சத்குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சத்குரு ஜக்கி வாசுதேவ்
பிறப்புசெப்டம்பர் 3,1957
மைசூர், கர்நாடகம்
தேசியம்இந்தியர்
பணியோக ஆசிரியர்

சத்குரு ஜகி வாசுதேவ் (Sadhguru Jaggi Vasudev) ஞானியாகவும் யோகியாகவும் குருவாகவும் திகழ்பவர். இவர் நிறுவியுள்ள ஈஷா அறக்கட்டளை, மத சார்பற்ற, இலாப நோக்கில்லாத ஒரு பொதுத் தொண்டு நிறுவனம். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கபூர், கனடா, மலேசியா, உகாண்டா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சிகளை ஈஷா அறக்கட்டளை வழங்கிக் கொண்டிருக்கிறது. சமூக மற்றும் சுற்றுபுற நல செயல்பாடுகள் பலவற்றிலும் இந்நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பொருளாதாரம் மற்றும் சமூகப்பிரிவு (ECOSOC) அமைப்பும் ஈஷாவிற்கு சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இளமைக்காலம்[தொகு]

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மைசூரில் ஒரு தெலுங்கு குடும்பத்தில், செப்டம்பர் 3, 1957-இல் சுசீலா மற்றும் டாக்டர் வாசுதேவ் தம்பதியினருக்கு ஜகதீஷ் பிறந்தார். நான்காவதாக பிறந்த இவருக்கு ஒரு சகோதரரும் இரு சகோதரிகளும் உண்டு. இவர் பிறந்தபோது குறிசொல்லும் நாடோடி ஒருவர், இக்குழந்தை மிகவும் அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வான் என்று குறி சொல்லிவிட்டு, 'இந்த பிரபஞ்சத்தை ஆள்பவன்' என்று பொருள்படும் ஜகதீஷ் என்ற பெயரையும் சூட்டிவிட்டுச் சென்றார்.

சத்குருவின் தந்தை இந்திய ரயில்வேயில் கண் மருத்துவராகப் பணிபுரிந்ததால், அவர் குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்து செல்ல வேண்டியிருந்தது. ஜகி என்று அழைக்கப்பட்ட ஜகதீஷ், சிறு வயதிலேயே இயற்கை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். இவர் அடிக்கடி அருகாமையில் உள்ள வனங்களுக்குப் பயணம் செய்வார். சில சமயம் இப்பயணங்கள் 3 நாட்கள் வரை கூட நீடிக்கும். இவர் 11 வயதில், மல்லடிஹள்ளி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியை சந்தித்து, அவரிடம் எளிய யோகாசனங்களைக் கற்று, தவறாமல் அவற்றைப் பயிற்சி செய்து வந்தார். "ஒரு நாள் கூட தவறாமல் செய்து வந்த இந்த எளிய யோகப் பயிற்சிகளே பிற்காலத்தில் என்னை மிக ஆழமானதோர் அனுபவத்திற்கு இட்டுச் சென்றது," என்று சத்குரு குறிப்பிட்டுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்தபின், மைசூர் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டதாரி ஆனார். அப்போது அவர் வகுப்பில் இரண்டாவது மாணவராகத் தேர்ச்சி பெற்றார். கல்லூரி நாட்களில் பயணம் செய்வதிலும் மோட்டார் பைக்குகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டார். மைசூரில் உள்ள சாமுண்டி மலை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் மிகவும் பிடித்த இடமாக இருந்தது. அவர்கள் அங்கு அடிக்கடி சந்திப்பதும், இரவுகளில் பைக் ஓட்டிச்செல்வதுமாக இருந்தனர். சத்குரு தனது மோட்டார் பைக்கில் நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்றுள்ளார்.

