உள்ளடக்கத்துக்குச் செல்

சத்துன் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்துன் மாகாணம்
Satun Province
สตูล
லா நிகு கடற்கரை
மு கோ பெத்ரா தேசியப் பூங்கா
கோ லிப் கடற்கரை

கொடி

சின்னம்
குறிக்கோளுரை:
சத்துன்-அமைதியான, தூய்மையான, மாசற்ற இயற்கை
สตูล สงบ สะอาด ธรรมชาติบริสุทธิ์
தாய்லாந்தில் சொங்கலா மாகாணம்
தாய்லாந்தில் சொங்கலா மாகாணம்
ஆள்கூறுகள்: 6°37′26″N 100°04′01″E / 6.62389°N 100.06694°E / 6.62389; 100.06694
நாடு தாய்லாந்து
மாகாணம்சத்துன் மாகாணம்
தலைநகரம்சத்துன்
பரப்பளவு
 • மொத்தம்3,019 km2 (1,166 sq mi)
 • பரப்பளவு தரவரிசை26-ஆவது[1]
மக்கள்தொகை
 (2024)[2]
 • மொத்தம்Increase3,24,879
 • தரவரிசை67-ஆவது
 • அடர்த்தி108/km2 (280/sq mi)
  அடர்த்தி தரவரிசை46-ஆவது
மனிதச் சாதனை குறியீடு[3]
 • HAI (2022)0.6336 
மொத்த உள்நாட்டு உற்பத்தி [4]
 • மொத்தம்பாட் 37 பில்லியன்
(US$ 1.0 பில்லியன்) (2019)
நேர வலயம்தாய்லாந்து நேரம் +7
அஞ்சல் குறியீடு
91xxx
தொலைபேசி074
ஐஎசுஓ 3166 குறியீடுTH-91
இணையதளம்satun.go.th

சத்துன் மாகாணம் (ஆங்கிலம்: Satun Province; தாய்: สตูล; மலாய்: Setul) என்பது தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாகாணமாகும். இதன் அண்டை மாகாணங்களாக திராங் மாகாணம், பத்தலுங் மாகாணம், மற்றும் சொங்கலா மாகாணம் ஆகியவை அமைந்துள்ளன.

சத்துன் மாகாணத்தின் தெற்கே வாங் பிராச்சான் (Wang Prachan; மலாய் மொழியில்: வாங் பெலாச்சான்) என்ற இடத்தில் மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்துடன் எல்லையைக் பகிர்ந்து கொள்கிறது.

பெயரியல்

[தொகு]

சத்துன் எனும் பெயர் அதன் அசல் மலாய் மொழிப் பெயரான செத்துல் (Setul) என்பதன் தாய்லாந்து மொழி வடிவமாகும். செத்துல் என்பது சந்தோல் (Santol) அல்லது காட்டு மங்கூஸ்தின் (Wild Mangosteen) மரத்தைக் குறிப்பதாகும். இந்தச் சொல் வடக்கு மலாய் மொழியில் செத்தோய் (Setoi) என்றும், உராக் லாவோய் மொழியில் (Urak Lawoi) செத்துன் (Setun) என்றும்[5] அழைக்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

இந்த மாகாணத்தில் தம் யி மித் குகை; மற்றும் காவ் காவ் குகை என இரண்டு குகைத் தளங்கள்[6]:73 உள்ளன.

1897-இல் சத்துன் நிலப்பகுதி; மோன்தோன் சிபுரி (Monthon Syburi - தற்போது கெடா) மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1909-ஆம் ஆண்டின் ஆங்கிலோ-சயாமிய உடன்படிக்கையின் கீழ், பிரித்தானியா அரசு மற்றும் சயாம் அரசு ஆகியவற்றுக்கு இடையே பிரிக்கப்பட்டது. கெடாவின் பெரும்பகுதி பிரித்தானியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், சத்துன் நிலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தாய்லாந்து மக்கள் வாழ்ந்ததால் சத்துன் நிலப்பகுதி சயாமிற்கு வழங்கப்பட்டது.

