சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1991 முதல் 2018 வரை, 10 - 50 வயதுப் பெண்களுக்கு வழிபடும் உரிமை மறுக்கப்பட்டிருந்த சபரிமலை அய்யப்பன் கோவில்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள இந்துக் கோவிலான சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் (10 - 50 வயது) நுழைவதற்குச் சட்டப்படியாக 1991 முதல் 2018 வரைத் தடை விதிக்கப்பட்டிருந்தது.[1] 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றமானது, பாலின வேறுபாடின்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தது.[2] குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்த அனுமதி மறுப்பானது, அரசியலமைப்புச் சட்டத்தித்திற்கு எதிரானது என்றும், சட்டப்பிரிவு 14 இன்கீழ் சமவுரிமைக்கும், சட்டப்பிரிவு 25 இன்கீழ் இந்தியாவின் சமயச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் தீர் நடுவர் அமர்வு அனுமதிக்கான தடை உத்தரவை ரத்து செய்தது..[3][4] உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாக கேரளாவில் எதிர்ப்பு எழுந்தது.[5] இத்தீர்ப்பின் காரணமாக பல பெண்கள் தாக்குதல் மிரட்டல்களையும் கடந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களால் கோவிலுக்குள் செல்ல இயலவில்லை.[6][7] மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழையக் கூடாதென்ற வழக்கத்தைத் தடைசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், முதன்முறையாக 2019 சனவரி 2 அன்று 50 வயதுக்குக் குறைவான இரு பெண்கள் இக்கோயிலுக்குள் சென்று அய்யப்பனை வழிபட்டுள்ளனர்.[8][9]

மரபுவழிக் கூற்று[தொகு]

புராணக் கதைகளின்படி சபரிமலைக் கோயிலின் இறைவன் அய்யப்பன் திருமணம் முடிக்காதவராவார். மகுசாசூரி என்ற அரக்கியை இவர் வீழ்த்தியபோது, அவள் ஒரு அழகிய பெண்ணாக உருவெடுத்தாள். அப்பெண், சிவன் மற்றும் விஷ்ணு இருவரின் சேர்க்கையில் பிறக்கும் குழந்தையுடன் போரிடும்வரை அரக்கியாக வாழவேண்டிய சாபம் பெற்றிருந்தாள். சிவனுக்கும் விஷ்ணுவின் தோற்றமான மோகினிக்கும் பிறந்து காட்டில் வளர்ந்த அய்யப்பன் அவளுடன் சண்டையிட்டு வென்றபோது, அவளது சாபம் நீங்கி மீண்டும் பழைய உருவை அடைந்தாள்.[10][11] பெண்ணாக மாறியவள் அய்யப்பனை மணந்து கொள்ள விழைந்தாள். ஆனால் அய்யப்பனோ, பிரம்மச்சாரியாக காட்டில் வாழ்ந்து பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்ற விதிக்கப்பட்டவர் தான் எனக்கூறி அவளை மணக்க மறுத்து விட்டார்.[12] அப்பெண் திருமணத்திற்கு வற்புறுத்தியதால், அவரைக் காண கன்னிச் சாமிகள் (முதன்முறையாக சபரிமலை வரும் பக்தர்கள்) வருவது நின்றுபோகும் நாளில் அவளைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்களித்தார். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் கன்னிச் சாமிகளின் வருகை தொடர்ந்ததால் அத்திருமணம் நடக்கவில்லை. அய்யப்பன் கோவிலுக்கு அருகிலமைந்த கோவிலில் அப்பெண் "மாளிகைபுரத்து அம்மன்" என்ற பெயரில் வழிபடப்படுகிறார்.[13]

வரலாறு[தொகு]

19 ஆம் நூற்றாண்டில் சென்னை மாகாண அரசால் இரு தொகுப்புகளாக வெளியிடப்பட்ட "திருவிதாங்கூர் மற்றும் கொச்சி மாகாணங்களின் கருத்தாய்வுக் குறிப்பேடு"களின்படி, இரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.[14] 1991 ஆண்டுக்கு முன்னர் கேரள உயர் நீதிமன்றம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் செல்வதைத் தடைசெய்திருந்த போதும், சமய நோக்கமின்றி சில பெண்கள் அங்கு சென்றுள்ளனர்.[15] தங்களது குழந்தைகளுக்கு முதன்முதலாக சோறு ஊட்டும் விழாவிற்குப் பெண்கள் இக்கோவிலுக்குச் சென்றதற்கான ஆதாரக் குறிப்புகளும் உள்ளன.[16][2][17]1986 ஆம் ஆண்டு "நம்பினார் கெடுவதில்லை" என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக நடிகையர் ஜெயசிறீ, அனு, சுதா சந்திரன், வடிவுக்கரசி, மனோரமா ஆகியோர் பதினெட்டாம் படியில் நடனமாடியுள்ளனர். அதற்காக அந்த நடிகையர் மற்றும் இயக்குநரிடமிருந்து தலா 1000 ரூபாய் தண்டனைக் கட்டணம் விதிக்கப்பட்டது. படப்பிடிப்புக்கு அனுமதியளித்த தேவசம் குழுவிற்கு 7500 ரூபாய் தண்டனைக் கட்டணம் விதிக்கப்பட்டது.[18] முன்னாள் கர்நாடக அமைச்சர் ஜெயமாலா தான் அக்கோவிலுக்குள் சென்றதாகவும், அய்யப்பன் திருவுருவைத் தொட்டதாகவும் அறிவித்தார்.[19][20]

