சந்திரா இரவீந்திரன்
சந்திரா இரவீந்திரன் | |
---|---|
பிறப்பு | சந்திரா தியாகராஜா இலங்கை ஆத்தியடி, பருத்தித்துறை |
இருப்பிடம் | பிரித்தானியா |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | தியாகராஜா, சிவகாமசுந்தரி |
பிள்ளைகள் | தரணியன், ரிஷியன், தர்ஷியா |
வலைத்தளம் | |
http://nathivanam.blogspot.com/ |
சந்திரா இரவீந்திரன் (வடமராட்சி-மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை) பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக செல்வி.சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சந்திரா இரவீந்திரன் (திருமதி.சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன்) , (செல்வி.சந்திரா தியாகராஜா) இலங்கை வடமராட்சி பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா(புகையிரதநிலைய அதிபர்), சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று ,பின்னர் யாழ்.கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியில் தன் தொழிற்கல்வியை நிறைவு செய்தபின்னர் பருத்தித்துறை-மாவட்ட நீதிமன்றில் பயிற்சிப் பணியாளராக கடமையாற்றினார். தொடர்ந்து புலம்பெயரும் வரை யாழ் அரசாங்க செயலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். 1991 இல் பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்து தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்றும் 1999ம் ஆண்டிலிருந்து, 14 வருடங்கள் இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப்பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இவர் இச்சங்கத்தில் செயலாளராகவும், தலைவராகவும் இருந்து இச்சங்கத்தினை சிறப்பாக இயக்கும் பணியில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்தியிருந்தார்.
எழுத்துலக வாழ்வு
[தொகு]இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் செல்வி.சந்திரா தியாகராஜா என்ற பெயரில் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ் ஒலி, அமிர்தகங்கை ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை, 'ஊடறு' பெண்கள் இதழ், யுகமாயினி, புலம் மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான 'யுகம்மாறும்' 'கண்ணில் தெரியுது வானம்' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் காலச்சுவடு இதழ்களிலும் வெளியாகியுள்ளன. இவரின் கவிதைகள் பல வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது "நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்" இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன்[1], அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.
1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான 'வெள்ளிப்பாதசரம்' தொகுப்பில் இவரது 'தரிசு நிலத்து அரும்பு' சிறுகதையும் இடம்பெற்றது.
1988ல் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் யதார்த்தா இலக்கியவட்டத்தினர் வெளியிட்ட 'நிழல்கள்' சிறுகதை குறுநாவல் தொகுப்பு இவரது முதல் நூலாகும்.
இவர் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் 1992ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "பாரிஸ் ஈழநாடு" பத்திரிகை நடாத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவரது "அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்" சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
பின்னர் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 'காலச்சுவடு' பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்' என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது.
வெளிவந்த நூல்கள்
[தொகு]- நிழல்கள் - (சிறுகதைகளும் குறுநாவலும்) - (1988 (பருத்தித்துறை 'யதார்த்தா' இலக்கிய வட்டம் வெளியீடு- இலங்கை, யாழ்ப்பாணம், பருத்தித்துறை)
- நிலவுக்குத் தெரியும் (சிறுகதைத் தொகுப்பு- காலச்சுவடு வெளியீடு, நவம்பர் 2011, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-80240-66-4)[2]
- மாமி சொன்ன கதைகள் ( அனுபவப் பகிர்வு)- காலச்சுவடு வெளியீடு -டிசெம்பர் 2022
பரிசுகளும் விருதுகளும்
[தொகு]- தமிழ்ச்சுடர் விருது (2018 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)[3]
- கவின் கலை மாமணிவிருது (2015 தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு வழங்கிய பெண் எழுத்தாளருக்கான விருது)[4]
- முதலாம் பரிசும், தங்கப்பதக்கமும் (1991 - அக்கினியில் கருகும் ஆத்மாக்கள் - சிறுகதை, பாரிஸ், ஈழநாடு, சிறுகதைப்போட்டி)[5]
- முதற் பரிசு (1987 சிரித்திரன், எரியும் தளிர்கள் - சிறுகதை )[6]
- மூன்றாம் பரிசு (1986 சிரித்திரன், சிவப்புப் பொறிகள் - சிறுகதை)[7]
- இரண்டாவது பரிசு (1984-1985 இரசிகமணி கனக செந்திநாதன் நினைவுக் குறுநாவற் போட்டி - குறுநாவல் நிச்சயிக்கப் படாத நிச்சயங்கள்)
வெளி இணைப்புகள்
[தொகு]- நிழல்கள் நூலகம் தளத்தில்
- இணையத்தளம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பேராசிரியர் சொக்கன் அவர்களிடமிருந்து பரிசைப் பெற்றுக் கொள்ளும் போது
- ↑ சந்திரா இரவீந்திரனின் 'நிலவுக்குத் தெரியும்' சிறுகதைத் தொகுப்பு - என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன், 4/13/2012 1:42:18[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தடாகம் கலை இலக்கிய வட்டம், 13.05.2018[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தடாகம் கலை இலக்கிய வட்டம், 10.09.2015[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ tamilsuthors.com
- ↑ சிரித்திரன் 1987.02|Page26-28|எரியும் தளிர்கள் - செல்வி. சந்திரா தியாகராசா
- ↑ சிரித்திரன் 1986.04|Page 16-18|சிவப்பு பொறிகள் - செல்வி.சந்திரா தியாகராஜா