சந்திராஷ்டமம் (சோதிடம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சந்திராஷ்டமம் என்பது குறிப்பிட்ட ஜாதகத்தில் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் நிலைபெறும் காலமான இரண்டே கால் நாட்களாகும். சந்திரன் என்பது கோசார சந்திரன் ஆகும். அஷ்டமம் என்பது எட்டாமிடம் என்று பொருள்படும்.

கணித முறைகள்[தொகு]

இது சந்திரனின் சுழற்சி காரணமாக ஏற்படும் தோஷமாகும். எடுத்துக்காட்டாக ஒருவருக்கு விருச்சக ராசி ஜென்ம ராசி என்றும், அனுஷம் ஜென்ம நட்சத்திரம் என்றும் அமைந்துள்ளது என்றால், விருச்சகத்திற்கு எட்டாம் ராசியான மிதுன ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் விருச்சக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் ஆகும். மிதுன ராசியில் மிருகசீரிடம் 1, 2, பாதங்கள், திருவாதிரை 1, 2, 3, 4 பாதங்கள் மற்றும் புனர்பூசம் 1, 2, 3 ஆகிய மூன்று நட்சத்திங்கள் (ஒன்பது பாதங்கள்) உள்ளன.

மற்றொரு கணித முறையில் குறிப்பிட்ட ஜாதகரின் ஜென்ம நட்சதிரத்தில் இருந்து எண்ணி 17 ஆவது நட்சத்திரம் முதல் உள்ள காலம் சந்திராஷட்டமம் ஆகும். இது ஒரு துல்லியமான கணக்கீட்டு முறை என்று கருதப்படுகிறது.

சந்திரனின் காரகத்துவம்[தொகு]

சந்திரனை மனோகாரகன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் சோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது மன உளைச்சல்களையும், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை குணங்களையும் தருகிறார். இக்காலங்களில் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

பரிகாரங்கள்[தொகு]

சுபமான நிகழ்வுகளை சந்திராஷ்டம காலங்களில் நடத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. இக்காலங்களில் முக்கிய முடிவுகளை எடுக்காமல் ஒத்தி வைக்கலாம். கடன் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம். பேச்சைக் குறைத்து இறைவனை மனதில் வழிபட்டு தியானித்தல் நல்ல பலன்களைத் தரும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சந்திராஷ்டமம் என்பதின் விளக்கம்
  2. சந்திராஷ்டமம் என்றால் என்ன?