1990 ஆம் ஆண்டு தேவசம் குழு ஆணையரின் பேத்தியின் முதற்சோறு ஊட்டல் விழா சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் நடைபெற்றது. அங்கு நடந்த இவ்விழாவில் உறவுப் பெண்களும் கலந்து கொண்டனர்.[18][21] இந்நிகழ்ச்சி தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லத் தடைவிதித்துத் தீர்ப்பளித்தது.[21] 1995 ஆம் ஆண்டு அன்றைய மாவட்ட ஆட்சியர் வல்சல குமாரி, கோவில் பற்றிய தகவல்களை அறியும் பொருட்டு அலுவலராக இக்கோவிலுக்குச் சென்றார்,[22] அதே ஆண்டில் இரு இளம் பெண்கள் (முக்கிய நபர்களின் மனைவியர்) காவல்துறையின் கண்காணிப்பிருந்தும் இக்கோவிலுக்குச் சென்று வந்ததாக உள்ளூர் நாளிதழில் செய்தி வெளியாகியது.[22] சனவரி 2018 இல் கோவில் அதிகாரிகள் இக்கோவிலுக்கு வரும் பெண்கள் தங்கள் வயதுக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கினர்.[23]

கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு[தொகு]

1990 ஆம் ஆண்டு மகேந்திரன் என்பவர், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் இளம்பெண்கள் செல்வதாக கேரள உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.[21] 1991 இல் இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் கே. பரிபூரணன் மற்றும் கே. பாலநாரயண மாறர் இருவரும் மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் இக்கோவிலுக்குள் செல்லக்கூடதென்பது பன்னெடுங்காலமாகத் தொடரும் வழக்கமாக இருப்பதால், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லக்கூடாதென தடைவிதித்துத் தீர்ப்பளித்தனர். [24] அத்துடன் அத்தீர்ப்பில் தடையைச் செயற்படுத்துவதற்குக் கேரள அரசு காவற்துறையினரை நியமிக்க வேண்டுமெனவும் கூறப்பட்டிருந்தது.[25]

கேரள உயர்நீதிமன்றத்தின் கருத்து:[26]

இத்தடையானது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 15, 25, 26 ஆகியவற்றின் மீறலாக அமையாது; மேலும் இத்தடையானது ஒட்டுமொத்த பெண்ணினத்துக்குரியதாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு மட்டுமே ஆனதாக உள்ளதால் இந்து சமய பொது வழிப்பாட்டிடம் சட்டப்பிரிவு 1965 க்கும் எதிரானது அல்ல.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு[தொகு]

2006 ஆம் ஆண்டு இந்திய வழக்கறிஞர்கள் கழக உறுப்பினர்களான ஆறு பெண் வழக்கறிஞர்கள், சபரிமலை அய்யப்பன்கோவிலுக்குள் நுழைய 10 -50 வயதுப் பெண்களுக்கு விதிக்கப்பட்டக் கேரள உயர்நீதிமன்றத் தடையாணையை நீக்கக் கோரி முறையீடு செய்தனர்.[27] அவர்களது முறையீட்டில், இத்தடை அரசியலமைப்புச் சட்ட உரிமை மீறலெனவும், இத்தடைக்கு ஆதரவாகக் குறிப்பிடப்பட்ட, கேரள இந்து சமய பொது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1965 இன் ஏற்புத்தன்மை குறித்தும் குறிப்பிட்டிருந்தனர்.[28]

இவ்வழக்கின் அடிப்படையில் 2018 செப்டம்பர் மாதம் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலைக் கோவிலுக்குள் செல்லலாமென உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.[29] அதன்படி கேரள இந்து வழிபாட்டுத் தலங்கள் நுழைவுச் சட்டம் 1965 பிரிவு 3 பியை ரத்து செய்தது. பெண்கள் வயது வித்தியாசம் இல்லாமல் சபரிமலை செல்வதற்கு தடை ஏதும் இல்லை என்கிற நிலை ஏற்பட்டது.[30]

உச்சநீதிமன்றக் கூற்று:

குறிப்பிட்ட வயதுப் பெண்களை ஒரு இந்து சமயக் கோவிலுக்குள் செல்வதையும் அய்யப்பனை வழிபடுவதையும் தடைசெய்யும் இவ்வழக்கம், தெளிவானதொரு உரிமை மீறல் என்பதைத் தெரிவிப்பதில் எங்களுக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை; பெண்களுக்கான இந்த மறுப்பு, அவர்களின் கடவுள் வழிபாட்டு உரிமைப் பறிப்பாகும்.

இத்தீர்ப்பு 4-1 என்ற பெரும்பான்மையில் வழங்கப்பட்டது. உச்சதீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அஜய் மணிக்ராவ் கான்வில்கர், ரோகின்டன் பாலி நரிமன், தனஞ்சயன் ஒய். சந்திரசூடன் ஆகிய நால்வரும் இத்தீர்ப்புக்கு ஆதரவாகவும், நீதிபதி இந்து மல்கோத்ரா எதிராகவும் இருந்தனர்.[31] இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25 (உட்பிரிவு 1), கேரள இந்து சமய வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் விதி 3(b) ஆகியவற்றுக்கு எதிரானது இத்தடையென உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.[31]

சீராய்வு மனுக்கள்[தொகு]

மேற்கூறிய தீர்ப்பின் மீது 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றை 6.2.2019 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நவம்பர் 14 , 2019 அன்று வழங்கியது. மற்ற 4 நீதிபதிகளும் இந்த அமர்வில் இடம்பெற்றிருந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், ஏ.எம்.கான்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அளித்த பெரும்பான்மை தீர்ப்பில் சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வு விசாரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தும், சபரிமலையில் வயது வித்தியாசமில்லாமல் பெண்கள் வழிபட கேரள அரசு கூடுதல் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் எனவும் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர். இதுபோல் உச்சநீதிமன்றத்தின் முன் உள்ள மதம் சம்மந்தப்பட்ட 7 பிரச்சனைகள் விரிவான அமர்வின் விசாரணைக்கு விடப்பட்டுள்ளது.[32]