அதன் பிறகு, சத்துன் நிலப்பகுதி; மோன்தோன் புக்கெட் (Monthon Phuket) மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 1933-இல் மோன்தோன் நிருவாக முறை முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, சத்துன் மாகாணம் தாய்லாந்தின் முதல் நிலை நிருவாகப் பிரிவாக (மாநிலமாக) மாறியது. 1916 வரை, சத்துன் மாகாணம் கெடா சுல்தானகத்துடன் நெருங்கிய தொடர்புடைய செத்துல் மம்பாங் செகாரா இராச்சியம் (Kingdom of Setul Mambang Segara) என்ற சிறிய மலாய் அரசாக இருந்தது. அந்த ஆண்டிற்குப் பிறகு, நக்கோன் சி தாமரத் மாகாணத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஓர் ஆளுநரால் இது நிர்வகிக்கப்பட்டது.[7]

புவியியல்

[தொகு]

இந்த மாகாணம் அந்தமான் கடலின் கரையில், மலாய் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த மாகாணம் நக்கோன் சி தாமரத் மலைத்தொடரால் (Nakhon Si Thammarat Range) சொங்கலா மாகாணத்தில் இருந்தும்; நக்கவான் மலைத்தொடரால் மலேசியாவில் இருந்தும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தின் மொத்த வனப்பகுதி 1,212 சதுர கிமீ (468 சதுர மைல்) ஆகும்; மாகாணப் பரப்பளவில் 40.1 விழுக்காடு ஆகும்.[1]

தேசிய பூங்காக்கள்

[தொகு]

சத்துன் மாகாணத்தில் மூன்று தேசியப் பூங்காக்கள் உள்ளன.[8] (2024 ஆண்டில் வருகையாளர்கள்)

தாருடாவ் தேசியப் பூங்கா  1,490 சதுர கிமீ  (241,968)
மு கோ பெத்ரா தேசியப் பூங்கா494 சதுர கிமீ  (154,285)
தலே பான் தேசியப் பூங்கா196 சதுர கிமீ(9,053)

மு கோ பெத்ரா தேசியப் பூங்கா (Mu Ko Phetra National Park) என்பது தாய்லாந்திற்கு அப்பால் மலாக்கா நீரிணையில் அமைந்துள்ள ஒரு கடல்சார் தேசியப் பூங்காவாகும். இது பெரும்பாலும் சேதமடையாத கடற்கரைப்பகுதி, திறந்தவெளி கடல்; மற்றும் திராங் மாகாணத்தின் தெற்குப் பகுதி மற்றும் சத்துன் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சுமார் 30 தீவுகளை உள்ளடக்கியுள்ளது. 1984 திசம்பர் 31 அன்று நிறுவப்பட்ட இது, தாய்லாந்தின் 49-ஆவது தேசியப் பூங்காவும் 14-ஆவது கடல்சார் தேசியப் பூங்காவும் அறியப்படுகிறது.

மு கோ பெத்ரா தேசியப் பூங்கா

மக்கள்தொகை

[தொகு]
மு கோ பெத்ரா தேசிய பூங்காவில், மாலை நேரச் சூழல்

நாரதிவாத் மாகாணம், யாலா மாகாணம் மற்றும் பட்டாணி மாகாணம் ஆகிய மாகாணங்களைப் போலவே, சத்தும் மாகாணமும் தாய்லாந்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இங்கு 76.77 விழுக்காட்டு பேர் முசுலிம்களாகவும், 23.02 விழுக்காட்டு பேர் பௌத்தர்களாகவும் உள்ளனர்.

இங்குள்ள முசுலிம்ளில் பெரும்பாலோர் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மக்கள் மத்தியில் மலாய் மொழியிலிருந்து தாய்லாந்து மொழிக்கு ஏற்பட்ட மொழி மாற்றத்தின் காரணமாக, தற்போதைய மக்கள் தொகையில் 9.9 விழுக்காட்டு பேர் மட்டுமே மலாய் மொழியைத் தாய்மொழியாகப் பேசுகின்றனர். சத்துன் மாகாணத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழி தெற்கு தாய்லாந்து மொழியாகும் (Southern Thai language).[9] அதே கட்டத்தில் சத்துனில் பயன்படுத்தப்படும் மலாய் பேச்சுவழக்கு கிளாந்தான்-பட்டாணி மலாய் மொழியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது; மற்றும் இது மலேசியாவின் கெடா மலாய் மொழி பேச்சுவழக்கிற்கு[9] மிகவும் நெருக்கமானது.