நேபாளின் எல்லையைத் தொட்டபோது அவருக்கு பாஸ்போர்ட் இல்லாத காரணத்தால், நேபாளிற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. தான் எங்கு செல்வதையும் எவரும் தடுக்க முடியாதவாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இச்சம்பவம் அவருக்குள் உருவாக்கியது. அவர் பட்டப்படிப்பை முடித்தபின் இந்த எண்ணமே அவரைப் பல தொழில்களைத் துவங்கத் தூண்டி, அவற்றை வெற்றிகரமாக நடத்தச் செய்தது. அவர் செய்த தொழில்களில் கோழிப்பண்ணை, செங்கல்சூளை, கட்டிடத்தொழில் ஆகியவையும் உள்ளடங்கும்.

ஆன்மீக அனுபவம்[தொகு]

அவருடைய 25 ஆம் வயதில், செப்டம்பர் 23, 1982 இல் சாமுண்டி மலைக்கு பைக்கில் சென்றார். அங்கு ஒரு பாறை மீது அமர்ந்தபோது ஒரு ஆழமான ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார். சத்குரு அந்த அனுபவத்தை விவரிக்கையில், "என் வாழ்க்கையில் அந்த நொடி வரை இது நான் என்றும், அது வேறொருவர், அது வேறொன்று என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முதல்முறையாக எது நான், எது நானில்லை என்று எனக்கு புரியாமல் போனது. திடீரென நான் என்பது எல்லா இடங்களிலும் பரவிக்கிடந்தது. நான் உட்கார்ந்திருந்த பாறை, நான் சுவாசித்த காற்று, என்னை சுற்றியிருந்த காற்றுமண்டலம், என்று எல்லாவற்றிலும் தெறித்துக் கிடந்தேன். இது கேட்பதற்கு சுத்த பைத்தியக்காரத்தனமாகத் தோன்றலாம்.

ஒரு பத்து பதினைந்து நிமிடம் இப்படி இருந்திருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் பழைய நிலைக்கு திரும்பியபோது, முழு நினைவுடன், கண் திறந்த வண்ணம் உட்கார்ந்தவாறு சுமார் நான்கரை மணி நேரம் கழிந்திருந்ததை உணர்ந்தேன். ஒரு நொடிப்பொழுது போல நேரம் ஓடிவிட்டது," என்று குறிப்பிடுகிறார். இந்த அனுபவம் கிடைத்து 6 வாரங்கள் கழித்து, அவர் தன் தொழிலை நண்பரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு, தனக்கு ஏற்பட்ட உள்ளனுபவத்தைப் பற்றி மேலும் அறிய விரிவான பயணம் மேற்கொண்டார். ஒரு வருடம் இப்படி தியானத்திலும் பயணத்திலும் கழிந்தபின், சத்குரு தன்னுடைய அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள யோகப் பயிற்சிகளை கற்றுத்தர முடிவு செய்தார்.

1983 இல் 7 பங்கேற்பாளர்களுடன் தனது முதல் வகுப்பை மைசூரில் நடத்தினார். சிறிது காலத்தில், கர்நாடகா மாநிலத்திலும் ஐதராபாத்திலும் மோட்டார் பைக்கிலேயே பயணம் செய்து பல யோகா வகுப்புகள் நடத்தினார். அப்போது அவர் தன் கோழிப்பண்ணையின் வருமானத்திலேயே வாழ்க்கையை நடத்தினார், வகுப்புகளுக்கு பணம் வாங்க மறுத்தார். பங்கேற்பாளர்கள் கொடுத்தவை அனைத்தயும் சேமித்து வகுப்பின் கடைசி நாளில் அருகில் உள்ள ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த ஆரம்ப கால வகுப்புகளே, பிற்காலத்தில் ஈஷா யோக வகுப்புகளை வடிவமைக்கும் அடித்தளமாய் அமைந்தன.