பெண்கள் நுழைவுக்கு மறுப்பு வாதங்கள்[தொகு]

சபரிமலைக் கோவிலுக்குள் செல்வது மாளிகைபுரத்தம்மனின் காதலையும் தியாகத்தையும் இழிவுபடுத்துவதாகுமெனச் சில பெண்கள் கருதுகின்றனர்.[13] அய்யப்பன் மணமுடிக்க விரும்பாதவர். அதனால் இனப்பெருக்கக்காலப் பெண்கள் அவரை வழிபட வருவது அவரது நோக்கத்திற்குத் தடையாக அமையுமென அவரே தன்னைக் காணப் பெண்கள் வருவதை விருப்பப்படவில்லை எனச் சிலர் கருதுகின்றனர்.[33][12][34] வேறு சிலரோ அய்யப்பன் கோவிலுக்குப் பதிலாக, "பெண்களின் சபரிமலை" எனப்படும் "ஆட்டுக்கல் பொங்கலா" கோவிலுக்குப் பெண்கள் சென்று வழிபடலாமே என்கின்றனர்.[35] மாதவிடாய் என்பது புனிதமற்றது என்ற நம்பிக்கையால் அப்பருவப் பெண்கள் இந்துக் கடவுளரை வழிப்படுவது பாவமாகும் என்ற நம்பிக்கை உடையவர்களாய் சிலர் உள்ளனர்.[36] சிலர் ஆண்டாண்டுகாலமாய் நடைமுறையிலுள்ள பரம்பரை வழக்கங்களை மாற்றுவது தவறு என்ற கருத்தினை முன்னிறுத்துகின்றனர்.[37] மற்றும் சிலர் பெண்கள் மலையேறுவதிலுள்ள சிரமங்களைச் சுட்டுகின்றனர். சபரிமலைக் கோவில் அடர்ந்த காடுகளைக் கொண்ட மலையுச்சியில் அமைந்துள்ளதால் பெண்கள் அங்கு செல்வது சிரமமாக இருக்குமென்பது அவர்களது வாதமாக உள்ளது. சபரிமலை அதிகாரி ஒருவர் அங்கு பெண்களுக்குத் தேவையான அளவு சுகாதார வசதிகள் (குளியலறை, கழிப்பறை), மருத்துவமனை வசதிகளுக் இல்லை என்பதைக் காரணமாகக் கூறுகிறார்.[38] மேலும் சிலர் 41 நாட்கள் கடின நோன்பிருந்து வரும் ஆண் பக்தர்களுக்குக் கவனச் சிதறலாக பெண்களின் வருகை அமையுமெனக் கருதுகின்றனர்.[22] ஒரு வழக்கறிஞர் அய்யப்பனை ஒரு தனிநபராகக் கருதி, அவரது விருப்பத்தை மீறி அவரைக்காண மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் வருவது அய்யப்பன் என்பவரின் தனிமனித உரிமைமீறலாகும் என்கிறார்.[39] ஐக்கிய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒரு இதயநோய் மருத்துவர் அவ்வயதுப் பெண்கள் கோவிலுக்குச் செல்வது இடமகல் கருப்பை அகப்படலத்தை ஏற்படுத்தலாம் என்றார்; ஆனால் அவரது கூற்றுக்கு அறிவியல் ஆதாரமில்லை எனப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டது.[40][41][42] திருவிதாங்கூர் தேவசம் குழுத் தலைவர், பெண்களை அனுமதிப்பது ஒழுக்கக்கேடான செயல்களுக்கு வழிவகுத்து அவ்விடத்தை தாய்லாந்து போன்ற பாலியல் சுற்றுலாத்தலமாக ஆக்கிவிடும் எனக் கருதுகிறார்.[43][44]

பெண்கள் நுழைவுக்கு ஆதரவான வாதங்கள்[தொகு]

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை ஆதரிப்பவர்கள் மாதவிடாய் நிகழ்வு புனிதமற்றது அல்ல என்றும் கோவிலுக்கள் நுழைவதற்கு பெண்களுக்கு சமவுரிமை உள்ளதென்றும் வாதிடுகின்றனர்.[45] பிற கோவில்களுக்குள் செல்வதற்கு அப்பருவப் பெண்கள் அனுமதிக்கப்படும்போது அய்யப்பன் கோவிலுக்குள் மட்டும் மறுப்படுவது சரியானதல்ல என்கிறார்கள்.[46] பெண்களின் உடல்ரீதியாக, இயற்கையாக நிகழும் செயலுக்காக அவர்களைப் புனிதமற்றவர்கள் என்று கூறுவது பாலினப் பாகுபாடாகும் என்ற விமரிசனமும் உள்ளது.[34]

மாதவிடாயால் மாசு ஏற்படும் என்பதற்கு ஆன்மீக அல்லது அறிவியல்ரீதியாக எந்தவொரு காரணமும் இல்லையென இராஜன் குருக்கள் என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார். 15 ஆம் நூற்றாண்டில் அய்யப்பன் சாமியின் வழிபாட்டுத்தலமாக உருவெடுக்கும் முன்பு இவ்விடம் காடுவாழ் உள்ளூர்வாசிகள் ஐயனார் சாமியைக் வழிபட்ட இடமாக இருந்ததாகவும் அவர் கூறுகிறார். மாதவிடாய் நிகழ்வைப் புனிதமற்றதாகக் கருதும் பாரம்பரிய இந்துக்கள் போலன்றி, பழங்குடிமக்கள் அதனை நன்னிகழ்வாகவும் கருவுறுதல் வளமாகவும் கருதினர். 1960 கள் வரை அவர்கள் தங்களது அனைத்து வயது பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கோவிலுக்குச் சென்று வந்தனர். 1980கள் வரை இளம் பெண்கள் கோவிலுக்குள் சென்றதற்கான ஆதாரமான சான்றுகள் உள்ளதாக இந்த வரலாற்றாசிரியர் குறிப்பிடுகிறார்.[47] கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயன், (இடதுசாரி ஜனநாயக முன்னணிக் கட்சி எப்பொழுதும் பாலியல் சமத்துவத்துக்கு ஆதரவானது என்றும் சபரிமலை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு அனைத்து வசதிகளும் பாதுகாப்பும் செய்துதரப்படும் என்றும் கூறியுள்ளார்.[48]

