உள்ளடக்கத்துக்குச் செல்

சன்செட் பவுலேவார்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்செட் பவுலேவார்டு
அச்சமுற்ற இளம் தம்பதியினருக்கு மேலாக, ஒரு முதிய பெண்ணின் சீற்றமும் ஆவேசமும் நிறைந்த முகம் பிரம்மாண்டமாகத் தோன்றும் — பெரும்பாலும் சிவப்பு நிறம் மிக்க ஒரு ஓவியக் காட்சி; 'சன்செட் பவுலேவார்டு' எனும் தலைப்பு, முடிச்சிடப்பட்ட ஒரு திரைப்படச் சுருளின் மீது உள்ளது.
சுவரொட்டி
இயக்கம்பில்லி வைல்டர்
தயாரிப்புசார்லஸ் பிராக்கெட்
கதை
  • சார்லஸ் பிராக்கெட்
  • பில்லி வைல்டர்
  • டி. எம். மார்ஷ்மேன் ஜூனியர்
இசைபிரான்ஸ் வாக்ஸ்மேன்
நடிப்பு
ஒளிப்பதிவுஜான் எஃப். சீட்ஸ்
படத்தொகுப்பு
  • டோன் ஹாரிசன்
  • ஆர்தர் ஷ்மிட்
கலையகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 10, 1950 (1950-08-10)
ஓட்டம்110 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$1.75 மில்லியன்[சான்று தேவை]
மொத்த வருவாய்$5 மில்லியன்[சான்று தேவை]

சன்செட் பவுல்வர்டு (Sunset Boulevard) என்பது 1950 ஆம் ஆண்டு வெளியான பில்லி வைல்டர் இயக்கிய, அமெரிக்க அவள நகைச்சுவை [1] பிலிம் நோயர் [2] திரைப்படமாகும். இப்படத்தின் திரைக்கதையை வைல்டர், சார்லஸ் பிராக்கெட் மற்றும் டி. எம். மார்ஷ்மேன் ஜூனியர் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். ஹாலிவுட் மற்றும் மேற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் வழியாகச் செல்லும் ஒரு முக்கிய சாலையின் பெயரே இப்படத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.

இப்படத்தில், வாழ்வில் போராடும் திரைக்கதை எழுத்தாளரான ஜோ கில்லிஸ் கதாபாத்திரத்தில் வில்லியம் ஹோல்டனும், ஊமைப்பட முன்னாள் நட்சத்திரமான நார்மா டெஸ்மண்ட் கதாபாத்திரத்தில் குளோரியா சுவான்சனும் நடித்துள்ளனர். நார்மா, திரையுலகில் வெற்றிகரமாக மீண்டும் மறுபிரவேசம் செய்ய வேண்டும் என்று கனவு காணும் மனநிலை பிறழ்ந்த கற்பனை உலகிற்குள் வாழ்கிறாள். அவளது விசுவாசமான சமையல்காரரான மேக்ஸ் வான் மேயர்லிங் கதாபாத்திரத்தில் எரிக் வான் ஸ்ட்ரோஹெய்ம் நடித்துள்ளார். நான்சி ஓல்சன், ஜாக் வெப், லாயிட் கஃப் , ஃப்ரெட் கிளார்க் ஆகியோர் துணை வேடங்களில் தோன்றுகின்றனர். இயக்குநர் செசில் பி. டிமில் மற்றும் கிசுகிசுப் பத்தியாளர் ஹெடா ஹாப்பர் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களாகவே நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் ஊமைப்பட நட்சத்திரங்களான பஸ்டர் கீடன், எச். பி. வார்னர் , அன்னா க்யூ. நில்சன் ஆகியோர் கௌரவத் தோற்றங்களில் வருகின்றனர்.