பிற்காலத்தில் ஈஷா யோக மையம் நிறுவப்படவிருக்கும் ஊரான கோவையில் தனது முதல் வகுப்பினை 1989 இல் நடத்தினார். 'சஹஜ ஸ்திதி யோகா' என்று அப்போது அழைக்கப்பட்ட அந்த வகுப்புகளில் ஆசனங்கள், பிராணாயாம கிரியாக்கள் மற்றும் தியானம் கற்றுத்தரப்பட்டது. ஆன்மீக ஆர்வம் கொண்டவர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், 1993 இல் அவர்களுக்கு உறுதுணையாக ஒரு ஆசிரமம் நிறுவ வேண்டுமென சத்குரு தீர்மானித்தார். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, கோவா என்று பல இடங்களைப் பார்த்தும் அதில் மனநிறைவு இல்லாமல், கடைசியில் கோவையிலிருந்து 40 கி.மி. தூரத்தில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் 13 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்தார். 1994 இல் அந்த இடத்தைப் பதிவு செய்து யோக மையம் ஒன்றை நிறுவினார்.

தியானலிங்கம்[தொகு]

1994-இல் சத்குரு ஆசிரம வளாகத்தில் முதல் யோக வகுப்பை நடத்தியபோது, தியானலிங்கத்தைப் பற்றி பேசினார். தியானலிங்கம், யோக முறைப்படி தியானத்திற்காக உருவாக்கப்பட்ட ஓர் இடமாகும். சத்குருவுடைய குரு அவரிடம் தியானகலிங்கத்தை பிரதிஷ்டை செய்யச்சொல்லி ஒப்படைத்த பொறுப்பே, அவர் வாழ்க்கையின் நோக்கமாக இருந்தது என்று சத்குரு கூறியிருக்கிறார். 1996-இல் லிங்கத்திற்கான கல் ஆசிரமத்திற்கு கொண்டுவரப்பட்டது. மூன்று வருடத்திற்குப் பிறகு, 23 ஜூன் 1999-இல் தியானலிங்க பிரதிஷ்டை நிறைவு பெற்று, நவம்பர் 23 ஆம் தேதி பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

தியானலிங்கம் எந்த மத நம்பிக்கையையும் சாராமல், ஆழ்ந்த தியானம் செய்வதற்கான ஓர் இடமாக விளங்குகிறது. ஸ்டீல், கான்கிரீட், போன்ற எதையும் உபயோகிக்காமல், செங்கல்லும் சுண்ணாம்புக் கலவையும் மட்டுமே பயன்படுத்தி கட்டப்பட்ட 76 அடி உயரமான கூடாரம் கர்பக்கிரகத்தின் மேற்கூரையாக இருக்கிறது.

13 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட லிங்கம் கறுப்பு நிற அடர்த்தியான கிரானைட் கல்லால் ஆனது. நுழைவாயிலில் உள்ள சர்வ தர்ம ஸ்தம்பம், ஒருமைத்தன்மையின் சின்னமாகத் திகழ்கிறது. இந்து, கிறித்துவம், முஸ்லிம், சீக்கியம், ஜெயின், தாவோயிஸம், ஜோராஸ்ட்ரியானிஸம், யூத மார்க்கம், புத்த நெறி, மற்றும் ஷிந்தோ (ஜப்பானிய மரபு) ஆகிய நெறிகளைக் குறிக்கும் சின்னங்கள் செதுக்கப்பட்டு, உலக மக்கள் அனைவரையும் இந்த ஸ்தம்பம் வரவேற்கிறது.

ஈஷா அறக்கட்டளை[தொகு]

சத்குருவால் நிறுவப்பட்ட ஈஷா அறக்கட்டளை, எந்த ஒரு மதத்தையும் சாராமல், இலாப நோக்கமின்றி, முழுக்க முழுக்க தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் ஓர் நிறுவனம். 1992 இல் கோவையில் நிறுவப்பட்ட ஈஷா யோக மையம், ஒருவரின் சுய விழிப்புணர்வு நிலையை அதிகரிக்கக்கூடிய பல்வேறு யோகா நிகழ்ச்சிகளை நடத்துகிறது. சர்வதேச அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூகப்பிரிவு (ணிசிளிஷிளிசி) அமைப்புடன் ஒருங்கிணைந்து ஈஷா அறக்க்கட்டளை செயல்படுகிறது.