நுழைவு முயற்சிகளின் தோல்வி[தொகு]

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர் அக்டோபர் 2018 இல் சபரிமலை அய்யப்பன் கோவில் பக்தர்களின் வருகைக்காகத் திறக்கப்பட்டபோது, நிலைக்கல் மற்றும் பம்பை அடிவார முகாம்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தன. போராட்டக்காரர்களால் பல பெண் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர். காவற்துறையினர் போரட்டக்காரர்களைக் கலைப்பதற்கு தடியடி நடத்தினர்.[49][50] ஆந்திராவைச் சேர்ந்த ஒரு 40 வயதுப் பெண், அவரது பயணத்தைத் மேற்தொடரமுடியாதபடி போராட்டக்காரர்களால் பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.[51][52]த நியூயார்க் டைம்ஸ் இதழின் பெண் நிருபர் சுகாசினி ராஜ், மரக்கூட்டம் அருகில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுப் பயணம் தொடரவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்.[53]

அக்டோபர் 19, அன்று கோவிலுக்குச் செல்ல முயன்ற இரு மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் சன்னிதானத்துக்கு 100 மீட்டர் தொலைவிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். கோவில் பூசாரி அவர்கள் 18 படிகளில் ஏற முயற்சித்தால், சன்னிதானத்தை மூடிவிடப்போவதாக மிரட்டியதையடுத்து அவ்விருவரும் முயற்சியைக் கைவிட்டுத் திரும்பினர்[54] சமய உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில், அய்யப்ப பக்தை போன்ற வேடத்தில் ஆபாசமான தோற்றப் ஒளிப்படத்தை முகநூலில் பதிவேற்றிய ரெகானா பாத்திமா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.[55]

தன்னுள் அய்யப்பனின் அருளாற்றல் நிரம்பியுள்ளது எனக் கூறிக்கொண்டு சபரிமலைக் கோவிலுக்குச் செல்ல முயன்ற 46 வயது பெண், காவற்துறை பாதுகாப்பளிக்க மறுத்து விட்டதால் திரும்ப நேர்ந்தது.[56] 2018 அக்டோபர் 20 அன்று, ஒரு பெண் பத்திரிக்கையாளரும் கேரள தலித் மகிளா கூட்டமைப்பின் தலைவியும் எதிர்ப்புகளால் இறுதிவரை செல்ல இயலாமல் திரும்பினர்.[57]

தலித் செயற்பாட்டாளர் பிந்து தங்கம் கல்யாணி, சபரிமலைக் கோவிலுக்குச் சென்றபோது அவருக்குக் காவற்துறையினரின் துணை இருந்தும் அவரது வழியில் பல இடங்களில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டார். அதனால் பம்பை வரை சென்றவர், திரும்பிச் செல்ல முடிவெடுத்தார். இம்முயற்சியால் தனது பணியை இழந்த அவர், போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு அஞ்சி வீட்டைவிட்டு வெளியேறி காவற்துறையின் பாதுகாப்போடு மறைந்து வாழ்ந்து வருகிறார்.[58]

2018 நவம்பர் 16 ஆம் நாளன்று, சபரிமலைக்கு செல்லும் நோக்கதோடு வந்த பெண்களின் உரிமைகள் செயற்பாட்டாளர் திருப்தி தேசாய், கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். அவ்வானூர்தி நிலையத்தினுள் 14 மணி நேரத்துக்கு மேலாக சிக்கிக்கொண்ட அவர் தனது முயற்சியை மீண்டும் தொடருவேன் என்ற சூளுரையுடன் திரும்பிச் சென்றார்.[59]

2018 திசம்பர் 16 அன்று சபரிலை கோவிலுக்கு வந்த நான்கு திருநங்கைகள் எருமேலி காவற்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டனர். அந்நால்வரும், காவற்துறையினர் தங்களைத் துன்புறுத்தியதாகவும், கோவிலுக்குள் சென்று அய்யப்பனைக் காண வேண்டுமெனில் ஆணுடை அணிந்து வரச்சொன்னதாகவும் அதற்குத் தாங்கள் ஒத்துக்கொண்டபோதும் சபரிமலையில் நிலவும் சட்ட ஒழுங்குச் சிக்கல் காரணமாக அதற்கும் காவற்துறையினர் சம்மதிக்கவில்லை எனவும் கூறினர்.[60] இரு நாட்கள் கழித்து, கோவில் நிர்வாகிகள் திருநங்கைகள் சபரிமலை கோவிலுக்குள் வருவதை எதிர்க்காததால் அந்நால்வரும் சன்னிதானம் சென்று அய்யப்பனை வழிபட முடிந்தது.[61]

2018 திசம்பர் 23 அன்று, சென்னை 'மனிதி' என்ற மகளிர் உரிமை அமைப்பைச் சேர்ந்த 11 பெண்களடங்கிய குழு ஒன்று சபரிமலைக் கோவிலுக்கு செல்ல முயன்றது. காவற்துறையினரின் துணையோடு சென்ற அவர்கள் பம்பை அடிவார முகாமிலிருந்து 100 மீ உயரத்தில் போராட்டக்ககாரர்களால் தடுக்கப்பட்டனர். அதன் பின்னர் அக்குழுவினர் தாமாகவே திரும்பிச் சென்றுவிட்டதாகக் காவற்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அக்குழுவினரோ தங்களைக் கேரளக் காவற்துறையினர்தாம் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பினதாகக் கூறினர்.[62]