கலப்புத் திருமணங்கள்

[தொகு]
கோ யாங்-கோ தருடாவோ தேசிய பூங்கா

சத்துன் மாகாணம் பல நூற்றாண்டுகளாக சக்ரி மரபுவழியின் கீழ் இருந்த அயூத்தியா இராச்சியம் மற்றும் சயாம் ஆகிய இரு நாடுகளுடனும் வலுவான உறவைக் கொண்டிருந்த கெடா சுல்தானகத்திற்குச் சொந்தமானதாக இருந்ததால், இங்குள்ள மலாய் முசுலிம்கள் பொதுவாக எந்தவொரு தீவிரமான மதத் தயக்கமும் இன்றி தாய்லாந்து பௌத்தர்களுடன் திருமண உறவுகளை மேற்கொள்கின்றனர்.

இந்த வழக்கம் சாம்சாம் (Samsam) என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான சமூகக் குழுவை உருவாக்கியுள்ளது.[10] இதற்கு தாய்லாந்து-மலாய் கலப்பு மரபுவழியைச் சேர்ந்த நபர் என்று பொருளாகும். இந்த சாம்சாம் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் (அல்லது அனைவரும்) முசுலிம்களாகவே உள்ளனர்.

தாய்லாந்தின் பிற முசுலிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணங்களைப் போலல்லாமல், சத்துன் மாகாணத்திற்கு பேங்காக் மத்திய அரசுடன் அரசியல் ரீதியான மோதல்களோ அல்லது ஒட்டுமொத்த தாய்லாந்தின் பெரும்பான்மையினராக இருக்கும் பௌத்த மக்களுடன் பதற்றமான சூழலோ இருந்த வரலாறு இல்லை.[11] பட்டாணி, நாரதிவாத் மற்றும் யாலா ஆகிய மாகாணங்களில் வாழும் மலாய் முசுலிம்களுடன் ஒப்பிடுகையில், சத்துனில் உள்ள மலாய் முசுலிம்கள் தாய்லாந்து பண்பாடுடன் பெருமளவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்; மற்றும் இவர்கள் தாய்லாந்திலிருந்து பிரிந்து செல்லும் பிரிவினைவாதத்திற்கு[12] ஆதரவளிப்பது மிகவும் அரிதாகும்.

மாகாண நிருவாகம்

[தொகு]

மாகாண அரசு

[தொகு]

சத்துன் மாகாணம் 7 மாவட்டங்களாகப் (ஆம்போ) பிரிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்கள் மேலும் 36 துணை மாவட்டங்களாகவும் 277 கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

சத்துன் மாகாணத்தின் 7 மாவட்டங்கள்
# ஆங்கிலம் தாய் தமிழ் மலாய்
1Mueang Satunเมืองสตูลமுயேங் சத்துன்Mambang
2Khuan Donควนโดนகுவான் தொன்Dusun
3Khuan Kalongควนกาหลงகுவான் காலோங்Padang Kecil
4Tha Phaeท่าแพதா பேBerakit
5La-nguละงูலா-நிகுLaut
6Thung Waทุ่งหว้าதுங் வாSungai Upeh
7Manangมะนังமனாங்Bendang

மனித மேம்பாட்டுச் சுட்டெண் 2022

[தொகு]
உடல்நலம் கல்வி வேலைவாய்ப்பு வருமானம்
28 42 76 58
வீட்டுவசதி குடும்பம் போக்குவரத்து பங்கேற்பு
37 73 15 7

