ் நகரம் ஆகியவை உள்ளன.
பிராந்தியத்தின் காலநிலை என்பது பொதுவாக வறண்ட கண்ட காலநிலை எனப்படும் ஐரோப்பிய காலநிலை ஆகும்.
தாஷ்கந்துக்கு அடுத்து உஸ்பெகிஸ்தானின் பொருளாதார, அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான இரண்டாவது பெரிய மையமாக சமர்கண்ட் உள்ளது. உஸ்பெகிஸ்தான் குடியரசின் அகாடமி ஆஃப் சயின்ஸில் உள்ள தொல்பொருள் நிறுவனம் சமர்கண்டில் அமைந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள கட்டடக்கலை நினைவுச்சின்னங்கள் உலக புகழ்பெற்றவையாக உள்ளன. மேலும் இவை சமர்கண்டை நாட்டின் சர்வதேச சுற்றுலாவில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற்றுகின்றன.
இந்த பிராந்தியத்தில் பளிங்கு, கிரானைட், சுண்ணக்கல், கார்பனேட்டு மற்றும் சுண்ணக்கட்டி போன்ற கட்டுமானப் பொருட்கள் உட்பட சமர்கண்ட் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்களும் உள்ளன. மேலும் பருத்தி மற்றும் தானியங்கள் விளைச்சல், ஒயின் தயாரித்தல் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு ஆகியவை இப்பகுதியின் முக்கிய வேளாண் மக்களின் முக்கியப் பணிகளாக உள்ளது. தொழிற்துறையைப் பொறுத்தவரை, உலோகப் பொருள் தயாரித்தல் ( தானுந்துகள் மற்றும் இணைப்புகளுக்கான உதிரி பாகங்கள்), உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் மட்பாண்டத் தொழில்கள் இப்பகுதியில் மிகவும் சுறுசுறுப்பாக நடக்கின்றன.
இந்த பிராந்தியத்தில் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி உள்ளது, 400 கி.மீ. க்கும் நீண்ட தொடருந்து பாதைகள் மற்றும் 4100 கி.மீ. க்கும் மேற்பட்டு நீண்ட சாலை வசதி, தொலைதொடர்பு உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை நன்கு வளர்ந்து உள்ளன.
நிர்வாக பிரிவுகள்
[தொகு]மாவட்ட பெயர் | மாவட்ட தலைநகரம் | |
---|---|---|
1 | புலுங்கூர் மாவட்டம் | புலுங்கூர் |
2 | இஷ்டிகோன் மாவட்டம் | இஷ்டிகோன் |
3 | ஜம்பாய் மாவட்டம் | ஜம்பாய் |
4 | கட்டகுர்கன் மாவட்டம் | பைசான்பா |
5 | கோஷ்ராபோட் மாவட்டம் | கோஷ்ராபோட் |
6 | நர்பே மாவட்டம் | ஒகுடோஷ் |
7 | நியூரோபோட் மாவட்டம் | நியூரோபோட் |
8 | ஒக்தார்யா மாவட்டம் | லாயீசின் |
9 | பக்தாச்சி மாவட்டம் | சையாடின் |
10 | பயாரிக் மாவட்டம் | பயாரிக் |
11 | பாஸ்டர்கோம் மாவட்டம் | ஜுமா |
12 | சமர்கண்ட் மாவட்டம் | குலாபாத் |
13 | டாய்லோக் மாவட்டம் | டாய்லோக் |
14 | உர்குட் மாவட்டம் | உர்குட் |
லத்தீன் எழுத்துகளில் உள்ள மாவட்ட பெயர்கள் சமர்கண்ட் பிராந்திய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி ஆகும். Gov.uz [1]
பிராந்தியத்தில் உள்ள நான்கு மாநகரங்களும் நகரங்களும் எந்த மாவட்டங்களுக்கும் சொந்தமானவையாக அல்லாதவையாக உள்ளன. ஏனெனில் அவை பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள் என்ற நிலையை கொண்டுள்ளன. அவை சமர்கண்ட், கட்டா-குர்கன், ஓக்டோஷ் மற்றும் உர்குட் என்பவை ஆகும்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Information about the Samarkand Region பரணிடப்பட்டது 2007-10-08 at the வந்தவழி இயந்திரம், www.samarqand.uz பரணிடப்பட்டது 2009-06-05 at the வந்தவழி இயந்திரம், accessed on 2007-07-21.
- ↑ Samarqand Region web site on gov.uz பரணிடப்பட்டது 2007-07-12 at the வந்தவழி இயந்திரம்