போராட்டங்கள்[தொகு]

அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்வதை எதிர்த்து கேரளாவில் முழு கடையடைப்பைப் பாரதிய ஜனதா கட்சி அறிவித்தது. [63] இந்திய தேசிய காங்கிரசும் எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு மறுபரிசீலனை தேவையென வலியுறுத்தியது.[64] கேரள முதலமைச்சர், இத்தீர்ப்புக்கு எதிராக நடக்கும் போரட்டங்களுக்கும் வன்முறை நிகழ்வுகளுக்கும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கமே காரணமெனக் குற்றஞ்சாட்டினார்.[65] சபரிமலை அய்யப்பன் கோவில் வளாகத்தினருகில் கலவரத்தில் ஈடுபட்டதற்காகவும் வன்முறையைத் தூண்டியதற்காகவும் அக்கோவில் பூசாரிகள் குடும்பத்தில் ஒருவரும் "அய்யப்ப தேவசேனை"த் தலைவருமான ராகுல் ஈசுவர் கைது செய்யப்பட்டார்.[66][67] கொல்லம் துளசி என்ற மலையாள நடிகர், சபரிமலை கோவிலுக்குள் நுழையும் பெண்களை இரண்டாகக் கிழித்தெறிய வேண்டுமெனக் கூறினார்[68][69] சமய உணர்வுகளை இவ்வளவு வெளிப்படையாக வெறித்தனமாக வெளியிட்டதற்காகவும், பெண்களை கேவலமாகப் பேசியதற்காகவும் அவர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.[70]

உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து நடந்த போராட்டங்களில் 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்; கேரளாவின் பல்வேறு காவல்நிலையங்களிலும் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.[71]

நவம்பர் 2018 இல் 41 நாட்கள் மகரவிளக்கு வழிபாட்டிற்காகக் சபரிமலைக் கோவில் நடைதிறக்கப்பட்டபோது, போராட்டங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சன்னிதானம், பம்பை, நிலைக்கல் ஆகிய இடங்களில் இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவு 144 அமலாக்கப்பட்டது. இத்தடையாணையை மீறிக் கோவிலருகில் போராட்டம் நடத்தியதற்காக 70 பேர் கைது செய்யப்பட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலர் கே. சுரேந்திரன், இந்து ஐக்கிய வேதியின் தலைவர் கே. பி. சசிகலா ஆகிய இருவரும் இக்கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த வழியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.[72] இது, ஒட்டுமொத்த சபரிமலை பக்தர்களின் வழிபாட்டுரிமை மீறலென இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்தது.[73] மாநில அரசு கோவில் விவகாரங்களில் தலையிடுவதை எதிர்த்து சமூக ஊடகங்களில் தவறான கருத்துக்களைப் பதிவு செய்யும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கடவுச்சீட்டு ரத்துசெய்யப்பட்டு அவர்கள் நாடுதிரும்ப நேரிடுமென கேரள நகரக் காவற்துறை ஆணையரான பி. பிரகாஷ் எச்சரிக்கை விடுத்தார்[74]

சபரிமலையில் பக்தர்களுக்கு இடர் விளைவித்த கேரளக் காவற்துறையின் தடைநடவடிக்கைகளைக் கண்டித்த கேரள உயர் நீதிமன்றம் 144 தடை உத்தரவை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து 144 தவிர்த்த பிற தடை நடவடிக்கைகளை மெல்ல மெல்ல கேரள காவல் விலக்கிக் கொண்டது.[75] 144 தடை உத்தரவையும் நீக்கக் கோரி இந்திய தேசிய காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் தனித்தனியே போராட்டங்களை நடத்தின. 2018 திசம்பர் 13 அன்று 49 வயதான நபரொருவர் பாரத ஜனதா கட்சியின் போராட்டத்தில் தீக்குளித்தார். இதைத் தொடர்ந்து, பிஜேபி மாநிலம் தழுவிய மற்றொரு முழுக் கடையடைப்புப் போராட்டத்தை அறிவித்தது. சபரிமலை மகரவிளக்கு வழிபாட்டுக் காலம் தொடங்கியதிலிருந்து பாரதிய ஜனதா கட்சியினரால் அறிவிக்கப்பட்ட நான்காவது கடையடைப்பு இதுவாகும். கேரள அரசின் சபரிமலை நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நபர் தீக்குளித்ததாகப் பாரதிய ஜனதா கட்சியும், தனிப்பட்டக் காரணங்களுக்காகத் தீக்குளித்ததாகக் காவற்துறையும் கூறுகின்றனர்; ஆனால் அந்நபரின் மரண வாக்குமூலத்தில் சபரிமலை குறித்த எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை.[76]

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு ஆதரவாக கேரளப் பெண்கள் கலந்து கொண்ட "வனிதா மதில்" என்ற மனிதச் சங்கிலி போராட்டம் 2019 ஜனவரி 1 அன்று நடத்தப்பட்டது. பாறசாலை முதல் காசர்கோடு வரை 630 கிலோ மீட்டர் தூரத்திற்கு பெண்கள் தொடர்ச்சியாக நின்றனர். மாநில அரசால் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் 3-5 மில்லியன் பெண்கள் பங்கேற்றனர்.[77][78]

உயிரிழப்புகள்[தொகு]

உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் வருவதைக் கண்டித்து 2018 அக்டோபரில் ராமகிருஷ்ணன் என்ற குருசாமி தற்கொலை செய்து கொண்டார்.[79] 2019 ஜனவரியில் மாநிலம் முழுவதும் இந்து அமைப்பினர் செய்த தீவிரமாக போராட்டத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஒருவர் இறந்தார்.[80]

பெண்கள் நுழைவு[தொகு]