இப்படம் வெளியானபோது பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. 11 அகாடமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு (நடிப்புப் பிரிவுகளில் நான்கு உட்பட) மூன்றைப் பெற்றது. இது பெரும்பாலும் இதுவரை வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1989-ல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தால் "பண்பாட்டு ரீதியாக, வரலாற்று ரீதியாக அல்லது அழகியல் ரீதியாக குறிப்பிடத்தக்கது" என்று கருதப்பட்டதால், சன்செட் பவுல்வர்டு தேசிய திரைப்படப் பதிவேட்டில் பாதுகாப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தொகுதித் திரைப்படங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. [3] 1998 ஆம் ஆண்டில், 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 அமெரிக்கத் திரைப்படங்களின் பட்டியலை அமெரிக்கத் திரைப்பட நிறுவனம் (American Film Institute) வெளியிட்டபோது, ​​அதில் இப்படம் 12-வது இடத்தைப் பிடித்தது. 2007-ஆம் ஆண்டில், அந்நிறுவனம் வெளியிட்ட அதன் 10-வது ஆண்டு நிறைவுப் பட்டியலில் இப்படம் 16-வது இடத்தைப் பெற்றது.

கதை

[தொகு]

சன்செட் பவுல்வர்டு சாலையில் உள்ள ஒரு மாளிகையின், நீச்சல் குளத்தில் திரைக்கதை எழுத்தாளர் ஜோ கில்லிஸின் உடல் குப்புற கவிழ்ந்த நிலையில் மிதக்கிறது. காவல்துறையினரும் ஒளிப்படக்காரர்களும் அதைக் காண்கின்றனர். ஜோவின் பிணமே தனது மரணத்திற்கு காரணமான நிகழ்வுகளை விவரிக்கும் ஒரு பின்னோக்கு காட்சியில் படம் துவங்குகிறது.

ஆறு மாதங்களுக்கு முன்பு, கதை வருகிறது. வாழ்க்கையில் பின்தங்கிய நிலையில் தவிக்கும் திரைக்கதை எழுத்தாளரான ஜோ, தான் கொடுத்த ஒரு கதையின் மீது பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ஆர்வம் ஏற்படுத்த முயல்கிறார். ஜோ தான் பேசுவதை கேட்கிறார் என்பதை அறியாமல் திரைக்கதை வாசிப்பாளரான பெட்டி ஷேஃபர் அக்கதையைக் கடுமையாக விமர்சிக்கிறார். பின்னர், மூன்று மாத தவணையைக் கட்டத் தவறியதால் ஜோவின் காரை பறிமுதல் செய்ய ஆட்கள் வருகின்றனர். கடன்காரர்களிடமிருந்து தப்பிக்க முயலும், ஜோ தற்செயலாக ஊமைப்பட காலத்தில் நட்சத்திரமாக இருந்த நார்மா டெஸ்மண்ட் வசிக்கும், ஆள் நடமாட்டம் இல்லாதது போல் தோன்றும் ஒரு மாளிகையின் நுழைவாயிலுக்குள் நுழைகிறார். இறுதியில் நடிகையை அடையாளம் கண்டுகொண்ட ஜோ, "நீங்கள்தான் நார்மா டெஸ்மண்ட். நீங்கள் ஊமைப்படங்களில் நடித்தீர்கள். நீங்கள் ஒரு காலத்தில் பெரிய ஆளாக இருந்தீர்கள்," என்கிறார். அதற்கு நார்மா, " நான் பெரிய ஆள்தான், ஆனால் நான் நடித்த படங்கள்தான் சிறியதாகிவிட்டன!" என்று பதிலளிக்கிறாள்.

ஜோ ஒரு திரைக்கதை எழுத்தாளர் என்பதை அறிந்த நார்மா, தன் எழுதிய சலோமி என்ற திரைக்கதை குறித்து அவரிடம் கருத்து கேட்கிறாள். திரைப்படத் துறைக்கு மீண்டும் திரும்பு விரும்பும் அவள், அந்தப் பாத்திரத்தில் தானே நடிக்கத் திட்டமிடுகிறாள். ஜோ அவளது திரைக்கதை படுமோசமாக இருப்பதாகக் கூறினாலும், அவளைப் புகழ்ந்து பேசி, தன்னைத் திரைக்கதை ஆலோசகராகப் பணியமர்த்திக் கொள்கிறார்.