2003 ஆம் ஆண்டு முதல், தாய்லாந்திலுள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP) மனித மேம்பாட்டின் எட்டு முக்கிய பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு குறியீடான மனித மேம்பாட்டுச் சுட்டெண்ணை (Human achievement index - HAI) பயன்படுத்தி, தேசிய அளவில் மனித மேம்பாட்டின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் தாய்லாந்தின் தேசிய பொருளாதார சமூக மேம்பாட்டு வாரியம் (NESDB) இப்பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.[3]

நிலைவகைப்பாடு
  1 - 13உயர்வு
14 - 29சற்று உயர்வு
30 - 45சராசரி
46 - 61சற்று குறைவு
62 - 77குறைவு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Table 2 Forest area Separate province year 2019". Royal Forest Department. Retrieved 6 April 2021.
  2. ↑ "Official statistics registration systems". Department of Provincial Administration (DOPA). Retrieved 10 February 2025. , year 2024, provincial level, Excel File >no.91
  3. 1 2 "ข้อมูลสถิติดัชนีความก้าวหน้าของคน ปี 2565 (PDF)" [Human Achievement Index Databook year 2022 (PDF)]. Office of the National Economic and Social Development Council (NESDC) (in thai). Retrieved 12 March 2024. , page 72{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. ↑ "Gross Regional and Provincial Product, 2019 Edition" (in en). Gross Regional and Provincial Product (Office of the National Economic and Social Development Council (NESDC)). July 2019. பன்னாட்டுத் தர தொடர் எண்:1686-0799. https://www.nesdc.go.th/ewt_dl_link.php?nid=5628&filename=gross_regional. பார்த்த நாள்: 22 January 2020.
  5. ↑ Wongbusarakum, Supin. "Changing Ways of Life of the Urak Lawoi (abstract)".
  6. ↑ Sanghiran, Siriporn (2019). "Archaeological Sites and Findings on the Lower Peninsula of Thailand from the Seventh to Thirteenth Century Reflecting the Maritime Silk Road". In Srisuchat, Amara; Giessler, Wilfried (eds.). Ancient Maritime Cross-cultural Exchanges: Archaeological Research in Thailand (PDF) (in ஆங்கிலம்). Bangkok: Fine Arts Department, Ministry of Culture. pp. 54–77. ISBN 978-616-283-434-9. Archived (PDF) from the original on 2 September 2026. Retrieved 3 September 2026.
  7. ↑ Parks, Thomas I. (1 March 2009). "Maintaining peace in a neighbourhood torn by separatism: the case of Satun province in southern Thailand" (in EN). Small Wars & Insurgencies 20: 185–202. doi:10.1080/09592310802573632. https://www.tandfonline.com/doi/pdf/10.1080/09592310802573632. பார்த்த நாள்: 14 May 2025.
  8. ↑ "สถิตินักท่องเที่ยวที่เข้าไปอุทยนห่งชาติ ปีงบประมาณ พ.ศ. 2567" [Statistics of tourists visiting national parks in fiscal year 2024]. Department National Parks, Wildlife and Plant Conservation (in தாய்). Retrieved 6 September 2025.
  9. 1 2 Institute of South East Asian Studies (1988). The South East Asian Review. Institute of South East Asian Studies. p. 15.
  10. ↑ Andrew D.W. Forbes (1988). The Muslims of Thailand. Soma Prakasan. pp. 12. ISBN 974-9553-75-6.
  11. ↑ Yegar, M.; Schwartz, I.M. (2002). Between Integration and Secession: The Muslim Communities of the Southern Philippines, Southern Thailand, and Western Burma/Myanmar. Lexington Books. p. 79. ISBN 9780739103562. Retrieved 10 January 2021.
  12. ↑ Parks, Thomas I. (2009-03-01). "Maintaining peace in a neighbourhood torn by separatism: the case of Satun province in southern Thailand". Small Wars & Insurgencies 20 (1): 185–202. doi:10.1080/09592310802573632. பன்னாட்டுத் தர தொடர் எண்:0959-2318. https://doi.org/10.1080/09592310802573632.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்துன்_மாகாணம்&oldid=4660195" இலிருந்து மீள்விக்கப்பட்டது