பலகாலமாக மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழையக் கூடாதென்ற வழக்கத்தைத் தடைசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், முதன்முறையாக 2019 சனவரி 2 அன்று 50 வயதுக்குக் குறைவான இரு பெண்கள் இக்கோயிலுக்குள் சென்று அய்யப்பனை வழிபட்டுள்ளனர்.[81]. இரு பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்து அய்யப்பனை வழிபட்ட செய்தியும் காணொலியும் வெளியான பின்னர் கோவில் நடை சாத்தப்பட்டுப் பரிகார பூசைகள் நடத்தப்பட்டு அதன்பிறகு மீண்டும் பக்தர்களுக்கு கோவில்நடை திறக்கப்பட்டது.[82]

உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பு வழங்கி 95 நாட்களுக்குப் பின்னர் 50 வயதுக்குக்கும் குறைந்த இரு பெண்கள், 2019 ஜனவரி 2, புதன்கிழமையன்று அதிகாலை 3.30 மணியளவில் காவற்துறையினரின் பாதுகாப்போடு சபரிமலை கோவிலுக்குள் சென்று வழிபட்டனர் இவ்விருவரில் ஒருவர் கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டியைச் சேர்ந்தவர்; மற்றொருவர் மலப்புரம் மாவட்டம் அங்காடிபுரத்தைச் சேர்ந்தவர்.[83] இவ்விருவரும் ஏற்கனவே திசம்பர் 24 ஆம் தேதியன்று சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் ஆவர். அவ்விருவரும் இக்கோவிலுக்குள் சென்று வழிபடாமல் ஊர் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் ரகசியமாக ஒரு இடத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது[84].

இவ்விரு பெண்களும் சென்று அய்யப்பனை வழிபட்டதைக் கேரள முதலமைச்சர் உறுதி செய்ததுடன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதற்குப் பாதுகாப்புக்கோரும் எல்லோருக்கும் உதவுவது காவற்துறையின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளார்.[85]


மேற்கோள்கள்[தொகு]