நார்மாவின் வற்புறுத்தி ஜோவை அவளது மாளிகையிலேயே தங்க வைக்கிறாள். அவருக்கு புது ஆடைகள், பரிசுகள் வாங்கிக் கொடுத்து மகிழ்கிறாள். தனது திரைப் புகழ் மறைந்துவிட்டதை நார்மா நம்ப மறுப்பதை ஜோ காண்கிறார். அந்த மாயையைத் தக்கவைப்பதற்காக, அவளின் பணியாளரான மேக்ஸ், அவளுக்கு ரசிகர் கடிதங்களை இரகசியமாக எழுதுகிறான். புத்தாண்டு இரவு விருந்தின்போது நார்மா தன் காதலை ஜோவிடம் வெளிப்படுத்துகிறாள். அவர் அவளின் காதலை மென்மையாக நிராகரிக்க முயற்சிக்கிறார். ஆத்திரமடைந்த நார்மா அவரை அறைந்துவிட்டு, மனமுடைந்து தன் அறைக்குச் செல்கிறாள். ஜோ தன் நண்பன் ஆர்டி கிரீனைச் சந்திக்கச் செல்கிறார். அங்கே தன் கதையை விமர்சித்த பெட்டி என்ற இளம் பெண்ணை சந்திக்கிறார். பெட்டி ஜோவின் திரைக்கதையில் உள்ள சில காட்சிகளை பாராட்டுகிறாள். தனது பொருட்களை எடுத்துவைக்குமாறு மேக்ஸுக்கு ஜோ தொலைபேசியில் அழைக்கும்போது, நார்மா தனது சவரக்கத்தியால் மணிக்கட்டுகளை அறுத்துக்கொண்டு தற்கோலைக்கு முயன்றதாக மேக்ஸ் கூறுகிறான். தார்மீக குற்ற உணர்ச்சியால் ஜோ நார்மாவின் மாளிகைக்கே திரும்புகிறார். அவர்களது உறவு நெருங்கி பாலியல் ரீதியாக மாறுகிறது.

நார்மா தான் திருத்திய சலோமி திரைக்கதையை, திரைப்பட தயாரிப்பு நிறுவனமான பாரமவுண்டில் உள்ள புகழ்பெற்ற இயக்குநர் செசில் பி. டிமில்லுக்கு அனுப்பி வைக்கிறாள். பாரமவுண்ட் நிறுவனத்தின் நிருவாகியான கார்டன் கோலிடமிருந்து அவளுக்கு அழைப்புகள் வரத் தொடங்குகின்றன, ஆனால் அவள் டிமில்லியைத் தவிர வேறு யாரிடமும் பேச மறுக்கிறாள். இறுதியில், அவள் தனது 1929 இசொட்டா ஃபிராஷினி காரை மேக்ஸ் ஓட்ட ஜோவை உடனழைத்துக் கொண்டு பாரமவுண்டிற்கு சொல்கிறாள். டிமில்லி அவளை அன்புடன் வரவேற்று மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார், ஆனால் திரைக்கதையைப் பற்றிய அவளது கேள்விகளைத் தந்திரமாகத் தவிர்க்கிறார். ஒரு திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக அவளது இசொட்டா ஃபிராஷினி காரை வாடகைக்கு எடுக்க விரும்பிதான் கோல் அவளை அழைத்தார் என்பதை பின்னர் மேக்ஸ் அறிந்துகொள்கிறாள்.