சமூக நலத் திட்டங்கள்[தொகு]

சத்குரு துவங்கிய பசுமைக்கரங்கள் திட்டம், நம் சுற்றுச்சூழலை பாதுகாத்து தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை 10 சதவிகிதம் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுசூழல் பாதுக்காப்பிற்கு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான 'இந்திரா காந்தி பரியவரண் புரஸ்கார்'-ஐ ஜூன் 2010 இல், இந்திய அரசாங்கம் இத்திட்டத்திற்கு வழங்கியது.

இதுவரை சுமார் 8.2 மில்லியன் மரக்கன்றுகளை 2 கோடி தன்னார்வத் தொண்டர்கள் மூலம் நட்டு இத்திட்டம் சாதனை படைத்துள்ளது. ஏழ்மையிலிருக்கும் கிராமப்புற மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பட, ஈஷா அறக்கட்டளையின் கீழ் ‘கிராமப் புத்துணர்வு இயக்கம்’ 2003 இல் சத்குருவால் துவங்கப்பட்டது. இத்திட்டம், தமிழ்நாட்டில் சுமார் 54,000 கிராமங்களில் உள்ள 7 கோடி மக்களைச் சென்றடையும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. 2010 வரை சுமார் 4200 கிராமங்களில் உள்ள 70 லட்சம் மக்களை கிராமப் புத்துணர்வு இயக்கம் சென்றடைந்துள்ளது.

ஈஷா வித்யா, இந்தியாவின் கிராமப்புறங்களில் கல்வியையும் படிப்பறிவையும் மேம்படுத்த ஈஷா அறக்கட்டளை துவங்கியுள்ள கல்வித்திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் இயங்கிக்கொண்டிருக்கும் 8 ஈஷா வித்யா பள்ளிகளில் சுமார் 4050 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்.

யோகா நிகழ்ச்சிகள்[தொகு]

ஆசிரமம் நிறுவியதற்குப் பின், தொடர்ந்து யோகா வகுப்புகளை ஈஷா யோக மையத்தில் சத்குரு நடத்தத் துவங்கினார். 1996 இல் இந்திய ஹாக்கி குழுவினருக்கென பிரத்தியேகமாக ஒரு யோக வகுப்பு நடத்தினார். 1997 இல் அமெரிக்காவில் வகுப்புகள் நடத்தத் துவங்கினார். 1998 இல் தமிழ்நாட்டு சிறைகளின் ஆயுள் கைதிகளுக்கு யோக வகுப்புகளை எடுத்துச் சென்றார்.

ஈஷா யோகா என்ற பெயரிலேயே அனைத்து யோக வகுப்புகளையும் சத்குரு வழங்குகிறார். 'ஈஷா' என்றால் உருவமில்லாத தெய்வீகம் என்று அர்த்தம். ஈஷா யோகாவின் அடித்தளமாக இருக்கும் ஈஷா யோகா வகுப்புகளில் பங்கேற்பவர்கள், தியானம், பிராணாயாமம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சிக்கு தீட்சை பெறுகிறார்கள். சத்குரு கார்ப்பரேட் தலைவர்களுக்கும் வகுப்புகள் நடத்துகிறார். இன்றைய பொருளாதார சூழ்நிலையில், கார்ப்பரேட் தலைவர்கள் அனைவரையும் ஒன்றாக உணரவும், கருணையுடன் இருக்கவும், “அனைவர் நலனையும் கவனத்தில் கொள்ளும் பொருளாதாரம்” உருவாக்கவும், இந்த வகுப்புகள் வழிவகுக்கின்றன.

சத்குருவின் அருளுரை, தியானம், கேள்வி பதில் போன்றவை கொண்ட மஹாசத்சங்க நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சிகள் மரங்கள் நடுவதை ஊக்குவிக்க ஒரு மேடையாகவும் திகழ்கின்றன. ஆன்மீக ஆர்வம் கொண்டவர்களை ஒவ்வொரு வருடமும் கைலாய மலை, இமயமலை, என்று யாத்திரைகளுக்கும் அழைத்துச் செல்கிறார். 2010 இல் 514 பேருடன் கைலாயம் சென்றதோடு, ஒவ்வொரு வருடமும் சத்குருவுடன் கைலாயம் செல்லும் குழுவே அனைத்திலும் பெரியதாக இருக்கிறது.