 1. "Ayyappan: Hindu deity" (en). Britannica. பார்த்த நாள் 20 October 2018.
 2. 2.0 2.1 KHC1991.
 3. "Sabarimala Temple: India's Supreme Court lifts ban on women entering shrine". CNN. https://www.cnn.com/2018/09/28/asia/india-temple-women-banned-intl/index.html. பார்த்த நாள்: 23 October 2018. 
 4. "Sabarimala verdict: SC upheld Constitution in letter and spirit by giving preference to equality in recent judgments". FirstPost. பார்த்த நாள் 23 October 2018.
 5. "Sabarimala Temple protests: What is happening in Kerala" (19 October 2018). பார்த்த நாள் 20 October 2018.
 6. "Explain Who Is A Devotee, Says Woman Who Couldn't Enter Sabarimala". பார்த்த நாள் 20 October 2018.
 7. "As Women Return, Sabarimala Head Priest Says "We Stand With Devotees": Highlights". பார்த்த நாள் 20 October 2018.
 8. "Two Young Women Enter Sabarimala: Live Updates". பார்த்த நாள் 2 January 2019.
 9. "சபரிமலையில் இரு இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் ஐயப்பனை தரிசித்தனர்". பார்த்த நாள் சனவரி 3, 2019.
 10. "What you might want to know about Sabarimala". The Economic Times. 18 October 2018. https://economictimes.indiatimes.com/news/et-explains/what-you-might-want-to-know-about-sabarimala/articleshow/66273712.cms. பார்த்த நாள்: 20 October 2018. 
 11. Long, Jeffery D. (2011) (in en). Historical Dictionary of Hinduism. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780810879607. https://books.google.com/?id=ZkkFCwAAQBAJ. 
 12. 12.0 12.1 "Here's why women are barred from Sabarimala; It is not because they are 'unclean' - Firstpost". FirstPost. பார்த்த நாள் 20 October 2018.
 13. 13.0 13.1 "Legend of Sabarimala: Love story that kept women from Lord Ayyappa" (en). பார்த்த நாள் 20 October 2018.
 14. "British era survey report says Sabarimala ban existed 200 years ago". The Week.
 15. "Appropriation of Ayyappa Cult: The History and Hinduisation of Sabarimala Temple". The Wire. பார்த்த நாள் 22 October 2018.
 16. KHC1991, paragraph 7.
 17. "Kerala for allowing women of all ages into Sabarimala temple" (en-IN) (8 February 2008). பார்த்த நாள் 26 October 2018.
 18. 18.0 18.1 "Sabarimala cinema shoot involving actresses forced rigid curbs on women". பார்த்த நாள் 20 October 2018.
 19. "Interview: Jayamala who entered Sabarimala in 1986, now advocates women rights" (en). One India (2016-01-15). பார்த்த நாள் 20 October 2018.
 20. "Karnataka minister Jayamala hails Sabarimala verdict, calls it historic". பார்த்த நாள் 20 October 2018.
 21. 21.0 21.1 21.2 "Sabarimala temple: Women entry issue first came up in Kerala High Court 28 years ago". The Indian Express (29 September 2018). பார்த்த நாள் 20 October 2018.
 22. 22.0 22.1 22.2 "Ban on women of prohibited age group visiting Sabarimala shrine comes under scrutiny" (en). India Today. பார்த்த நாள் 20 October 2018.
 23. "Age proof now a must for women to offer worship in Sabarimala" (en). Hindustan Times (4 January 2018). பார்த்த நாள் 20 October 2018.
 24. KHC1991, paragraph 44, (1).
 25. KHC1991, paragraph 45.
 26. KHC1991, paragraph 44, (3).
 27. SC2018.
 28. Hindu2006.
 29. "Women Of All Ages Can Enter Sabarimala Temple, Says Top Court, Ending Ban". NDTV.com. https://www.ndtv.com/india-news/keralas-sabarimala-temple-must-allow-women-of-all-ages-says-supreme-court-ending-restriction-1923556. 
 30. "Constitutional and legal bases of Sabarimala verdict" (17 October 2018).
 31. 31.0 31.1 Rautray, Samanwaya (29 September 2018). "Women of all ages can enter Sabarimala Temple, rules Supreme Court". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/supreme-court-allows-women-to-enter-sabarimala-temple/articleshow/65989807.cms. பார்த்த நாள்: 20 October 2018. 
 32. Desk, The Hindu Net (14 November 2019). "Sabarimala review sent to a larger Bench by 3:2 majority judgment - live".
 33. Harikrishnan, Charmy (4 September 2016). "Why women should have the right to enter Sabarimala". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-women-should-have-the-right-to-enter-sabarimala/articleshow/53996201.cms. பார்த்த நாள்: 20 October 2018. 
 34. 34.0 34.1 "Celibacy of Ayyappa is an Excuse to Oppress Women: NewsClick" (en) (2018-10-14). பார்த்த நாள் 20 October 2018.
 35. "Thousands of women offer 'Pongala' at Attukal Bhagavathy temple" (in en-IN). The Hindu. 2 March 2018. https://www.thehindu.com/news/national/kerala/thousands-of-women-offer-pongala-at-attukal-bhagavathy-temple/article22908910.ece. பார்த்த நாள்: 20 October 2018. 
 36. "Why are menstruating women not allowed in Sabarimala Temple? Centuries old beliefs and customs" (en). oneindia (2018-09-27). பார்த்த நாள் 20 October 2018.
 37. "Sabarimala row: If women's humanity is not our culture, we should make it so" (6 November 2016). பார்த்த நாள் 20 October 2018.
 38. "Kochi: Practical impediments for women to trek at Sabarimala" (en) (29 September 2018).
 39. "A lawyer for Lord Ayyappa: Advocate Sai Deepak turns heads in SC arguing for Sabarimala deity's right to celibacy - Firstpost". பார்த்த நாள் 20 October 2018.
 40. "Lady doctor's video about women's entry to Sabarimala goes viral - Kaumudiglobal : DailyHunt" (en). பார்த்த நாள் 20 October 2018.
 41. "Menstruation is not dirty, women are not impure: Campaign to counter myths in Kerala" (8 October 2018). பார்த்த நாள் 20 October 2018.
 42. "How the Sabarimala issue has promoted period shaming among young girls" (18 October 2018). பார்த்த நாள் 20 October 2018.
 43. "'Advocating women's entry at Sabarimala non-believers'" (en). Deccan Herald (20 October 2018). பார்த்த நாள் 22 October 2018.
 44. "Don't want to turn Sabarimala temple into Thailand, says TDB chairman" (14 October 2017). பார்த்த நாள் 22 October 2018.
 45. Cris (8 October 2018). "Menstruation is not dirty, women are not impure: Campaign to counter myths in Kerala". பார்த்த நாள் 20 October 2018.
 46. "The god who bars women from his temple". BBC News. 19 October 2018. https://www.bbc.com/news/world-asia-india-45901014. பார்த்த நாள்: 20 October 2018. 
 47. Gurukkal 2018.
 48. "Women have the same right to worship as men: Pinarayi Vijayan on Sabarimala issue" (en). பார்த்த நாள் 20 October 2018.
 49. "Sabarimala row: Devotees attack journalists, stop women from approaching temple". Hindustan Times. https://m.hindustantimes.com/india-news/tension-mounts-in-kerala-as-sabarimala-set-to-open-today/story-YRZuiWacJvlZc8Agn1gfJK.html. 
 50. "Sabarimala: Mobs attack women near India Hindu temple". BBC. https://www.bbc.com/news/world-asia-india-45885996. 
 51. "Andhra woman returns without Sabarimala darshan as protests mount". DNA (17 October 2018). பார்த்த நாள் 26 October 2018.
