உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தனக் கூடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை முஸ்லிம்களிடம் மறைந்துவிட்ட ஒரு பாரம்பரிய நிகழ்ச்சியாகவும், தமிழகத்தில் நெல்லை ஏர்வாடி மற்றும் ராமநாதபுரம் ஏர்வாடி , நாகூர் போன்ற இடங்களில் இந்நிகழ்ச்சி காணப்படுகின்றது. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிகளிலும், 20ம் நூற்றாண்டின் பின் அரைப் பகுதி வரையிலும் சந்தனக் கூடு கட்டும் சம்பிரதாயம் சில முஸ்லிம்களிடத்தே காணப்பட்டது. இது இந்துக்களின் மதப் பாரம்பரியமான 'தேர்' சம்பிரதாயம் மற்றும் கிறித்தவரின் 'சப்பரம்' ஆகியவற்றின் வழித்தோன்றலாகக் கொள்ளலாம்.

'சந்தனக்கூடு' எனும்போது தேர் வடிவிலே அலங்கரிக்கப்பட்ட கலையம்சங்கள் பொருந்திய ஊர்தியை குறிக்கும். ஆரம்பகாலத்திலே மிக உயர்வான முறையில் அலங்கரிக்கப்பட்ட இந்தக சந்தனக்கூடு முஸ்லிம் கிராமங்களில் ஆண்டுக்கொரு தடவை காட்சிப்படுத்தப்படும். குறிப்பாக மலையகப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் கிராமங்களில் இத்தகைய பாரம்பரியங்கள் காணப்பட்டன. இக் கலையில் ஈடுபடுவோர் கூடு கட்டுபவர்கள் என இன்றும் அழைக்கப்படுகின்றனர். கூடு கட்டும் குடும்பம் என்று அழைக்கப்படுவதினூடாக இதுவொரு சில குடும்பங்களுக்குரிய ஒரு கலையாகவும் கொள்ள இடமுண்டு.

இலங்கையின் மலையகப் பகுதியில் கண்டி பிரதான பள்ளிவாயிலான மீராமக்கம் பள்ளிவாயிலில் 1970களின் இறுதி வரை இந்த சந்தனக்கூடு காணப்பட்டது. சந்தனக்கூடு வைப்பதற்கென கட்டப்பட்டுள்ள அதியுயரமான கட்டிடங்கள் இன்றும் மீராமக்கம் பள்ளியில் காணமுடிகின்றது. இந்த சந்தனக்கூடு இஸ்லாமியர்களின் புதுவருடமான முஹர்ரம் மாதத்தில் பல தினங்கள் காட்சிக்கு வைக்கப்படும். இறுதித் தினத்தில் இது பள்ளிவாயிலை அண்மித்த பிரதேசத்தில் ஊர்தியில் ஊர்வலமாகவும் எடுத்துச் செல்லப்படும். இந்த சந்தனக்கூடு காட்சிக்கு வைக்கப்படும் தினங்களில் இஸ்லாமிய பாரம்பரியமான கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

இந்நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கு முஸ்லிம்கள் மாத்திரமல்லாமல் பல இன மக்களும் கண்டி மீராமக்கம் பள்ளியில் கூடுவர். இதுவொரு களியாட்ட நிகழ்ச்சி என்றடிப்படையிலும் இது அனாச்சாரங்களை வளர்க்கின்றது என்ற அடிப்படையிலும் முன்னெடுக்கப்பட்ட வாதப்பிரதிவாதங்களின்[1] மத்தியில் சந்தனக்கூடு கட்டுதலும் காட்சிப்படுத்தலும் கைவிடப்பட்டது. தற்போது இத்தகைய சந்தனக்கூடு கட்டுதல் காட்சிப்படுத்துதல் என்பன இலங்கை முஸ்லிம்களிடத்தே முற்றாக மறைந்துவிட்டது.

இந்திய இசுலாமியரும் இந்தப் பாரம்பர்யத்தைப் பின்பற்றுகின்றனர்.[2]

தமிழகத்தில் அவுலியாக்களின் பெயரால் தர்காக்களில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 1990களுக்குப் பின் தவ்ஹீத் எனும் ஏகத்துவ பிரச்சாரங்களில் முக்கியமான ஒன்றாக கந்தூரி, சந்தனக்கூடு, தர்காக்களுக்கு சென்று வழிபடுதல் போன்றவை எதிர்க்கப்பட்டன. தர்காக்களுக்கு சென்று வழிபடுதல் என்பது ஓரிறைக்கொள்கைக்கு எதிரானதாக சொல்லப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. சந்தனக்கூடு நடத்தலாமா (யூ டியூப்)
  2. "ஏர்வாடியில் சந்தனக்கூடு". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2011-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தனக்_கூடு&oldid=3631609" இலிருந்து மீள்விக்கப்பட்டது