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெக்மின்வில் என்ற இடத்தில், 2005 மார்ச் மாதத்தில் 'ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயன்சஸ்' மையத்தின் கட்டுமானப் பணி துவங்கி, ஆறே மாதங்களில் முடிவடைந்தது. இம்மையத்தை உலகின் மேற்கத்திய பகுதிகளில் வாழ்பவர்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்காக சத்குரு உருவாக்கியுள்ளார். இம்மையத்தில், நடுவில் தூண்களே இல்லாமல் 39,000 சதுர அடி கொண்டு விளங்கும் மஹிமா ஹாலை, 2008 நவம்பர் 7ஆம் தேதியில் சத்குரு பிரதிஷ்டை செய்தார். பெண்மையின் தெய்வீக அம்சமான லிங்கபைரவியை ஈஷா யோக மையத்திற்கு அருகில் 2010 ஜனவரி 30ஆம் தேதி சத்குரு பிரதிஷ்டை செய்தார்.

சர்வதேச மாநாடுகளில் சத்குரு[தொகு]

சத்குரு அவர்கள் 2001 இல், ஐக்கிய நாடுகள் நூற்றாண்டு அமைதி உச்சி மாநாட்டிலும், 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் உலகப் பொருளாதார மன்றத்தின் மாநாடுகளிலும் உறையாற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சத்குருவின் பங்களிப்பிற்கும், அதில் மக்கள் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்தியதற்கும், 2012 இல் இந்தியாவின் திறன்மிகுந்த 100 மனிதர்களுள் ஒருவராக சத்குரு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 இல் உருவாக்கப்பட்ட “ஒன் - தி மூவி” என்ற ஆவணப் படத்திலும் சத்குரு இடம் பெற்றுள்ளார்.

சர்ச்சைகள்[தொகு]

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்தின் தலைமையகம் காடுகளை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது . பசுமை தீர்ப்பாயத்திடம் அனுமதி பெறவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காடுகள் அழிப்பினால் பல தமிழக வழக்குகளை எதிர்கொண்டார். சில வழக்குக்கள் கிடப்பில் உள்ளதாக தகவல்.

ஆதியோகி[தொகு]

சத்குரு உலகின் முதல் 112 அடி ஆதியோகி திரு உருவச்சிலை ஈஷா மையத்தில் நிறுவி உள்ளார்கள். இது யோகாவின் மூலத்தின் அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆதியோகி திரு உருவச்சிலை பொதுமக்கள் தரிசனத்திற்கு பாரத பிரதமர்

திரு. நரேந்திரமோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது

தமிழ் புத்தகங்கள்[தொகு]

  • அத்தனைக்கும் ஆசைப்படு - ISBN 81-89780-05-0
  • செய்... செய்யாதே! - ISBN 978-81-8476-288-4
  • மூன்றாவது கோணம் - ISBN 978-81-8476-155-9
  • உனக்காகவே ஒரு ரகசியம் - ISBN 978-81-89936-24-2
  • கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - ISBN 978-81-8476-134-4
  • ஆயிரம் ஜன்னல் - ISBN 978-81-8476-226-6
  • ஆனந்த அலை - ஆசைப்படு அடைந்துவிடு
  • ஞானத்தின் பிரம்மாண்டம்
  • குரு தந்த குரு
ஈஷாவின் மாத இதழ் :
* ஈஷா காட்டு பூ

ஹிந்தி

ஆங்கிலம்

மேலும் படிக்க

  • Subramaniam, Arundhathi (2010). Sadhguru, More than a life. New Delhi: Penguin Ananda. ISBN 978-0-670-08512-5.

கன்னடா

தெலுங்கு

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்குரு&oldid=3398177" இருந்து மீள்விக்கப்பட்டது