டெமிலை சந்தித்தப்பிறகு நார்மா யதார்த்தத்தைப் புரியாமல், திரையில் மறுபிரவேசம் செய்ய கடுமையான அழகு சிகிச்சைகளை மேற்கொள்கிறாள். ஜோ இரவு நேரங்களில் இரகசியமாக பெட்டியின் அலுவலகத்தில் அவளுடன் திரைக்கதை விவாதங்களில் கலந்து கொள்கிறார். இறுதியில் பெட்டி அவர் மீது காதல் கொண்டிருப்பதை ஒப்புக்கொள்கிறாள். ஜோவின் இந்த பகுதிநேர வேலையைப் பற்றி அறிந்த நார்மா, பெட்டியிடம் ஜோ பற்றி அவதூறு பரப்ப முயல்கிறாள்.

ஆத்திரமுற்ற ஜோ, பெட்டியை நேரில் அழைத்து , அவளிடம் ஒரு சுயநலவாதியாக நடிக்கிறார். அவள் கண்ணீருடன் திரும்பிச் செல்கிறாள். பிறகு, அவர் ஓஹியோவின் டேட்டனில் உள்ள தனது பழைய செய்தித்தாள் வேலைக்குத் திரும்பிச் செல்வதற்காக தன் பொருட்களைப் பொட்டிகட்டுகிறார். இனி தான் திரும்பி வரப்போவதில்லை என்றும், அவளுக்கு வரும் ரசிகர் கடிதங்கள் அனைத்தையும் மேக்ஸ் எழுதியவைதான் என்றும், அவளை உலகம் மறந்துவிட்டது என்ற உண்மையை நார்மாவிடம் போட்டுடைக்கிறார். ஆனால் மேக்ஸ் அவளை மாயையிலிருந்து வெளிக்கொண்டுவர மறுக்கிறான். ஜோவின் சொற்களால் ஆத்திரமடைந்த நார்மா துப்பாக்கியைக் காட்டி கொன்றுவிடுவதாக விடுத்த மிரட்டலை ஜோ பொருட்படுத்தவில்லை; அவர் வீட்டை விட்டு வெளியேறுகையில், நார்மா அவரை மூன்று முறை சுடுகிறாள், அவர் நீச்சல் குளத்தில் சரிந்து விழுகிறார்.

கடந்த காலக் காட்சி முடிந்து, திரைப்படம் நிகழ்காலத்திற்குத் திரும்புகிறது. கொலைக் குற்றத்திற்காக நார்மா கைது செய்யப்படவிருக்கிறாள். நார்மா முழுமையாக தன் சுய நினைவை இழந்து, தான் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் இருப்பதாக நம்புகிறாள். அந்த மாளிகை முழுவதும் காவல்துறையினராலும், ஒளிப்படமிகளுடன் கூடிய செய்தியாளர்களால் நிறைந்திருக்கிறது. அவற்றை அவள் திரைப்பட ஒளிப்படமிகள் என்று நம்புகிறாள். மேக்ஸ் அவளை "இயக்குவது" போல் நடிக்க, காவல்துறையினரும் அதற்கு ஒத்துழைக்கின்றனர். ஒளிப்படமிகள் சுழலத் தொடங்க, நார்மா பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் கம்பீரமாக இறங்குகிறாள். கீழே வந்ததும், அவள் நின்று, செய்தியாளர்கள் மத்தியில் வந்து, மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிப்பதில் தனக்கு எவ்வளவு மகிழ்ச்சி என்பதைப் பற்றி திடீரென ஒரு உரையை நிகழ்த்துகிறாள். பிறகு, " திரு. டிமில், நான் எனது க்ளோஸ்-அப் காட்சிக்குத் தயார்" என்று கூறிவிட்டு, ஒளிப்படமியை நோக்கி வருகிறாள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sunset Boulevard (1950)". www.filmsite.org. Retrieved 2021-09-24.
  2. Dirks, Tim. "Sunset Boulevard (1950)". AMC Filmsite.
  3. "ENTERTAINMENT: Film Registry Picks First 25 Movies". Los Angeles Times (Washington, D.C.). September 19, 1989. https://www.latimes.com/archives/la-xpm-1989-09-19-mn-347-story.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்செட்_பவுலேவார்டு&oldid=4514650" இலிருந்து மீள்விக்கப்பட்டது