 52. "Woman, Family Abandon Sabarimala Trek Out Of Fear, Say No Cops At Temple". NDTV. பார்த்த நாள் 26 October 2018.
 53. "New York Times journalist, colleague forced to return from Sabarimala amid protest". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/current-affairs/181018/new-york-times-journalist-forced-to-return-sabarimala-amid-protest.html. 
 54. "Sabarimala protests: Women descend the hill without darshan following protests". The Hindu. https://www.thehindu.com/news/national/kerala/sabarimala-women-entry-issue-protests-continue/article25258611.ece. 
 55. "Sabarimala: India activist held for 'explicit' thigh photo". BBC. https://www.bbc.com/news/world-asia-india-46369651. 
 56. "Another woman reaches Pamba to enter Sabarimala, goes back as cops deny protection" (19 October 2018). பார்த்த நாள் 20 October 2018.
 57. "Who is Manju, the Dalit woman devotee who wants to enter Sabarimala?" (20 October 2018). பார்த்த நாள் 20 October 2018.
 58. "Harassed,abused,forced into hiding: A woman's ordeal for attempting Sabarimala trek". The News Minute. https://www.thenewsminute.com/article/harassed-abused-forced-hiding-woman-s-ordeal-attempting-sabarimala-trek-90453. 
 59. "Trupti Desai heads back home after protesters bloch her Sabarimala trek, says "will certainly return"". news18. https://www.news18.com/news/india/sabarimala-live-trupti-desai-to-return-to-pune-after-day-long-standoff-with-protesters-at-kochi-airport-1940755.html. 
 60. ""Why are you dressed like women?":Police threaten, block transwomen at Sabarimala". The News Minute. https://www.thenewsminute.com/article/police-block-four-transgender-persons-entering-sabarimala-93451. 
 61. "Four transgender women pray at India's Sabarimala temple". BBC. https://www.bbc.com/news/world-asia-india-46603112. 
 62. "11 Sabarimala-bound women chased away". Deccan Herald. https://www.deccanherald.com/national/11-sabarimala-bound-women-709539.html. 
 63. "Sabarimala hartal turns violent, KSRTC buses wrecked" (in en-IN). The Hindu. 18 October 2018. https://www.thehindu.com/news/national/kerala/sabarimala-hartal-turns-violent-ksrtc-buses-wrecked/article25256048.ece. பார்த்த நாள்: 20 October 2018. 
 64. "Congress launches protest, demands review petition against Sabarimala verdict" (in en). Hindustan Times. 5 October 2018. https://www.hindustantimes.com/india-news/congress-launches-protest-demands-review-petition-against-sabarimala-verdict/story-sm4qUMSzxhe6gNG8sx28MP.html. பார்த்த நாள்: 30 October 2018. 
 65. "Pinarayi blames 'RSS-backed upper caste religious fanatics' for Sabarimala violence" (in en-IN). The Hindu. 18 October 2018. https://www.thehindu.com/news/national/kerala/sabarimala-violence-pinarayi-blames-rss-backed-upper-caste-religious-fanatics/article25257810.ece. பார்த்த நாள்: 20 October 2018. 
 66. "Rahul Easwar, face of 'Save Sabarimala' campaign, on a fast in prison" (in en-IN). The Hindu. 20 October 2018. https://www.thehindu.com/news/national/kerala/rahul-easwar-face-of-save-sabarimala-campaign-on-a-fast-in-prison/article25271833.ece. பார்த்த நாள்: 20 October 2018. 
 67. "Court denied bail to Rahul Easwar" (in en-IN). The Hindu. 20 October 2018. https://www.thehindu.com/news/national/kerala/court-denied-bail-to-rahul-easwar/article25272748.ece. பார்த்த நாள்: 20 October 2018. 
 68. "Tear in two all women who enter Sabarimala, says actor Kollam Thulasi as Kerala BJP president listens". Indian Express (13 October 2018). பார்த்த நாள் 26 October 2018.
 69. "Sabarimala comment: Kollam Thulasi booked, actor apologises" (en). பார்த்த நாள் 26 October 2018.
 70. "Actor Kollam Thulasi booked for controversial remarks on women entering Sabarimala" (15 October 2018). பார்த்த நாள் 20 October 2018.
 71. "Total 3,345 Sabarimala protestors arrested till now". NDTV. https://www.ndtv.com/kerala-news/total-3-345-sabarimala-protestors-arrested-till-now-1938825. 
 72. "Sabarimala: Kerala court grants bail to BJP leader Surendran and 71 others". India Today. https://www.indiatoday.in/india/story/sabarimala-kerala-court-grants-bail-to-bjp-leader-surendran-and-71-others-1393457-2018-11-21. 
 73. "Gross violation of Human Rights of devotees at Sabarimala: Kerala human rights body" (in en-US). The Indian Express. 2018-11-18. https://indianexpress.com/article/india/gross-violation-of-human-rights-of-devotees-at-sabarimala-kerala-human-rights-commisison-5452494/. 
 74. "Will cancel passports of NRIs inciting riots over Sabarimala issue say Kerala cops". The News Minute. 2018-11-21. https://www.thenewsminute.com/article/will-cancel-passports-nris-inciting-riots-over-sabarimala-issue-say-kerala-cops-91923. 
 75. "Kerala High Court lifts restrictions imposed by police in Sabarimala except section 144". News 18. https://www.news18.com/news/india/kerala-hc-lifts-restrictions-imposed-by-police-in-sabarimala-except-section-144-1952449.html. 
 76. "Kerala:BJP calls for hartal after Ayyappa devotee immolates self". The Indian Express. https://indianexpress.com/article/india/sabarimala-temple-kerala-bjp-calls-for-hartal-after-ayyappa-devotee-immolates-self-5492475/. 
 77. "Women's Wall highlights: Massive turnout in Kerala for equal rights". India Today. January 1, 2019. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/womens-wall-live-updates-massive-turnout-in-kerala-for-equal-rights/articleshow/67335718.cms. 
 78. "சபரிமலை விவகாரம் : 'வனிதா மதில்' நிகழ்ச்சியை முன்னெடுக்கும் கேரள அரசு". Thanthi Tv. ஜனவரி 1, 2019. https://www.thanthitv.com/News/India/2019/01/01184721/1020291/Sabarimala-Issue-Kerala-Govt-Conducting-Vanitha-Mathil.vpf. 
 79. "கோவில் நடை திறக்கும் முன் நான் உலகை விட்டுச் செல்கிறேன் : சபரிமலைக்காக குருசாமி தற்கொலை". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://tamil.indianexpress.com/india/sabarimala-guruswamy-commits-suicide-for-women-entry-into-temple/. பார்த்த நாள்: 4 January 2019. 
 80. "கேரளாவில் போராட்டம் தீவிரம்; பா.ஜனதா தொண்டர் உயிரிழப்பு; 10 குறிப்புகள்". தினத்தந்தி. https://www.dailythanthi.com/News/India/2019/01/03161027/Sabarimala-protest-live-Two-held-for-death-of-BJP.vpf. பார்த்த நாள்: 4 January 2019. 
 81. "2 Women Below 50 Enter Sabarimala, Temple Reopens After "Purification"".
 82. "முழு பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தோம்: சபரிமலை சென்ற பெண் பேட்டி".
 83. "Women take historic step into India shrine" (in en-GB). BBC News. 2019-01-02. https://www.bbc.com/news/world-asia-india-46733750. 
 84. "Two women below 50 claim they entered Kerala's Sabarimala temple - Times of India ►".
 85. "Protests erupt in Kerala after two women enter Sabarimala; BJP, Congress attack Vijayan govt" (en-IN) (2019-01-02).